Published:Updated:

ஹலோ மாப்பிள்ளை... கல்யாணத்துக்கு ரெடியா?

ஹலோ மாப்பிள்ளை... கல்யாணத்துக்கு ரெடியா?

ஹலோ மாப்பிள்ளை... கல்யாணத்துக்கு ரெடியா?
##~##

ப்படி ஒரு காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள். திருமணம் உறுதி செய்வதற்கு முன்பாகப் பேச்சுவார்த்தை நடக்கிறது. இரு தரப்புக்கும் சம்மதம். எல்லா விஷயங்களையும் பேசி முடித்துவிட்டுப் பெரிய மனிதர் ஒருவர் மெள்ளக் கேட்கிறார். ''பெண் வீட்டாருக்குப் பூரண சம்மதம். மாப்பிள்ளைப் பையனுடைய மெடிக்கல் ரிப்போர்ட்டைக் கொடுத்தீங்கன்னா, இவங்களும் பெண்ணோட மெடிக்கல் ரிப்போர்ட்டைக் கொடுத்துடுவாங்க. அதுக்குப் பிறகு நடக்க வேண்டிய சுப காரியங்களை நல்ல நாள் பார்த்து வேகமாக முடிச்சுடலாம்...'' 

என்ன... இப்படி எல்லாம் நடக்குமா என்று பிரமிப்பாக இருக்கிறதா? நடக்கும். கூடிய சீக்கிரம் எல்லாமே நடக்கும். கல்யாணத்துக்கு முன்னர் மாப்பிள்ளையின் ஆரோக்கியம் பற்றி மற்றவர்கள் தெரிந்துகொள்வது இருக்கட்டும். மாப்பிள்ளையே தெரிந்துகொள்வது ரொம்ப முக்கியம் தெரியுமா?

திருமணத்துக்குத் தயாராகுங்கள்

புதுத் துணிகள் வாங்குவது, பியூட்டி பார்லருக்குப் போவது, பல் மருத்துவரிடம் சென்று பற்களை வெண்மையாக்கிக்கொள்வது என்று திருமணம் நிச்சயமான உடன் பல மாப்பிள்ளைகள் சுறுசுறுப்பாகி

ஹலோ மாப்பிள்ளை... கல்யாணத்துக்கு ரெடியா?

விடுவார்கள். ஆனால், இவற்றை எல்லாம்விட மணக்கப்போகும் புதுப்பெண் மற்றும் இவர்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆகியோரின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு அந்த மாப்பிள்ளை தன்னைப் பல விதங்களிலும் தயார்ப்படுத்திக்கொள்வது அவசியம். மாப்பிள்ளைகள் தயாராக வேண்டிய முக்கியமான ஐந்து விஷயங்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள் சென்னை மருத்துவர் கருணாநிதியும் கோவை மருத்துவர் மான்டிசோரியும்.

பெண் உலகம்: ஓர் அறிமுகம்

நம் சமூகத்தில் கணவன் - மனைவி வாழ்க்கையைப் பற்றி பள்ளியிலோ, கல்லூரியிலோ யாரும் கற்றுத்தருவது இல்லை. வீடுகளில் அவரவர் தாய்-தந்தையைப் பார்த்துத்தான் ஆரம்பிக்கின்றன ஓர் ஆணின் புரிதல்கள். இன்றைய தம்பதிகள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னை... வேலையைப் பகிர்ந்துகொள்ளுதல். கடந்த தலைமுறை வரை ஆண்களுக்கு வெளிவேலை, பெண்களுக்கு வீட்டு வேலை என்பது வரையறுக்கப்பட்டு இருந்தது. இப்போது அப்படி அல்ல. பெரும்பாலும் இருவருமே வெளியே வேலைக்குச் செல்லும்போது வீட்டு வேலை பெண்களுக்கு மட்டுமானது என்பது எப்படிச் சரியாகும்? தன் மனைவி ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவே இருந்தாலும், தனக்குச் சமைத்துவைத்துவிட்டுத்தான் வேலைக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணம் ஆண்களின் மரபணுக்களிலேயே எழுதப்பட்டு இருக்கிறது.  வேலையைப் பகிர்ந்துகொள்வதில் ஏற்படும் சிக்கலே குடும்ப வாழ்வின் மீது விழும் முதல் அடியாகிறது. ஒரு பெண் என்பவள் யார், அவளுக்கு உள்ள உரிமைகள் என்ன, அவளை எப்படி அணுக வேண்டும், ஒரு குடும்பத்தில் ஆணின் பங்கு என்ன... இப்படி ஒரு குடும்ப வாழ்க்கைக்கு மனதளவில் தயாராவதே ஓர் ஆண் திருமண வாழ்வை நோக்கி எடுத்துவைக்கும் முதல் அடி!

