Published:Updated:

நர்ஸம்மா (எ) லட்சுமி

நர்ஸம்மா (எ) லட்சுமி

நர்ஸம்மா (எ) லட்சுமி

நர்ஸம்மா (எ) லட்சுமி

Published:Updated:
நர்ஸம்மா (எ) லட்சுமி
##~##

''ஓய்வா? சம்பளத்துக்காக வேலை செய்றவங்கதாம்மா அதைப்பத்தி யோசிக்கணும். இது வேலை இல்லைம்மா; ஊழியம்.'' - லட்சுமி வெறும் வார்த்தைகளால் மட்டும் அல்ல; உண்மையாகவே தன்னுடைய செவிலியப் பணியை அப்படித்தான் பார்க்கிறார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எல்லையோரக் கிராமமான தண்டலம்  ஆரம்ப சுகாதார நிலையம்தான் லட்சுமியின் உலகம். காலை 6 மணிக்குத் தொடங்கும் அவருடைய பணிகள் இரவு 11 மணி வரைக்கும் நீடிக்கின்றன. ''இந்த வேலைக்கு ஏதும்மா நேரம், காலம்?'' என்கிறார்.

''என் சொந்த ஊர் திருச்சி. சின்ன வயசுலேர்ந்தே டாக்டருக்குப் படிக்கணும்கிறதுதான் ஆசை. விளையாடுறதுகூட ஊசி போடுறது, பிரசவம் பார்க்குறதுன்னு டாக்டர் விளையாட்டுதான். திடீர்னு என் அப்பா ஒரு விபத்துல தவறிட்டார். அதுக்கு அப்புறம் எங்கே படிக்குறது? பத்தாவது முடிச்சுட்டு நர்ஸ் ட்ரெயினிங் போனேன். திருநெல்வேலியில் வேலை கிடைச்சது. ரெண்டு வருஷம் கழிச்சு கல்யாணத்துக்கு அப்புறம் தண்டலத்துக்கு வந்தேன். 25 வருஷம் ஆயிடுச்சு. இப்போ என்னோட சொந்தபந்தம், நல்லது கெட்டது எல்லாமே இந்த ஊரும் எங்க ஆஸ்பத்திரியும்தான். கிட்டத்தட்ட 800 பிரசவத்துக்கு மேல பார்த்திருக்கேன்.

நர்ஸம்மா (எ) லட்சுமி

எந்த நேரமும் தயாரா இருக்கணும். பேப்பர் பொறுக்கிக்கிட்டு இருப்பாங்க. 'நர்ஸம்மா வயிறு வலிக்குது’ன்னு வந்து திண்ணையில உட்காருவாங்க.. உடனே பிரசவமாயிடும். ஊர் தெரியாது; பேர் தெரியாது; எதுவும் தெரியாது. உயிரைக் காப்பாத்துற வேலை. அது மட்டும்தான் எனக்குத் தெரியும்'' என்று சொல்லும் லக்ஷ்மியின் பணிகளில் முக்கியமானது நரிக்குறவர்களைத் தேடிச்சென்று பணியாற்றுவது.

''நான் இந்தக் கிராமத்துக்கு வந்த புதுசுல இங்கே நரிக்குறவர்கள் யாரும் கிடையாது. இருபது வருஷத்துக்கு முந்திதான் பக்கத்துல இருக்கிற காரந்தாங்கல்ல நரிக்குறவர்களுக்குனு அரசு பட்டா போட்டு வீடு கட்டிக் கொடுத்துச்சு. அந்தப் பக்கமாப் போறப்ப அவங்களுக்கு ஏதாவது செய்யணும்னு தோணும். அவங்ககிட்டப் போய் பேச ஆரம்பிச்சேன். 'சுத்தமா இருக்கணும்; பிள்ளைங்களைப் படிக்க அனுப்பணும்’னு சொன்ன என்னை தொடக்கத்துல அவங்க ஏத்துக்கலை. அப்புறம், அவங்க பிள்ளைங்களுக்கு சாக்லேட், கடலை மிட்டாய்னு தினமும் ஏதாவது வாங்கிக்கிட்டுப் போக ஆரம்பிச்சேன். முதல்ல பிள்ளைங்க தோஸ்த் ஆனாங்க. அப்புறம் அவங்களைப் பெத்தவங்களும் தோஸ்த் ஆயிட்டாங்க. குறத்திக்கு குறவன்தான் பிரசவம் பார்க்கணும்கிறது அவங்க குலவழக்கமாம். யாருமே ஆஸ்பத்திரிப் பக்கம் வர மாட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பிச்சாங்க. பிள்ளைகளுக்குத் தடுப்பு ஊசிப் போட்டுக்க வந்தாங்க. இப்ப நிறையவே மாறிக்கிட்டு இருக்காங்க'' என்கிற லக்ஷ்மிக்கு 2008-ல் கன்டெய்னர் லாரி மோதியதில் ஏற்பட்ட விபத்தினால், இடது கை, வலது கண் மற்றும் கழுத்து போன்றவை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.

நர்ஸம்மா (எ) லட்சுமி

''தர்மம் தலை காக்கும்கிறது என் விஷயத்துல நூத்துக்கு நூறு உண்மை. ஊர்லேர்ந்து வந்த என் தம்பியை வழியனுப்ப பஸ்ஸுக்காக நின்னுட்டு இருந்த என் மேலே எங்கிருந்தோ வந்த கன்டெய்னர் லாரி மோதுச்சு. என் கழுத்துல நிறைய நகை போட்டிருந்தேன். ஊர்லேர்ந்து வந்திருந்த என் தம்பி சூட்கேஸ்லேயும் கல்யாணச் செலவுக்காக 3 லட்சம் ரூபாய் பணம் இருந்துச்சு. அடிபட்டுக் கிடந்த என்னை சென்னைக்குக் கொண்டுபோய் சேர்த்ததோட, எல்லா பணம், நகைகளையும் சேகரிச்சு வீட்டுல பத்திரமா ஒப்படைச்சாங்க. லட்சக்கணக்குல ஆஸ்பத்திரி செலவானப்ப ஆளாளுக்கு அஞ்சாயிரம், பத்தாயிரம்னு அவங்களால முடிஞ்சதைக் கொடுத்தாங்க. நான் சீக்கிரமா குணமாகணும்னு எங்க ஊர் கோயில்ல பாலாபிஷேகம், சர்ச்சுல பிரார்த்தனை எல்லாம் நடந்துச்சுன்னா பார்த்துக்கங்களேன்'' என்று சொல்லும் லக்ஷ்மியின் வார்த்தைகளில் அவ்வளவு உருக்கம்!

நர்ஸம்மா (எ) லட்சுமி

''நர்ஸம்மாவைப் பேட்டி எடுக்க வந்திருக்கீங்களா? அவங்களைப் பத்தி எங்கக்கிட்ட கேளுங்க; நாங்க சொல்றோம்'' என்று வந்தார் தன்னுடைய இரண்டு வயதுக் குழந்தைக்குத் தடுப்பு ஊசி போட வந்திருந்த கலா.

''பத்து வருஷத்துக்கு முந்தி வரைக்கும் ஒரு பஸ்கூட இங்க நிக்காது. அப்படின்னா அவசரம், ஆபத்துக்கு எங்கே போறது? ஒரே தெய்வம் எங்க நர்ஸம்மாதான். நடுராத்திரி ரெண்டு மூணு மணியானாலும் வீட்டுக் கதவைத் தட்டினா, உடனே ஓடி வருவாங்க. தண்டலம், செட்டிப்பேடு, இருங்காட்டுக்கோட்டை, நெமிலி , காரந்தாங்கல், கீவலூர்னு பக்கத்து ஊர்க்காரங்களுக்கும் நர்ஸம்மாதான் எல்லாத்துக்கும். காலத்துக்கும் இவங்களுக்கு நாங்க  கடமைப்பட்டிருக்கோம்'' என்கிறார் கலா நெகிழ்ச்சியோடு.

''எங்களுக்கு ஒழுங்கா புடவைக் கட்ட சொல்லித்தந்ததே நர்ஸம்மாதான். 'பீடா, பான் மசாலா எல்லாம் போடக் கூடாது. அப்படி போட்டா, தாய்ப்பால் மூலமா குழந்தைக்கு எல்லா நோயும் வரும்’னு நர்ஸம்மாதான் சொல்லிக்கொடுத்துச்சு. அதாலதான் கஷ்டமில்லாமப் பிரசவம் ஆச்சு'' என்கிற வேளாங்கண்ணி நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்.

இப்படி ஊர் மெச்சும் லட்சுமியின் வாழ்வில் ஒரு சோகம் உண்டு. அது... ஊருக்கே பிரசவம் பார்க்கும் இவருக்கு குழந்தை இல்லை என்பது. ஆனால், அந்தச் சோகத்தின் வலி லக்ஷ்மியின் முகத்தில் துளியும் தெரியவில்லை. ''ஊர்ப் பிள்ளைங்க எல்லாம் நம்ம பிள்ளைங்கதானே?'' என்கிறார் முக மலர்ச்சியோடு!

நர்ஸம்மா (எ) லட்சுமி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism