Published:Updated:

40-ஐ தாண்டினால் 108

40-ஐ தாண்டினால் 108

40-ஐ தாண்டினால் 108

40-ஐ தாண்டினால் 108

Published:Updated:
40-ஐ தாண்டினால் 108
40-ஐ தாண்டினால் 108

ரபரப்பான சாலைகளில், சிக்னலைக் கண்டுகொள்ளாமல் சிட்டாய்ப் பறந்துவிடுவது, துப்பட்டாவைப் பறக்கவிட்டபடி அலட்சியமாய் ஓட்டுவது என இளம் பெண்கள் பலர் இரு சக்கர வாகனங்களை ஓட்டும்போது ஆபத்தை உணராமல் அத்தனை விதிகளையும் மீறுகிறார்கள். விளைவு... ஆங்காங்கே விழுந்து புரளும் விபரீத விபத்துகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சின்னச் சின்னக் காயங்கள், சிராய்ப்புகள்கூட உடல் அளவில் ஆறாத தழும்பையும் மனது அளவில் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்திவிடும்'' என்கிறார் சென்னை விஜயா மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவு மருத்துவர் பாபு நாராயணன்.  

40-ஐ தாண்டினால் 108

''நமக்கு எதுவும் நடக்காது என்ற அலட்சியம்தான் விபத்து நடக்க முதல் காரணம். விபத்துக்கு உள்ளானவர்களைச் சந்திக்கும்போதோ அல்லது பாதிப்புக்கு உள்ளாகும்போதோதான் அலட்சியத்துக்கும் அவசரத்துக்கும் கொடுக்கும் விலையின் வலி புரியும்'' என்பவர், விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகள்பற்றி விளக்கினார்.

''இரண்டு மாதங்களுக்கு முன் கல்லூரி மாணவிகள் இருவர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு இருந்தார்கள். தலைக்கவசம் அணியாமல், இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றபோது திடீர் என்று நிலைத் தடுமாறி கீழே விழுந்துவிட்டனர். முகம் முழுக்க ரத்தக் காயங்கள். பல இடங்களில் சிராய்ப்பு... மூக்கும் உதடுகளும் கிழிந்துபோய் இருந்தன. பின்னால் உட்கார்ந்துச் சென்ற மாணவிக்கு இன்னும் பலமான அடி. அறுவைச் சிகிச்சை மூலம் முகத்தைச் சீரமைக்க வேண்டிய நிலை. இந்தப் பாதிப்பு நிரந்தரமான தழும்பாய் மாறி, அந்தப் பெண்களுக்கு மனரீதியான பிரச்னைகளை ஏற்படுத்திவிட்டது. கை, கால்களில் ஏற்படக்கூடிய ஊனத்தைக் காட்டிலும் முகத்தில் ஏற்படக்கூடிய காயங்கள் ஆறாத தழும்புகளாக மாறி, அழகைக் கெடுத்துவிடுவதால், மன அழுத்தத்துக்குத் தள்ளப்படுகின்றனர். எலும்பு பிசகிப்போவது, மூட்டுத் தசை விலகிப்போவது போன்றவை அடுத்தக் கட்ட பாதிப்புகள். இதையும் கவனிக்காமல்விட்டால், ஊனத்துக்கு வழிவகுத்துவிடும்.

வாகன விபத்துகளால், உள் காயங்கள், எலும்பு முறிவு ஏற்படும்போது உடல் அமைப்பிலேயே மாறுபாடுகள் ஏற்படுகின்றன. தலையில் அடிபடுவது உச்சக்கட்ட ஆபத்து. இதனால், பாதிக்கப்பட்டவர் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டு, பக்கவாதத்தால் முடங்கிப்போகலாம். தலைக் கவசம் அணிவது தலையைப் பாதுகாத்துக்கொள்ள சிறந்த வழி. ஆனால், அதிக வேகம் விளைவிக்கும் ஆபத்துகளை எதிர்கொள்ள எந்தச் சாதனங்களும் இல்லை என்பதை வாகன ஓட்டிகள் உணர வேண்டும்'' என்கிறார் பாபு.    

இரு சக்கர வாகனத்தை எப்படிப் பாதுகாப்பாக ஓட்ட வேண்டும்? 20 வருடங்களாக இரு சக்கர வாகனம் ஓட்டுவதற்குப் பயிற்சி அளித்துவரும் அடையாரைச் சேர்ந்த துர்கா இங்கே விளக்குகிறார்.

''தன் 12 வயது மகளுக்கு வாகனம் ஓட்ட கற்றுக்கொடுக்கச் சொல்லி என்னிடம் அழைத்து வந்தார் ஒரு தாய். நான் கற்றுத் தர மறுத்துவிட்டேன். ஆனால், சில மாதங்கள் கழித்துப் பார்த்தால், அந்தப் பெண் பள்ளிக்கூடத்திற்கு வண்டி ஓட்டிக்கொண்டு போகிறாள். அவள் சித்தியே வண்டி ஓட்டக் கற்றுக்கொடுத்துவிட்டாராம்.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் சிறுமிகள் இங்கு வண்டி ஓட்டுவது சகஜமாகிவிட்டது. ஆனால், வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டி ஒரு விபத்து நேர்ந்தால், அதனால்  வண்டி மோதிக் காயமுற்றவர் மட்டும் பாதிக்கப்படுவது இல்லை; வாகனத்தை ஓட்டிச் செல்பவரும்தானே. 18 வயது நிரம்புவதற்குள், தன் மகள் எல்லாவற்றையும் கற்றுத் தேர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்றைய

40-ஐ தாண்டினால் 108

பெற்றோரிடம் அதிகம் இருக்கிறது. பின்விளைவுகளைப் பற்றி பெற்றோர்களே கவலைப்படாததுதான் வேதனை!'' என்று ஓட்டுநர் உரிமம் வாங்குவதன் அவசியத்தைச் சொன்ன துர்கா, விபத்து இன்றி வண்டி ஓட்டுவதற்கான டிப்ஸ்களைத் தந்தார்.

''நம் உருவத்துக்கும் உயரத்துக்கும் ஏற்ற மாதிரியான வண்டி வாங்குவதில்தான் பாதுகாப்பு ஆரம்பிக்கிறது. ஒருவரின் உயரத்துக்கு சம்பந்தம் இல்லாத உயரமான வண்டியைத் தேர்ந்தெடுத்தால், சட்டென பிரேக் பிடிக்கும்போது, கால்களைக் கீழே ஊன்றி வண்டியை பேலன்ஸ் செய்து நிறுத்த முடியாது. ஆகையால், உயரத்துக்கு ஏற்ற வண்டிகளையே தேர்ந்தெடுக்க வேண்டும்.  

வண்டி ஓட்டும்போது கவனம் செலுத்த வேண்டிய இரண்டாவது விஷயம்... உடை மற்றும் காலணிகள்.  பெண்களைப் பொறுத்த அளவில், ஜீன்ஸ், ஓவர்கோட் தான் வண்டி ஓட்ட சௌகர்யமான உடை. சுடிதார் சௌகர்யமாக இருந்தாலும் துப்பட்டா பெரும் பிரச்னை. அதுவும் கழுத்தைச் சுற்றிக்கொண்டு, காற்றில் படபடக்க வண்டி ஓட்டுவது ரொம்பவே ஆபத்தானது. துப்பட்டாவைப் பின் பக்கமாக நன்றாகக் கட்டி நல்ல பாதுகாப்புடன் வண்டியை ஓட்டலாம்.  கல்லூரிப் பெண்கள் ஆர்வத்துடன் புடவை அணிந்து ஓட்டும்போது, முந்தானையை இழுத்துச் செருகிக்கொண்டு ஓட்ட வேண்டும். சக்கரங்களில் சேலையோ, துப்பட்டாவோ சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதால், கவனம் அவசியம். பின்னால் ஒருவரை ஏற்றிச் செல்லும்போது, பேசிக்கொண்டே ஓட்டக் கூடாது. காலணிகளைப் பொறுத்த அளவில், ஷூ போடாவிட்டாலும் குறைந்தபட்சம் கால்களை இழுத்துப் பிடிக்கக் கூடிய பட்டைச் செருப்புகளை அணிந்து ஓட்டுவது நல்லது.

அடுத்து, வண்டியை எடுக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள். ஸ்டாண்ட் முழுமையாக எடுத்துவிடப்பட்டு இருக்கிறதா, பிரேக், லைட் சரியாக இருக்கிறதா என்பதைக் கவனித்துக்கொள்ள வேண்டும்.

ஓட்டும்போது கவனம் முழுமையாக சாலையில் இருக்க வேண்டும். வீட்டிலோ, அலுவலகத்திலோ கவனம் இருந்தால் ஆபத்து. செல்பேசியைப் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவது இன்னும் ஆபத்து.

பெரும்பாலான விபத்துகள் சாலை வளைவுகளிலேயே ஏற்படுகின்றன. எனவே, வளைவு களில் செல்லும்போது நிதானம் தேவை.

வேகம் 40 கி.மீ-ஐ தாண்டக் கூடாது என்பதைத் தாரக மந்திரமாகவே வைத்துக்கொள்ளலாம். 40-ஐ தாண்டினால் 108-ஐ அழைக்க வேண்டி வரும் என்று  நினைவில் வைத்துக்கொண்டால், வேகத்தைக் கூட்ட மாட்டீர்கள்.

அவசரக் காலகட்டங்களில் எல்லோரும் செய்யும் பெரிய தவறு... ஆக்ஸிலேட்டரை அதிகப்படுத்திக்கொண்டே பிரேக்கை அழுத்துவது. வண்டியைக் கீழே சாய்த்து இழுத்து விபத்தை உருவாக்குவது இதுதான். இதைத் தவிர்க்க வேண்டும்.

இரவு நேரங்களில் எதிர்த் திசை வாகனங்களில் இருந்து வெளியாகும் முகப்பு வெளிச்சங்கள் கண்களைச் கூசச் செய்யும். அப்போது எதிரில் வரும் வாகனத்தின் ஹெட்லைட்டுகளைப் பார்க்காமல் சாலையில் விழும் நமது வாகனத்தின் வெளிச்சத்தைப் பார்த்து மிகவும் நிதானமாக ஓட்ட வேண்டும்.

அவசரத் தேவைக்கு ஒரு முதல் உதவிப் பெட்டியை வண்டியில் வைத்திருப்பது நல்லது. தங்களுடைய முகவரி, ரத்த வகை இவற்றைப் பற்றிய விவரங்களைக் கழுத்தில் தொங்கும் அடையாள அட்டையிலோ அல்லது வண்டியிலோ வைத்திருப்பது அவசர நேரங்களில் உதவும். சுருக்கமாக ஒரு வரியில் சொன்னால் நிதானமே விவேகம்!

சுவாச மந்திரம்

விபத்து ஏற்பட்டால் எடுக்க வேண்டிய உடனடிச் சிகிச்சைகள்பற்றி கூறுகிறார் 'அலர்ட்’ சமூக அமைப்பின் நிறுவனர் கலா பாலசுந்தரம்.  

40-ஐ தாண்டினால் 108

• விபத்து நடந்த இடத்தில் கூட்டத்தை விலக்கிவிட்டு, முதலில் காற்றோட்டத்துக்கு வழி செய்ய வேண்டும்.

• விபத்து நடந்த இடத்தில், 'பார் - கவனி - உணர்’ என்ற மூன்று சுவாச மந்திரத்தை மேற்கொண்ட பிறகே, செயல்படத் துவங்க வேண்டும். அதாவது, விபத்தில் காயம் அடைந்த நபரின் நெஞ்சுக்கூடு ஏறி இறங்குகிறதா  என்பதைப் பாருங்கள். நாசித் துவாரத்தில் மூச்சுக் காற்று வருகிறதா என்பதைக் கவனியுங்கள். கையைப் பிடித்து நாடித் துடிப்பை உணருங்கள். பிறகு நொடிப் பொழுதும் தாமதிக்காமல் விரைந்துச் செயல்படத் தொடங்குங்கள்.

• தோள்பட்டையை உலுக்கி, காதுகளில் விழுவதுபோல் ஓசை எழுப்ப வேண்டும். எந்த அசைவும் இல்லாத பட்சத்தில் அவர் சீரியஸான நிலையில் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.  

• பாதிக்கப்பட்டவரது உடலில் எங்காவது அடிபட்டு சிவந்து, வலி, எரிச்சலுடன் அசைக்கவே முடியாமல் இருந்தால் எலும்பு முறிந்திருக்கிறது என்று அர்த்தம். உடனடியாக, வலி அதிகரிக்காமல் இருக்க, பெல்ட் (அ) துப்பட்டாவால் கட்டவேண்டும். எதுவும் இல்லையென்றால், ஒரு நியூஸ்பேப்பரை விரித்து எலும்பு முறிந்த பகுதியை அதன் மேல் வைத்து சுற்றித் துண்டு அல்லது கயிற்றைக் கொண்டு கட்டலாம்.

• கை, காலில் ரத்தம் வந்துகொண்டிருந்தால், ரத்தம் வரும் பகுதியை மேல் நோக்கி உயர்த்திப் பிடித்து ஒரு துணியால் அந்த இடத்தை அழுத்திப் பிடித்துக் கட்டவேண்டும். ரத்தம் அதிகம் வெளியேறாமல் இருக்கும்.

• மயக்க நிலையை அடைந்துவிட்டால், உடனே தண்ணீர் கொடுக்கக் கூடாது. ஏனெனில், தண்ணீரானது உணவுக் குழாய்க்குப் பதிலாக மூச்சுக் குழாய்க்குள் இறங்கிவிடும் அபாயம் உள்ளது. முகத்தில் தண்ணீரை நன்றாகத் தெளிக்கலாம்.

• பெரிய அளவில் காயம் இல்லை என்றாலும், அந்த நபரிடம் அக்கறையோடுப் பேசி, ஆசுவாசப்படுத்தி, பயத்தைப் போக்கி, சகஜ நிலைக்குக் கொண்டுவர வேண்டும்.

• நொடிப் பொழுதில் இவற்றைச் செய்தவுடன், ஆம்புலன்ஸை அழைக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism