கன்சல்டிங் ரூம்
Published:Updated:

பெண்களுக்கு எல்லா வயதிலும் ஸ்ட்ரெஸ் !

பெண்களுக்கு எல்லா வயதிலும் ஸ்ட்ரெஸ் !

`பெண்களின் நலம், நாட்டின் வளம்’ என்கிற தாரக மந்திரத்தோடு நடந்து முடிந்திருக்கிறது, 58வது அனைத்திந்திய மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் மாநாடு. 8,000 மருத்துவர்கள் கலந்துகொண்ட, இந்த மாநாட்டின் செயற்குழுத் தலைவராக இருந்து, மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த நிறைவோடு இருந்தார், மூத்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் குரியன் ஜோசப். இந்தியாவில், ஒவ்வொரு வயதிலும் பெண்கள் அதிகம் சந்திக்கும் மருத்துவப் பிரச்னைகள் பற்றி, மாநாட்டில் விவாதிக்கப்பட்டதை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

டீன் ஏஜ் - அதிகரிக்கும் உடல் எடை!

டீன் ஏஜில், பெண் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மிக அவசியம். அதோடு, அவர்களுக்கு மாதவிலக்கு வரும் சமயத்தில், அதை எதிர்கொள்வது எப்படி என்பதை, தாய்தான் சொல்லித்தரவேண்டும். இப்போது, 70, 80 கிலோ எடை உள்ள டீன் ஏஜ் பெண்களை சர்வசாதாரணமாகப் பார்க்க முடிகிறது. பி.சி.ஓ.டி பிரச்னை, ஒழுங்கற்ற மாதவிலக்கு, உடல் பருமன் எல்லாமே ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டவை. அதிகப்படியான எடையைக் கட்டுப்படுத்த முடிந்தாலே, பாதிப் பிரச்னைகளை சரிசெய்துவிடலாம். இந்த வயதில் எடையைக் குறைக்காவிட்டால், சர்க்கரை நோய் வரும் அபாயமும் உள்ளது. இவை தவிர, பிறவியிலேயே வரும் குறைபாடுகள், அசாதாரணமான சில பிரச்னைகள் எல்லாம் இந்த வயதுப் பெண்களுக்கு வருகின்றன. இந்த வயதில் உடற்பயிற்சி அவசியம்.

பெண்களுக்கு எல்லா வயதிலும் ஸ்ட்ரெஸ் !

தாய்மைப்பேறு - தவிக்கவைக்கும் மனப்பதற்றம்!

திருமணமான தம்பதியர் அவர்களின் குடும்பச் சூழல், வேலைச் சூழல், பொருளாதாரச் சூழல் போன்றவற்றை யோசித்து, குழந்தைபேற்றைப் பற்றி முடிவெடுப்பது நல்லது. திட்டமிடுவதற்கு முன்பே கர்ப்பம் தரித்துவிட்டால், அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். நம் நாட்டில், கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்னை, ரத்த சோகை (அனீமியா).  இப்போ
தெல்லாம், சிலர் `ஆங்ஸைட்டி’ எனப்படும் மனப்பதற்றத்தின் காரணமாக, திருமணமான மூன்று மாதங்களிலேயே ``நான் கன்சீவ் ஆகலையே டாக்டர்?’’ என்று நேரடியாக டாக்டரிடம் போய்விடுகிறார்கள். ஆறு மாதங்களுக்குள் எல்லாப் பரிசோதனைகளையும் முடித்து, ஒரு வருடத்துக்குள்ளாக, தங்களுக்குக் குழந்தையே பிறக்காது என்று முடிவுகட்டி, `அடுத்து என்ன செய்வது?’ என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். நார்மலாக இருக்கும் பெண்களிலே கூட, 20 சதவிகிதம் பேருக்கு, உடனே கர்ப்பம் தரிக்காது. குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாவது அவகாசம் கொடுக்கவேண்டும். அதன் பிறகும் தாய்மை அடையவில்லை என்றால் மருத்துவரிடம் போகலாம்.

கர்ப்பகாலம் - தேவை மருத்துவ கவனிப்பு!

கர்ப்பகாலத்தைப் பொறுத்தவரை, நகரங்களில் நல்ல மருத்துவ வசதி இருக்கிறது. கிராமப்புறங்களில்தான் கர்ப்பகாலப் பராமரிப்பு மற்றும் பிரசவங்களில், போதிய மருத்துவ உதவியும் வசதிகளும் இல்லாததால் அவசரநிலை ஏற்படுகிறது. இலங்கையில், எல்லா கிராமங்களிலும் கிராமப்புற செவிலியர்்கள் இருப்பார்கள். கர்ப்பகாலங்களில் மாதம் ஒருமுறையும், கடைசி மாதத்தில் வாரத்துக்கு ஒரு முறையும், சைக்கிளில் வீடு வீடாகச் சென்று, கர்ப்பிணிகளைச் சந்திப்பார்கள். பிரசவ வலி வந்தால் கூட, ஆட்டோவிலேயே அந்தப் பெண்ணை செவிலியர் துணையுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள். ஏனெனில், அங்குள்ள பல கிராமங்களில் சாலைகளில் காரோ, ஆம்புலன்ஸோ போகமுடியாது. நான் பயிற்சிக்காகச் சென்றிருந்தபோது நேரடியாகப் பார்த்த, வெற்றிகரமான புராஜெக்ட் அது. அதனால், பிரசவத்தில் தாய் உயிரிழப்பது அங்கே மிக மிகக் குறைவு.

நம் நாட்டிலும் மருத்துவ வசதி இல்லாத கிராமப்புறங்களுக்கு ‘ஆஷா’ என்ற கிராமப்புற செவிலியர் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், அவர்களுக்குப் போதிய மருத்துவ அறிவை மேம்படுத்த வேண்டும். செவிலியர்கள் ஒழுங்காகக் கவனித்துக்கொண்டாலே போதும், 90 சதவிகிதம் பேறுகாலப் பிரச்னைகள் சரியாகி, பிரசவகால மரணங்கள் தவிர்க்கப்படும்.

பெண்களுக்கு எல்லா வயதிலும் ஸ்ட்ரெஸ் !

அறுவைசிகிச்சை பிரசவங்களில் அறுவைசிகிச்சை (சிஸேரியன்) செய்வதை, முடிந்தவரை தவிர்க்க முயற்சிக்கிறோம். ஒருமுறை சிஸேரியன் செய்தால், அடுத்த குழந்தைக்கும் செய்யவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. எனவே, முதல் பிரசவம் சாதாரண முறையில் நிகழவேண்டும் என்பதை, முக்கியமாகக் கவனிக்கிறோம். முடிந்த வரை முயற்சிசெய்து, முதல் பிரசவத்தில் அறுவைசிகிச்சையைத் தவிர்த்தால், மறுமுறை செய்வதும் தடுக்கப்பட்டுவிடும்.
தாய்ப்பால்

தாய்ப்பால் கொடுக்காத, இந்தத் தலைமுறை தாய்மார்கள் பலர், ``எனக்குப் பாலே ஊறவில்லை... அதனால் கொடுக்க முடியலை’’ என்று சொல்வது வழக்கமாகிவிட்டது.  ஆனால், பால் ஊறாததற்குக் காரணம் அவர்களின் மனப்போக்கும் நேரமின்மையும்தான். தாய்ப்பால் என்பது, ‘ஸ்விட்ச் ஆன்’ செய்ததும் வரும் விஷயம் அல்ல. குழந்தையுடன் அமர்ந்து, அதனுடன் நேரம் செலவழித்து, அதை அள்ளி அரவணைத்து, கொஞ்சி... அந்தப் பிணைப்பு உருவானால்தான் தாய்ப்பால் சுரக்கும். கண்டிப்பாகக் குறைந்தது ஆறு மாதங்கள் வரையிலாவது, தாய்ப்பால் மட்டுமே கொடுக்கவேண்டும்.

பெண்களின் பொதுவான உடல்நலப் பிரச்னைகள்

முன்பு, இரு குழந்தைகளுக்குப் பிறகு அதிக ரத்தப்போக்கு அல்லது கர்ப்பப்பையில் ஏதேனும் பிரச்னை என்றால், நேரே டாக்டரிடம் சென்று கர்ப்பப்பையை எடுத்துவிடுவார்கள். அதை முடிந்தவரை தவிர்க்க முயற்சிக்கிறோம். கர்ப்பப்பை பிரச்னைகளைச் சமாளிக்க, இப்போது நவீன மருத்துவத்தில் பல வழிகள் உள்ளன. தவிர்க்க முடியாமல் கர்ப்பப்பை நீக்க வேண்டி இருந்தாலும், 40 வயதுக்கு முன்னர் நீக்கக் கூடாது. ஹார்மோன் சுரப்பு இல்லாமல் போய்விடும். சினைப்பையில் கட்டி என்றாலும்கூட, கட்டியை மட்டும் அகற்றலாம். முடிந்தவரை சினைப்பையைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்.
புற்றுநோய்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய்  இரண்டுக்குமான பரிசோதனைகள் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக அவசியம். பிரசவம் முடிந்த பிறகு, கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான 3 தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள அறிவுறுத்துகிறோம். இந்தத் தடுப்பூசி போடுவதால், புற்றுநோய் வரும் அபாயம் தவிர்க்கப்படும். பிரசவத்துக்குப் பின், இந்தத் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பெண், அதற்கடுத்த ஆறு மாதங்கள் மீண்டும் கருத்தரிக்கக் கூடாது.

மெனோபாஸ்

மெனோபாஸ் சமயத்தில் உடற்பயிற்சி அவசியம் தேவை. ஹார்மோன்களின் அளவு குறைவதால், எலும்புகள் பாதிக்கப்படுவது அதிகமாகும். உடற்பயிற்சி செய்யும்போது, தேய்மானம் குறைந்து, எலும்பு
களின் வலுவிழப்பு தவிர்க்கப்படுகிறது. ஹார்மோன்களின் அளவு குறைவதால், சீரற்ற மாதவிலக்கு, அதிக உதிரப் போக்கு போன்றவை இருக்கலாம். சிலர் இதைத் தீவிரமான பிரச்னை என நினைத்து, டாக்டரிடம் போய் `கர்ப்பப்பையை எடுக்க வேண்டுமா’ என்பார்கள். ஆனால், அது நார்மலாக எல்லோருக்கும் வரும் ஓர் அறிகுறி; அவ்வளவுதான். இந்த காலகட்டத்தில், பெண்களுக்கு ‘நம்மை யாருமே கவனிக்கவில்லையே’ என்ற கழிவிரக்கமும் பாதுகாப்பற்ற உணர்வும் அதிகமாக இருக்கும். பிள்ளைகள் வளர்ந்து, சுதந்திரமாக இயங்கத் தொடங்கியிருப்பார்கள் என்பதால், பெண்களின் தனிமை அதிகரிக்கும். இதோடு, மெனோபாஸ் பாதிப்புகளும் சேர்ந்துகொள்ளும். அதனால், குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கண்டிப்பாகத் தேவை. பெண்கள் வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்காமல், தங்களை ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுத்திக் கொள்வது, அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

- பிரேமா நாராயணன் படங்கள்: எம்.உசேன்,ஜெ. வேங்கடராஜ்

பெண்களுக்கு எல்லா வயதிலும் ஸ்ட்ரெஸ் !