Published:Updated:

உற்சாக நீச்சல்... உள்ளுக்குள் காய்ச்சல்!

பயம் நீக்கும் 'தடதட' ரிப்போர்ட்

உற்சாக நீச்சல்... உள்ளுக்குள் காய்ச்சல்!

பயம் நீக்கும் 'தடதட' ரிப்போர்ட்

Published:Updated:
##~##

சுட்டெரிக்கும் கோடையில் நகரவாசிகளின் ஒரே ஆறுதல்... நீச்சல் குளங்கள். ஆனால், பலரும் ஒரு சேரக் குளிக்கும் நீச்சல் குளங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுகின்றனவா? அங்கு சுத்தமும் சுகாதாரமும் எப்படி? 

கிண்டியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நீச்சல் குள வளாக விளையாட்டு அலுவலர் வாழ்வீமராஜா இதற்குப் பதில் சொல்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'குளத்தில் தண்ணீர் நிரப்பியதும் குளோரின் கலப்போம். இதனால் தண்ணீரில் இருக்கும் கிருமிகள் அழிந்துவிடும். வாரத்துக்கு இருமுறை 'டி.சி.சி.ஏ.90’ (Trichloroisocyanuric acid)  என்ற ரசாயனப் பொடியைத் தூவுவோம். இந்த ரசாயனம், தண்ணீரில் உள்ள பாசிகளை அழிப்பதோடு, தண்ணீரின் மேல் ஒரு படலமாகப் பரவிவிடுவதால், வெப்பத்தினால் தண்ணீர் ஆவியாகும் அளவைக் குறைக்கிறது. அளவு குறையும் சமயங்களில் புதுத் தண்ணீரை குளத்துக்குள் பாய்ச்சும்போது, தண்ணீர் முழுவதும் பச்சை நிறத்துக்கு மாறிவிடும். அந்தச் சமயத்தில் படிகாரத்தைத் தண்ணீருக்குள் போடுவோம். 24 மணி நேரத்தில் குளத்தில் உள்ள தூசிகள் தண்ணீரின் அடியில் தங்கிவிடும். அதை சக்ஷன் (Suction) என்ற கருவியைப் பயன்படுத்தி உறிந்து எடுப்போம். குளத்தில் உள்ள தண்ணீர் மறுசுழற்சி முறையில் சுத்தப்படுத்தப்படுகிறது. அதாவது, குழாய் வழியாகத் தண்ணீர் மறுசுழற்சி நடைபெறும் தொட்டிக்குச் செல்கிறது. அந்தத் தொட்டியின் அடியில் கூழாங்கற்களும் அவற்றுக்கு மேலே மணலும் இருக்கும். தண்ணீரில் உள்ள தூசி மணலில் தங்கிவிடும். சுத்தமான நீர் கூழாங்கற்கள் வழியாகக் குழாய் மூலம் மறுபடியும் குளத்துக்கே வந்துவிடும்'' என்றார்.  

உற்சாக நீச்சல்... உள்ளுக்குள் காய்ச்சல்!

நட்சத்திர விடுதிகளில் குளங்கள் பராமரிக்கப்படும் விதத்தை விவரிக்கிறார் சென்னை அம்

உற்சாக நீச்சல்... உள்ளுக்குள் காய்ச்சல்!

பாசிடர் பல்லவா ஹோட்டலின் ஹவுஸ்கீப்பிங் டெபுடி மேனேஜர் சுபஸ்ரீ. 'படிகாரக் கல் தொடங்கி சக்ஷன் கருவி வரை பயன்படுத்தி நாங்கள் தண்ணீரைத் தூய்மைப்படுத்துவோம். பிறகு, காப்பர் சல்பேட் பவுடரைக் குளத்தில் தூவுவோம். இதனால் நோய்க் கிருமிகள் வளர்வது தடுக்கப்படுகிறது. இந்த காப்பர் சல்பேட் பவுடர்தான் தண்ணீருக்கு ஊதா நிறத்தை அளிக்கிறது. குளத்தில் இருக்கும் தண்ணீர் 24 மணி நேரமும் மறுசுழற்சி மூலம் சுத்தமாகும் வகையில் 'கேன்டிடேட் ரீசைக்கிளிங் சிஸ்டம்’ (Candidate Recycling system) செயல்படுத்தப்படுகிறது. இதனால் நீச்சல் குளத்தில் இருக்கும் தண்ணீர் ஃபில்டருக்குச் சென்று தூய்மையாகி மறுபடியும் குளத்துக்கே வந்துவிடும்' என்கிறார் சுபஸ்ரீ.

குளங்களைப் பராமரிப்பவர்கள் இப்படி எல்லாம் சொன்னாலும், சுகாதாரப் பிரச்னைகள் நிறைய இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள் மருத்துவர்கள்.

'தண்ணீரில் உள்ள வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுகளின் காரணமாகத்தான் பல்வேறு நோய்கள் உண்டாகின்றன. குடித்தாலும் குளித்தாலும் தண்ணீர் விஷயத்தில், மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்' என்று சொல்லும் சென்னை மாநகராட்சிப் பொது சுகாதாரத் துறையின் இணை இயக்குநர் டாக்டர் ஏ.கணேசன், 'நீச்சல் குளங்கள் அமைந்திருக்கும் இடங்களில் பாத்ரூம், டாய்லெட் போன்றவை கட்டாயம் இருக்க வேண்டும். நன்றாகக் குளித்த பிறகே குளத்துக்குள் இறங்க வேண்டும். ஏற்கெனவே பயன்படுத்திய உள்ளாடையுடன் ஒருவர் இறங்கினால்கூட, உள்ளாடையில் இருக்கும் கிருமிகள் தண்ணீர் வழியாக மற்றவர்களுக்கும் பரவக்கூடும். இதேபோல, சருமப் பிரச்னை உள்ளவர்கள், தொற்று நோயாளிகள் நீச்சல் குளத்தில் இறங்கினாலும், அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் அந்தப் பாதிப்புகள் பரவக்கூடும்'' என்கிறார்.

சென்னை, ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையின் சரும சிகிச்சை நிபுணரான பிரியவதனி, 'வெயில் நேரத்தில் குளிக்கும்போது தண்ணீரின் மீது சூரிய ஒளி நேரடியாகப்பட்டு பிரதிபலிக்கிறது. இப்படிப் பிரதிபலிக்கப்படும் சூரிய ஒளியில் உள்ள புறஊதாக் கதிர்கள் சருமத்தின் மீது அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, வெயில் நேரத்தில் குளிக்கும்போது சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது. நீச்சல் குளத்தில் கலக்கப்பட்டு உள்ள குளோரின் சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தொடர்ந்து நீச்சல் குளத்தில் குளிக்கும்போது தலைமுடியின் நிறம் மாறலாம். எனவே, நீச்சல் குளத்தில் குளித்து வெளியே வந்ததும் உடனடியாக நல்ல தண்ணீரில் குளித்தாலே பெரும்பாலான பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்' என்கிறார் நம்பிக்கையூட்டும் விதமாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism