Published:Updated:

சிகிச்சைக்கு செல்லும் முன்...

சிகிச்சைக்கு செல்லும் முன்...

பிரீமியம் ஸ்டோரி
சிகிச்சைக்கு செல்லும் முன்...

விமான சாகசப் பயிற்சி செய்துவருகிறார் ஒருவர். 'அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு இருக்கிறது’ என்று எண்ணி, பாதுகாப்புக்கு ஒரு பாராசூட் ஒன்றையும் எடுத்துச் செல்கிறார். ஆனால், 'அவருக்குப் பாராசூட்டைப் பயன்படுத்தத் தெரியாது’ என்ற£ல் எப்படி இருக்கும்? அது இருந்தாலும் ஒன்றுதான்... இல்லை என்றாலும் ஒன்றுதான். இதுபோன்றுதான் நம்மில் பலரும் மருத்துவக் காப்பீடு பாலிசி எடுக்கிறோம்; (சிலருக்கு அலுவலகமே கொடுக்கிறது.) ஆனால், அதைப் பயன்படுத்தி எப்படி உரிமத்தொகையை (க்ளைம்) வாங்குவது என்பது முழுமையாகத் தெரியாமல் திண்டாடுவோம்.  

சிகிச்சைக்கு செல்லும் முன்...

மருத்துவச் சிகிச்சைக்கு க்ளைம் பெறுவதில், இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, நாம் சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கு காப்பீடு நிறுவனமே தொகையைச் செலுத்திவிடுவது (Cashless). அடுத்தது, சிகிச்சை முடிந்ததும் நாம் பணத்தைச் செலுத்திவிட்டு, பிறகு காப்பீடு நிறுவனத்தின் மூலம் பணத்தைத் திரும்பப் (Reimbursement) பெற்றுக்கொள்வது.

நம்மிடம்தான் மருத்துவக் காப்பீடு பாலிசி இருக்கிறதே... எதற்காகப் பணத்தைச் செலுத்திவிட்டு, அதன் பிறகு திரும்பப் பெற வேண்டும்? இதற்குக் காரணம் இருக்கிறது. நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் 'கேஷ்லெஸ்’ சிகிச்சை கொண்டுவருவது நடைமுறையில் சாத்தியம் இல்லை. அடுத்ததாக, சிகிச்சை பெறும் நோயாளியிடம் மருத்துவக் காப்பீடு பாலிசி இருக்கிறது என்ற காரணத்தினால், எவ்வளவு வேண்டுமானாலும் 'பணம் கறக்கலாம்’ என்று நினைத்து மருத்துவமனைகள் அதிகக் கட்டணம் வசூலிக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனால், காப்பீடு நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. எனவே, குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மட்டும் ஒப்பந்தம் போட்டு 'கேஷ்லெஸ்’ முறையை அமல்படுத்துகின்றன.

ஒருவேளை மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் இணைக்கப்படாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்பட்சத்தில், அதற்கான தகுந்த ஆதாரங்களை காப்பீடு நிறுவனங்களிடம் கொடுத்து, (அதாவது டி.பி.ஏ-க்களிடம் கொடுத்து) செலவழித்த பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

இனி விஷயத்துக்கு வருவோம்... இரண்டு வகைகளில் நாம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. முன்கூட்டியே திட்டமிட்டு எடுத்துக்கொள்ளும் சிகிச்சை (உதாரணம்: கண் அறுவைச் சிகிச்சை). எதிர்பாராமல் தேவைப்படும் சிகிச்சை (விபத்து, மாரடைப்பு).

திட்டமிடப்பட்ட சிகிச்சைக்கு க்ளைம் வாங்க வேண்டும் எனில், ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டதால், திட்டத்தில் இணைக்கப்பட்டு இருக்கும் மருத்துவமனையாகப் பார்த்து சிகிச்சை எடுக்கலாம். சிகிச்சைக்கு முன்பு டி.பி.ஏ-க்களிடம் விஷயத்தைச் சொல்லி அனுமதி வாங்க வேண்டும். பிறகு அதே மருத்துவமனையில் இருக்கும் டி.பி.ஏ. அதிகாரிகளிடம் தேவையான ஆவணங்களைச் (மருத்துவரின் சான்றிதழ்) சமர்ப்பித்து சிகிச்சை பெறலாம். இன்னும் சிலர், சிகிச்சை ஆரம்பித்த பிறகு, டி.பி.ஏ.க்களிடம் தகவல் சொல்லி தகுந்த ஆவணங்களைக் கொடுப்பார்கள்; இவர்களும் 'கேஷ்லெஸ்’ முறையில், பணம் செலுத்தாமலே சிகிச்சையை முடித்துவிட்டு வெளியே வந்துவிடலாம்.

