ஸ்பெஷல்
Published:Updated:

குடும்பத்தை நேசித்தால் புகைப்பதை நிறுத்துங்கள்!

மு.க.ஸ்டாலின்

''தினமும் வாக்கிங், யோகா. ஆரோக்கியமான அளவான சாப்பாடு. என் பரபரப்பான பயணச் சூழலுக்கு இது ரொம்ப உதவியா இருக்கு...'' நிதானமாகப் பேசுகிறார் தி.மு.க.வின் தளபதி மு.க.ஸ்டாலின். இடம் ஐ.ஐ.டி. வளாகம். முன்னாள் அமைச்சர் பொன்முடி, சென்னை முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் ஆகிய சகாக்களுடன் வாக்கிங் வந்திருந்தார். சரியாக முக்கால் மணி நேர வாக்கிங். சிறிய தேநீர் இடைவெளிக்குப் பிறகு, எளிமையான யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிக்கு அரை மணி நேரம்.

குடும்பத்தை நேசித்தால் புகைப்பதை நிறுத்துங்கள்!

''வாரத்துக்கு  மூன்று நாட்கள், வாக்கிங் போக நேரம் இல்லாத சூழலில் ஜிம்மில் வொர்க்அவுட்ஸ் செய்வேன்.  டிரெட்மில் மாதிரியான லைட்டான விஷயங்கள்தான் என் ஏரியா.''என ஆச்சர்யம் தருகிறார் மு.க.ஸ்டாலின்.

''பள்ளி நாட்களில் எனக்கு ஸ்போர்ட்ஸில் ஆர்வம் அதிகம். ஹாக்கி, ஃபுட்பால், கிரிக்கெட், ஷட்டில்காக் விளையாடுவேன். என் உடம்பு ஃபிட்டா இருக்க, இந்்த விளையாட்டுகள்தான் காரணம். 1989ல், ஆயிரம் விளக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு,  தினம் ஒரு வட்டம்னு நடந்தேபோய் மக்களின் பிரச்னைகளைக் கேட்க ஆரம்பிச்சேன். அந்தப் பொதுநலத்தில், 'வாங்கிங் உடம்புக்கு நல்லது’ என்கிற சுயநலமும் உண்டு. அப்படி பழக்கமான நடைப்பயிற்சிதான் இன்னைக்கும் தொடருது.

கடற்கரையில் வாக்கிங் போய்க்கொண்டிருந்தபோது நண்பர்கள், கட்சிக்காரர்கள், பொதுமக்கள் எனக் கூட ஆரம்பித்தனர். ஆர்வத்தோடு பேசுவது, கைகொடுப்பது, ஆட்டோகிராஃப் வாங்குவது என வாக்கிங் நாளடைவில் டாக்கிங்காக மாறியது. அதனால் ஐ.ஐ.டி வளாகத்துக்கு இடம் மாறினேன். அடையாறு தியோசோபிக்கல் சொசைட்டியிலும் வாக்கிங் போவது உண்டு. வெளியூர் போனாலும் வாக்கிங் போவேன். இப்படி ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 5 கிலோ மீட்டர்  நடப்பேன்.''

''உணவுப் பழக்கத்தில் எந்தவிதமான கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறீர்கள்?''

குடும்பத்தை நேசித்தால் புகைப்பதை நிறுத்துங்கள்!

''சாப்பாட்டைப் பொருத்தவரை அளவாக சாப்பிடுவேன். சரியான நேரத்துக்கு சாப்பிட வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் இரவு நேரங்களில் அது சாத்தியப்படாது. 'பசியோட சாப்பிட அமர்ந்து பசியோட எழுந்திருக்கணும்’னு  கவிஞர் வைரமுத்து சொல்வதை ஃபாலோ பண்றேன். காலையில் எழுந்ததும் வாக்கிங் போவதற்கு முன், இரண்டு மூன்று பேரீச்சை பழங்கள், மூன்று நான்கு பாதாம் பருப்புகள் சாப்பிடுவேன். வாக்கிங் முடிந்த பின் இளஞ்

சூட்டில் தேநீர். ஃப்ரெஷ் ஆன பின்,  இட்லி, தோசை என காலை ரொம்பவே எளிதான உணவுதான். மதிய உணவாக விரும்பி சாப்பிடுவது மீன் குழம்பு. ரசம், தயிர். ஆனால் சாதம் குறை

வாகவே சாப்பிடுவேன். மதிய சாப்பாட்டுக்குப் பிறகு, அரை மணி நேரமாவது தூங்கி விடுவேன். அப்போதுதான் இரவு ஒரு மணி வரை பணியாற்ற வசதியாக இருக்கும். மாலையில் ரெண்டு பிஸ்கட், டீ. இரவு பெரும்பாலும் சப்பாத்தி அல்லது தோசைதான்.''

''பிடித்த சாப்பாடு என்ன?''

''மீன் குழம்பு, சிக்கன் குழம்பு விரும்பி சாப்பிடுவேன். அதுவும் என் மனைவி செய்ததாக இருந்தால், ரசத்தை தவிர்த்துவிட்டு, குழம்பை இரண்டாவது முறை வாங்கி, சாப்பிடுவேன். அதில் அவர்களுக்கு ஒரு சந்தோஷம். 'நீ வெச்சியா?’ என நான் கேட்பேன் எனக் காத்திருப்பார்கள். எதுவாக இருந்தாலும் ஃப்ரை வகை உணவுகளைத் தவிர்த்துவிடுவேன். அதேபோல காய்கறிகளில் பீட்ருட், முட்டைகோஸ் பொரியல், கீரை கண்டிப்பாக இடம்பெறும். பயணங்களில் சாப்பிட சிப்ஸ், முறுக்கு, வேர்க்கடலை என வீட்டிலேயே தயாரித்த நொறுக்குத் தீனிகள் செய்து தருவார்கள். அதை பெரும்பாலும் உடன் வரும் தோழர்கள்தான் சாப்பிடுவார்கள். நான் கொஞ்சமாக எடுத்துக்கொள்வேன்.''

''யோகா எப்போது பயின்றீர்கள். தினமும் யோகா செய்வீர்களா?''

''முறையாக மாஸ்டரை வைத்துக் கற்றுக்கொண்டேன். தற்போது மாஸ்டர் இல்லாமல் தினமும் செய்கிறேன். அரை மணி நேரம் குறையாமல் யோகா செய்வேன். வாக்கிங், யோகா செய்தால், மனம் புத்துணர்ச்சியுடன் இருப்பதாக உணர்வேன். இல்லை என்றால், காரணம் இல்லாத டென்ஷன் வந்து ஒட்டிக்கொள்ளும்.''

''இன்று சென்னை என்றால், நாளை கன்னியாகுமரி... என எப்போதும் பரபர பயணத்திலேயே இருக்கிறீர்கள். இந்த பயண சூழலில் ஃபிட்னஸை எப்படி சமநிலையில் மெயின்டைன் பண்ணுகிறீர்கள்?''

''புதிதாகப் பயணம் போகிறவர்களுக்குத்தான் இந்தப் பிரச்னை வரும். தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டே இருப்பவர்களுக்கு, அது பழகி விடும்.  மாதத்துக்கு ஒருமுறையோ இரு மாதங்களுக்கு ஒருமுறையோ ஆயில் மசாஜ் செய்துகொள்வேன். சென்னையில் இருந்தால், சோழாவில் இருந்து வீட்டுக்கே வந்து மசாஜ்செய்துவிட்டு செல்வார்கள்.''

குடும்பத்தை நேசித்தால் புகைப்பதை நிறுத்துங்கள்!

''அழுத்தம் தரக்கூடிய பணிச்சூழல் உள்ள ஏரியாதான் அரசியல். அனைத்தையும் மூளைக்குள் ஏற்றிக்கொண்டால் கண்டிப்பாக சிரமம்தான். இந்தக் சூழலுக்கு உங்களை எப்படி பழகிக்கிட்டீங்க?''

''பிரமாண்ட வெற்றியும் தோல்வியும் இங்கு சகஜம். பெரிய அளவுக்கு ரியாக்ட் செய்து, மனதையும் உடலையும் வருத்திக்கொள்ளக் கூடாது என்பதை, தலைவர் கலைஞரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். அவரைப் பார்த்து வளர்ந்ததால் நாங்கள் வெற்றிக்கு ஆடுவதும் இல்லை, தோல்விக்குத் துவளுவதும் இல்லை.''

''கலைஞரிடம் இருந்து எதையாவது முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால், எதை எடுத்துக்கொள்வீர்கள்?''

''டைம் மேனேஜ்மென்ட். அவரிடம் நாங்கள் வியக்கும் விஷயம் அது. 10 மணி நிகழ்ச்சி என்றால், 9 மணிக்கே ரெடியாகிவிடுவார். இதை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். ஏர்போர்ட் செல்வதாக இருக்கட்டும், கட்சிக் கூட்டங்களுக்கு செல்வதாக இருக்கட்டும் குறித்த நேரத்துககு முன்னரே போய்விடுவேன். ஒரே நாளில் நான்கைந்து நிகழ்ச்சிகள், கூட்டங்கள் என்றால்தான் கடைசியாப் போகவேண்டிய ஊருக்கு மட்டும் லேட் ஆகிவிடுகிறது. அதையும் தவிர்க்க முயற்சி செய்துவருகிறேன். இப்படி குறித்த நேரத்துக்கு அந்த வேலையை செய்துவிட்டாலே, எந்த மன அழுத்தமும் இன்றி ரிலாக்ஸாக இருக்கலாம்.''

குடும்பத்தை நேசித்தால் புகைப்பதை நிறுத்துங்கள்!

''உங்களுடைய ஸ்ட்ரஸ் பஸ்டர்னா எதை, யாரைச் சொல்வீர்கள்?''

''பேரப்பிள்ளைகள்தான். டூர் சமயத்தில்கூட நேரம் ஒதுக்கி, அவர்களிடம் பேசிவிடுவேன். அவர்களுடன் ஜாலியாக அரட்டை அடித்தால்தான் ரிலாக்ஸாக இருக்கும். எவ்வளவு வேலை இருந்தாலும் அவர்களுடன் பேச மறக்கமாட்டேன்.''

''ஃபிட்னஸ் குறித்து கட்சித் தோழர்களிடம் அறிவுரையாக எதுவும் சொல்வது உண்டா?

''பெரும்பாலும் வாக்கிங் போகச் சொல்லுவேன். பொன்முடி, வேலு இருவரும் என்னால்தான் வாக்கிங் போய்க்கொண்டு இருக்கிறார்கள். முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன், வாக்கிங்கில் என் சீனியர். சென்னையில் இருந்தால் எனக்கு வாக்கிங் துணை அவர்தான். அன்பில் பொய்யாமொழி. எனக்கு எல்லாமுமாக இருந்தவர். குடும்ப நண்பர். ஆரம்பகாலத்தில், இளைஞரணிக் கூட்டங்களில் கலந்துகொள்ளச் செல்லும்போது, அவர்தான் காரை ஓட்டி வருவார். அவரின் இறப்பு, தனிப்பட்ட முறையில் எனக்குப் பெரிய இழப்பு. (கலங்கும் கண்களைத் துடைத்துக் கொள்கிறார்) சாப்பாடு, தூக்கம்... என அனைத்திலும் அலட்சியமாக இருப்பார். அதிகமாக புகை பிடிப்பார். எவ்வளவோ சொல்லி இருக்கிறேன். கேட்காததால், ஆறு மாதம், ஒரு வருடம்கூட அவரிடம் பேசாமல் இருந்திருக்கிறேன். இடையில் சிகரெட்டை விட்டார். ஆனாலும் அவரால் முடியலை. சிகரெட்டின் பாதிப்பு அவரை மரணம் வரைக்கொண்டு சென்றது. 2006ல் நான் அமைச்சரானபோது, அதைப் பார்க்க அவர் இல்லையே என பெரிய வருத்தமாக இருந்தது. இதைப் படிப்பவர்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான், உங்களை நேசிப்பவர்களுக்காகவாவது சிகரெட் பிடிப்பதை விட்டுவிடுங்கள். ப்ளீஸ்!''

ம.கா.செந்தில்குமார்,  அஸ்வின் குரு

  படங்கள்: கே.ராஜசேகரன்