கைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்! - மருத்துவர் ஆலோசனை

பொதுவாக கையுறை அணியும்போது நாம் குறைந்த அளவே முகத்தைத் தொடுகிறோம், கையுறை அணிந்திருக்கும்போது கூந்தலை வருடக்கூட யோசிக்கிறோம்.

கன்னத்தில் கைவைப்பது, நமைச்சல் எடுக்கும் மூக்கை சொரிவது, கண்களைக் கசக்குவது, வாயைக் குடைவது... இப்படி ஒருநாளைக்கு எத்தனை முறை கைகளை முகத்துக்குக் கொண்டுபோகிறோம்?
காலங்காலமாக இப்படியே பழகியவர்களை, கொரோனா வைரஸ் தொற்று மாறச் சொல்கிறது. கண்கள், மூக்கு மற்றும் வாய் மூலமே கொரோனா வைரஸ் உடலுக்குள் நுழையும் என்பதால் கைகளை முகத்துக்குக் கொண்டுபோவதைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். கொரோனாவுடன் வாழப் பழக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நாம், இனி இதைப் பின்பற்றித்தான் ஆக வேண்டும்.
நாளுக்கு நாள் வைரஸ் பரவல் அதிகரித்துக்கொண்டே போகிறது. இவ்வேளையில் வைரஸிடம் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள நாம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் நம் உயிரைக் காக்கும், இதுவரை இருந்ததைவிட இனி வரும் காலங்களில் வைரஸின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இருமல் தும்மல் மூலம் பரவும் வைரஸை முககவசம் உபயோகித்தும் சமூக விலகலைக் கடைப்பிடித்தும் தடுக்கலாம்.
கொரோனா வைரஸோ உலோகப் பரப்புகளிலும் பொருள்களிலும் தங்கியிருக்கும் வல்லமை கொண்டது. கைகள் மூலம் இவற்றைத் தொடும்போது ஏற்படும் பாதிப்பு தவிர்க்க இயலாதது. அடிக்கடி கைகழுவுவது, சானிடைஸர் உபயோகிப்பது, கைகளைக் கொண்டு முகத்தைத் தொடுவதைத் தவிர்ப்பது ஆகியவை மிக அவசியம்.

``வாலன்ட்டரி மற்றும் இன்வாலன்ட்டரி முறைகளில் முகத்தைத் தொடும் பழக்கம் நமக்கு உள்ளது. நாம் நம்மை அறியாமல் முகத்தைத் தொடுவது இன்வாலன்டரி முறை. இதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானது. எனினும் சில வழிமுறைகளைப் பின்பற்றி நாம் கைகளை முகத்துக்கு கொண்டுசெல்வதைக் குறைக்கலாம்'' என்கிறார் பொது மருத்துவர் அருணாசலம்.
அவர் சொல்லும் 6 வழிமுறைகள்...

நிலைப்பாடு!
நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் சூழலை உணர்ந்து, நம் கைகளால் முகத்தைத் தொடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை நமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டும்.

செலோடேப் டெக்னிக்!
பொது இடங்களில் வேலைக்குச் செல்பவர்கள் வேலை நேரத்தில் கைகளால் முகத்தைத் தொடுவதைக் கட்டுப்படுத்த முழங்கையில் செலோடேப் ஒட்டிக்கொள்ளலாம். இதன் மூலம் நம் நம்மை அறியாமல் கையை மேலே தூக்குவதைத் தவிர்க்க முடியும்.

கைக்குட்டை, சாவி
எப்போதும் நம் கைகளில் எதையாவது வைத்துக்கொள்வது... வெளியில் செல்லும்போது கைக்குட்டை, சாவி போன்றவற்றை கையில் வைத்துக்கொள்ளுவதன் மூலம் கைகள் கண், மூக்கு, வாயைத் தொடுவதைத் தடுக்கலாம்.

நறுமணம் மிகுந்த சானிடைஸர்
நறுமணம் மிகுந்த சானிடைஸர்களைக் கொண்டு கை கழுவலாம் கையை முகத்தின் அருகில் கொண்டுவரும்போது அந்த மணம், கையை முகத்துக்குப் போவதைத் தடுக்கும்.

கையுறை
வெளியில் செல்லும்போது கையுறைகளை உபயோகிக்கலாம் பொதுவாக கையுறை அணியும்போது நாம் குறைந்த அளவே முகத்தைத் தொடுகிறோம், கையுறை அணிந்திருக்கும்போது கூந்தலை வருடக்கூட யோசிக்கிறோம்.

கண் சோர்வு
கண்கள் அதிகம் சோர்வாகாமல் பார்த்துக்கொள்வது அவசியம் அதிக நேரம் கணினி முன் வேலை செய்பவர்கள் அவ்வப்போது ஓய்வெடுத்துக்கொள்வதன் மூலம் கண்கள் சோர்வடைவதையும், கைகளால் கண்களைத் துடைப்பதையும் தவிர்க்கலாம்.