Published:Updated:

தீ விபத்தும் முதல் உதவியும்

தீ விபத்தும் முதல் உதவியும்

தீ விபத்தும் முதல் உதவியும்
தீ விபத்தும் முதல் உதவியும்

'தீ விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்கள் வீடுகள்’தான் என்கிறது ஒரு புள்ளிவிவரம். ஆனால், எந்த அளவுக்குத் தீ விபத்துகளைத் தடுப்பதற்கும் எதிர்கொள்வதற்கும் நாம் தயாராக இருக்கிறோம்?

 தீ விபத்துகளைத் தடுப்பது குறித்தும் முதல் உதவிச் சிகிச்சைகள் குறித்தும் இங்கே விரிவாகப் பேசுகிறார் தோல் மற்றும் அழகுக் கலை நிபுணரான டாக்டர் ரத்னவேல்.

''தீ விபத்து ஏற்படுவதற்கான சூழ்நிலைகளைத் தெரிந்துகொண்டு முன் எச்சரிக்கை உணர்வோடு இருந்தால், விபத்துக்கான வாய்ப்புகளைப் பெரும் அளவில் தடுத்துவிடலாம்.

சமையல் வேலைகளில் இருப்போர் பருத்தியிலான துணிகளை அணிவதே பாதுகாப்பானது. ஏனெனில், ஒருவருக்கு தீ விபத்தினால் ஏற்படும் பாதிப்பின் அளவைத் தீர்மானிப்பதில் உடைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. உதாரணமாக தீ விபத்து நேரும்போது ஒருவர் பட்டு அல்லது நைலான் உடைகளை அணிந்திருந்தால், அவருக்கு ஏற்படும் பாதிப்பும் அதிகம். ஏனெனில், செயற்கை இழை உடைகள் எளிதில் தீப்பிடித்துக்கொள்வதோடு வெப்பத்தில் உருகி உடம்போடு ஒட்டிக்கொண்டு, தொடர்ந்து தீ தனது உக்கிரத்தை கூட்ட தூண்டுகோலாக அமைந்துவிடும். இதனால், எளிதில் தீயை அணைக்க முடியாத அபாயமும் நேர்கிறது. மேலும், சிகிச்சையின்போது உடம்போடு ஒட்டிக்கொண்டு இருக்கும் உருகிப்போன ஆடைகளைப் பிரித்தெடுக்கும்போது அது தோல் பகுதியையும் பிய்த்துக்கொண்டு காயத்தையும் வலியையும் அதிகப்படுத்தும்.

ஒருவரின் ஆடையில் தீப்பற்றிவிட்டால், உடனே தண்ணீரை அவர் மேல் ஊற்றி தீயைப் பரவவிடாமல் அணைக்கலாம். அல்லது கம்பளி, ஜமுக்காளம் போன்ற தடிமனானத் துணியைக்கொண்டு பாதிக்கப்பட்டவரைப் போர்த்தி தரையில் உருளச் செய்தாலும் தீ அணைந்துவிடும். முக்கியமான விஷயம்... தீக் காயமுற்றவர் மீதும், தீக்காயங்கள் மீதும் நம் இஷ்டத்துக்கு கைகளை வைக்கக் கூடாது. தோல் அப்படியே நழுவி வந்துவிடும்.

##~##
தீ விபத்தும் முதல் உதவியும்

அதேபோல, காப்பாற்றச் செல்கிறவர்களே பல நேரங்களில் தீ விபத்துகளில் சிக்கிக்கொள்வது உண்டு. எனவே, காப்பாற்றச் செல்கிறவர் தன்னுடைய முன்புறம் பாதுகாப்பாக ஜமுக்காளத்தை நன்றாக விரித்துப் பிடித்துக்கொண்டே பாதிக்கப்பட்டவரை அணுக வேண்டும்.

சாதாரணமாக வீடுகளில் சமைக்கும்போது கொதிக்கும் வெந்நீர் அல்லது எண்ணெய் கைத்தவறி உடம்பில் தெளித்துவிட வாய்ப்பு உண்டு. இதனால் தோல் பாகம் வெந்து கடும் எரிச்சல் ஏற்படும். இம்மாதிரியான சமயங்களில், பாதிக்கப்பட்ட இடத்தில் பேனா மையைக் கொட்டுவது, காபி பொடியை வைத்து அழுத்துவது, களிம்பு மருந்துகளைப் பூசுவது போன்ற தவறான அணுகுமுறைகளைப் பின்பற்றிவருகிறார்கள். இவை வேதனையை மேலும் அதிகரிக்கவே செய்யும். ரசாயனக் கலவையான பேனா மை, காபி பொடி போன்ற பொருட்களுக்கு புண்களை ஆற்றக்கூடிய மருத்துவக் குணங்கள் எதுவும் இல்லை. மேலும், தேவை இல்லாமல் புண்களில் ஒட்டிக்கொள்ளும் இந்தப் பொருட்கள் நோய்த்தொற்றுக்கும் வழிவகுப்பதால், புண்களைச் சுத்தம் செய்வதற்கு வசதியாக மருத்துவர்கள் இந்தப் பொருட்களை அகற்றும்பொழுது  வேதனையும் வலியும் கூடும். அடுத்ததாகத் தீக்காயத்தால் ஏற்பட்ட கொப்புளங்களைக் கூரிய பொருட்களால் குத்தி உடைப்பதும் தவறான அணுகுமுறையே. இதுவும் நோய்த்தொற்றுக்குத்தான் வழிவகுக்கும்.

சிறிய அளவிலான தீக்காயம் அல்லது வெந்த புண்கள் என்றால், பாதிக்கப்பட்ட பகுதியில் ஐஸ் கட்டிகளை வைப்பதும் ஃப்ரிட்ஜில் இருந்து குளிர்ந்த தண்ணீரை எடுத்து காயத்தின் மீது மெள்ள ஊற்றுவதும் வலி - எரிச்சலைக் குறைக்கும். அதன் பிறகு 'சில்வரெக்ஸ் ஆயின்மென்ட்’(Silverex Ointment) தடவி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம்.

தீ விபத்தும் முதல் உதவியும்

தீக்காயத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். மேல் தோல் மட்டும் சிவந்துவிடுதல் முதல் நிலைப் பாதிப்பு. தோலின் மேல் கொப்புளங்கள் உண்டாவது இரண்டாம் நிலை. மேல் தோல், கீழ் தோல், அதற்கு அடியில் உள்ள திசுக்கள் வரையிலும் ஆழமாகத் தீய்ந்து கருகிவிடுவதை மூன்றாம் நிலை என்கிறோம்.

உடலின் ஓர் இடம் மட்டும் தீக்காயத்தால் கருகி ஆழமானத் தீப்புண் ஏற்படுவதைவிட, அதிகமான இடத்தில் ஏற்படும் முதல் நிலை தீப்புண்ணானது பேராபத்துகளை விளைவிக்கக் கூடியது. இதனால், எளிதில் நோய்த்தொற்றும் ஏற்படுகிறது.

தீ விபத்தும் முதல் உதவியும்

பொதுவாக தீ விபத்துகளால் உடலில் ஏற்படும் பாதிப்புகளைக் கணக்கிட 'ரூல் ஆஃப் நைன்ஸ்’ (Rule of Nines) என்ற அளவுகோல் உள்ளது. இதன்படி உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும் 9 என்ற எண் அளவிலான மதிப்புக் கொடுத்து பிரித்து வைத்திருக்கிறார்கள் (படங்களைப் பார்க்கவும்). தீக்காயங்கள் ஏற்பட்ட உடல் பாகத்தின் எண் மதிப்பைப் பொறுத்து அதன் ஆபத்துகளையும் கணக்கிடலாம். இதன்படி இன்றைய நவீன மருத்துவத்தில் ஒருவருக்குத் தீயினால் ஏற்படும் உடல் பாதிப்பானது 40 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டால், அது உயிருக்கு ஆபத்தான நிலையாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில், காயத்தின் மீது குளிர்ந்த தண்ணீர் விடக்கூடாது. அதற்குப் பதிலாக ஈரத் துணியால் முகம், கைகள், பாதங்களில் ஒத்தடம் மட்டும் கொடுக்கலாம்.

தீக்காயமானது 40 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்தால், சிகிச்சையின் மூலம் காப்பாற்றிவிடலாம். ஆனால், 40 சதவிகிதத்துக்கு மேலாக இருந்தால், உயிர் பிழைக்கும் வாய்ப்பு பாதியாகக் குறைந்துவிடுகிறது. அதுவே 70 சதவிகிதம் என்றால், உயிர் பிழைக்கும் வாய்ப்பு அரிதாகிவிடுகிறது. ஆகையால், தீயை எவ்வளவு எச்சரிக்கையாக அணுக வேண்டுமோ, அவ்வளவு எச்சரிக்கையாக அணுகுங்கள்'' என்கிறார் டாக்டர் ரத்னவேல் அக்கறையாக! 

தடுப்பூசி அவசியம்!

•  சமையல் அறையில், காஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் ஜன்னல் அறைகளைத் திறந்தேவைத்திருப்பது நல்லது. அதே சமயம், தீப்பிடித்த அறையின் ஜன்னல், கதவுகள் மூடி இருந்தால் அவற்றைத் திறப்பதற்கு முயற்சிக்க வேண்டாம். ஏனெனில், காற்றின் வேகத்தால் தீயும் கொழுந்துவிட்டு எரியும் நிலை உருவாகிவிடும்.

• தீப்பிடித்தவர் பதற்றத்தில் அங்கும் இங்குமாக ஓடினால், தீயின் வேகம் கூடி பாதிப்பு அதிகரிக்கும். ஆகவே, பதற்றப்படாமல் அணுகுவது முக்கியம்.

• சிறிய அளவில் தீக்காயம் ஏற்பட்டாலும் டி.டி. எனப்படும் டெட்டனஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்.

• தீக்காயம் அடைந்தவரின் உடம்பில் இருந்து தண்ணீர், சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்கள் வெளியேறிவிடும். எனவே, அரை லிட்டர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி உப்பும் அரைத் தேக்கரண்டி சமையல் சோடாவும் கலந்த கலவையைக் குடிக்கக் கொடுக்கலாம். வாந்தி வந்தால் குடிக்கக் கொடுக்கக் கூடாது.

• தீக்காயத்தை சோப் உபயோகித்துக் கழுவக் கூடாது.

• பாதிக்கப்பட்டவரின் உடம்பில் உள்ள ஆடைகளை நாமே கழற்றுவதும் சரியான முறை அல்ல. உரிய உபகரணங்கள் கொண்டு பாதுகாப்பான முறையில் துணிகளை வெட்டி அப்புறப்படுத்துவது மருத்துவரின் பணி.

• பாதிக்கப்பட்டவரின் உடம்பில் சுத்தமான காற்று படுவதற்கு வசதியாக வைத்திருத்தல் நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு