Published:Updated:

''முகம் சுளித்தேன்... அகம் சிலிர்த்தேன்!..''

நெகிழும் நர்ஸ் சரோஜா

''முகம் சுளித்தேன்... அகம் சிலிர்த்தேன்!..''
##~##

ருமல் சத்தம் கேட்டாலே இரண்டு அடிகள் தள்ளி நிற்பவர்களுக்கு மத்தியில், நோயால் அழுகிக் கிடப்பவரையும் அள்ளி எடுத்து அரவணைப்பவர்கள் செவிலியர்கள். சேவையின் சின்னமாக மதிக்கப்படும் இந்தச் சீரிய பணியில் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர் 72 வயதான சரோஜா. அன்பான கவனிப்பு, அக்கறை கலந்த பராமரிப்பு என எல்லோருக்கும் இன்னோர் அன்னையாகத் திகழும் சரோஜா இங்கே மனம் திறக்கிறார்... 

''நான் பிறந்து வளர்ந்தது புதுக்கோட்டை அருகே உள்ள வல்லத்திரக்கோட்டை. அந்தக் காலத்துல பெண்களைப் பள்ளிக்கு அனுப்புவதே அபூர்வம். என் பெற்றோர் நிறைய சிரமங்களுக்கு மத்தியில் என்னைப் படிக்கவெச்சாங்க. ஸ்டான்லி மருத்துவமனையில் முதல் வருட நர்ஸ் பயிற்சி முடிச்ச நேரம்... ஒரு நோயாளிக்கு உடற்கழிவுகளை வெளியேற்றுவதில் பிரச்னை. அவரோட உடம்பில் இருந்து கழிவுகள் குழாய் வழியா தானாகவே வெளியேறுவதுபோல் ஆபரேஷன் செஞ்சு இருந்தாங்க. அவருக்கு

''முகம் சுளித்தேன்... அகம் சிலிர்த்தேன்!..''

சுத்தம் பண்றப்ப, எனக்கு ரொம்ப அருவருப்பாக இருந்தது. எரிச்சலோட எந்திரத்தனமா சுத்தம் செஞ்சேன். என்னோட முகச்சுளிப்பைக் கண்டுபிடிச்ச அந்த நோயாளி, அவரோட இயலாமையை நினைச்சு கண்ணீர்விட ஆரம்பிச்சிட்டார். எனக்கு மனசு பதறிடுச்சு. 'நோயாளியோட கஷ்டத்துக்கு ஆறுதலாவும் அன்பாவும் நடந்துக்க வேண்டிய நாமே இப்படி நடந்துக்கிட்டோமே’ன்னு மனசுக்கு கஷ்டமாயிடுச்சு. எந்தச் சூழ்நிலையிலும் நோயாளிகளோட மனசைக் காயப்படுத்திடக் கூடாதுங்கிற பெரிய படிப்பினையைக் கற்றுத்தந்த சம்பவம் அது. அடுத்த ஆறு மாசங்களுக்கு மகப்பேறுப் பிரிவில் பயிற்சி. அங்கே ஒரு நாளைக்கு 20-ல் இருந்து       30 குழந்தைகள் பிறக்கும். ரத்தமும் சதையுமா வெளிவர்ற அந்தப் பச்சை சிசுக்களைப் பார்த்ததும் வலியை மறந்து சிரிக்கிற அந்தத் தாய்மை உணர்வு சிலிர்க்கவைக்கும்!'' என்கிறபோதே முகம் மலர்கிறது சரோஜாவுக்கு.

''திருச்சி அரசு பொது மருத்துவமனை 'குழந்தைகள் நலப் பிரிவில்’ அட்மிட் ஆகிற அத்தனை அனாதைக் குழந்தைகளையும் மணியம்மை அம்மா என்னோட பொறுப்பில்தான் விடுவாங்க. 'ஒரு தாய்க்கு நிகரா உன்னோட கவனிப்பைப் பாத்து பிரமிப்பா இருக்கு’னு அவங்க சொன்ன வார்த்தைகள் இப்பவும் மனசுக்குள் கேக்கும்.

சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த ஹண்டே, ஒரு முறை எழும்பூர் மருத்துவமனை அறுவைச் சிகிச்சைப் பிரிவுக்கு வந்து மாத்திரை, மருந்துகளை செக் பண்ணினார். அவர்கிட்ட, 'வாரத்துக்கு 1000-க்கும் மேற்பட்ட மாத்திரைகளை வாங்குறோம். மாத்திரைகளைக் கையில் எடுத்து எண்ணும்போது அழுக்கான வியர்வை மாத்திரையிலயும் படியுது’னு சொன்னேன். உடனே, மாத்திரைகள் பாதுகாப்பா ஸ்டிரிப்ல வர ஏற்பாடு செய்தார். 'நம்மளோட வார்த்தை இவ்வளவு பெரிய பாதுகாப்பை ஏற்படுத்திடுச்சே’ன்னு எனக்குத் தாங்க முடியாத சந்தோஷம்!

ஒரு முறை வயிற்றுப்போக்கு வார்டுல நிறைய உயிரிழப்பு... உடனே, நானே மருத்துவமனைக் கண்காணிப்பாளர் கிட்ட அந்த வார்டுக்கு மாற்றல் கேட்டுப் போனேன். ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு மத்தியில் வயிற்றுப்போக்கு நோயாளிகளையும் ஒண்ணா வெச்சுருந்தாங்க. அவங்களுக்கான கழிப்பறைகள் ரொம்ப தூரத்தில் இருந்தன. மாத்திரை, மருந்துகளும் அவசரத்துக்கு கொடுக்கிற மாதிரியான சூழ்நிலையில் இல்லாமல், திசைக்கு ஒருத்தரா உட்கார வெச்சுருந்தாங்க. பக்கத்திலேயே கழிப்பறை இருந்தால், நோயாளிகளுக்கு சிரமம் இருக்காதேனு நினைச்சேன். அவர்களுக்கான மருந்து-மாத்திரைகளை மட்டும் தனியாப் பிரிச்செடுத்து, அவங்களோட வார்டுக்கு அருகிலேயே கொண்டுவந்து உடனுக்குடனேயே சிகிச்சை கொடுக்கிற மாதிரி ஒருங்கிணைச்சேன். அதனால நிறைய பேரைக் காப்பாத்த முடிஞ்சது. நாலு பேரோட உயிரைக் காப்பாத்தும் வாய்ப்பு கிடைச்சதுதான் என்னோட பெரிய பாக்கியம்!'' - மேலே கைகளை உயர்த்திப் பெருமிதமாகச் சொல்கிறார் சரோஜா.

''வியாதி குணமாகிப் போறப்ப நம்ம கையப் புடிச்சுக்கிட்டு நோயாளிங்க சொல்ற வார்த்தைகள்தான் எங்களை மாதிரி நர்ஸுகளுக்குப் பெரிய விருது. அந்த நிம்மதிக்கு ஈடு இணை வேறு எதுவுமே இல்லை!''