ஸ்பெஷல்
Published:Updated:

ஸ்ட்ரெஸ் ஃப்ரீ ஹோம்

ப்ரீத்தி, படங்கள்: ரா.வருண் பிரசாத்

எங்கும், எப்போதும் டென்ஷன். மன அமைதி தேடி, பசுமை நிறைந்த காடு, மலைப் பகுதிகளுக்குப் போவது  எல்லோருக்கும் சாத்தியமா என்ன? இயற்கையை வீட்டிற்குள்ளேயே அழைத்துவந்தால்?

ஸ்ட்ரெஸ் ஃப்ரீ ஹோம்

'செடிகளை வளர்ப்பது தனிமையை விரட்டி,  மன அமைதிக்கு வழிவகுக்கும்' என்கிறார் மனநல மருத்துவர் அசோகன்.

எப்படி ஒரு வளர்ப்புப் பிராணி நமக்கு ஆறுதல் தருகிறதோ, அதுபோலத்தான் செடிகளும்.  பூக்களை, செடிகளை இரண்டு நிமிடங்கள் உற்று நோக்குங்கள். சங்கடமான மனமும் அமைதி பெறும். மன உளைச்சல் நீங்கி, படைப்பாற்றலை வளர்க்கக்கூடிய மன நிலையைத் தரும். செடிகள் நிறைந்த வீடுகளால், எண்ணங்கள் விரிவடைந்து நல்லதோர் சூழலைத் தர முடியும். இயற்கையான முறையில் மனப் பிரச்னைகளுக் குத் தீர்வாக, நம் வீடு இருந்தால், மருத்துவத்துக்குப் பல ஆயிரங்களை செலவிட வேண்டிய அவசியம் இருக்காது.  

அறுவைசிகிச்சை செய்துகொண்ட நோயாளிகள் இருக்கும் அறையில் செடிகள் இருந்தால், அவர்கள் வெகு சீக்கிரம் குணமடைவார்கள் என்கிறது ஓர் ஆய்வு. உயர் ரத்த அழுத்தம், குறைந்த இதயத்துடிப்பு, சோர்வு, பதற்றம், டென்ஷன், தேவையில்லாத சிந்தனைகள், மனச்சோர்வு போன்ற நோய்களைத் தவிர்க்க அவை உதவுகின்றன.  கம்ப்யூட்டர், டி.வி போன்ற அதிக வெளிச்சத்தைப் பார்த்து சோர்வடைந்த கண்களுக்குப் பச்சை நிறம் புத்துணர்வைக் கொடுக்கும்.  

ஸ்ட்ரெஸ் ஃப்ரீ ஹோம்

ஆஸ்துமா, சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் தடையில்லாமல் சுவாசிக்க, செடிகள் உதவுகின்றன. ஒவ்வொரு செடியும் ஈரத்தன்மையை வெளியிடுவதால், வீட்டில் வசிப்போருக்கு வறண்ட சருமம், சளி, வறட்டு இருமல் போன்ற பிரச்னைகள் இருந்தாலும், சீக்கிரமே குணமாகிவிடும்' என்றார்.

'வீட்டிலே வளர்க்கக்கூடிய செடிகளுக்கு சூரிய வெளிச்சம் அவசியம் இல்லை. செடிகள் வீட்டை அழகாக்குவதுடன் அறையின் காற்றையும் தூய்மைப்படுத்திவிடும். வெப்பத்தைக் குறைக்கும்.

வீட்டில் பயன்படுத்தப்படும் ரூம் ஸ்ப்ரே, பாடி ஸ்ப்ரே, காஸ்மெட்டிக்ஸ் ரசாயனங்கள், சிகரெட், தூசு போன்ற காற்றில் கலந்திருக்கும் மாசை  உறிஞ்சும் சக்தி செடிகளுக்கு உள்ளது. இரைச்சலின் அளவையும் குறைக்கும்' என்கிறார் சென்னை, ஹரிதரங் ஷோரூம் உரிமையாளரான ரேஷ்மி சுனில்.

இவர்  கடந்த 40 ஆண்டு காலமாக அதிக செலவில்லாமல் ரம்மியமான சூழல் உள்ள வீடுகளை உருவாக்கித்தரும் லேண்ட்ஸ்கேப்பிங் துறையில், வெற்றிகரமாக இயங்கிவருபவர்.  

'ஒருமுறை நான் துபாய் சென்ற போது, அங்கு வீட்டிலிலேயே வளர்க்கக்கூடிய செடிகளைப் பார்த்ததும், ஏன், இந்தப் பசுமையை இந்தியாவில் ஏற்படுத்தக் கூடாது என்று தோன்றியது. அதற்காக வீட்டில் வளர்க்கக்கூடிய செடிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து அதன் தன்மை, நன்மை பற்றி நிறையத் தெரிந்து கொண்டேன். அதைவைத்து, வீட்டில் வளர்க்கக்கூடியவை,  உடல் நலத்தை மேம்படுத்தக் கூடியவை, மூலிகைச் செடிகள் என வகைப்படுத்தினேன்.  இப்போது வீட்டின் உட்புறத்தி லும், வெளிப்புறத்திலும் அவசியம் வளர்க்கக்கூடிய செடிகளைத் தேர்ந்தெடுத்து வளர்த்து விற்பனையும் செய்கிறேன்' என்கிற ரேஷ்மி, எப்படி செடிகளை வீட்டினுள் வளர்ப்பது என வழிகாட்டுகிறார்.

ஸ்ட்ரெஸ் ஃப்ரீ ஹோம்

'வீட்டின் உட்புறத்தில் வளர்க்கக்கூடிய செடிகளுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை நீர் ஊற்றினாலே போதும். இவற்றை வளர்ப்பதற்கு மண் தேவை இல்லை. தேங்காய் பஞ்சு (கொகோ பீட்) மட்டுமே போதும். தண்ணீர் வெளியேறி கறைபிடிக்கும் என்ற பயமும் வேண்டாம். தேங்காய் ஓட்டின் நாரை நீக்கி, அழகிய வண்ணம் பூசி அதில் செடி வளர்க்கலாம். பழைய மரப் பெட்டி, பனம் பழ மட்டை, உடைந்த மீன் தொட்டி, மண் பானை, கண்ணாடி  பீங்கான் பாத்திரம் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே செடிகளை வளர்க்கலாம். மூங்கில் கொம்பில் துளையிட்டு, அதில் இரும்புக் கம்பியைக் கட்டி சுவற்றில் தொங்கவிட்டால், அதுவே தொங்கும் செடி.

செடிகள் வெறும் அழகியல் தொடர்பானவை மட்டுமல்ல... ஆரோக்கியத்தையும் மனநிலையையும் மாற்றும் தன்மை பெற்றவை.

வீட்டை அழகாக்கும் செடிகள்!

லெமன் க்ராஸ்: இது கொசுக்களை வீட்டில் அனுமதிக்காது. இதன் இலையைக் கசக்கி சுவாசித்தால், எலுமிச்சை மணம்் வீசும். இந்த நறுமணம், கொசுக்களை வீட்டிலிருந்து விரட்டியடிக்கும். இந்த இலைகளை வெந்நீரில் கொதிக்கவைத்துக் குடித்தால், வயிறு உப்புசம் குணமாகும்.

மின்ட் துளசி: மின்்ட் உள்ள மிட்டாய்களோ, சூயிங்கம்மோ சாப்பிட்டால் எப்படியிருக்குமோ, அத்தகைய சுவையை இந்த செடியின் இலைகள் தரும். சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணி.

ஸ்ட்ரெஸ் ஃப்ரீ ஹோம்

ஆலோவேரா: கற்றாழை ஜெல்லை முகத்தில் பூசிவந்தால் பருக்கள், வடுக்கள் மறைந்து முகம் பிரகாசிக்கும். மோருடன் கற்றாழை ஜெல்லை சேர்த்துக் குடித்தால், கர்ப்பப்பை பிரச்னைகள் தீரும்.

ஆல் ஸ்பைசஸ்: இந்தச் செடி வீட்டில் இருந்தால், சமையலுக்கு எந்தவித மசாலா பொருட்களும் வாங்கவேண்டிய அவசியம் இல்லை. பட்டை, ஏலம், பிரிஞ்சி இலை, அன்னாசிப் பூ போன்ற அனைத்துப் பொருட்களின் நறுமணத்தையும் இந்தச் செடியின் இலைகளே தந்துவிடும்.

சிறியாநங்கை: பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துகள் வீட்டில் வராமல் காக்கும்.

பேசில்: இந்த இலையில் கிரீன் டீ போட்டுக் குடிக்கலாம். உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும்.

இனி, செடிகளோடு சுவாசிப்போம்!