தொடரும் மருத்துவ முகாம்...
##~##

100 நாட்கள் கடந்துவிட்டன. ஆனாலும், 'தானே’ ஆடிய தாண்டவத்தின் சுவடுகள் இன்னமும் துடைக்கப்படவில்லை. மரங்களின் சிறு துளிர்ப்புபோல் மனரீதியாக மனிதர்கள் எழ நினைத்தாலும், நோய்கள் அவர்களை முடக்கிப்போடுகின்றன மறுபடியும். அவர்களைக் கை தூக்கிவிடும் கடமை உணர்வோடு 'தானே’ பாதிப்பு நிகழ்ந்த மண்ணில் தொடர்ந்து மருத்துவ முகாம்களை நடத்திவருகிறது 'டாக்டர் விகடன்’. பத்திரக்கோட்டையில் தொடங்கிய இந்தப் பயணம், அரசடிக்குப்பம் புதூர், செம்மங்குப்பம் ஆகிய கிராமங்களைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1-ம் தேதி பாலூர் அருகே உள்ள சன்னியாசிப்பேட்டையில் நடைபெற்றது.

 சாதாரணத் தலைவலி, காய்ச்சல் என்றால்கூட, சிகிச்சைக்காக 12 கி.மீ. தொலைவில் உள்ள பண்ருட்டி அல்லது கடலூருக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் இந்தக் கிராம மக்களுக்கு. 'தானே’ தழும்பு மாறாத இந்த மண்ணில் எம்.ஆர்.கே. மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் நம் முகாம் தொடங்கியது.

சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையைச் சேர்ந்த மூத்த மருத்துவர்கள் குழு அந்தப் பள்ளியில் ஆஜரானது. பெண்கள் மற்றும் மகப்பேறு மருத்துவம், இதயம், மூளை - முதுகுத்தண்டு, எலும்பு, பொது மருத்துவம் ஆகிய சிறப்புப் பிரிவுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் சன்னியாசிப்பேட்டை கிராம மக்களிடம் பரிவோடு பேசி, அவர்களின் உடல் - மனப் பிரச்னைகளைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தார்கள்.

தொடரும் மருத்துவ முகாம்...

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள பிரபா மெடிக்கல்ஸ் உரிமையாளர்கள் ஆர்.நெடுஞ்செழியன், என்.பிரபாகரன் ஆகியோர் அளித்திருந்த மருந்து - மாத்திரைகளை மருத்துவர்கள் சிகிச்சைக்கு வந்திருந்த சன்னியாசிப்பேட்டை மக்களுக்கு இலவசமாக வழங்கி னார்கள்.

தொடரும் மருத்துவ முகாம்...

மருத்துவ முகாமில் பங்கேற்றவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையைக் கண்டறியும் சோதனை, ஈசிஜி மற்றும் எக்கோ பரிசோதனைகளும்கூட இலவசமாக செய்யப்பட்டன. எட்டு பேருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பது கண்டறியப்பட்டு,  மேல் சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டார்கள்.

முகாமுக்கு வந்திருந்த கன்னியம்மா என்ற மூதாட்டி, ''இவ்ளோ பேர் எங்க கிராமத்துக்கு வருவீங்கன்னு நாங்க நினைக்கவே இல்ல. மரங்களை இழந்துட்டாலும், உங்களை மாதிரி மனுஷங்களைச் சம்பாரிச்சு இருக்கோமே... சொந்தப் பொறப்பு மாதிரி எங்களுக்காக இவ்வளவு தூரம் வந்து, எங்க பிரச்னைகளை விசாரிக்கிறீங்களே... இதுக்கே நாங்க ரொம்ப கடமைப்பட்டிருக்கோம்பா'' என்றார் நெகிழ்ச்சியுடன்.

குழந்தைகள், பெரியவர்கள் என முகாமில்  450-க்கும் மேற்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. எம்.ஆர்.கே. நர்சரி தொடக்கப் பள்ளியின் தாளாளர் மாயவன் மற்றும் பள்ளி ஆசிரியர்களும் முகாம் பணிகளில் நம்முடன் இணைந்து பணியாற்றினார்கள்.

அடுத்து நாம் முகாம் நடத்தப்போவது பண்ருட்டி அருகே உள்ள தாழம்பட்டு கிராமத்தில். ஆறாத புண்ணாக மாறிக்கிடக்கும் அந்தப் புஞ்சை மண்ணின் சோகத்தை நம்மால் முடிந்த மட்டும் தீர்ப்போமே..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு