Published:Updated:

பரபர துறுதுறு சுறுசுறு குறும்புக் குழந்தைகள்

சமாளிப்பது எப்படி?

பரபர துறுதுறு சுறுசுறு குறும்புக் குழந்தைகள்

சமாளிப்பது எப்படி?

Published:Updated:
பரபர துறுதுறு சுறுசுறு குறும்புக் குழந்தைகள்
##~##

குழந்தை என்றாலே, குறும்புதான்! பரபர சுறுசுறு துறுதுறுதான். ஆனால், சராசரிக் குழந்தைகளுக்கான இயல்பையும் தாண்டி இன்னும் அதீதப் பரபரப்புடன் கலவரப்படுத்துகிற குழந்தைகளின் சேட்டையையும் அப்படியே எடுத்துக்கொள்ள முடியுமா? 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓர் இடத்தில் நின்று நிதானமாக விளையாடாமல், பரபரவென்று ஓடுவது, பிற குழந்தைகளைக் கிள்ளுவது, பொருட்களைத் தள்ளிவிடுவது என எங்கேயும் பிரச்னை, எப்போதும் பிரச்னையாக ரணகளப்படுத்தும் குழந்தைகளைப் பரபர குழந்தைகள் (ஹைப்பர் ஆக்டிவ் சைல்டு) என்று அழைக்கிறது மருத்துவ உலகம்.

பரபர துறுதுறு சுறுசுறு குறும்புக் குழந்தைகள்

இவர்களைப் பற்றிப் பேசுகிறார் குழந்தைகள் நல மருத்துவர் ஜெயந்தினி.

''குழந்தைகள் என்றால் துறுதுறுவென்றுதான் இருப்பார்கள். ஆனால், அந்தத் துறுதுறுப்பு சாதாரணமானதா அல்லது அசாதாரணமானதா என்பதைக் கண்டுபிடிக்க நமக்குத் தெரிய வேண்டும். பொதுவாக குழந்தைகள் சுட்டித்தனமாக இருப்பதால், ஐந்து வயதுக்குள் இதைக் கண்டுபிடிப்பது கடினம். ஆனால், ஐந்து முதல் ஏழு வயதுக்குள் இதைக் கண்டறிந்து குணப்படுத்திவிடலாம். மூளையில் உள்ள கவனத்தை ஈர்க்கும் பகுதி சரிவர வேலை செய்யாததே இந்த நிலைக்கு காரணம். இந்த நிலையை 'அதீதப் பரபரப்பு மற்றும் கவனக் குறைபாடு’(Attention Deficit and Hyperactivity  Disorder)  என்று சொல்வார்கள்.

பரபர துறுதுறு சுறுசுறு குறும்புக் குழந்தைகள்

இதுபோன்ற குழந்தைகளுக்கு அறிவுத் திறன் நன்றாகவே இருக்கும். நினைவுத் திறனிலும் குறைபாடு இருக்காது. உடல் உறுப்புகளின் செயல்பாடுகளும் இயல்பாகவே இயங்கும். ஆனால், எதையும் ஒருமுகப்படுத்தத் தெரியாததும் கவனச் சிதறலுமே இவர்களின் பிரச்னை.

எதிலும் பொறுமை இல்லாமல் செயல்படுதல், வளவளவென்று அதிகம் பேசுதல், பிறர் பேசும்போது இடையிடையே அதிகம் பேசுதல், கீழ்ப்படியாமை, அதிக சப்தம் எழுப்பி விளையாடுதல், இருக்கையில் அமரவைத்தாலும் உட்கார முடியாமல் நெளிந்துகொண்டே இருத்தல், கேள்வியை முடிக்கும் முன்பே பதில் அளித்தல், மூளைக்கு வேலை கொடுக்கிற சின்னச் சின்ன விஷயங்களைக்கூட தவிர்த்துவிடுதல், எத்தனைமுறை சொல்லிக் கொடுத்தாலும் செய்த தவறை திருத்திக் கொள்ள முடியாமல் மீண்டும் மீண்டும் செய்தல், எதிலும் ஒழுங்குமுறை இல்லாமல் இருத்தல், வேடிக்கைப் பார்த்தல், அடிக்கடி கனவுலகில் சஞ்சரித்தல், ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்டச் செயல்களைச் செய்ய முற்படுதல்... இவற்றை எல்லாம் இவர்களுடைய பிரச்னைகளாகச் சொல்லலாம். இதனால், பலருடைய வெறுப்புக்கு உள்ளாகி இவர்களின் மனநிலையும் பாதிக்கப்படும்.

