கன்சல்டிங் ரூம்
Published:Updated:

நலம் வாழ சில வழிகள்

நலம் வாழ சில வழிகள்

சுறுசுறுப்பு

சின்ன வயசில் இருந்தே, ‘சுறுசுறுப்பா இருக்கணும்’ என்று சொல்லிச் சொல்லி வளர்த்ததால், என் மனதில் அது மந்திரமாகப் பதிஞ்சிடுச்சு. இந்த வயதிலும் நான் ஒரு நிமிடம்கூட உட்காராமல் சுறுசுறுப்பாக இருப்பதற்கு, அதுதான் காரணம். வம்பு பேசும் நேரத்தில் உருப்படியா ஏதாவது செய்தால், நேரம் இல்லை என்கிற பேச்சே இல்லை. கால் வலிக்குது, கை வலிக்குது என்று நினைத்தால், வலிக்க ஆரம்பிச்சிடும். `ப்ச்... அது வலிக்கத்தான் செய்யும்’னு தாவிப்போனா, வலி ஓடிப் போயிடும்.

உடல் உழைப்பு

எங்க அம்மா வீட்டில் கூட்டுக் குடும்பம். எங்களுக்கு 12, 13 வயது இருக்கும்போதே, திருகையில் தானியங்களைப் போட்டுத் திரிச்சு, மாவாக்கச் சொல்வாங்க. கான்வென்ட்டில் படிச்சிட்டிருந்த நேரத்தில்கூட, வடைக்கு அரைக்கணும்னா, “கூப்பிடு லட்சுமியை”னு சொல்லும் அளவுக்கு எங்க வீட்டில் நான் ஃபேமஸ். இப்போதும்கூட, சில துவையல்களை அம்மியில்தான் அரைக்கிறேன். இப்படி உடல் உழைப்பு நிறைய இருந்தால், எந்தப் பிரச்னையும் இருக்காது.

கட்டுப்பாடான உணவு

50 வயது ஆகிவிட்டால், உணவில் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாதப் பொருட்களை வயிற்றுக்குள் போடக் கூடாது. காலை 8.30, மதியம் ஒரு மணி, இரவு 7.30 மணி இதுதான் என் சாப்பாட்டு நேரம். என்ன நடந்தாலும், இதை ஸ்கிப் பண்ணமாட்டேன். சரியாக 10.30 மணிக்குத் தூங்கிடுவேன். காலையில் டக்குனு 4.30-க்கு விழிப்பு வந்துடும். இதுதான் என் ரொட்டீன்.
20 வருடங்களாக காலையில் மஷ்ரூம் டீ தான். அது இயற்கை உணவு. ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. மலேசியாவிலிருந்து வருது. நானும் என் வீட்டுக்காரரும் அதைத்தான் குடிக்கிறோம். உணவில் பச்சைக் காய்கறிகளும் பழங்களும் நிறைய எடுத்துக்கொள்வோம். வெளிப்புற சருமத்துக்கு எவ்வவளவு அலங்காரங்கள் செய்கிறோம்? அதுபோல, உள்ளே இருக்கும் உறுப்புகளுக்கு அலங்காரம்னா, ஆரோக்கிய உணவுகளும் உடற்பயிற்சியும்தான்.

வெயிட் ஏறிடக் கூடா தேன்னு ரொம்ப கான்சியஸா இருப்பேன். தயிர், மோர் தவிர, மற்ற வெள்ளை நிற உணவுகளைத் தவிர்த்துவிட்டேன். இதற்குப் பதிலாக, தேன், பனங்கற்கண்டு, பனை வெல்லம் சேர்த்துக்குவேன்.

நலம் வாழ சில வழிகள்

யோகப் பயிற்சி

தினமும் காலையில் உடற்பயிற்சி, யோகா செய்ய லைன்னா, அன்றைக்கு முழுதும் ஏதோ நம்ம உடலுக்கு நல்லது செய்யாதது போல ஒரு குற்ற உணர்வு வந்திடும். நேரமே இல்லாமல், தொடர்ந்து ஷூட்டிங் இருந்தாலும்கூட, அங்கேயே ஒரு இடத்தைக் கண்டுபிடிச்சு, சுலபமாகச் செய்யக்கூடிய ரெண்டு, மூணு ஆசனங்களை செய்திடுவேன். ஆபீஸ்ல வேலை செய்றவங்க ரெஸ்ட் ரூமில் நின்றபடியேகூட, `ஸ்பாட் ஜாகிங்’ செய்யலாம்.

நேர்மறை எண்ணங்கள்

ஒவ்வொரு நாள் நான் கண்விழிக்கும்போதும், `ஒன் மோர் டே இஸ் கிராண்டட்’ என்ற நினைப்போடதான் எழுவேன். நேற்றையக் கோபங்களை இன்னிக்கு வரை இழுத்துக்கிட்டு வராதீங்க. எழும்போதே, டென்ஷனோடு அன்றைய நாளைத் தொடங்காதீங்க. கைகள் இரண்டையும் தேய்ச்சு, அதில் கண் விழிக்கச் சொல்லி நம் முன்னோர்கள் சொன்னதில் அர்த்தம் இல்லாமல் இல்லை. கைகளில்தான் எல்லா சக்கரங்களும் இருக்கு. அவற்றை ஆக்ட்டிவேட் பண்ணத்தான் கைகளைத் தேய்க்கிறோம்.

நாளின் ஒவ்வொரு விநாடியையும் கொண்டாடணும். நமக்குன்னு சில நிமிஷங்கள் ஒதுக்கி, தினமும் ஏதாவது வாசிக்கணும். மனமும் எண்ணங்களும் நாம இப்போ இருக்கிற நிலைமைக்கு மிக முக்கியமான காரணங்கள்.

நலம் வாழ சில வழிகள்

சிரிப்பு

எங்க வீட்டில் எப்போதும் சிரிப்பு சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும். என் கணவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். எப்போதும் ஏதாவது ஜோக் அடிச்சுக்கிட்டே இருப்பார்.  நாங்க விழுந்து விழுந்து சிரிப்போம். எல்லா விஷயங்களையுமே நகைச்சுவை உணர்வோடு பார்க்கக்கூடிய மனிதர். அதனாலதானோ என்னமோ நாங்க 29 வருஷமா சந்தோஷமா, ஆரோக்கியமா வாழ்ந்துட்டிருக்கோம். பெரியவ அதிரடியா ஜோக் சொல்லி, சிரிக்கவைப்பா... சின்னவ கூலா, நலுங்காம ஏதாவது அமைதியா சொல்லிட்டு, போய்ட்டே இருப்பா. நாங்க பயங்கரமா சிரிப்போம். நகைச்சுவைகூட ஒரு வைத்தியம்தான்.

ஆயுர்வேதம்

நம்ம உடல், ஆயுர்வேதத்தின் அடிப்படையில் அமைஞ்சது. அதனால, வீட்டிலேயே எப்போது ஒரு சின்ன நாட்டுமருந்துக் கடை இருக்கும். செரிமானத்துக்கு அங்காயப்பொடி, இஞ்சி லேகியம், சளி, இருமல், காய்ச்சல்னா சுக்கு, மிளகு, திப்பிலி அரைச்ச பொடி... தினமும் காலையில் கொஞ்சம் வேப்பங்கொழுந்தை மென்று சாப்பிடுவேன். வீட்டிலேயே ஒரு மூலிகைத் தோட்டமும் போட்டிருக்கேன். 

உடலுக்கு நல்லதுன்னு சொல்லிட்டா, முதல்ல அதைச் சாப்பிட்டுவிட்டுத்தான் மறுவேலை.  இந்த உடம்பை எடுத்துக்கிட்டு வந்துட்டோம்... அதைப் பத்திரமாப் பார்த்துக்கணும்ல!

- பிரேமா நாராயணன் படம் : கே.ராஜசேகரன்