Published:Updated:

பிரச்னைகளும் பிரார்த்தனைகளும்...!

மதுரை ஜி.ஹெச். ரவுண்டப்

பிரச்னைகளும் பிரார்த்தனைகளும்...!

மதுரை ஜி.ஹெச். ரவுண்டப்

Published:Updated:
பிரச்னைகளும் பிரார்த்தனைகளும்...!

ழை மக்களால் 'பெரிய ஆஸ்பத்திரி’ என்று அழைக்கப்படும் மதுரை ராஜாஜி அரசினர் மருத்துவமனையை 'மிகப் பெரிய ஆஸ்பத்திரி’ என்று சொல்வதுதான் சரி. கண் சிகிச்சை, மன நலம், தீக்காயம், அவசர சிகிச்சை, புற்றுநோய், குழந்தைகள் நலம் மற்றும் ஆராய்ச்சிப் பிரிவு என 33 சிறப்புப் பிரிவுகளுடன் ஒரே வளாகத்தில் செயல்படுகிறது மதுரை அரசு மருத்துவமனை. பலதரப்பட்ட மனிதர்கள் கூடும் இந்த மருத்துவமனையில், நமது ஒரு நாள் விசிட்.

 கசங்கிய உடை, கலைந்த தேகம், வீங்கிய கண்கள், கையில் தூக்குப் பாத்திரத்தோடு டீக்கடை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார்கள் அட்டெண்டர்கள். எதையோ வாங்குவதற்காக பெட்டிக் கடைப் பக்கம் ஒதுங்குகிறார்கள் பெரியவர்கள். பாத்ரூம்களின் முன் நீள்கிறது வரிசை. அரைகுறைக் குளியல், ஈர உடலோடு துணியைக் காயப்போட வாகாக நல்ல இடம் தேடுகிறது ஒரு கூட்டம். சுடச்சுட காலைப் பத்திரிகையைப் படித்தவர்கள், இரவு படுக்கையாகப் பயன்படுமே என்று பத்திரப்படுத்துகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரச்னைகளும் பிரார்த்தனைகளும்...!

முந்தைய இரவே ஆகாரம் நிறுத்தப்பட்ட நோயாளிகளை நேர வரிசைப்படி ஆபரேஷனுக்கு ஆயத்தப்படுத்துகிறார்கள் செவிலியர்கள். அவர்களின் குடும்பத்தவருக்கு சம்மதக் கடிதத்தில் கையெழுத்து போடும்போது லேசாக கை நடுங்குகிறது.

மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் சாமி சிலைகள், டாக்டர்களைவிட பிஸியாக இருக்கின்றன. 'சீக்கிரம் இங்கிருந்து போகணும் சாமி!' - கணவனின் நலனுக்காக கருப்பசாமியையும், அம்மனையும் வணங்குகிறார் ஒரு பெண். விபூதியை நெற்றியில் தீட்டிக் கொண்டு மீதியைத் தன் வாயில் போடுகையில், 'எனக்கு?!' என்று இடது கை நீட்டுகிறது குழந்தை. தாயின் சோக முகத்தில் எட்டிப்பார்க்கிறது சின்ன புன்னகை.

##~##

ராத்திரியே வந்து காலையில் முதல் ஆளாக ஓ.பி. சீட்டு வாங்கியவரின் முகத்தில் பெருமிதம். காரணம், அவருக்குப் பின்னால் நீண்ட வரிசை. வயதான மூதாட்டி ஒருவருக்கு மாத்திரையை உடைத்துக் கொடுத்து, 'மகராசி, நீ நல்லா இருக்கணும்'' என்ற வாழ்த்தைப் பெற்றுக்கொள்கிறார் புதிதாகப் பணியில் சேர்ந்த பெண் காவலர்.

சி.டி. ஸ்கேன் எடுப்பதற்கு  நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அளவுக்கு கூட்டம். ஆஸ்பத்திரிக்கு வந்து ஒரு மாதமாகியும், சிகிச்சை முடியாமல் அகதிபோல் ஆகிவிட்ட சில நோயாளிகள் சோகமே உருவாக உட்கார்ந்து இருக்கிறார்கள்.

இரவு 10 மணி. மேற்கொண்டு மருத்துவச் செலவுக்கு வழி இன்றி, தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்ட அப்பாவை அழைத்து வருகிறார்கள் இரு மகள்கள். உறவு என்று யாரும் இல்லை. இஸ்லாமிய இளைஞர் ஒருவரே அவர்களுக்கு உதவியாய் வந்திருக்கிறார். ஒரு வழியாக பெட் கிடைத்துவிடுகிறது அந்தப் பெரியவருக்கு. மெள்ளக் கண் திறந்து, ''பசிக்கிறது'' என்கிறார். மணி 11.30. வழி எல்லாம் கொசுவத்திச் சுருள்கள்... சுற்றிலும் தூக்கத்தில் மனிதர்கள். கோரிப்பாளையம் முதலியார் இட்லிக் கடையில் நான்கு இட்லிகளையும் பாட்டிலில் லேசாய் ஆறவைத்த வெந்நீரும் வாங்கி வருகிறார் அந்த இளைஞர். நன்றிப் பெருக்கோடு அவரைப் பார்க்கிறது அந்தக் குடும்பம்.

'நாளைய பொழுது நலமாய் அமைய வேண்டும்!'' என்ற வேண்டுதலோடு, மொத்த நோயாளிகளும் நித்திரைக்குப் போகிறார்கள். வெளிச்சமும் பிரகாசமும் தினங்களின் விடியலில் மட்டும்தானா என்பதுதான் இந்த மனங்களின் ஏக்கம்!

பிரச்னைகளும் பிரார்த்தனைகளும்...!

பாம்போடும் வருவது உண்டு...

•  தென் மாவட்டங்களிலேயே முதன்முதலாக, 1842-ம் ஆண்டு இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டது.  1962 வரை இதன் பெயர், 'எஸ்கின் மருத்துவமனை’. அதன் பின்னரே, ராஜாஜி அரசினர் மருத்துவமனையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

•  இந்த மருத்துவமனையின் குழந்தைகள் வார்டு, இப்போது குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையமாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்குள்ள பச்சிளம் குழந்தைக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் (Neonatal Intensive Care Unit - NICU) இருக்கும் அளவுக்கு நவீன வசதிகள், மதுரையில் வேறு எந்த தனியார் மருத்துவமனையிலும் இல்லை.

•  சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளோடு ஒப்பிடும்போது, பாம்புக்கடி சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மதுரையிலேயே அதிகம். கடித்த பாம்பை டாக்டரிடம் காட்டுவதற்காக அதனை அடித்து கையில் பிடித்து வரும் சம்பவங்கள் இங்கே சர்வ சாதாரணம்.

•  பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்தபோது, இந்த மருத்துவமனையை மருத்துவக் கல்லூரியாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடர்ச்சியாக 2.8.1954 அன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ராஜகுமாரி அமித் கௌர், மதுரை மருத்துவக் கல்லுரியைத் திறந்துவைத்தார். சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் மூத்த மருத்துவக் கல்லூரி இதுதான்.

•  மதுரை மற்றும் அண்டை மாவட்டங்களில் நடைபெற்ற மிகப் பெரிய விபத்துக்களில் பலரின் உயிரைக் காப்பாற்றிய வரலாறு இந்த மருத்துவமனைக்கு உண்டு. வழி தவறி மேகமலை பகுதியில் மரத்தின் மீது மோதி விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதில், பைலட் உள்பட சுமார் 12 பேர் பலியானார்கள். விமானத்தின் பின்புறம் இருந்தவர்கள் பலத்த காயங்களோடு இந்த மருத்துவமனைக்குத்தான் கொண்டுவரப்பட்டு காப்பாற்றப்பட்டார்கள்.

•  சிவகாசி டான் ஃபயர் ஒர்க்ஸில் ஏற்பட்ட தீ விபத்து துவங்கி, 1957-ல் நடந்த முதுகுளத்தூர் கலவரம், 1971-ல் வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு எனத் தென் மாவட்டங்கள் பேரிடர்களுக்கு ஆட்படும்போதெல்லாம், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவம் செய்தது இந்த மருத்துவமனையே!

மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல் செட் மருத்துவ மாணவரான டாக்டர். செம்பொன் டேவிட்டின் மலரும் நினைவு இது: '1954-ல் இந்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டபோது, சொந்தக் கட்டடம் இல்லை. அதனால், பழைய தாலுகா அலுவலகத்தில்தான் வகுப்புகள் நடந்தன. அனுமதிக்கப்பட்ட மொத்த இடங்கள் 50. முதல் செட்டில் 41 மாணவர்கள் மற்றும் 9 மாணவிகள் படித்தோம். சொந்தக் கட்டடம் இல்லாததால் தியரி தேர்வுகள் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்தன. பிராக்டிகல் தேர்வுக்கு சென்னை மருத்துவக் கல்லூரிக்குச் செல்ல வேண்டும். எங்களைப் பார்த்து, 'பேபீஸ் ஃப்ரம் எம்.எம்.சி.' என்று கேலி செய்வார்கள் அங்கிருக்கும் மாணவர்கள்.  நான் இதே மருத்துவமனையில் டாக்டராகப் பணிபுரிந்து, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் டீன் ஆனேன். நான் ஓய்வு பெற்று 14 ஆண்டுகள் ஆகிவிட்டன' என்கிறார் 75 வயதாகும் டாக்டர் செம்பொன் டேவிட்.

எப்போது தொடங்கும்?

துரை ராஜாஜி மருத்துவமனைக்கு தினசரி வரும் வெளிநோயாளிகளின் எண்ணிக்கை மட்டும் 7,000 வரை நீளும்.  உள்நோயாளிகளின் எண்ணிக்கையும் இங்கு அதிகம்.  நோயாளிகள் கூட்டத்தைச் சமாளிப்பதற்காக, அருகில் இருக்கும் அண்ணா பஸ் நிலையத்தை மூடிவிட்டு, அங்கே தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக ரூ.28 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், அதற்குத் தேவையான மருத்துவக் கருவிகள், உபகரணங்கள் வாங்குவதற்கு மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய 10 கோடியும், தமிழக அரசு தரவேண்டிய 4 கோடியும் இது வரையில் வரவே இல்லை. எலும்பு சிகிச்சைப் பிரிவை மட்டும் இங்கு மாற்றி, புதிய கட்டடம் செயல்படுவதைப் போன்ற தோற்றத்தை உருவாக்க முயன்றார்கள். ஆனால், இன்று வரையில் புதிய கட்டடம் முழுமையாகச் செயல்படவே இல்லை. இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'நிதி வராமல் விரிவாக்கக் கட்டடத்தைச் செயல்படுத்துவது சாத்தியமே இல்லை. அதேபோல டாக்டர்கள் முதல் வாட்ச்மேன் வரை சுமார் 600 பணி இடங்களையும் நிரப்ப வேண்டும்' என்றார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism