Published:Updated:

சவாலுக்கே சவால் விடுகிற சாம்பியன்!

சவாலுக்கே சவால் விடுகிற சாம்பியன்!

சவாலுக்கே சவால் விடுகிற சாம்பியன்!

சவாலுக்கே சவால் விடுகிற சாம்பியன்!

Published:Updated:
சவாலுக்கே சவால் விடுகிற சாம்பியன்!
##~##

''சவால்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால்தான் 'கார் ரேஸர்’ வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தேன்'' - உற்சாக வார்த்தைகளோடு பேச ஆரம்பிக்கிறார் '2011 ஜே.கே. டயர் நேஷனல் ரேஸிங் சேம்பியன்’ சேத்தன் கொரடா! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்களுக்குத் தெரியுமா... சேத்தன் ஒரு மாற்றுத் திறனாளி!

பிறவியிலேயே சேத்தனின் கால்கள் இரண்டும் மூட்டுக்கு கீழ் செயல் இழந்துபோனவை. 'எல்லாப் பிள்ளைகளைப் போல சேத்தனும் வெளி உலகத்தோடு தொடர்புகொள்ள வேண்டுமானால், இரண்டே வழிகள்தான் இருந்தன. ஒன்று... வாழ்க்கை முழுவதும் சக்கர நாற்காலியிலே வலம் வர வேண்டும். அல்லது அறுவை சிகிச்சை மூலம் புதிய செயற்கைக் கால் பொருத்திக்கொண்டு சுயமாகவே நடமாடலாம்’ என்று மருத்துவர்கள் வைத்த தீர்வுகளில், இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தனர் சேத்தனின் பெற்றோர்.

அவர்களின் நம்பிக்கை பலித்தது. இதோ.... இன்று 26 வயது இளைஞனாக, கார் ரேஸிங் சாம்பியனாக எல்லோரையும் வியந்து  பார்க்கவைக்கிறார் சேத்தன்!

சவாலுக்கே சவால் விடுகிற சாம்பியன்!

''எனக்கு ரெண்டு வயசாகிறப்போ கால்களில் ஆபரேஷன் நடந்தது. கார்பன், ஃபைபர், அலுமினியம் கலந்த (Prosthetic) நவீன செயற்கைக் காலைப் பொருத்தினாங்க. அந்த சின்ன வயதிலேயே பாஸ்கெட் பால், கிரிக்கெட், ஃபுட்பால், ரன்னிங்னு எப்பவும் துறுதுறுன்னு விளையாடிட்டு இருப்பேன்'' என்கிற சேத்தன், தான் 'ரேஸ் ட்ராக்’கிற்கு மாறிய கதையையும் பகிர்ந்துகொள்கிறார்.

''செஸ், கேரம்னு உட்கார்ந்த  இடத்தில் ஆடும் விளையாட்டுகளின் பக்கம் போகாமல், கார் ரேஸை நான் தேர்ந்தெடுத்ததற்கு காரணம் -  கார் ரேஸ் ரொம்ப ரிஸ்க்கானது என்று எல்லோரும் திரும்பத் திரும்பச் சொன்னதுதான். எந்தக் குறையும் இல்லாதவங்களே போகத் தயங்கும் அந்த விளையாட்டை நான் விளையாடிப் பார்க்கணும்னு எனக்கு ஆசை வந்தது.  

2008-ல் 'ஃபார்முலா மாருதி சம்மர் கப் சேம்பியன்ஷிப்’ டோர்னமென்ட், நான் கலந்துக்கிட்ட முதல் ரேஸிங். தகுதிச் சுற்றிலேயே முதலாவதா வந்தேன். ஆனால், அடுத்தடுத்து நடந்த போட்டிகளில் முதல் மூணு இடங்களுக்குள் வர முடியலை. தொடர்ந்து தீவிரமான பயிற்சியில் இருந்தேன். அடுத்த வருஷம் நடந்த தேசிய அளவிலான போட்டியில், ஆறில் ஐந்து போட்டிகளில் எனக்குத்தான் முதல் இடம். ஒரே ஒரு ரேஸில் மட்டும்தான் இரண்டாவது இடம். மனதளவில் எனக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்த வெற்றிகள்.

சவாலுக்கே சவால் விடுகிற சாம்பியன்!

அதற்கடுத்த (2010 - 2011) இரண்டு வருடங்களில் மட்டும் மொத்தம் 24 போட்டிகளில் கலந்துக்கிட்டேன். இதில், 16 போட்டிகளில் 'டாப் 3’க்குள் ஜெயித்தேன்'' என்று உணர்ச்சிக் குவியலாக தனது வெற்றிக் கதையை விவரிக்கும் சேத்தன், முதன் முதலாக 'கார் ரேஸிங்’கிற்குள் காலடி வைக்கப் படாத பாடுபட்டவர் என்பது ஒரு தனிக் கதை.

சாதாரண டிரைவிங் லைசென்ஸ் எடுக்கவே எழுத்துத் தேர்வு, எட்டு போடுவது.... என்று விதிமுறைகள் வரிசை கட்டும். மின்னல் வேகத்தில், மயிர்க் கூச்செறியும் கார் ரேஸிங் போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்றால்... பார்வைத் திறனில் ஆரம்பித்து உடல் ஆரோக்கியம், உடற்கட்டு என்று பல கடுமையான விதிமுறைகள் உண்டு. சேத்தன் விஷயத்தில், 'மாற்றுத் திறனாளி’ என்ற ஒரே காரணத்தினாலேயே, போட்டியில் அனுமதிக்கக் கடுமையாக மறுப்பு தெரிவித்தனராம். ஆனாலும் சேத்தனின் ஆர்வம், அவரது தன்னம்பிக்கை, நுணுக்கமான லாகவங்களோடு அவர் கார் ஓட்டும் திறமைகளைக் கண்டு வியந்துபோனவர்கள் சேத்தனும் போட்டியில் கலந்துகொள்ள பச்சைக் கொடி காட்டி இருக்கிறார்கள். பின்னாட்களில், கார் பந்தயப் போட்டிகளில், வெற்றிகள் பல தொடும் சாதனை வீரனின் சரித்திரப் பயணத்துக்கான அச்சாரம் அது!

கடந்த வருடம் நவம்பர் மாதம் இருங்காட்டுக் கோட்டையில் நடைபெற்ற, '2011 ஜே.கே. டயர் நேஷனல் ரேஸிங் சேம்பியன்ஷிப்’ போட்டியில், தான் முதல் இடத்தைத் தொட்ட அந்த விறுவிறு விநாடிகளைப் பற்றி விவரிக்கிற சேத்தன், ''மொத்தம் 23 போட்டியாளர்கள். அதில் பலரும் ஏற்கெனவே ஐந்து வருடங்களாகத் தொடர்ந்து போட்டியில் கலந்துகொண்டு இருப்பவர்கள். நானோ ஜூனியர் லெவலில் இருந்து முதன்முதலாகக் சீனியர் லெவலில் கலந்துகொண்டவன். ஃபார்முலா எல்.ஜி.பி. ஸ்விஃப்ட் கார் அது. அதிர்வு, வேகம், கடினமான பிரேக் என்று எல்லாமே மிரளவைக்கும். ஆனாலும் தைரியத்தோடு கலந்துக்கிட்டேன். போட்டியில் மொத்தம் ஆறு ரவுண்ட். முதல் மூன்று ரவுண்ட்கள் எனக்கானப் பயிற்சி லெவலாகவே முடிந்துபோனது. அதாவது எந்த இடத்திலும் பின்தங்காமல், ஆரம்பித்த இடத்திலேயே முடித்தேன்.

நான்காவது ரவுண்டில் இருந்துதான் முழு நம்பிக்கையோடு ஆக்சிலேட்டரை அழுத்த ஆரம்பித்தேன். குறைவான நேரத்திலேயே, சீறிப் பாய்ந்து எல்லோரையும் ஓவர்டேக் செய்து முதல் இடத்தைத் தொட்டது.... வாழ்வில் மறக்கமுடியாத தருணம். ஒரே நாளில், உலகின் ஒட்டுமொத்த வெளிச்சமும் என்மேல் பாய்ந்துத் தெறித்த நேரம் அது!'' என்று உணர்ச்சிவசப்படும் சேத்தனின் முகத்தில், வெற்றியின் வியர்வை மினுமினுக்கிறது.

''2001-ல் நடந்த ஃபார்முலா ஒன் போட்டியில் பெரிய விபத்து. 'அலெக்ஸ் செனார்டி’ (Alex zenardi) என்ற வீரரோட ரெண்டு காலுமே விபத்தில் நசுங்கிவிட்டது. சிகிச்சைக்காக இரண்டு வருஷம் ரேஸுக்கு இடைவெளிவிட்டவர் இப்ப மறுபடியும் செயற்கைக் கால் பொருத்திக்கிட்டு 'வேர்ல்டு டூரிங் கார்ஸ்’க்காக பி.எம்.டபிள்யூ. அணியில், முன்னைவிட செம ஸ்பீடா ரேஸ் கார் ஓட்டிக்கிட்டு இருக்கார். நடந்துபோன சம்பவத்தை நினைச்சு ஃபீலிங்ஸோடு உட்கார்ந்துடாம, ஃபீனிக்ஸ் பறவையாப் பின்னி பெடல் எடுக்கிற அலெக்ஸ் செனார்டிதான் என்னோட ரோல்மாடல்!

'இன்னைக்குத் தேவை தீர்ந்தா போதும். எதுக்கு ரிஸ்க் எடுப்பானேன்?’கிற மனநிலைதான் இங்கே நிறையப் பேருக்கு இருக்கு. முதல்ல அதை உடைச்சு எறியணும். எல்லோருக்குமே ஏதாவது ஒரு திறமை உள்ளுக்குள் இருக்கும். தன்னம்பிக்கையும் தைரியமும்கொண்டு தடைகளைத் தகர்த்தெறிஞ்சா எல்லோருமே ஜெயிக்கலாம்!'' - சொல்லிச் சிரிக்கிறார் சவாலுக்கே சவால்விடுகிற சாம்பியன்!