Published:Updated:

காதல் செய்வீர்!

காதல் செய்வீர்!

காதல் செய்வீர்!

காதல் செய்வீர்!

Published:Updated:
காதல் செய்வீர்!
காதல் செய்வீர்!

'காதலித்துப் பார்
உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்
கண்ணிரண்டும் ஒளிகொள்ளும்...'

##~##

- வைரமுத்துவின் வாக்கு சத்தியம். காதல் வந்துவிட்டால்,  உடல் நலம், மன நலம் இரண்டும் அழகாகி உங்களைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். 'காதலிப்பவர்களுக்கும் மகிழ்ச்சியான இல்வாழ்க்கையில் இருப்பவர்களுக்கும், மன அழுத்தம், மாரடைப்பு போன்ற பிரச்னைகள் வருவதற்கான சாத்தியங்கள் குறைவு’ என்கிறது அறிவியல்.

அமெரிக்காவின் 'வடக்கு கரோலினா பல்கலைக் கழகம்’ மேற்கொண்ட ஆய்வின் முடிவில், பெண்கள் தங்களது துணைவருடன் மகிழ்ச்சியாக இருக்கும்போது, அவர்களின் உடலில் ஆக்ஸிடோஸின் எனும் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், 'சமூகத்தோடு இயைந்து வாழ்கிற மனப் பக்குவம் கிடைப்பதோடு, ரத்த நாளங்களில் சீரான ரத்த ஓட்டம் நிகழ்ந்து ரத்த அழுத்தம் வரும் வாய்ப்பும் குறைகிறது’ என்று இந்த ஆய்வு காதலுக்குப் பச்சைக் கொடி காட்டுகிறது. கூடவே,

'மன அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் வல்லமைகொண்டது. இதனால், உடல் நலக் குறைபாடுகளும் மன நலக் குறைபாடுகளும் தோன்றுகின்றன. நீங்கள் யாரையாவது விரும்பும்போது அல்லது விரும்பப்படும்போது, மன அழுத்தம் உங்களுக்குள் எட்டிப்பார்க்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு. மனதுக்குப் பிடித்தவர் உங்களுடன் இருக்கும்போது எதையும் சமாளிக்க முடியும் என்ற தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் காதல் கொடுக்கிறது'' என்கிறார்கள்.

வெளியூர் விஷயங்கள் இப்படி இருக்க, நம் ஊரிலும் காதலைக் கொண்டாடும் குரல்கள் காலங்காலமாக ஒலித்துக் கொண்டேதான் இருக்கின்றன.

'காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்,
கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே...
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்?
காதலினால் சாகாமா லிருத்தல் கூடும்,
கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்’

என்று பாரதியார் காதலையே பிரிஸ்கிரிப்ஷனாக எழுதிக் கொடுத்ததில் இருந்து, 'லவ் பண்ணுங்க ஸார்... லைஃப் நல்லாருக்கும்!’ என்று இன்றைய திரைப்படங்கள் வரை கலை உலகம் காதலைத் தீவிரமாக ஆதரிக்கிறது. இந்தக் கவிதைகளும் வசனங்களும் ஆய்வுகளும் எந்த அளவுக்கு நடைமுறைக்குப் பொருந்தும்? காதல் என்ற ஒன்று வாழ்க்கையில் நிஜமாகவே மாயாஜாலங்களை நிகழ்த்திவிடுமா? மருத்துவம் என்ன சொல்கிறது?

மன நல மருத்துவர் ஷாலினியும் இதை ஆமோதிக்கிறார்...

காதல் செய்வீர்!

''காதலில்தான் ஓர் ஆணும் பெண்ணும் உச்சகட்ட முதிர்ச்சி அடைகிறார்கள். அது வரை அவர்கள் ஒருவருக்கு மகளாகவோ, மகனாகவோ, சகோதர உறவிலோ, நட்பாகவோதான் இருந்திருப்பார்கள். இந்த வழக்கமான உறவில் யாரும் யாருக்காகவும் எதையும் விட்டுக்கொடுக்கத் தேவை இல்லை. தன்னைத்தானே மாற்றிக் கொள்ளவும் வேண்டியது இல்லை. அந்தந்த உறவுகளை அப்படியே ஏற்றுக் கொண்டு விடுவார்கள். ஆனால், காதலில்தான் ஒருவருக்காக நம்மை மாற்றிக்கொள்கிறோம். விட்டுக்கொடுக்கிறோம். தனிப்பட்ட முறையில் தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு முதிர்ச்சி அடைகிற கட்டம் இது.

இந்த முதிர்ச்சியால் எனக்கும் ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கை அதிகமாகும். இந்த நம்பிக்கை அளவு அதிகமாகும்போது, துணிச்சலான முடிவு எடுக்கிற தைரியம் வந்துவிடும். சுய மதிப்பு அதிகமாகும். நன்றாக ஆடை அணிந்துகொள்வதில் ஆரம்பித்து, ஒவ்வொரு விஷயத்திலும் தன்னை மேம்படுத்திக் கொள்வது நிகழும். இந்த மன எழுச்சி ஓர் ஆண் நண்பன் சொல்வதாலோ அல்லது ஒரு பெண் தோழி சொல்வதாலோகூட ஏற்படாது; காதலில் மட்டும்தான் இது சாத்தியம். சாதிக்க வேண்டும் என்கிற  ஊக்கம் ஒரு புத்தகம் மூலமாகவோ, தன்னம்பிக்கை சொற்பொழிவைக் கேட்பதாலோகூட கிடைக்கலாம். ஆனால், காதலில் கிடைக்கும் ஊக்கம் போதை கலந்தது. அதற்கு சக்தி அதிகம்.

காதல் செய்வீர்!

ஒரு பெண் ஒரு பையனைப் பார்த்து ஆசையாகச் சிரித்துவிட்டால், அவனுக்கு டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அதிகமாகச் சுரக்க ஆரம்பிக்கும். தான் ஒரு சாகசக்காரன் என்பதை அந்தப் பெண் முன்னால் நிரூபிக்க வேண்டும் என்ற செயல்திறன் பல மடங்கு அதிகமாகும். இளவட்டக் கல்லைத் தூக்குவது போன்ற விஷயங்கள் எல்லாம்கூட காதல் கொடுக்கும் மனோபலத்தினால் ஏற்படுவதுதான். 'கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால், மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்’ என்று கவிதை உலகம் சொல்வதும் இதைத்தான்.

காதலால் ஏற்படுகிற இந்த சக்தியை, நல்ல லட்சியங்களை சாதிக்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல, காதல் வயப்பட்ட பெண்ணுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும்.  ஆக்ஸிடோஸின், எல்.ஹெச். (LH), எஃப்.எஸ்.ஹெச். (FSH) போன்ற ஹார்மோன்களும் அதிகமாகச் சுரக்கும். இதனால் மன அழுத்தம் உருவாகும் வாய்ப்புகள் இல்லை.

நம் மனசு, மூளை, உடல் மூன்றும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவை. மனது நன்றாக இருந்தால் மூளையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். ஒரு நோய் நினைத்தாலும் தாக்க முடியாது. மன அழுத்தம் அதிகமாகும்போது, நோய் எதிர்ப்பு சக்தியை உடல் இழந்துவிடும். அதன் தொடர்ச்சியாகத்தான் ஆஸ்துமா, முடி கொட்டுவது,  ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு எல்லாம் வருகின்றன.

உங்களுக்கென்று ஓர் உறவு இருக்கும்போது, இந்த மன அழுத்தம் வர வாய்ப்பு இல்லை. அதனால்தான் எங்களிடம் வருகிற நோயாளிகளிடம் 'அன்பு செலுத்த உங்களுக்கு உறவுகளோ, சொந்தங்களோ, நண்பர்களோ இல்லாவிட்டால், குறைந்தபட்சம் ஒரு நாயோ, ஒரு பூனைக்குட்டியோ வளர்த்துப் பாருங்கள்... அட்லீஸ்ட் ஒரு செடியாவது வளர்த்து அந்தச் செடியுடன் பேசுங்கள்’ என்று சொல்வோம்.

மனதோடு அறிவும் ஒன்றிணைந்து இயங்கும் போதுதான், வாழ்க்கை வசீகரிக்கும்.  எனவே, அன்பு செலுத்துவோம்!''

உங்களைச் சுற்றியும்
ஒளிவட்டம் தோன்றட்டும்!

காதல் செய்வீர்!
காதல் செய்வீர்!

'உன்னைவிட்டு விலகுவதும் இல்லை. உன்னைக் கைவிடுவதும் இல்லை’ என்ற பைபிள் வசனம் காதலுக்கும் பொருந்தும். உனக்காக நான் இருக்கிறேன் என்பதை உணர்த்திக்கொண்டே இருப்பது முக்கியம்.

காதல் செய்வீர்!

உங்கள் பார்ட்னரை மனதுக்குள் கோயில் கட்டிக் கும்பிடுவது எல்லாம் சரிதான். ஆனால், அதை ராணுவ ரகசியம்போல் வைத்துக்கொண்டிராமல், அவ்வப்போது வெளிப்படுத்துங்கள்.

காதல் செய்வீர்!

அவசர உலகம்தான். எல்லோருக்கும் எட்டிப் பிடிக்க உயரங்களும், சமாளிப்பதற்கு பொருளாதாரச் சிக்கல்களும் இருக்கின்றனதான். ஆனால், இந்த விவகாரங்கள் காதல் மேல் கைவைத்துவிடாமல் கவனமாக இருங்கள். காதலுக்கென்று கொஞ்சமாவது நேரம் ஒதுக்குங்கள்.

காதல் செய்வீர்!

காதலர் மேல் அன்பு காட்டுவதைப் போல, காதலரின் உறவினர்களிடமும் அன்பு காட்டினால், உங்கள் மேல் உள்ள பிரியம் அதிகரிக்கும்.  

காதல் செய்வீர்!

உங்களின் திருமண நாள், பார்ட்னரின் பிறந்த நாள், காதலர் தினம் போன்ற முக்கிய நாட்களை நினைவுவைத்து சின்னச் சின்னப் பரிசுப் பொருட்களைக் கொடுத்துப் பாருங்கள். உங்களது பார்ட்னர் அன்பால் திக்குமுக்காடுவார்!