இதற்கான காரணம் குழந்தைகளிடம் இருந்தாலும், சுற்றுப்புறமும் இதனை அதிகப்படுத்துகிறது. ஏன் இந்தக் குழந்தைகள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு குழந்தையைத் தண்டிப்பது இந்தப் பாதிப்பின் வீரியத்தை அதிகரிக்கவே செய்யும். ஏனெனில், தெரிந்தே அவர்கள் தவறு செய்வது இல்லை. மருத்துவர்களின் ஆலோசனைப்படி இவர்களுக்குத் தேவை கண்டிப்போ தண்டனையோ அல்ல... தகுந்த சிகிச்சை மட்டுமே'' என்கிறார் ஜெயந்தினி.

பரபர துறுதுறு சுறுசுறு குறும்புக் குழந்தைகள்

''பெரும்பாலும் ரணமான மனநிலையை ஒருமுகப்படுத்துவதன் மூலமாகவே 'ஹைப்பர் ஆக்டிவிட்டி’ பாதிப்பைச் சரிசெய்துவிட முடியும்'' என்கிறார் மனோதத்துவ நிபுணர் லட்சுமி விஜயகுமார்.

''தாய் கருவுற்று இருக்கும்போது அஜினமோட்டோ, செயற்கை வண்ணம் கலந்த பானங்கள் மற்றும் உணவு வகைகளைச் சாப்பிடுதல் அல்லது பிரசவ நேரத்தில் ஏற்படும் ஆக்சிஜன் குறைபாடு ஆகியவையே இந்த ஹைப்பர் ஆக்டிவ் பிரச்னைக்கான மூல காரணம்.

இப்படிப்பட்ட குழந்தைகள் வேண்டும் என்றே அப்படி நடந்துகொள்ளவில்லை  என்பதைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் முதல் படி. இத்தகைய குழந்தைகளிடம் எந்தக் காரணத்தைக் கொண்டும் வெறுப்பைக் காட்டக் கூடாது. அன்பின் வழியேதான் இவர்களை வசப்படுத்த வேண்டும். கவனத்தை ஒருமுகப்படுத்த கேரம், செஸ் போன்ற விளையாட்டுகளிலும், எனர்ஜி அளவைக் கட்டுக்குள் கொண்டுவர ஸ்கேட்டிங், நீச்சல், யோகா போன்ற பயிற்சிகளிலும் ஈடுபடுத்தலாம். இவர்களிடம் ஒரு வேலையைக் கொடுக்கிறோம் என்றால், ஒரே சமயத்தில் பெரிய வேலையாகக் கொடுக்காமல், பிரித்துக் கொடுத்து சிறிது சிறிதாக செய்யச் சொல்லலாம். இத்தகைய குழந்தைகளிடம் படிப்பு சுமாராக இருந்தாலும் ஏதாவது ஒரு கூடுதல் திறமை  நிச்சயம் இருக்கும். ஆசிரியர்களிடம் எடுத்துக் கூறி, அதைக் கண்டறிந்து ஊக்குவித்தால், அந்தத் துறையில் இவர்கள் நிச்சயமாக பிரகாசிப்பார்கள்!'' என்கிறார் அக்கறையோடு.

சுருக்கமாகச் சொன்னால், தட்டிக்கொடுத்தால் கெட்டிக்காரர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism