ஸ்பெஷல்
Published:Updated:

ஹெல்த்துக்கு எத்தனை மார்க்?

ஹெல்த்துக்கு எத்தனை மார்க்?

நலம் விசாரிப்பு என்பது நல்ல பழக்கம்.  ஆனால், நலம் விசாரிக்கும் நாம் நன்றாக இருக்கிறோமா என்பதுதான் கேள்வியே.  நம்மை நாமே அலசி ஆராயவும், நம் உடலும் உள்ளமும் நலமாக இருக்கிறதா என்று பரிசோதித்துக்கொள்ளவும், இதோ ஒரு ஸ்பெஷல் சர்வே. மனதுக்கு உண்மையாக பதில் அளித்தால், உங்களுக்கு நீங்களே நீதிபதி!

ஹெல்த்துக்கு எத்தனை மார்க்?

தினமும் காலை உணவு சாப்பிடுவீர்களா?

அ)  கட்டாயம் சாப்பிடுவேன்.

ஆ) சில நேரம் சாப்பிடுவேன். சில நேரம் சாப்பிட மாட்டேன்.

இ) பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன்.

வாரத்தில் எவ்வளவு நேரம் உடற்பயிற்சிக்காக செலவிடுவீர்கள்?

அ )  தினமும் குறைந்தது 30 நிமிடங்கள்.

ஆ)  ஓரிரு நாட்கள் மட்டும் உடற்பயிற்சி செய்வேன்.

இ) உடற்பயிற்சி செய்வதே இல்லை.

மாலை நேரத்தில் என்ன சிற்றுண்டி எடுத்துக்கொள்வீர்கள்?

அ) சூப் / பயறு வகைகள்.

ஆ காபி / பிஸ்கட்.

இ) எண்ணெயில் பொரித்த சமோசா, வடை, பஜ்ஜி.

ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிக்கிறீர்கள்?

அ) சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லை.  

ஆ) ஓரிரு சிகரெட்கள்.

இ) ஐந்து சிகரெட்களுக்கு மேல்.

ஒரு வாரத்தில் எவ்வளவு ஆல்கஹால் அருந்துவீர்கள்?

அ) ஆல்கஹால் அருந்தவே மாட்டேன்.

ஆ) 150 மி.லி அளவு.

இ) 250 மி.லி அளவைவிடவும் அதிகமாக.

ஒரு நாளைக்கு எத்தனை முறை சாப்பிடுவீர்கள்?

அ) சிறிதும் பெரிதும் என ஆறு வேளைகளாக பிரித்துச் சாப்பிடுவேன்.  

ஆ) மூன்று வேளைகள் வயிறு நிரம்பச் சாப்பிடுவேன். ஸ்நாக்ஸ் கிடையாது.

இ) எல்லா நேரமும் பஜ்ஜி, போண்டா, பிஸ்கட் என ஏதாவது கொரித்துக்கொண்டே இருப்பேன்.

உங்களுக்குச் சர்க்கரை நோய் இருக்கிறதா?

அ) இல்லை.

ஆ) ப்ரீடயாபடீஸ்.

இ) ஆம்.  

இரவு எத்தனை மணிக்கு சாப்பிடுவீர்கள்?

அ) இரவு 7.00    8.30

ஆ) இரவு 8.30   10.00

இ) இரவு 10.00  11.30.

எந்த நேரத்தில் தூங்கச்செல்வீர்கள்?

அ) 9  10 மணி.

ஆ) 11  12 மணி.

இ) 12 மணிக்கு மேல்.

என்ன விதமான உடற்பயிற்சி செய்வீர்கள்?

அ) தசை நார்களை வலுவூட்டும் பயிற்சி மற்றும் அனைத்துப் பயிற்சிகளும் செய்வேன்.

ஆ) நடைப்பயிற்சி மட்டும்.

இ) உடற்பயிற்சிக்கு எனத் தனியாக நேரம் ஒதுக்குவது இல்லை.

உங்கள் அன்றாட மதிய உணவு மெனு என்ன?

அ) ஒரு கப் சாதம், இரண்டு கப் காய்கறி, கீரை, சாம்பார், ரசம், தயிர்.

ஆ) அதிகளவு சாதம், கொஞ்சம் காய்கறி, சாம்பார், ரசம், மோர்.

இ) பிரியாணி, மட்டன் அல்லது ஏதாவது ஒரு வெரைட்டி சாதம்.

மாத்திரை, மருந்துகள் வாங்கும்போது, காலாவதி தேதியைக் கவனிப்பீர்களா?

அ) ஒவ்வொரு முறையும் காலாவதியான தேதியை பரிசோதித்துதான் வாங்குவேன்.

ஆ) எப்போதாவது கவனிப்பேன்.

இ) காலாவதி தேதியைக் கவனிப்பதே இல்லை.

அருகில் உள்ள மளிகைக் கடை, ஆபீஸ், பள்ளிக்கு எப்படி செல்வீர்கள்?

அ) நடந்து செல்வேன் அல்லது சைக்கிளில் செல்வேன்.

ஆ) பெரும்பாலும் இரு சக்கர வாகனம் பயன்படுத்துவேன். சில நேரம் நடந்து செல்வேன்.

இ) எப்போதும் இரு சக்கர வாகனம்தான்.  

ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ / காபி குடிப்பீர்கள்?

அ) கிரீன் டீ / சூப் மட்டுமே குடிப்பேன்.

ஆ) ஓரிரண்டு முறை.

இ) ஐந்து முறைக்கு மேல்.

எப்போது மெடிக்கல் செக்கப் செய்துகொள்வீர்கள்?

அ) வருடத்துக்கு ஒரு முறை.

ஆ) நோய்க்கான அறிகுறி தென்பட்டால் மட்டுமே.

இ) மெடிக்கல் செக்கப் செய்தது இல்லை.

காய்ச்சல் / தலைவலி வரும்போது என்ன செய்வீர்கள்?

அ) ஆவி பிடிப்பது / தைலம் தேய்த்துக்கொள்வேன். ஓரிரு நாட்கள் தொடர்ந்தால், மருத்துவரை அணுகுவேன்.

ஆ) அருகில் இருக்கும் மருத்துவரை அணுகுவேன். ஏற்கெனவே மருத்துவர் தந்த மாத்திரை மருந்துகளை மருந்தகத்தில் வாங்கி உண்பேன்.

இ) நானே கடையில் கேட்டு, மாத்திரை வாங்கி உண்பேன்.

ஊட்டச்சத்துக்கள் தேவைக்கு என்ன செய்வீர்கள்?

அ) கீரை, காய்கறி, பழங்கள், நட்ஸ் வகைகளை தினமும் சேர்த்துக்கொள்வேன்.

ஆ) ஏதேனும் ஒரு காய்/வைட்டமின்  மாத்திரைகளை எடுத்துக்கொள்வேன்.

இ) இதில் பெரிய அளவில் கவனம் செலுத்துவது இல்லை.

(அ3, ஆ1, இ0 மதிப்பெண்கள்)

35க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள்:

ஆரோக்கியத்தின் மீது அக்கறைகொண்டவராக இருக்கிறீர்கள். தொடர்ந்து இந்த செயல்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் நோய்கள் கிட்ட நெருங்கவிடாமல் செய்யலாம். வாழ்த்துகள்.

20 முதல் 35  க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள்:

ஆரோக்கியமாக வாழ ஆசைப்பட்டும், அதை செயல்படுத்தத் தெரியாமல் இருக்கிறீர்கள். இன்னும் நீங்கள் உடல் நலனில்  அதிகக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

19  க்கு கீழ் மதிப்பெண் பெற்றவர்கள்:

இனியும் தாமதிக்காமல் நீங்கள் உடனடியாக உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை காட்ட வேண்டும். விரைவிலேயே நோய்கள் தாக்கக்கூடிய அபாயம் இருக்கிறது.  அதீதக் கவனம் தேவை!

மதிப்பெண் குறைந்தவர்கள் வருத்தப்பட வேண்டாம். சில வழிகளைப் பின்பற்றினால், மதிப்பெண்களையும், ஆரோக்கியத்தையும் உயர்த்திவிடலாம்.

1. நார்ச்சத்துள்ள உணவுகளைத் தேர்ந்தெடுங்கள். முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் தினசரி உணவில் அதிகம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

2. தினமும் உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்குங்கள். தினமும் அரை மணி நேர நடையைக் கட்டாயமாக்குங்கள்.

3. பரோட்டா, ஃப்ரைடு ரைஸ், பொரித்த உணவுகளுக்கு நோ சொல்லுங்கள். அடிக்கடி டீ, காபி, எதையாவது தின்று வயிற்றை நிரப்புவது போன்ற பழக்கம் உடலுக்குத் தீமை என உணருங்கள்.

4. மூன்று வேளை உணவு என அடம்பிடிக்காமல், ஆறு வேளைகளாக கொஞ்சம், கொஞ்சமாகப் பிரித்து உண்ணுங்கள்.

5. மன அழுத்தத்தோடு இருந்தால், சர்க்கரை நோய், இதயநோய்கள் எளிதாக வரும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

6. சரிவிகித உணவு, நல்ல தூக்கம், தினமும் உடற்பயிற்சி என இருந்தால், ஆரோக்கியம் தன்னால் வரும்.

படம்: ஸ்ரீராம் சந்தோஷ்