அவசரச் சிகிச்சை தேவைப்படும் சமயத்தில் நெட்வொர்க்கில் இருக்கும் மருத்துவமனைகளைத் தேட அவகாசம் இருக்காது. (ஒருவேளை நெட்வொர்க்கில் இருக்கும் மருத்துவமனையிலேயே அவசர சிகிச்சை எடுத்துக்கொள்ளும்பட்சத்தில்,  பிரச்னை இல்லை). அப்படி ஒரு சூழலில், மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் இணைக்கப்படாத மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க நேர்ந்தால், முதலில் டி.பி.ஏ.க்களிடம் சொல்லிவிட வேண்டும். அதாவது, சிகிச்சை நடந்துகொண்டு இருக்கும்போதே சொல்லிவிட வேண்டும் என்பது முக்கியம்.

அதன் பிறகு மருத்துவமனை கொடுத்திருக்கும் ரசீதுகள், மருந்துக்கான ரசீதுகள், மருத்துவரின் சான்றிதழ், உங்களின் மெடிக்ளைம் கார்டு நகல் போன்றவற்றை டி.பி.ஏ.க்களிடம் கொடுக்க வேண்டும். அனைத்து ரசீதுகளையும் அவர்கள் சோதனை செய்த பிறகு நாம் செலவு செய்த தொகை காசோலையாக நமக்குத் திரும்பக் கிடைக்கும்.

இந்த முறையில் நாம் செலவழித்த மொத்தத் தொகையும் நமக்குக் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. கொஞ்சம் பிடித்தம் செய்யப்படவும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோல, 'கேஷ்லெஸ்’ சிகிச்சையிலும் நாம் பணமே செலுத்தத் தேவை இல்லை என்று சொல்ல முடியாது. சில விஷயங்களுக்கு நம் கைக்காசை செலவழித்துத்தான் ஆகவேண்டும். இதுபோக இன்னும் சில விதிவிலக்குகள் இருக்கின்றன. அந்த விதிவிலக்குகள்பற்றி....

- அடுத்த இதழில்...

டி.பி.ஏ. என்றால் என்ன?

நாம் எடுத்திருக்கும் காப்பீடு நிறுவனத்துக்கும் மருத்துவமனைக்கும் இடையே இருக்கும் மூன்றாவது நபர்தான் டி.பி.ஏ. (Third Party Administrators)  மருத்துவமனை, காப்பீடு நிறுவனங்கள் மற்றும் பாலிசிதாரர் என மூன்று புள்ளிகளை ஒருங்கிணைப்பது டி.பி.ஏ.க்களின் வேலை. பிரச்னை என்றதும் நாம் இவர்களைத்தான் அணுக வேண்டும். க்ளைம் நடைமுறைகளில், மருத்துவமனை மற்றும் காப்பீடு நிறுவனங்களின் வேலைப் பளுவைக் குறைப்பதற்காகத்தான் டி.பி.ஏ.க்களுக்கு, இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி கொடுத்திருக்கிறது. உங்களது டி.பி.ஏ. யார் என்பதை அவசியம் தெரிந்துகொள்ளுங்கள். மருத்துவக் காப்பீடு எடுத்தவுடன் பாலிசிதாரர்களுக்கு கொடுக்கப்படும் அடையாள அட்டையிலேயே டி.பி.ஏ-வின் பெயர் இருக்கும். (இந்த அட்டையை விநியோகம் செய்வதுகூட டி.பி.ஏ.க்கள்தான்) உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் மருத்துவக்     காப்பீடுத் திட்டத்தில் இணைக்கப்பட்ட மருத்துவமனையையும், அதன் (24 மணி நேர) தொலைபேசி எண்ணையும் தெரிந்துகொள்வது மிக அவசியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு