Published:Updated:

சர்க்கரையை வென்ற சாதனை மாணவன்!

கண்களில் இருட்டு.... கல்வியில் வெளிச்சம்!

சர்க்கரையை வென்ற சாதனை மாணவன்!

கண்களில் இருட்டு.... கல்வியில் வெளிச்சம்!

Published:Updated:
சர்க்கரையை வென்ற சாதனை மாணவன்!

த்தாம் வகுப்பில் 440 மதிப்பெண்கள்; 12-ம் வகுப்பில் 1080 மதிப்பெண்களுடன் தூத்துக்குடி மாவட்டத்திலேயே இரண்டாவது மாணவனாகத் தேர்ச்சி; இளநிலைப் பட்டப் படிப்பில் (பி.காம்.) 72 சதவிகித மதிப்பெண்கள். இப்போது முதுநிலை முதலாம் ஆண்டில் அடியெடுத்துவைத்து இருக்கும் ஆனந்த், பார்வையற்ற மாணவர்!

 தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த பெரிய இசக்கி - செண்டு தம்பதிக்கு மூன்று குழந்தைகள். வறுமைக்கு வாக்கப்பட்ட அந்த ஏழைக் குடும்பத்தில் கடைக்குட்டிச் செல்லம் ஆனந்த்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சர்க்கரையை வென்ற சாதனை மாணவன்!

''சின்ன வயசிலேயே எனக்கு கண் பார்வை குறைஞ்சுபோச்சு. ஒண்ணாம் கிளாஸ் படிக்கிறப்ப டீச்சர் போர்டுல எழுதுற எழுத்துக்கள் எதுவுமே எனக்கு சரியாத் தெரியலை. அதனால, போர்டு பக்கத்துல போய் நின்னு படிச்சுப் பார்ப்பேன். ஆனா, கூடப் படிக்கிற பசங்க எல்லாம், மறைக்குதுன்னு சொல்லி சத்தம் போடுவாங்க. அதனால, ஒரு ஓரமா ஒதுங்கி நின்னு பாடத்தைக் கவனிச்சுட்டு எல்லாத்தையும் நோட்டுல எழுதி வெச்சுக்குவேன்.

எனக்கு கண் தெரியாததைப் பத்தி பசங்க கிண்டலாப் பேசுறதை நினைச்சு மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும். அந்த கேலி, கிண்டலுக்குப் பயந்து பல நாட்கள் பள்ளிக்கூடத்துக்கே போகாமல் இருந்திருக்கேன். இந்த அவமானத்தை எப்படி அம்மாகிட்டே சொல்லுறதுன்னும் தெரியாம மனசுக்குள்ளேயே புழுங்கித் தவிப்பேன். என் மனசைப் புரிஞ்சுக்கிட்ட என் அம்மா, எனக்கு வீட்டிலேயே பாடங்கள் சொல்லிக் கொடுப்பாங்க. ஆறுதலான வார்த்தைகள் சொல்லி, என் தலையைக்கோதி மறுநாள் பள்ளிக்கூடம் அனுப்பிவைப்பாங்க.

நான் மனசொடிஞ்சு போறப்ப எல்லாம் எங்க அம்மா கொடுத்த அன்பும் அரவணைப்பும்தான் நாமும் ஜெயிக்க முடியும்கிற நம்பிக்கையை எனக்குள் ஆழமா வேரூன்றவெச்சது!'' என்கிறார் ஆனந்த். இவருடைய அம்மா செண்டு, ஆறாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டவர்.

##~##

மகனின் உணர்ச்சிப் பெருக்கில், பூரித்து நிற்கும் செண்டு, ''ஆனந்த் ரெண்டாம் வகுப்பு படிக்கிறப்ப ஒருநாள் அவனோட டீச்சர் 'உங்க பையனுக்குப் பார்வை சரியாத் தெரியல... உடனே டாக்டர்கிட்டே போய்க் காட்டுங்க’ன்னு எங்ககிட்டே சொன்னாங்க. 'ஓடித் திரிஞ்சு விளையாட வேண்டிய புள்ளைக்கு இப்படி ஆகிப்போச்சே’ன்னு அழுது புலம்பினேன். ஆனந்தை டவுனுக்குக் கூட்டிப்போய் டாக்டர்கிட்டே காண்பிக்கவும் கையில சல்லிப் பைசா இல்லை. காசு புரட்டி டாக்டர்கிட்டே கூட்டிப் போறதுக்குள்ளே என் புள்ளைக்கு சுத்தமா கண் பார்வையே போயிடுச்சு.  திருநெல்வேலியில் இருக்கிற ஒரு கண் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போய்க் காட்டினோம். எல்லா டெஸ்ட்டும் செஞ்சு பார்த்தவங்க 'ஆனந்த்க்கு சர்க்கரை நோய் இருக்கு. சரியா கவனிக்காததால அவனோட கண் பார்வையும் போயிடுச்சு. இனிமேல் கண் ஆபரேஷன் பண்ணினாத்தான் ஓரளவாவது பார்வை கிடைக்கும்’னு சொல்லிட்டாங்க. எப்படியாவது புள்ளைக்குப் பார்வை கிடைச்சாப் போதும்னு நெனச்சோம். குடியிருந்த வீட்டை வித்துப் பணம் ஏற்பாடு பண்ணி ஆனந்துக்கு கண் ஆபரேஷன் பண்ணினோம். மங்கலான பார்வைதான் திரும்பக் கிடைச்சது. ஆனாலும், மனசைத் தேத்திக்கிட்டு என் புள்ளைக்குத் தைரியம் சொன்னேன். எனக்குத் தெரிஞ்ச கல்வியை என் பிள்ளைக்கும் கத்துக் கொடுத்தேன்.

ஆனந்த் நாலாம் வகுப்பு படிக்கிறப்ப அவனோட டீச்சர் ஒருத்தர் 'உனக்கு எல்லாம் எதுக்கு படிப்பு? பேசாம வீட்டிலேயே கிடக்க வேண்டியதானே?’ன்னு திட்டி இருக்காங்க. இதைக் கேட்டதும் அந்தப் பிஞ்சு மனசு வெம்பிப்போச்சு. பள்ளிக்கூடத்துக்கும் போகாமலே இருந்துட்டான். என்ன ஏதுன்னு தெரியாம நாங்க தவிச்சிட்டு இருந்தப்ப, சம்பந்தப்பட்ட டீச்சரே எங்க வீட்டுக்கு வந்தாங்க. 'உன்னோட நிலையும் உங்கக் குடும்பச் சூழ்நிலையும் தெரியாம அப்படிப் பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுப்பா. நீ கண்டிப்பா ஸ்கூலுக்கு வந்தே ஆகணும்’னு சொல்லி அழைச்சுட்டுப் போனாங்க. பள்ளிக்கூடத்திலே

சர்க்கரையை வென்ற சாதனை மாணவன்!

நடந்ததைச் சொன்னா எங்க மனசு கஷ்டப்படும்னு ஆனந்த் என்கிட்ட அதை மறைச்சுட்டான். யாரு மனசும் காயப்படக் கூடாதுன்னு நினைக்கிற நல்ல மனசைக் கொடுத்த ஆண்டவன் நல்ல கண் பார்வையை மட்டும் கொடுக்காம விட்டுட்டானே...'' - சொல்லும்போதே கண்களில் நீர் முட்டுகிறது அந்தத் தாய்க்கு.

அழுகிற அம்மாவை அரவணைத்துப் பேசும் ஆனந்த், ''எனக்காக என் அம்மாவும் அப்பாவும் அனுபவிக்கிற கஷ்டங்கள் கொஞ்சநஞ்சம் இல்லை. இப்பவும் எனக்குத் தினமும் ரெண்டு தடவை இன்சுலின் ஊசி போடணும். கடைசியா இன்சுலின் ஊசி போட்டப்பக்கூட டாக்டருக்குக் கொடுக்க கையில காசு இல்லை. வீட்டுல இருந்த மேஜையை வித்துத்தான் பணத்தைக் கொடுத்தோம். அந்த அளவுக்கு எனக்காக என்னைப் பெத்தவங்க கஷ்டப்படுறாங்க. இவங்களுக்காக நான் என்ன கைம்மாறு செய்யப்போறேன்கிற கேள்விதான் எனக்குள்ள  வைராக்கியத்தை வளர்த்துச்சு.

நல்லாப் படிச்சு பாஸ் பண்ணினாத்தான் என்னைப் பெத்தவங்களுக்கு நன்றிக்கடனா இருக்கும்னு  நம்புனேன். நாள் முழுக்க புத்தகமும் கையுமாப் படிக்க ஆரம்பிச்சேன். நான் நினச்சா மாதிரியே பத்தாம் வகுப்புல 440 மார்க் எடுத்தேன். ஆனா....'' அதற்கு மேல் வார்த்தை வராமல் தடுமாறுகிறது ஆனந்திற்கு. மகன் ஆனந்தைத் தன் தோள் மீது சாய்த்தவாறே பேச ஆரம்பிக்கிறார் அவரது தந்தை பெரிய இசக்கி...

''பத்தாம் வகுப்புல நல்ல மார்க் எடுத்தாலும் ப்ளஸ் ஒன்ல சேர்க்கிறதுக்கு பள்ளிக்கூடத்திலேயே மறுத்துட்டாங்க. அதுக்கு அவங்க சொன்ன காரணம்... 'ஆபரேஷனுக்குப் பிறகு ஆனந்துக்கு மங்கலா இருந்துவந்த கண் பார்வையும் கொஞ்ச நாள்லயே, சுத்தமாப் பறிபோயிடுச்சு. இந்த நிலைமையில் ஆனந்தை எங்க பள்ளிக்கூடத்துல சேர்க்க முடியாது’ன்னு சொல்லிட்டாங்க. ஆனா, அந்த நிலைமையிலும்கூட மனம் தளராமப் படிப்பு படிப்புன்னு வெறிகொண்டு படிச்சுக்கிட்டேத்தான் இருந்தான் ஆனந்த். இவனோட அண்ணன் மாடசாமியும் அக்கா வடிவும் ஆறாவது வரைக்கும்தான் படிச்சாங்க. அதுக்கு மேலே படிப்பு ஏறலை. ஆனா, ஆனந்த் விடிகாலை மூணு மணிக்கெல்லாம் எழுந்திரிச்சு அவங்க அம்மாவையும் எழுப்பி உட்காரவெச்சுப் பாடம் படிக்க ஆரம்பிச்சுடுவான். அதனாலதான் மத்த மாணவர்களுக்குப் போட்டியா அவனால 440 மார்க் எடுக்க முடிஞ்சது. இதை எல்லாம் எடுத்துச் சொல்லி மறுபடியும் அதே ஸ்கூல்ல சேர்த்துக்க வெச்சோம்.

அவனும் ப்ளஸ்-டூவில் மாவட்ட அளவில் ரேங்க் வாங்கி எங்க நம்பிக்கையைக் காப்பாத்தினான். அப்புறமா பி.காம். முதல் வகுப்புல பாஸ் பண்ணினான்'' என்றவரின் வார்த்தைகளின் பெருமிதம் பொங்குகிறது.

''பாசத்தையும் நம்பிக்கையையும் எனக்கே எனக்குன்னு ஊட்டி வளர்க்கிற என்னோட அம்மாவும் அப்பாவும்தான் என் கண்கள்! இவங்க மூலமாத்தான் நான் இன்னைக்கு உலகத்தைப் பார்த்துக்கிட்டு இருக்கேன்.

பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவனா வருவதுதான் என்னோட அடுத்தக்கட்ட லட்சியம். நிச்சயமா அந்த வெற்றியையும் என் அம்மா அப்பாவுக்கு காணிக்கை ஆக்குவேன்!'' - தீர்க்கமாய்ச் சொல்லி முடித்தார் ஆனந்த்!

வாழ்த்துகள் நண்பா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism