
வைரஸ் தொற்றி இரண்டு, மூன்று நாள்களில் மிதமான சளி, இருமல், தலைவலி, காய்ச்சல் ஏற்படும். உடல்வலி, சோர்வு இருக்கும்
கொரோனா ஓரமாய்ப் போய் விளையாடும் நேரத்தில், மைதானத்தின் மையத்துக்கு வந்து பீதி கிளப்பிவருகிறது தக்காளிக் காய்ச்சல். கொரோனாகூட குழந்தைகளை அதிகம் பாதிக்கவில்லை. தக்காளிக்காய்ச்சல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத்தான் இலக்கு வைத்துத் தாக்குகிறது என்கிறார்கள். கேரளாவில் வெகுவேகமாகப் பரவத் தொடங்கியுள்ள நிலையில், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் சில மாவட்டங்களில் குழந்தைகளுக்கு அதன் அறிகுறிகள் காணப்பட்டுள்ளன. அதென்ன தக்காளிக்காய்ச்சல்? தக்காளிக்கும் இந்தக் காய்ச்சலுக்கும் என்ன தொடர்பு? இது எப்படிப் பரவுகிறது? அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன?
குழந்தைகள் சிறப்பு நிபுணரும் சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வரும் ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையின் டீனுமான தேரணி ராஜனிடம் கேட்டேன்.
‘`இந்த நோய் பாதித்த குழந்தைகளுக்கு உடலில் கொப்புளங்கள் உருவாகும். அவை சிவப்பாக தக்காளியின் நிறத்தில் இருப்பதால் தக்காளியின் பெயரைச் சூட்டிவிட்டார்கள். இது ஒரு வகை வைரஸால் ஏற்படும் பாதிப்பு. Hand, foot and mouth disease என்பதே இதன் பெயர். சுருக்கமாக மருத்துவ உலகில் HFMD என்று சொல்வோம். இந்த நோயை உருவாக்கும் வைரஸ், எண்ட்ரோ-71 (Entero virus-71), காக்சாக்கி (Coxsackie virus) வகையைச் சேர்ந்தவை.

குழந்தைகளே இலக்கு!
இந்த நோய் குழந்தைகளை, குறிப்பாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத்தான் அதிகம் பாதிக்கிறது. இந்த நோயைக் கண்டறிய ஆசனவாயில் ஸ்வாப் எடுத்து ஆர்டிபிசிஆர் டெஸ்ட் செய்யவேண்டும்.
எப்படிப் பரவுகிறது?
இருமல், தும்மலில் வெளிப்படும் சளித்திவலைகளில் ஒட்டியிருக்கும் வைரஸ் மூலம் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும். நோய் பாதித்த குழந்தைகளின் கொப்புளங்களில் இருந்து வெளிவரும் நீரிலும் இந்த வைரஸ் இருக்கும். மலத்தின் மூலமாகவும் பரவும்.
அறிகுறிகள் என்னென்ன?
வைரஸ் தொற்றி இரண்டு, மூன்று நாள்களில் மிதமான சளி, இருமல், தலைவலி, காய்ச்சல் ஏற்படும். உடல்வலி, சோர்வு இருக்கும். குழந்தை துவண்டுவிடும். படிப்படியாக உள்ளங்கை, பாதங்கள், வாய், ஆசனவாய்ப் பகுதிகளில் சிவப்பு நிறத்தில் தடிப்புகள் ஏற்படும். படிப்படியாக அவை கொப்புளங்களாகவும் மாறலாம். தொண்டையில் எரிச்சல் ஏற்படும். சாப்பிட சிரமம் இருக்கும். பசியெடுக்காது. வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு நீரிழப்பும் ஏற்படலாம். கொப்புளங்களில் கடுமையான அரிப்பு ஏற்படும். கொப்புளங்கள், தடிப்புகளைச் சொறிந்துவிட்டு குழந்தைகள் இன்னொரு குழந்தையைத் தொட்டால் அந்தக் குழந்தைக்கும் பரவும். அரிதாக சில நேரங்களில் இந்த வைரஸ் இதயத்தை பாதிக்கக்கூடும். மூளைக்காய்ச்சலையும்கூட உருவாக்கலாம். வலிப்பும் வரலாம்.
எங்கெல்லாம் பாதிப்பு?
இந்த வைரஸ் பரவ தட்பவெப்ப நிலையே முக்கியக் காரணம். குளிர்ப்பிரதேசங்களில் தாக்கம் அதிகமிருக்கும். மழைக்காலங்களில் இந்த வைரஸ் தன்னைப் பெருக்கிக்கொள்ளும். வெயில் காலங்களில் பெரும்பாலும் அழிந்துவிடும். நர்சரி பள்ளிகள், கிரீச்கள் போன்ற இடங்கள்தான் இவை பரவும் இடங்கள். இதுபோன்ற இடங்களில் ஒரு குழந்தைக்கு பாதிப்பு கண்டறியப்பட்டாலும் மூடிவிட வேண்டும். வீட்டில் ஒரு குழந்தைக்கு வந்தால் பிற குழந்தைகளுக்கும் பரவலாம். அதனால் பாதிக்கப்பட்ட குழந்தையைத் தனிமைப்படுத்த வேண்டும்.
என்ன சிகிச்சை?
இந்த வைரஸுக்கு இதுவரை நேரடி மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அறிகுறிகளுக்கேற்றவாறு மருந்துகள் தரப்படும். பாதிப்பு ஏற்பட்டு அதிகபட்சம் ஒரு வாரத்துக்குள் தானாக குணமாகிவிடும். கொப்புளங்கள் ஆறிவரும். பாதிக்கப்பட்ட குழந்தையின் செயல்பாடுகளை பெற்றோர் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். ரத்த அழுத்தம், பல்ஸ் போன்றவற்றைக் குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதிக்க வேண்டும். வாய்களில் கொப்புளங்கள் இருப்பதால் குழந்தைகளால் சாப்பிட முடியாது. சோர்ந்துவிடாதவாறு திரவ உணவைத் தொடர்ந்து தரவேண்டும்.
இந்த நோயின் தன்மை அம்மை நோயைப் போல இருப்பதால் பெரும்பாலானோர் ‘மாந்திரீகம் செய்கிறோம்’, ‘பச்சிலை கொடுக்கிறோம்’ என்றெல்லாம் அழைத்துச் செல்கிறார்கள். இது நிலையை மோசமாக்கிவிடும். அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவதே சரியான வழி.
இதய பாதிப்பு, வலிப்பு, சுயநினைவிழப்பு போன்ற பிரச்னைகள் வெகு சில குழந்தைகளுக்கே ஏற்படும். அதனால் அச்சம் கொள்ளத்தேவையில்லை. ஆனால் தகுந்த நேரத்தில் வைரஸின் தன்மையை உறுதி செய்து சிகிச்சையைத் தொடங்குவது நல்லது.
இந்த நோய் வராமல் தடுக்க குழந்தைகள் இருக்கும் வீட்டைக் கூடுதல் கவனமெடுத்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு டயாபர் மாட்டுபவர்கள் அவற்றை முறையாக அப்புறப்படுத்திவிட்டு கைகளை நன்றாக சோப்பு போட்டுக் கழுவவேண்டும். பொது இடங்களில் குழந்தைகள் மேல் கூடுதல் கவனம் வைத்திருப்பது நல்லது.

இது புதிதல்ல!
இந்த வைரஸ் தமிழகத்துக்குப் புதிது போலவும் வேறெங்கோ இருந்து பரவுவது போலவும் செய்திகள் வருகின்றன. ஏற்கெனவே இது தமிழகத்தில் இருக்கும் நோய்தான். காலங்காலமாக நாங்கள் இதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் இதன் தாக்கம் கொஞ்சம் இருக்கும். வெயில் காலத்தில் போய்விடும்’’ என்கிறார் அவர்.
தக்காளிக்காய்ச்சல் கொரோனா அளவுக்குக் கொடூரமானதல்ல... என்றாலும், குழந்தைகள் விஷயம் என்பதால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது!