சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

டெக்நெக் டேஞ்சர்!

டெக்நெக் டேஞ்சர்!
பிரீமியம் ஸ்டோரி
News
டெக்நெக் டேஞ்சர்!

எப்படி பெரியவர்களின் வேலை அலுவலகத்தில் இருந்து லேப்டாப்புக்கு மாறியதோ, அதே போல குழந்தைகளின் வகுப்பறையும் செல்போனுக்கு மாறியது.

தொழில்நுட்ப வளர்ச்சி நம் வாழ்க்கையை எந்த அளவிற்கு எளிமையாக்கியுள்ளதோ, அதே அளவுக்குப் புதிய புதிய பிரச்னைகளையும் கொடுத்துவருகிறது. அப்படி, தொழில்நுட்பத்தால் ஏற்படும் உடல் பிரச்னைகளில் லேட்டஸ்ட் சேர்க்கை, டெக்நெக். அதாவது டெக்னாலஜியால் வரும் கழுத்துப் பிரச்னை.

அதிகமான கணினிப் பயன்பாட்டால் ஐ.டி ஊழியர்களை அதிகம் பாதித்து வந்த டெக்நெக் எனும் கழுத்து வலி, இப்போது குழந்தைகள் மத்தியிலும் அதிகரித்துள்ளது என எலும்பியல் மருத்துவர்கள் சிலர் எச்சரித்துள்ளனர். ஆறாம் விரல் போல செல்போனை வைத்திருக்கும் வளர் இளம் பருவத்தினரில் 75% பேருக்கு இந்தப் பாதிப்பு இருப்பதாக அபாய மணி அடிக்கிறார்கள். இதுகுறித்து விரிவான தகவல்களை, மூத்த எலும்பியல் நிபுணர் டாக்டர் ஆறுமுகத்தைச் சந்தித்துக் கேட்டறிந்தோம்.

‘‘டெக்ஸ்ட் நெக் எனும் பிரச்னையின் இன்னொரு வகைதான் இந்த டெக்நெக் எனப்படும் குறைபாடு. அதிக நேரம் செல்போன் அல்லது டேப்லெட்டைக் கையில் பிடித்துக்கொண்டு, தலையைக் குனிந்தபடி அவற்றைப் பயன்படுத்துவதால், கழுத்தில் இருக்கும் எலும்புகளில் அழுத்தம் ஏற்பட்டு டெக்நெக் சிண்ட்ரோம் உருவாகுகிறது. பொதுவாக பெரியவர்களின் தலை 5-10 கிலோ எடையில் இருக்கும். நேராக நிமிர்ந்து இருக்கும்போது, தலையின் எடையை உடல் சமமாகத் தாங்கும். கழுத்துக்கு அதிக அழுத்தம் இருக்காது. ஆனால், தலையை முன்னால் சாய்க்கும்போது, அந்த எடை மொத்தமாகக் கழுத்தின் மீது விழுகிறது.

டெக்நெக் டேஞ்சர்!
டெக்நெக் டேஞ்சர்!

மொபைல் போன், நம் வாழ்க்கையின் இன்றியமையாத ஓர் அங்கமாகிவிட்டது. செல்போன் உபயோகிக்க வேண்டாம் என யாரையும் தடுத்து நிறுத்த முடியாது. அதே சமயம், அந்த செல்போனை குழந்தைகளிடம் கொடுத்து அவர்களையும் தொழில்நுட்பத்திற்கு அடிமையாக்குவதை நிச்சயம் தடுக்க வேண்டும். பல மணி நேரம் அதில் மூழ்கியிருப்பதையும் தவிர்க்க வேண்டும்.

செல்போன் பயன்படுத்தும் எல்லோருக்குமே ஒரு கட்டத்தில் நிச்சயம் கழுத்து வலி வரும். குறிப்பாக தொடர்ந்து 5-8 மணி நேரம் செல்போன் அல்லது கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு உடலில் பல தசைகளிலும் எலும்புகளிலும் அழுத்தமும் வலியும் உண்டாகும்.

கொரோனா ஊரடங்கு நாள்களில், பணிக்குச் செல்வோருடன் சேர்த்து, குழந்தைகளும் பல பிரச்னைகளைச் சந்தித்தார்கள். எப்படி பெரியவர்களின் வேலை அலுவலகத்தில் இருந்து லேப்டாப்புக்கு மாறியதோ, அதே போல குழந்தைகளின் வகுப்பறையும் செல்போனுக்கு மாறியது. ஏற்கெனவே செல்போனில் வீடியோ கேம்ஸ், கார்ட்டூன் என தொழில்நுட்பத்திற்கு அடிமையாக இருக்கும்போது, பாடங்களையும் தொழில்நுட்பம் வழியாகத்தான் பயில வேண்டும் என்றதும், எந்நேரமும் கேட்ஜெட்களுடன் குழந்தைகள் அழுத்தமாகப் பிணைக்கப்பட்டனர். செல்போனிலேயே படித்து, செல்போனிலேயே நண்பர்களுடன் பேசி, வீடியோ கேம்ஸ் விளையாடிப் பொழுதைக் கழித்தனர்.

டெக்நெக் டேஞ்சர்!
டெக்நெக் டேஞ்சர்!

இதனால், பெரியவர்களை மட்டுமே பாதித்து வந்த கழுத்து வலிப் பிரச்னை, கொரோனா சமயத்தில் அதிகமான குழந்தைகளையும் பாதித்தது. இது தவிர, முதுகு வலி, இடுப்பு வலி, கண் பார்வைக் குறைபாடு, உடல் எடை அதிகரிப்பு என 35 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே பாதிக்கும் பல பிரச்னைகள் இப்போது குழந்தைகளையும் இளைஞர்களையும் பாதிக்கத் தொடங்கிவிட்டன.

இப்போது பள்ளிகள் திறந்துவிட்டாலும், குழந்தைகள் வீடியோ கேம்ஸ்களுக்கு அடிமையாக உள்ளனர். சிலர் பள்ளி முடிந்து 3-4 மணி நேரம் வீடியோ கேம்ஸ் விளையாடுகின்றனர். இப்படி வீடியோ கேமில் அடிமையாகி இருக்கும் குழந்தைகளை வெளியில் கொண்டு வர முடியாமல் பெற்றோர்கள் அவதிப்படுவது ஒரு புறம் இருக்க, வீடியோ கேம்ஸைத் தொடர்ந்து விளையாடுவதால், குழந்தைகளின் கண்பார்வை, கழுத்து மற்றும் விரல்களிலும் பாதிப்பு ஏற்படுகிறது. இப்படிப் பாதிப்படையும் குழந்தைகளால், அதிகம் எழுத முடியாது. கை வலிக்கிறது என்பார்கள். பத்து நிமிடம் எழுதினாலே விரல்களில் வலி வந்துவிடும். காரணம், தொடர்ந்து வீடியோ கேம்ஸ் விளையாடுவதால், கை விரல்கள் பலவீனம் ஆகின்றன.

குழந்தைகளை ஆரோக்கியமான விளையாட்டுகளில் ஈடுபடுத்தி, அவர்களின் தொழில்நுட்பப் பயன்பாட்டை முறைப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு வரும் இந்தப் பிரச்னையை சீக்கிரம் குணப்படுத்திவிடலாம் என்றபோதும், தொடர்ந்து ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையில் அவர்கள் ஈடுபடும்போது முதுமையில் வர வேண்டிய நோய்கள் எல்லாம் இளமைக் காலத்திலேயே வந்துவிடும்.

டெக்நெக் பிரச்னையை ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டும். 7-8 வருடங்களாக உடற்பயிற்சி இல்லாமல், அலுவலகத்தில் எட்டு மணி நேரம் நகராமல் உட்கார்ந்திருந்தால், காலப்போக்கில் கழுத்தும் தோளும் வளைந்து, கூன் விழக்கூட வாய்ப்பு உள்ளது. தினமும் கழுத்து வலி வந்தால், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அலுவலக இருக்கையிலிருந்து எழுந்து நடக்க வேண்டும். இது தவிர கழுத்துக்கும் முதுகுக்கும் வலுச் சேர்க்கும் உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். சரியான ஓய்வு மற்றும் உடற்பயிற்சி மூலம் வலியை குணப்படுத்திவிடலாம். ஆனால், எவ்வளவு ஓய்வெடுத்தும் கழுத்து வலி சரியாகவில்லை எனும் பட்சத்தில், அவர்களுக்குத் தலைவலியுடன் தலைச்சுற்றலும் வரலாம். அவர்கள் உடனே மருத்துவரைச் சந்திப்பது நல்லது. அவர், பிசியோதெரபிஸ்ட் மூலம் சில உடற்பயிற்சிகளையும், சில மருந்துகளையும் பரிந்துரைப்பார். இதன் மூலம் கழுத்து வலியைச் சரியாக்கலாம்.

கழுத்தின் மீது உருவாகும் அழுத்தம், காலப்போக்கில் கழுத்தில் இருக்கும் எலும்புகளை பாதிக்கிறது. கழுத்தில் ஆரம்பிக்கும் வலி, தோள்பட்டை வழியாக கைக்கு வந்தால், நிலைமை தீவிரம் அடைந்ததாக அர்த்தம். கழுத்து தேய்மானம் அடைந்து கையில் இருக்கும் உணர்ச்சிகள் நீங்கி, முதுகுத் தண்டை பாதிக்கும். அந்த வலி போகவே போகாது. உடல்நலனில் கவனம் செலுத்தாமல், இப்பிரச்னையை வளரவிட்டால், காலப்போக்கில் அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாக இருக்கும்.”

டெக்நெக் டேஞ்சர்!

டெக்நெக் தவிர்க்க...

* ஐ.டி ஊழியர்கள் மற்றும் கணினியில் தொடர்ந்து பணிபுரிபவர்கள், உங்கள் கணினியின் உயரம் உங்கள் கண் உயரத்தில் இருப்பதை உறுதி செய்துவிட்டு, இருக்கையில் நேராக அமர்ந்து வேலை செய்ய வேண்டும்.

* தலையைக் குனிந்து போனைப் பார்க்காமல், தலையை நேரே வைத்துக்கொண்டு கண்களுக்கு நேராக போனைக் கையில் பிடித்துக்கொண்டு பார்க்கவும். கழுத்து பாதிப்பும் தவிர்க்கப்படும். கை சீக்கிரமே வலிக்கும் என்பதால், ரொம்ப நேரம் போனைப் பார்க்கத் தோன்றாது.

* ஓய்வெடுக்கும்போது, கழுத்தை லேசாக பின்பக்கம் சாய்த்துக்கொள்ளவும்.

* தவறான உணவுப்பழக்கம் இந்தப் பிரச்னையைத் தீவிரமாக்கும் என்பதால், ஆரோக்கிய உணவுகளைச் சாப்பிடுவது அவசியம்.

* கால்சியம் சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். தினமும் அரை மணி நேரமாவது வெயிலில் செலவிட வேண்டும்.

* எட்டு மணி நேரம் அலுவலகத்தில் ஒரே நிலையில் பணிபுரிந்தாலும், இரவில் தூங்கும்போது உடலுக்குத் தகுந்த ஓய்வைக் கொடுத்தாலே பல பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும். இரவில் தூங்கும்போது சரியான தலையணைகளைத் தேர்வு செய்வதன் மூலம், கழுத்து வலியிலிருந்து தப்பிக்கலாம். சரியான நிலையில் படுத்து உறங்குபவர்கள், காலையில் சுறுசுறுப்புடன் எழுந்து தங்கள் வேலையைத் தொடங்கலாம்.

* மல்லாக்கப் படுத்து உறங்குபவர்கள், மெல்லிய தலையணையைப் பயன்படுத்த வேண்டும். அப்போது தலையுடன் சேர்த்து கழுத்தும் கொஞ்சம் மேலே நிமிர்ந்து இருக்கும். எல்லா தசைகளும் தளர்ந்து ஓய்வெடுக்கும். இடப்புறம் அல்லது வலப்புறமாக ஒருக்களித்துப் படுப்பவர்கள், தங்களுடைய தோள் பட்டைக்கும் காதுக்கும் இடையே இருக்கும் இடத்தை அடைக்குமளவு கச்சிதமான தலையணையைப் பயன்படுத்த வேண்டும். பிரத்யேகமான செர்வைகல் (Cervical) தலையணைகளையும் பயன்படுத்தலாம். குப்புறப் படுப்பவர்களாக இருந்தால், தலையணை பயன்படுத்தத் தேவையில்லை.

* தலையணை போலவே, நாம் உறங்கும் படுக்கையும் முக்கியம். தேங்காய் நாரும் ஃபோமும் கலந்த படுக்கை நல்லது. மிகவும் மென்மையான மெத்தையையும், கடினமான மெத்தைகளையும் தவிர்ப்பது நல்லது.