கன்சல்டிங் ரூம்
Published:Updated:

கை கழுவலாம் வாங்க !

கை கழுவலாம் வாங்க !

தினசரி வாழ்க்கையில் சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்தால் போதும், மிகப் பெரிய பிரச்னைகளையும் சுலபமாகத் தவிர்க்கலாம்.

கிளாஸ், கப்

பிளாஸ்டிக் கப், பேப்பர் கப் போன்ற யூஸ் அண்ட் த்ரோ கப்களில் மெழுகு பூசப்பட்டிருக்கும். வெளியே டீ, காபி, ஜூஸ் குடிக்க கண்ணாடி, பீங்கான் கோப்பைகளே சிறந்தவை.

காசு... பணம்...

வீட்டினுள் உள்ள கழிப்பறையை விட அதிகமான கிருமிகள் ரூபாய் நோட்டில் இருக்கின்றன. பலரது கைகளுக்குள் சென்றுவரும் பணத்தை, எச்சில் தொட்டு எண்ணுவது, வாயில் வைப்பது, பணத்தை சுருட்டி, காது குடைவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.

கை கழுவலாம் வாங்க !

சோஃபா

வீட்டை ஒருநாளைக்கு இரு முறை பெருக்கிச் சுத்தம் செய்வோம். தினமும் துடைப்போம். ஆனால் சோஃபா, சேர் இடுக்குகளைச் சுத்தம் செய்ய மறந்திருப்போம்.  என்றாவது ஒருநாள் சோஃபா இடுக்கில் கைகளை விட்டால், பேனா மூடி, பாட்டில் மூடி என  நாம் தவறவிட்ட பல பொருட்கள் அதற்குள் கிடக்கும். இதுபோல  டி.வி ரிமோட், டெலிபோன், ஸ்விட்ச் போர்டு, கழிப்பறைக் கைப்பிடிகள் என அனைத்திலும் கவனம் தேவை. முழுமையான கவனத்துடன் சுத்தம் செய்வது நம் ஆரோக்கியத்துக்கானப் பாதுகாப்பு.

சோம்பு

விருந்து, பஃபே உணவுக்குப் பிறகு, கடைசியில் சோம்பு சாப்பிடுவது வழக்கம். பில் கவுன்டரில், மேஜையின் மேல் இருக்கும் திறந்த கப்களில் அனைவரும் கைவிட்டு எடுக்கும்படி வைத்திருக்கும் சோம்பைத் தவிர்ப்பதே நல்லது. பலருடையக் கைகளும் சோம்பில் நேரடியாகப் படும்.  பாக்கெட்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சோம்பைச் சாப்பிடுவதே சிறந்தது.

பர்த்டே கேக்

ஒருவர் தன் வாயால் ஊதி அணைத்த மெழுகுவர்த்தி பொருத்திய கேக்கின் மேல் பரப்பில், சராசரியாக 3,000 பாக்டீரியாக்கள் உள்ளன என்கிறது ஓர் ஆய்வு. பிறந்தநாள் கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றி, ஊதி அணைப்பதைத் தவிர்க்கலாம். 
 
ஏ.டி.எம் மெஷின்

பப்ளிக் டாய்லெட் போல ஏ.டி.எம் மெஷினும் கிருமிகள் நிறைந்த இடமே. மெஷினைப் பயன்படுத்திய பிறகு, முடிந்தால் கைகளைக் கழுவவும். பொது இடங்களில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர் கீபோர்டுகளில் கிருமிகள் நிறைந்திருக்கும் என்பதால், பயன்படுத்திய பின், கைகளைக் கழுவுவது நல்லது.

கை கழுவலாம் வாங்க !

மேக் அப் பிரஷ்

அழகு நிலையங்களில் போடப்படும் மேக் அப் பிரஷ்களும் சுகாதாரமற்றவைதான். சருமப் பிரச்னைகளுக்காக பியூட்டி பார்லர் சென்று, சருமப் பிரச்னைகளோடு திரும்புவதற்குக் காரணம், பலர் பயன்படுத்திய பிரஷைப் பயன்படுத்துவதுதான். அடிக்கடி அழகு நிலையங்களுக்குச் செல்பவர்கள் தனக்கென மேக்அப் கருவிகளைச் சுயமாக வைத்திருப்பது நல்லது.

கதவுகளின் கைப்பிடி

பொது இடங்களிலும் வீட்டிலும் உள்ள கழிப்பறை, குளியலறை கதவுகளைக் கையாள்வதில் கவனம் தேவை. வலது கையைப் பயன்படுத்தாமல் இடது கையால் திறந்து, மூடப் பழகலாம். பொது இடங்களில் தங்களுக்கென டிஷ்யூ பேப்பர்களை வைத்துக்கொண்டால், பெரும்பாலான கிருமிகளிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம். அதுபோல கைகளைக் கழுவ, ஒரே சோப்பை அனைவரும் பயன்படுத்தாமல், லிக்யூடு ஹேண்டு வாஷைப் பயன்படுத்துவதுதான் சரி.

கை குலுக்கல்

கைகளைக் குலுக்கும் பழக்கம் மேற்கத்திய நாட்டிலிருந்து வந்தது. வணக்கம் சொல்வதே நமது பழக்கம். முடிந்தளவு வணக்கம் சொல்லப் பழகலாம். சாப்பிடும் முன்னோ, சமைக்கும் முன்னோ, கைகழுவும் பழக்கத்தைக் கட்டாயமாக்குவது நல்லது. பொது இடங்களில் பயணித்தாலும், வீட்டிற்கு வந்தவுடனே குளிப்பது, கிருமிகளிடமிருந்து நம்மைக் காக்கும் எளிய வழி.

கைக்குட்டைபெரும்பாலோர் கைக்குட்டையைப் பயன்படுத்துவர். ஆனால், அதில் சிலர் பவுடரைக் கொட்டிக்கொண்டு, அவ்வப்போது முகத்தை டச்அப் செய்துகொள்வர். தும்மல், இருமல் என இருந்தாலும், அதே கைக்குட்டையை மூக்கில் வைக்கும்போது, சுவாசம் வழியே பவுடர் உடலுக்குள் சென்று, பிரச்னையை மேலும் தீவிரமாக்கும். மேலும் தும்மல், இருமலுக்குப் பயன்படுத்திய அதே கைக்குட்டையால் முகம் துடைத்தால், கிருமிகள் இன்னும் பரவிவிடும். தற்போது, ஈரப்பதமான  `வெட் வைப்ஸ்’ வந்துள்ளன. அதனைக்கொண்டு முகம் துடைக்கலாம்.

டவல் கிருமிகள்

ஹோட்டல்களில், கை கழுவும் இடங்களில் வைத்திருக்கும் டவலைப் பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது. நாள்கணக்கில் துவைக்காமல் இருக்கும் அந்த டவல்களை, ஒருநாளில் நூற்றுக்கணக்கானோர் கை துடைக்கப் பயன்படுத்துகிறார்கள். கை துடைக்கும்போதே, கிருமிகளையும் அழைத்துவருகிறோம்.

டாய்லெட் கவனம்

கழிப்பறைகளில் கீழே தண்ணீரைக் கொட்டக் கூடாது. ஈரமான கழிப்பிடம் கிருமிகளின் கூடாரமாகி, நோய்களை வீட்டுக்குள் வரவழைத்துவிடும்.

- ப்ரீத்தி