Published:Updated:

மாத்திரைகளும்... நம்பிக்கையும்...

மாத்திரைகளும்... நம்பிக்கையும்...

மாத்திரைகளும்... நம்பிக்கையும்...

மாத்திரைகளும்... நம்பிக்கையும்...

Published:Updated:
மாத்திரைகளும்... நம்பிக்கையும்...

ருணை இன்றித் தாக்கிய 'தானே’ புயலில், வேரோடு பிடுங்கி எறியப்பட்ட பலா, முந்திரி மரங்கள் அனைத்தும் விறகாகிப்போன சோகம் ஒருபுறம்; பெருமழை கொண்டுவந்து சேர்த்த வியாதிகள் மறுபுறம் என விரக்தியின் விளிம்பில் நிற்கும் கடலூர் மாவட்ட மக்களைக் கரை சேர்க்கும் முயற்சியாகக் களப்பணி ஆற்றிவருகிறது விகடன் தானே துயர் துடைப்பு அணி!

அந்த வரிசையில், தானே புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கிராமங்கள்தோறும் 'மருத்துவ முகாம்’கள் நடத்தி மக்களின் ஆரோக்கியம் காத்துவருகிறது டாக்டர் விகடன். பத்திரக்கோட்டையில் ஆரம்பித்த இந்தப் பயணம் அரசடிக்குப்பம் புதூர், செம்மங்குப்பம், சன்னியாசிப்பேட்டை, தாழம்பட்டு, ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராமங்களைக் கடந்து பெரியகாட்டுப்பாளையம் வந்து சேர்ந்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பண்ருட்டி நகரத்தில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரிய காட்டுப்பாளையம் கிராம மக்களில் பெரும்பான்மையோர் கூலி விவசாயிகள். கிராமத்தின் வாழ்வாதாரத்தை ஒட்டுமொத்தமாக வழித்து எறிந்துவிட்டுப்போன கோரப் புயல், கூடவே வியாதிகளையும் விதைத்துவிட்டுச் சென்றிருப்பதைக் காண முடிந்தது.

கடந்த ஜூன் 2ம் தேதி,  பெரிய காட்டுப்பாளையம்  கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், டாக்டர் விகடன் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

''குப்புறத் தள்ளிவிட்ட குதிரை, குழியும் பறிச்ச கதையாப்போச்சு எங்க நிலைமை. அன்னாடம் கூலி வேலை பாத்து அரை வயித்துக் கஞ்சியாவது நிம்மதியாக் குடிச்சிட்டு இருந்தோம். இந்தப் புயல் மழை வந்து எங்க பொழப்புல மண் அள்ளிப் போட்டதும் இல்லாம, காய்ச்சல், சளி, வயித்துப்போக்குன்னு நோய் நொடியையும் பரப்பிவிட்ருச்சு. ஆசுபத்திரி போகணும்னா பண்ருட்டிக்குத்தான் பஸ் புடிச்சுப் போய்ட்டு வரணும். சாப்பாட்டுக்கே வழியில்லாம நிக்கிற நேரத்துல, மருந்து மாத்திரை செலவுக்கு என்ன பண்ணுறதுனு வீட்லயே இருமிக்கிட்டுக் கெடந்தோம். இப்படி ஒரு இக்கட்டுல எங்க ஊருக்கே டாக்டர்களைக் கூட்டியாந்து மருத்துவம் பாத்து மருந்து மாத்திரை கொடுக்குற உங்களுக்கு ரொம்ப நன்றி'' என்று நெகிழ்ந்தனர் கிராம மக்கள்.

மதிய வேளையில் முகாம் நடைபெற்ற இடத்தில் திடீர் பரபரப்பு. 70 வயதான கல்யாணி பாட்டி வீட்டில் திடீரென்று கீழே விழுந்து மயங்கிச் சரிய.... அவரை நாற்காலியில் உட்காரவைத்த நிலையிலேயே முகாமுக்குத் தூக்கிக்கொண்டு ஓடி வந்தனர் அவருடைய உறவினர்கள். எலும்பு மருத்துவப் பிரிவில் சிகிச்சை பெறக் காத்திருந்த மக்கள் கல்யாணிப் பாட்டியின் நிலையைக் கண்டு வழிவிட, மருத்துவக் குழு உடனடியாக கல்யாணிப் பாட்டியின் ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்து ''பாட்டிக்கு பெரிய அளவில் எந்தப் பாதிப்பும் இல்லை. ரத்த அழுத்தம் அதிகமாகி மயங்கி விழுந்திருக்கிறார். மருத்துவமனைக்கு அழைத்து வாருங்கள், அவருக்கு வேறு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்கலாம்'' என்று நம்பிக்கை அளித்தது.  

பொது மருத்துவம், இதயம், எலும்பு, மகப்பேறு, குழந்தை மருத்துவம், தோல், காது-மூக்கு-தொண்டை, கண் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த புதுவை பிம்ஸ் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் சுமார் 500 பேர் வரையிலும் முகாமில் கலந்துகொண்டு சிகிச்சைப் பெற்றனர். இவர்களில் 110 பேருக்கு மேல்சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டது. முகாமில் பங்கேற்றவர்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன. இதற்கான உதவியை சென்னை மடிப்பாக்கம் பிரபா மெடிக்கல்ஸ் உரிமையாளர்கள் ஆர்.நெடுஞ்செழியன், என்.பிரபாகரன் ஆகியோர் நம்முடன் இணைந்து செய்திருந்தனர்.

''மனுஷனுக்கு மருந்து மாத்திரை பாதித் தெம்பைத் தருதுன்னா, நம்பிக்கைதான் மீதித் தெம்பைத் தரும்னு சொல்வாங்க. எங்க ஊர் சனங்களுக்கு புதுத் தெம்பையும் தைரியத்தையும் தந்திருக்கு டாக்டர் விகடன் மருத்துவ முகாம்'' என நம் கைகளைப் பிடித்து நன்றி பாராட்டினார் ஊராட்சித் தலைவர் ராமகிருஷ்ணன்.

அந்தக் கிராம மக்களின் நெகிழ்வும் அன்பும் அந்தக் கரங்களின் இறுக்கமான பிடியில் தெரிந்தது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism