கன்சல்டிங் ரூம்
Published:Updated:

வலை குலுங்க கோலாடு

வலை குலுங்க கோலாடு

“உடலை ஃபிட்டாக வைத்திருக்க ஜிம்முக்குப் போய் கடினமான பயிற்சிகள் செய்வதைவிட, ஜூம்பா, பாலே, ஏரோபிக்ஸ் போன்ற நடனப் பயிற்சிகளுக்கு செல்வதையே பெண்கள் விரும்பு
கிறார்கள். இந்தப் பயிற்சிகள் நல்லவைதான். ஆனால், எதற்காக வெளிநாடுகளில் இருந்து அறிமுகமான இந்த வகைப் பயிற்சிகள்? நம் பாரம்பர்யக் கோலாட்டத்தைவிட சிறந்தவையா இந்தப் பயிற்சிகள்?” என்று கேட்கிறார் சி.கே. மணிகண்டன். உடலுக்கும் மனதுக்கும் உற்சாகம் தரும் கோலாட்டப் பள்ளியை கோவையில் நடத்தி வருகிறார்.

“25 ஆண்டுகளாக நடனமாடுகிறேன். குழந்தைகளுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுக்கும் போது, குழந்தைகளின் பெற்றோர்கள், “ஃபிட்னெஸ்க்கு ஏதாவது டான்ஸ் சொல்லிக்கொடுங்க” என்று கேட்டார்கள். முதலில், ஏரோபிக்ஸ் பயிற்சிதான் சொல்லிக்கொடுத்தேன். ஏரோபிக்ஸ் என்பது யாரையும் பார்க்காமல், தன்னைத்தானே கண்ணாடியில் பார்த்துக்கொண்டு, ஆடுவது, குதிப்பதுதான். சிரிக்காமல் ஆட வேண்டும் இந்த ஆட்டத்தில் உயிரோட்டமே இல்லை. அதனால், ஆடுபவர்கள் என்ஜாய் செய்து ஆட முடியவில்லை. முக்கியமாக, சந்தோஷம் மிஸ் ஆனது.

வலை குலுங்க கோலாடு

நம் நாட்டுப்புற நடனம் ஒன்றையே ஃபிட்னஸ் டான்ஸாகப் பயன்படுத்தினால் என்னவென்று யோசித்தேன். நம் பாரம்பர்ய நடனங்கள்  அறிவியல் பூர்வமான நன்மைகளைக்கொண்டவை. கும்மி, கோலாட்டம் போன்றவை நம் உடலை இலகுவாகவும், திடமாகவும் இருக்கச்செய்பவை. சமவெளித் தளங்களுக்கு நன்கு பழக்கப்பட்ட நம் உடல், காடு மேடுகளில் புழங்கும்போதும் சிரமப்படாமல் இருப்பதற்கான பயிற்சிகளை இந்த நடனங்கள் தருகின்றன.

அதனால்தான் சேற்றில் இறங்கி நாற்று நடுவது, களை எடுப்பதென எல்லா வேலைகளையும் நம் பெண்களால் இயல்பாகச் செய்ய முடிந்தது. சில மாதங்களே விளை நிலங்களில் வேலை இருக்கும். மற்ற நாட்களில் உடலை இலகுவாவும் திடமாவும் வைத்துக்கொள்ள அவர்களுக்கு ஒரு கலைவடிவம் தேவைப்பட்டது. அதுதான், கோலாட்டமும் கும்மியாட்டமும். உட்கார்ந்து ஆடுவது, சாய்ந்து ஆடுவதென இந்த ஆட்டம் விவசாய வேலை செய்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. உண்மையில் உடலை ஃபிட்டாக வைத்திருக்க கோலாட்டமும், கும்மியாட்டமும்தான் சரியான சாய்ஸ்.

வலை குலுங்க கோலாடு

இவ்வளவு அறிவியல்பூர்வமான டான்ஸை, நகரங்களில் இருக்கும் பெண்களுக்கும் கற்றுத்தர விரும்பினேன். ஃபிட்னெஸ் பயிற்சியில் கோலாட்டத்தை அறிமுகப்படுத்தினேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. கோலாட்டம் ஆடும்போது அதிக அளவில் வெயிட் லாஸ் ஆகி, நல்ல ஃபிட்னெஸ் கிடைத்தது. ஆடுபவர்களின் அணுகுமுறையில் நல்ல மாற்றம் தெரிந்தது. இந்தக் கோலாட்டத்தை ஒருவரை ஒருவர் பார்த்து, சிரித்தபடி ஆடுவார்கள். இதனால் இவர்களுக்குள் இணக்கம் அதிகமாகிறது. நல்ல நட்பும் உருவாகிறது. தாழ்வு மனப்பான்மை இருந்தாலும் சுத்தமாகப் போய்விடும். குழுவோடு இணைந்து பணியாற்றுவதற்கான ஒத்திசைவான பண்பு மேலோங்கும்.

இந்த ஆட்டத்தில் 26 அடவுகள் இருக்கின்றன. ஒரு அடவுக்கு 10 ஸ்டெப்ஸ். மொத்தம் 260 ஸ்டெப்ஸ். இதை ஈஸியாக ஞாபகம் வைத்துக்கொள்ளலாம். அந்த அளவுக்கு, இந்த ஆட்டம் கான்சன்ட்ரேஷன் லெவலையும் அதிகரிக்கிறது.

சந்தோஷமா ஒரு வேலையை செய்தால் எப்பவும் ரிசல்ட் நன்றாக இருக்கும். அப்படித்தான் கோலாட்டத்திலும் நல்ல ஃபிட்னெஸ் ரிசல்ட் கிடைக்கும்” என்கிறார் சி.கே.மணிகண்டன்.

‘‘ரொம்ப ஃபிளெக்ஸிபிளா ஃபீல் பண்றேன்.  பாடி லைட்டான மாதிரி இருக்கு. குனிஞ்சு நிமிந்து வேலை செய்ய முடியுது. எல்லாத்துக்கும்மேல, மனசுல சந்தோஷத்தையும் அமைதியையும் உணர்கிறேன்” என்கிறார்கள் இங்கு கோலாட்டம் கற்றுக்கொள்பவர்கள்.

‘‘கோலாடு பெண்ணே கோலாடு வளை குலுங்க குலுங்க கோலாடு’’

- ச.ஜெ.ரவி, படங்கள்: தி.விஜய்