கன்சல்டிங் ரூம்
Published:Updated:

இது டாக்டர் ஃபேமிலி

ஆக்டிவான வாழ்க்கையே, ஆரோக்கியமான வாழ்க்கை!

`இது டாக்டர் ஃபேமிலி’ பகுதிக்காக நாம் சந்தித்த டாக்டர் தியாகராஜமூர்த்தி, சென்னை ‘பில்ராத் மருத்துவ மனை’யில் இதய அறுவைசிகிச்சை நிபுணர். அவருடைய மனைவி டாக்டர் தீபா, மகளிர் - மகப்பேறு நிபுணர். தியாகராஜ மூர்த்தியின் தங்கை, டாக்டர் பாரதி, இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரத்தில் நாளமில்லா சுரப்பிகள் நிபுணர். அவர் கணவர் மகாதேவன், குழந்தைகள் நல நிபுணர். டாக்டர் மகா தேவனின் தம்பி, டாக்டர் புகழேந்திரன், மயக்க மருந்து நிபுணர் (அனெஸ்தெடிஸ்ட்). அவருடைய மனைவி டாக்டர் புனிதா, ஈ.என்.டி டாக்டர் என்று பெரிய மருத்துவர் பட்டாளம்.

கண்டம்விட்டு கண்டம் தாண்டி இருந்தாலும், அடிக்கடி வருவதும் போவதும் சந்திப்புகளுமாக, பாசக்காரக் குடும்பம். அண்மையில் தியாகராஜமூர்த்தியின் இல்லத்துக்கு, அவருடைய தங்கை பாரதி வந்திருந்தபோது, இந்த டாக்டர் குடும்பத்தைச் சந்தித்தோம். மடியில் இருந்த கணினியைத் தள்ளிவைத்துவிட்டு உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார் டாக்டர் தியாகராஜமூர்த்தி.

``கோயமுத்தூரை பூர்விகமாகக்கொண்ட குடும்பம் என்பதால், எங்க வீட்டில் முக்கால்வாசி நம்ம பாரம்பரியப் பழக்கவழக்கம்தான்... சென்னையிலேயே செட்டிலானதால் சில உணவுப் பழக்கங்கள் மாறி இருக்குமே தவிர, மத்தபடி எல்லாமே பாரம்பர்யம்தான். நாங்க ரெண்டு பேருமே பிஸியான டாக்டர்ஸ் என்றாலும், எங்க வீட்டில் கூடவே என் அம்மாவும், கீழ் வீட்டில் மாமனார், மாமியாரும் இருப்பதால், பெரிய ஆதரவு. எங்க வேலை நேரத்தை, குழந்தைகளுக்கேத்த மாதிரிதான் அமைச்சுட்டிருக்கோம். குழந்தைங்க வீட்டில் இருக்கிறப்போ அவங்களோட நேரம் செலவிடணும் என்கிறதுக்காகவே கிளினிக்கைக்கூட வீட்டுக்குப் பக்கத்திலேயே தீபா வெவச்சிருக்காங்க. எப்பவும் பேமிலிதான் ஃபர்ஸ்ட் ’’  என்று மனைவியைப் பார்க்க, தலை அசைத்து ஆமோதிக்கிறார் டாக்டர் தீபா.

இது டாக்டர் ஃபேமிலி

``யெஸ்... காலையில் அவங்களை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, கிளினிக் போவேன். பசங்க வரும் சமயத்தில் வந்துடுவேன். சாயந்தரம் அவங்க படிக்கிற நேரத்தில் முடிஞ்சவரை அவங்ககூட இருக்கப் பார்ப்பேன். பரீட்சை சமயத்தில் கன்சல்டேஷனை எல்லாம் கேன்சல் பண்ணிடுவேன். இந்த ஃப்ளெக்ஸிபிலிட்டிக்காகத்தான், எந்தப் பெரிய மருத்துவமனையிலும் சேராமல், சொந்த கிளினிக்கில் மட்டும் கன்சல்டேஷன் பார்த்துட்டு இருக்கேன். வீட்டில் எப்போதும் என் மாமியார் இல்லேன்னா அம்மா, அப்பான்னு பெரியவங்க யாராவதுகூட இருப்பாங்க. குழந்தைகளுக்கு, பாட்டி, தாத்தாகூட இருக்கிறது பெரிய வரம்.

குழந்தைங்க ஆகாஷ், சந்தியா ரெண்டு பேருமே ஸ்போர்ட் பிராக்டீஸுக்குப் போறதுக்காக காலையில் சீக்கிரமே எழுந்துடுவாங்க. வீட்ல எப்போதுமே ஹெல்த்தி டயட்தான். நாங்க யு.கே-வில் ஒன்பது வருஷம் இருந்தோம். ஆனாலும் நம்ம உணவுகளான இட்லி, தோசை, பொங்கல், அடை, சாம்பார், ரசம்னு எல்லாமே உண்டு. குழந்தைங்களும் எதையுமே வேண்டாம்னு ஒதுக்க மாட்டோம். தினமும் குழந்தைகளுக்கு முட்டை, ஒரு பழம், ஒரு காய் இருக்கும். காலையில் இட்லி, தோசை, கார்ன்ஃப்ளேக்ஸ், ஓட்ஸ்னு பிரேக்ஃபாஸ்ட். மதியம் பக்கா சௌத் இண்டியன் லன்ச். எங்க ரெண்டு பேருக்கு மட்டும் தினமும் டின்னர் சப்பாத்தி. ஈவ்னிங், பழங்களும் பாலும். சில சமயம் மில்க்‌ஷேக். வாரக் கடைசிகளில் நான்வெஜ். எப்போதாவது வெளியில் போகும்போது, பீட்ஸா, பர்கர் மாதிரியான உணவுகளை அனுமதிப்போம். ஆனால், கூல்டிரிங்க்ஸ், ஜங்க் ஃபுட்ஸ்க்கு நோ.

ரெண்டு பேருமே ஸ்கூல்ல பேஸ்கட் பால், ஃபுட் பால் டீம்ல இருக்காங்க. பையன் கராத்தேவில் பிளாக் பெல்ட். என்.சி.சியிலும் இருக்கான். ரெண்டு பேருமே நல்ல ஸ்விம்மர்ஸ். அதனால், உடலுக்கு நல்ல ஸ்டாமினா கொடுக்கிற உணவுகளைக் கொடுத்துடுவேன். நாங்க நிறையப் பழங்கள் எடுத்துக்குவோம். அதைப் பார்த்து பார்த்தே  குழந்தைகளும் பழம் சாப்பிடப் பழகிட்டாங்க.

இது டாக்டர் ஃபேமிலி

உடற்பயிற்சிக்கு எங்க வீட்டில் ரொம்பவே முக்கியத்துவம் கொடுப்போம். வாரத்தில் மூணு நாளாவது யோகாவுக்கு நேரம் ஒதுக்கிடுவேன். அவர் தினமும் ஜாகிங், ஜிம் போவார். நேரம் கிடைக்கிறப்போ, மகாபலிபுரம் சாலையில் சைக்கிளிங் போவோம். பசங்களும் தினமும் ஒரு மணி நேரம் ஸ்போர்ட்ஸ்க்குப் போயிடறாங்க.

வீட்டில் எல்லோருக்கும் எண்ணெய்க் குளியல் கண்டிப்பா உண்டு. ஸ்போர்ட்ஸ் பிராக்டீஸ் இருக்கிற அன்னிக்கெல்லாம்  ஆறு மணிக்கு ஸ்கூல்ல இருந்தாகணும். ஸோ, தினமும் காலையில் அஞ்சு மணிக்கு எழும் பழக்கம் எல்லோருக்குமே தானாவே வந்துடுச்சு. ராத்திரி 10 மணிக்குள் படுக்கப் போயிடுவாங்க. ஏ.சி ரொம்ப பழக்கலை. அப்புறம் அதுவே பழக்கமாயிடும். சம்மர்ல மட்டும்தான் ஏ.சி.

குழந்தைகளுக்கு எந்த ஹெல்த் சப்ளிமென்ட்டும் இல்லை. நானும் அவரும் மட்டும் வைட்டமின் டி, மீன் எண்ணெய் எடுத்துக்கிறோம். நாங்க மருத்துவத் துறையில் இருக்கிறதால, வருஷத்துக்கு ஒரு முறை ஜெனரல் செக்கப்,  கண்ணாடி போட்டிருக்கதால ஐ செக்கப், அப்புறம் டென்டல் செக்கப் எல்லாம் பண்ணிடுவோம்’’ - கடகடவென தன் குடும்பத்தின் ஆரோக்கிய ரகசியங்களைப் பகிர்கிறார் தீபா.

``நீங்க சொல்லுங்க டாக்டர், உங்க வீட்டில் எப்படி?’’ - என்றதும் பேச ஆரம்பித்தார் டாக்டர் பாரதி மகாதேவன்.

``அண்ணி சொன்னதில் ஐம்பது சதவிகிதமாவது இங்கிலாந்தில் எங்க வீட்டிலும் கடைப்பிடிக்கிறோம். நான் கோவை மருத்துவக் கல்லூரியில் படிச்சேன். என் கணவர், சென்னை ஸ்டான்லி. ரெண்டு பேருமே யு.கே-வில்தான் பி.ஜி பண்ணினோம். அங்கேயே ட்ரெய்னிங் முடிச்சு, கன்ஸல்டன்ட்ஸ் ஆக இருக்கோம். எங்க வீட்டில் ஹெல்த் கான்ஷியஸ் ரொம்பவே ஜாஸ்தி. அதனால, ரெகுலர் எக்ஸர்சைஸ், நீச்சல், கிரிக்கெட், டென்னிஸ்னு பயங்கர ஆக்டிவ் லைஃப் எங்களுடையது. வாரத்தில் 10 மணி நேரம் அவுட்டோர் விளையாட்டுக்காகவே ஒதுக்கிடுவான் எங்க பையன் சித்தார்த். பொண்ணு மீராவும் டான்ஸ் கத்துக்கிறா. பரதம், பாலே, ஜிம்னாஸ்டிக்ஸ் கிளாஸ்க்கு போய்ட்டிருக்கா, ஜிம்னாஸ்டிக்ஸ் கத்துக்கிறதால, உடம்பு ரொம்ப ஃப்ளெக்ஸிபிளாக இருக்கும்.

இது டாக்டர் ஃபேமிலி

அவங்க ரெண்டு பேருக்குமே பிரேக்ஃபாஸ்ட், லன்ச் ரெண்டுமே ஸ்கூலில்தான். வெஸ்டர்ன் ஸ்டைல் உணவுதான். ஆனா, பழம், முட்டை, பிரெட் டோஸ்ட் எல்லாம் சேர்ந்த சத்தான, சரிவிதித உணவு. ஸ்கூலில் தரும் வாராந்திர மெனுவை, ஸ்கூல் வெப்சைட்டில் போட்ருவாங்க. ஸோ, அவங்க என்ன சாப்பிடறாங்கன்னு தினமும் நாம பார்த்துக்கலாம். ராத்திரிக்கு எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவோம். நம்ம ஊர் சாப்பாடு. அம்மா செய்ற சமையல் எல்லாமே நானும் சமைப்பேன். குழந்தைங்க நம்ம ஊர் உணவுக்கும் சுவைக்கும் பழகணும் இல்லையா? பருப்பு, காய்கறி இருக்கிற மாதிரி சமைப்பேன். சப்பாத்தி, ரொட்டி, இட்லி, தோசை. அதோடு ஒரு பவுல் நிறைய பழங்கள். வாரத்துக்கு ஒன்றிரண்டு நாள் மட்டும்தான் சாதம். அசைவமும் வாரத்துக்கு ரெண்டு நாட்கள் மட்டும். காலையிலும் மாலையிலும் ஒரு கிளாஸ் பால் கட்டாயம் எடுத்துக்குவாங்க.

பொதுவாகவே நேரத்துக்கு சாப்பிடறது நல்லது. அதுவும் ராத்திரி சீக்கிரம் சாப்பிட்டுப் பழகினா, நெஞ்சுக்கரிப்பு, எதுக்களிப்பு பிரச்னை எல்லாம் வராது. சாப்பாட்டு நேரத்தில் ரொம்ப கவனமாக இருக்கிற
தால குழந்தைகளுக்கோ எங்களுக்கோ அஜீரணப் பிரச்னை இல்லை.

அந்த நாட்டில், நடை ரொம்ப அதிகம். எங்கே போனாலும் நடைதான். ஹாஸ்பிட்டலில் கார் பார்க்கிங் ஏரியாவிலிருந்து உள்ளே போற வரை நடக்கணும். அது தவிர, வீக் எண்டில், குழந்தைங்களோடு சேர்ந்து 2 மணி நேரத்துக்கு லாங் வாக் போவோம். நடக்கிறதுக்குத் தயங்கவே மாட்டோம். ரொம்ப நல்லா இருக்கும். புத்துணர்ச்சியா இருக்கும். பசங்களோடு டென்னிஸ் விளையாடுவோம். லோக்கல் டென்னிஸ் கிளப்பில் நாங்க உறுப்பினர்கள். அதோடு, அவர் தினமும் ஜாகிங் போவார். இங்கே, கோடையில் பகல் பொழுது அதிகம். அப்போது, வாக்கிங், ஹைக்கிங் என்று ஒரே எனர்ஜிமயம்தான்.க்ளைமேட் நல்லா இருக்கும்போது, பக்கத்தில் இருக்கிற சின்னக் குன்றுகளில் ட்ரெக்கிங் போவோம்.

 ஆக்டிவா இருந்தால் போதுங்க. அமெரிக்காவா இருந்தாலும், அமிஞ்சிக்கரையா இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்கலாம்’’ - அதிரடியாக முடிக்கிறார் பாரதி.

- பிரேமா நாரயணன்

டாக்டர் தந்த ஹெல்த் டிப்ஸ்

குழந்தைகளோ, பெரியவர்களோ சுறுசுறுப்பான வாழ்க்கைமுறை வேண்டும். யாராக இருந்தாலும் எடையைப் பராமரிப்பது மிகவும் முக்கியம்; அவசியமும்கூட.உடற்பயிற்சி மிக மிக அத்தியாவசியம். நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்கியே ஆகவேண்டும்.

ஃபாஸ்ட் ஃபுட் வகைகளில் இருப்பது, அதிகக் கொழுப்பு, அதிக சர்க்கரை. இதனால்தான் பலருக்கு உடல்பருமன் (Obesity) மற்றும் சக்கரை நோய் ஏற்படுகின்றன. மேல்நாட்டில் (குறிப்பாக அமெரிக்காவில்) இப்போது பரவலாகக் காணப்படும் `ஃபேட்டி லிவர்’ என்னும் பிரச்னை ஏற்படக் காரணம், உடல் பருமன்தான். இதுதான் பிறகு `சிரோஸிஸ்’ என்னும் `கல்லீரல் வீக்க’ நோயாகிறது. இப்போது, இந்தியாவிலும் இது வர ஆரம்பித்துள்ளது. காரணம், பெருகி வரும் உடல் பருமன் நோய்தான்.

நாம் சாப்பிடும்போது, அது என்ன விதமான உணவு என்பதும், எவ்வளவு அளவு (Portion of food) என்பதும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை. உணவில் கொஞ்சம் மாவுச்சத்து, கொஞ்சம் புரதச்சத்து, கொஞ்சம் கொழுப்புச்சத்து அவசியம் இருக்கவேண்டும்.