Published:Updated:

'தானே' துயர் துடைக்க.. நீளட்டும் நம் கரங்கள்!

'தானே' துயர் துடைக்க.. நீளட்டும் நம் கரங்கள்!

'தானே' துயர் துடைக்க.. நீளட்டும் நம் கரங்கள்!

'தானே’ புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்களுக்கு உதவும்படி விகடன் விடுத்த அறைகூவலை ஏற்று உதவ முன்வரும் இதயங்களின் பங்களிப்புகள் தொடர்கின்றன. சென்னை (கிழக்கு) ராஜா அண்ணாமலைபுரம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.விஸ்வநாதன், செயலாளர் ஆரியோ பாபு, அடுத்த வருடத்துக்கான தலைவர் பி.டி.குமார், இளைஞர் நலன் பிரிவு இயக்குநர் பி.ரகுநாதன் ஆகியோர் நம்மைத் தொடர்பு கொண்டு, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விகடனோடு இணைந்து மருத்துவ உதவிகள் செய்ய முன்வந்தனர்.  புயலால் பெரும் தாக்குதலுக்கு ஆளான கடலூர் மாவட்டம், பத்திரக்கோட்டை கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கிராமத்துக்குள் செல்லவே முடியாத அளவுக்கு சாலைகளின் குறுக்கே மரங்கள் விழுந்துகிடந்தன. முறிந்த மரங்களும் முடங்கிப்போன வாழ்வுமாக அல்லாடித் தவித்த அந்த கிராம மக்களுக்கு நாம் செய்த முதல் உதவி... அவர்களின் சோகங்களுக்குக் காது கொடுத்ததுதான். பகிர்ந்த துன்பம்தானே

'தானே' துயர் துடைக்க.. நீளட்டும் நம் கரங்கள்!

பாதியாகும்? சாலைகளில் கிடந்த மரங்களை அப்புறப்படுத்தி, பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் முகாம் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம்.

கடந்த 21-ம் தேதி முகாம் ஆரம்பம்... கைக்குழந்தையைத் தூக்கியபடி வந்த ஒரு பெண்ணுடன் ஆரம்பித்த மக்களின் வருகை மாலை 550-க்கு மேற்பட்டோருக்குச் சிகிச்சை அளித்திருந்தது.

'சென்னை செட்டிநாடு ஹெல்த் சிட்டி’யைச் சேர்ந்த மன நலம், எலும்பு, பல் கண்-காது-மூக்கு, தோல், பொது மருத்துவம், நோய்த் தடுப்பு மற்றும் சமூக மருத்துவம் என எட்டு சிறப்புப் பிரிவுகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். பொது மக்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகள் செட்டிநாடு ஹெல்த் சிட்டி சார்பில் வழங்கப்பட்டன. அப்பல்லோ பார்மசி சார்பில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.

''இது ஒரு பொட்டல்காடு. அப்பனும் பாட்டனும் வெச்சு வளர்த்த பலா, முந்திரி மரங்கள்தான் இத்தனை நாளா எங்களை வாழவெச்சது. பேயா அடிச்ச காத்து மரங்களை மட்டும் சாய்ச்சுப் போடலை; எங்களோட வாழ்க்கையையே வேரோடு பிடுங்கி எறிஞ்சிடுச்சு. கரன்ட் இல்லை, குடிக்கத் தண்ணீர் இல்லைன்னு வாடிக்கிடந்த எங்களுக்கு இப்படி தேடி வந்து உதவுறீங்களே... நன்றிங்கய்யா...'' என ஊர்ப் பெரியவர் தேவராசு மருத்துவர் ஒருவரின் கையைப் பிடித்து நன்றி சொல்ல... அந்தச் சூழலின் நெகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.

விகடனுடன் இணைந்து முகாமை நடத்திய ரோட்டரி சங்கத்தின் இளைஞர் நலன் இயக்குநர் ரகுநாதன், ''ரோட்டரி சங்கம் சார்பில் பல நலத் திட்டங்களை இதற்கு முன்பு நடத்தி இருக்கிறோம். விகடனோடு வந்து பத்திரக்கோட்டையைப் பார்த்த பிறகுதான், கிராமப்புறங்களில் மருத்துவத் தேவை எந்த அளவுக்கு அத்தியாவசியம் என்பது புரிகிறது. இனி எங்களின் மருத்துவ சேவை நிச்சயம் கிராமப்புறங்களில்தான் இருக்கும்!'' என்றார் நம்பிக்கையோடு. மருத்துவர்களும் இதே வார்த்தைகளை உரக்கச் சொல்ல... முறிந்த முந்திரியிலும் முளைவிடும் துளிரைப் போல் இருந்தது அந்த முழக்கம்!

'தானே' துயர் துடைக்க.. நீளட்டும் நம் கரங்கள்!
'தானே' துயர் துடைக்க.. நீளட்டும் நம் கரங்கள்!