கட்டுரைகள்
Published:Updated:

குறட்டை... ஆழ்ந்த தூக்கத்தின் அறிகுறியா? #FAQs

குறட்டை
பிரீமியம் ஸ்டோரி
News
குறட்டை

சோர்வுக்கும் குறட்டைக்கும் தொடர்பு இல்லை. சோர்வுடன் உறங்குபவர்கள் சில நேரங்களில் அதிக சத்தத்துடன் மூச்சுவிட வாய்ப்புள்ளது.

குறட்டை என்பது சர்வதேசப் பிரச்னையாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்திய மக்கள்தொகையில் 45% முதல் 50% பேருக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது என்றும், அவர்களில் 25% பேருக்கு அன்றாடம் குறட்டைவிடும் பிரச்னை இருக்கிறது என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறட்டை பற்றிப் பல தவறான நம்பிக்கைகள் உள்ளன. அத்தகைய சந்தேகங்களுக்கு விடையளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த, காது, மூக்கு, தொண்டை மருத்துவர் மற்றும் தலை, கழுத்து அறுவை சிகிச்சை மருத்துவர் ரோகிணி ராதாகிருஷ்ணன்.

Iரோகிணி ராதாகிருஷ்ணன்
Iரோகிணி ராதாகிருஷ்ணன்

வயதானவர்கள்தான் அதிகம் குறட்டை விடுவார்களா..?

‘‘வயதுக்கும் குறட்டைக்கும் தொடர்பு இல்லை. குழந்தைகள், பெரியவர்கள், முதியோர் என அனைவருக்கும் இந்தப் பிரச்னை ஏற்படலாம். ஒவ்வொரு வயதினருக்கும் குறட்டைப் பிரச்னை ஏற்படுவதற்கு பிரத்யேக காரணங்கள் உண்டு. முதியோரைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட வயதுக்கு மேல் தொண்டைப் பகுதி தசைகளின் அடர்த்தி குறைந்து, நாக்கு தளர்வடையும். இதனால் அவர்கள் தூங்கும் நிலையில் சுவாசிக்கும்போது அதிர்வு அதிகமாக ஏற்படும். அது குறட்டையாகவும் மாறும்.

குறட்டை இருந்தால் ஸ்லீப் ஆப்னியா (Sleep apnea) பிரச்னை ஏற்படுமா..?

குறட்டைவிடும் பழக்கம் இருப்பவர்களில் 2% - 4% பேருக்கு மட்டுமே, உறக்கத்தில் சுவாசம் சீரற்று இருக்கும் ஸ்லீப் ஆப்னியா பிரச்னை இருக்கும். இந்தப் பிரச்னை இருந்தால் இரவு நேரத்தில் மூச்சுத்திணறல் அதிகமாக இருக்கும். மூக்கடைப்பும், மூக்கு மற்றும் தொண்டையின் வடிவத்தில் ஏதேனும் பிரச்னையும் இருந்தால் லேசான குறட்டை ஏற்படலாம். எனவே, குறட்டைப் பிரச்னை இருக்கும் அனைவருக்கும் ஸ்லீப் ஆப்னியா இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் குறட்டைப் பிரச்னை நீடித்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

குறட்டை... ஆழ்ந்த தூக்கத்தின் அறிகுறியா? #FAQs

ஒருவர் குறட்டை விட்டால் அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் என்று அர்த்தமா..?

ஆழந்த உறக்கத்துக்கும் குறட்டைக்கும் தொடர்பு இல்லை. ஸ்லீப் ஆப்னியா பிரச்னை இருந்தால் தூக்கம் இடையிடையே தடைப்படும்.

அதிக சோர்வுடன் உறங்கினால் குறட்டை வருமா..?

சோர்வுக்கும் குறட்டைக்கும் தொடர்பு இல்லை. சோர்வுடன் உறங்குபவர்கள் சில நேரங்களில் அதிக சத்தத்துடன் மூச்சுவிட வாய்ப்புள்ளது. இது பெரிய பிரச்னை இல்லை. ஆனால் எப்போதும் அதிக சத்தத்துடன் குறட்டைவிடுவதுதான் உடலுக்குப் பிரச்னைகளை ஏற்படுத்தும். சுவாசக்குழாய் மற்றும் நுரையீரலில் ஏதேனும் பிரச்னை, தைராய்டு, நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்னை, சர்க்கரைநோய், மூளையில் கட்டி, மூளையில் ரத்த ஓட்டம் குறைதல் போன்ற காரணங்களால் ‘ஸ்லீப் ஆப்னியா’ ஏற்படலாம். மூக்கு, தொண்டைப் பகுதியில் சதை வளர்தல் பிரச்னை இருந்தால் குழந்தைகளுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படலாம். ஒருவர் திடீரென்று அதிக சத்தத்துடன் குறட்டைவிட வாய்ப்பில்லை. ஏதேனும் மருத்துவப் பிரச்னைகள்தான் காரணமாக இருக்கும்.

ஒருக்களித்துப் படுத்தால் குறட்டை குறையுமா?

மல்லாந்து படுப்பவர்களைக் காட்டிலும் ஒருக்களித்துப் படுப்பவர்களுக்குக் குறட்டை விடுவது மட்டுப்படும். அதை குறட்டைக்குத் தீர்வாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒருவர் ஒருக்களித்துப்படுத்தும் குறட்டை விடுகிறார் என்றால் உடல்நிலைப் பிரச்னைகள் இருக்கலாம். மருத்துவரை அணுக வேண்டும்.

குறட்டை... ஆழ்ந்த தூக்கத்தின் அறிகுறியா? #FAQs

குறட்டை ஆண்களைவிடப் பெண்களுக்குக் குறைவாக ஏற்படுமா..?

ஒப்பீட்டளவில் ஆண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம். சுவாசப்பாதையின் மேல்பகுதி நீளமாக இருப்பது, வாயின் மேற்பகுதி பெரிய அளவில் இருப்பது, உடல் பருமன், குடிப்பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குறட்டைப் பிரச்னை ஆண்களிடம் அதிகம் காணப்படுகிறது. பெண் களைப் பொறுத்தவரை, மெனோபாஸுக்குப் பிறகு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு குறையும் என்பதால் தசைகளின் அடர்த்தி குறைந்து குறட்டைப் பிரச்னை ஏற்படலாம். கர்ப்பகாலத்தில் உடல் எடை அதிகரிக்கும் என்பதால் அந்த நேரத்தில் குறட்டைப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

மது அருந்தினால் ஆழ்ந்த உறக்கம் வரும், குறட்டை ஏற்படாது என்பது உண்மையா?

உறங்குவதற்கு முன்பு மது அருந்தும்போது தசைகள் அதிகமாகத் தளர்வடையும் என்பதால் குறட்டை அதிகமாக இருக்கும்.