கன்சல்டிங் ரூம்
Published:Updated:

நச்சுக்களை நீக்கும் விரதம்

நச்சுக்களை நீக்கும் விரதம்

சத்திய நாராயண மூர்த்தி சித்த மருத்துவர்

நம்முடைய வாழ்க்கை முறை, உணவுப் பழக்கத்தால் உடலில் நச்சுக்கள் சேருகின்றன. இதைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் அகற்றும் பழக்கம் நம்முடைய பாரம்பரியத்தில் இருந்தது. இதனால்தான் வாரத்தில் ஒரு நாள் நோன்பு போன்றவை பின்பற்றப்பட்டன. தற்போது மாறிவிட்ட வாழ்வியல் முறையாலும், நேரமின்மை காரணத்தாலும் நச்சு நீக்கும் முறையை மறந்தேவிட்டனர். நவீன உலகில் அனைத்தும் ரசாயனக் கலவைகளாக மாறியுள்ளதால் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக்கொள்ள, உடலைத் தேவையான நேரத்தில் நச்சுநீக்கம் செய்தாகத்தான் வேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டது.

முன்பு, உடலைச் சுத்தம்செய்வது என்பது மூன்று நாள் தொடர்ந்து செய்யும் முறையாகப் பின்பற்றப்பட்டது. இன்றைய சூழ்நிலையில், மூன்று நாள் நச்சு அகற்றும் முறையெல்லாம் கடைப்பிடிக்க முடியாது என்பதால், எளிமையான முறையில்  நச்சுக்களை நீக்கும் வழிகளை பற்றி விளக்குகிறார், சித்த மருத்துவர் சத்திய நாராயண மூர்த்தி.

நச்சுக்களை நீக்கும் விரதம்

டி டாக்ஸிஃபிகேஷனின் அவசியம்:

நிறையப் பொருட்களை பயன்படுத்தி சமைக்கிறோம். ஒன்றோடு ஒன்று முரண்படும் உணவுகளை சேர்த்துச் சமைக்கும்போது, அவை நம் உடலில் நஞ்சாகச் சேர தொடங்கும். மேலும், இன்றளவில் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்து, விளைவிக்கப்படும் பொருட்களிலிருந்து வரும் நச்சுக்கள், உடலைப் பாதிக்கும். உடலில் அதிகஅளவு கழிவுகள் தேங்கும்போது, உடல் தன் இயல்புத்தன்மையை இழந்துவிடுகிறது. உடலின் ஆற்றலும் குறைந்துவிடும். இதனால், சீரான இயக்கங்கள் நடைபெறாமல் தடுக்கப்படலாம். இதைத் தடுப்பதற்கும், நச்சுக்களை வெளியேற்றுவதற்கும் நச்சு நீக்கும் முறை அவசியம்.  
                 

நச்சுக்களை நீக்கும் விரதம்

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வாந்திக்கு மருந்து சாப்பிடுதல், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பேதிக்கு மருந்து எடுத்துக்கொள்ளுதல், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மூக்கில் மருந்து விட்டு அழுக்கை அகற்றுதல், மூன்று நாட்களுக்கு ஒருமுறை கண்களில் அஞ்சனமிடுதல் செய்ய வேண்டும் என்கிறது, நம்முடைய பாரம்பர்ய மருத்துவம். இப்படி செய்யும்போது, உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும், உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும், சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக வாழ உதவும், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

விரதம் இருத்தல்:

வாரத்துக்கு அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை, ஒருநாள் முழுவதும் திரவ உணவை மட்டும் உண்டு, திட உணவைத் தவிர்க்கலாம். இதுபோல, அவரவரின் உடல்நிலையைப் பொறுத்து விரதம் இருக்கலாம். சர்க்கரை நோயாளிகள், விரதம் இருக்க முடியாதவர்கள் விரதம் இருக்க முயற்சிக்க வேண்டாம். அவசியம் எனில் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறலாம்.

ஒரே நாளில் நச்சுக்களை நீக்கும் முறை:

காலை 6-7 மணி அளவில் எலுமிச்சை டீ யுடன், இந்து உப்பு, மிளகு சேர்த்து மிடறு மிடறாக (Sip by sip) 15 நிமிடங்கள் வரை குடிக்க வேண்டும். காலை உணவாக, பழங்கள், காய்கறிகளை சாப்பிடலாம். மதியத்தில், கஞ்சி, காய்கறி உப்புமா போன்ற லைட்டான உணவுகளை சாப்பிடலாம். இரவில் பழங்களை (2 வாழை)சாப்பிடலாம். மறுநாள் காலை 7 மணி அளவில் நெல்லிச் சாற்றைக் குடித்து, விரதத்தை முடிக்கலாம்.

- ப்ரீத்தி

எளிய முறையில் நச்சுக்களை நீக்கும் வழிகள்

தினமும் காலை இளஞ்சூடான நீரில் எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து, 15 நிமிடங்கள் வரை சிப் செய்து குடிக்கலாம். எலுமிச்சைச் சாறு, மிளகு, உப்பு போன்றவற்றைச் சேர்த்து, லெமன் டீயாகவும் குடிக்கலாம். ப்ரெஷ்ஷாக தயாரித்துக் குடிப்பது நல்லது.

பெரு நெல்லி சாறு, மிளகு, சிறிது இந்து உப்பு கலந்து, வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

பொன்னாங்கண்ணிக் கீரை சருமத்திற்கும், வல்லாரை மூளைக்கும், கரிசாலைக் கீரை கல்லீரலுக்கும் நல்லது. சமையலில் மஞ்சளைச் சேர்ப்பது, நச்சுக்களை வெளியேற்றும்.

செம்பருத்தி டீ மற்றும் மருதம் பட்டைப் பொடியை, இளஞ்சூடான நீரில் கலந்து குடிக்க, இதயத்தை சுத்தப்படுத்தும்.

வாரம் ஒருமுறை கீழாநெல்லி ரசம், மாதம் இருமுறை அகத்திக் கீரை சாப்பிடலாம்.

மாதம் இருமுறை நீர்முல்லி மற்றும் நெரிஞ்சில் கஷாயம், முள்ளங்கிச் சாற்றைக் குடிப்பதால் சிறுநீரகத்தின் நச்சுக்கள் வெளியேறும்.

ஒரு லிட்டர் நீரில் மஞ்சள் சேர்த்து, அதில் நெல்லியை ஊறவைத்து, தினம் ஒன்றாக எடுத்துச் சாப்பிடலாம்.

பேதி மற்றும் வாந்திக்கு மருந்து எடுக்க விரும்புவோர், சித்த மருத்துவரிடம் சென்று, மருத்துவர் ஆலோசனையுடன் அகத்தியர் குழம்பைத் தேவையான அளவில் எடுத்துக்கொண்டு, உடலை சுத்தப்படுத்திக்கொள்ளலாம்.
அஞ்சனமிடுதல் என்றால் கண்களில் மை இடுதல். அதாவது, அஞ்சனக் கல்லை இழைத்து, தண்ணீரில் கலந்து, கண்களில் மையாக இடுதல். 3 நாட்களுக்கு ஒருமுறை, காலை வேளையில் இடலாம். சூரியன் மறைந்த பிறகும், மாதவிலக்கு சமயத்திலும், எண்ணெய் தேய்த்துத் தலைக்குக் குளித்த அன்றும் மை இடக் கூடாது. இப்படி மை இடுவதால், கண்களிலிருந்து அழுக்கு, கருநிற நீர், நச்சுக்கள் வெளியேறும். வாதம், பித்தம், கபம் ஆகியவை சமநிலையில் இருக்கும். கண் பார்வைத் திறனும் அதிகரிக்கும். சுரப்பிகள் சரியாகச் செயல்படும்.