உடலினை உறுதி செய்!

மணமாகும் ஓர் ஆணுக்குக் குறைந்தபட்சம் 25 வயது பூர்த்தியாகி இருப்பது சிறந்தது. அப்போதுதான் மனமும் உடலும் சரியான முதிர்ச்சி பெற்றிருக்கும். உயரத்துக்கு ஏற்ற எடையை பெற்றிருப்பது நல்ல உடல்நிலைக்கு அறிகுறி. ஏனென்றால், மிக அதிகமான உடல் பருமன் கொண்ட ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவாக இருப்பதற்கான சாத்தியங்கள் மூன்று மடங்கு அதிகம். பிறப்பு உறுப்பு

ஹலோ மாப்பிள்ளை... கல்யாணத்துக்கு ரெடியா?

விறைப்படைவதில் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இரண்டு மடங்கு அதிகம். அதேசமயம், மிகவும் மெலிந்து காணப்படும் ஆண்களுக்குச் சத்துக் குறைபாடுகள் ஏற்பட்டு, உடலுறவின் மீது ஆர்வக் குறைவும் முழுமையாகத் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாத நிலையும் ஏற்படலாம். எனவே, மாப்பிள்ளையாகப் போகிறவர் சரியான எடை கொண்டவராக இருப்பது அவசியம். உடல் எடைச் சுட்டி (பாடி மாஸ் இண்டெக்ஸ்) 23 முதல் 25-க்குள்ளாக இருப்பதும் இடுப்புச் சுற்றளவு 35 அங்குலத்துக்குள்ளும் இருப்பது நல்லது. சமச்சீர் உணவுப்பழக்கமும் முறையான உடற்பயிற்சியும் வலுவான உடலைப் பெற கை கொடுக்கும்!

புகை தாம்பத்தியத்துக்குப் பகை

திருமணத்துக்குத் தயாராகும் ஒருவருக்குப் புகைப் பழக்கம் இருக்கவே கூடாது. தப்பித் தவறி இருந்தால், அதை உடனடியாக நிறுத்திவிட வேண்டும்.  

சிகரெட்டில் நிகோடின் என்கிற நச்சுப்பொருள் மட்டுமே இருப்பதாக பலரும் நினைக்கிறார்கள். ஆனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நச்சுப்பொருட்கள் அதில் உண்டு. குறிப்பாக, நிகோடினைவிடக் கொடியது புகை இலையில் இருக்கும் பெஞ்சோபைரின்(Benzopyrene). புற்றுநோயைத் தாம்பூலத்தட்டு வைத்து அழைக்காத குறையாக வரவேற்கும் நச்சுப் பொருள் இது.

பொதுவாக, புகை பிடிப்பவர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டு, ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். நுரையீரல் பாதிக்கப்பட்டாலே ஒருவரது அத்தனை நடவடிக்கையிலும் வேகம் குறைந்துவிடும். மூச்சு விடவே சிரமப்படுவார்கள். இப்படிப்பட்ட சூழலில் தாம்பத்தியம் என்னவாகும்? புகை போன்ற நச்சுப் பொருட்கள் பெரும்பாலும் குறிவைப்பது நரம்பு மண்டலத்தைத்தான். ஆண் குறி விறைப்பதுதான் பாலியல் உறவுக்கு அடிப்படை. நரம்புகளின் செயல்பாடுதான் இதற்கு அடிநாதம். நரம்புகளைப் புகையின் நச்சுப் பொருட்கள் பாதிக்கும்போது, ஆண் குறி விறைப்பதும் பாதிக்கப்படும். விந்தணுக்களின் டி.என்.ஏ. அமைப்பையேகூட புகைப் பழக்கம் பாதிக்கும். உடல் உறவின் மீது உள்ள ஆர்வத்தையும் சிகரெட் குறைக்கக் கூடும். மணமான பின் மனைவிக்கு உருவாகும் கரு கலைவதற்கான சாத்தியக் கூறுகளும் அதிகமாகும்!

மது எமன்

திருமணத்துக்கு முன்பே குடிநோயால் பாதிக்கப்படும் ஆண்கள் பாலுறவுக்கே தகுதி இல்லாத நபர்கள்

ஹலோ மாப்பிள்ளை... கல்யாணத்துக்கு ரெடியா?

என்றால் நீங்கள் அதிர்ச்சி அடையலாம். ஆனால், அதுதான் உண்மை. கணையம், கல்லீரல், இரைப்பை... இப்படி எல்லாவற்றையும் வேட்டையாடும் ஆல்கஹால் ஆணின் விந்தணுக்களை மட்டும் விட்டுவைக்குமா என்ன? ஆண் தன்மைக்கு மிகவும் தேவையான ஒன்று டெஸ்டோஸ்டிரான் (Testosterone) ஹார்மோன். இவற்றை உற்பத்தி செய்து, சரியான வடிவம் கொடுக்கும் பணியை மேற்கொள்வது கல்லீரல்தான். கல்லீரலே காலியாகும்போது எங்கு இருந்து வரும் டெஸ்டோஸ்டிரான்? டெஸ்டோஸ்டிரான்கள் உற்பத்தி ஆகவில்லை என்னும்போதுதான், 'டாக்டர் எனக்கு ஆண் உறுப்பில் விறைப்புப் பிரச்னை இருக்கிறது’ என்ற புகாருடன் புது மாப்பிள்ளைகள் வருகிறார்கள். இப்படிப் பாலுறவின் அடிப்படையான ஆண் உறுப்பு விறைப்பதில் தொடங்கும் பிரச்னை எதுவரை செல்லும் தெரியுமா? விந்து முந்தும் பிரச்னையை ஏற்படுத்தும், விந்தணுக்களை நீர்த்துப்போகச் செய்யும், விந்தணுக்களை வீரியம் இழக்கச் செய்யும், மலட்டுத்தன்மையை உருவாக்கும்.

இப்படி உடல் ரீதியான பிரச்னைகள் ஒருபக்கம். இந்தப் பிரச்னையால் கணவரும் திருப்தி அடையமாட்டார்; மனைவிக்கும் அப்படியே. இதற்கிடையே மதுவின் சாபத்தால் அந்தக் கணவரின் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு, ஆளுமைக் கோளாறு ஏற்பட்டு இருக்கும். தன்னால் திருப்திப்படுத்த முடியவில்லை என்ற தாழ்வுமனப்பான்மை மனைவியைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கச் சொல்லும். வார்த்தைகள் தடிக்கும். வாழ்க்கை கசக்கும். ஒருகட்டத்தில் மண வாழ்க்கையை மதுவே முறித்துப்போடும்!

மண வாழ்வை வீழ்த்தும் மன அழுத்தம்

ஹலோ மாப்பிள்ளை... கல்யாணத்துக்கு ரெடியா?

மண வாழ்க்கைக்கு முந்தைய ஓர் ஆணின் உலகமே தனி. ஆனால், அந்த உலகில் ஒரு பெண் நுழையும்போது, கூடுதலாக ஒரு நபர் மட்டும் நுழைவது இல்லை; இன்னோர் உலகமே இணைகிறது. பல புதிய பொறுப்புகள் தோன்றுகின்றன. ஏற்கெனவே உள்ள பொருளாதாரரீதியிலான தேவைகள் அதிகரிக்கும் அதே வேளையில், மறுபுறம் தன்னுடைய வேலை நேரத்தையும் மண வாழ்க்கைக்காகக் குறைத்துக்கொள்ளும் நிலைக்கு ஆண் தள்ளப்படுகிறான். விளைவு... மன அழுத்தம்!

மன அழுத்தம் தாம்பத்திய வாழ்க்கையின் மோசமான எதிரி. மனைவியுடனான பகிர்தல்களை, அந்நியோன்யத்தை, உடல் உறவின் ஆர்வத்தை, செயல்படும் திறனை... எல்லாவற்றையுமே அது குறைக்கும்.  வாழ்வின் சந்தோஷத்தையும் குலைத்துப் போடும். ஆரோக்கியமான உணவும் உடற்பயிற்சியும் ஓர் ஆணுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு மன அமைதியும் முக்கியம். எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். தவிர, புத்தக வாசிப்பு, நல்ல இசை, யோகா, தியானம், பிரார்த்தனை எனத் தனக்கு விருப்பமான விஷயத்துக்கு குறைந்தது ஒரு மணி நேரமேனும் ஒதுக்க வேண்டும். இதற்கேற்ப தன்னுடைய ஒவ்வொரு நாளையும் நிர்வகிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

முக்கியமாக ஒரு கணவனாக நிறைய தயாராக வேண்டும் என்பதை உணர வேண்டும்!

 பரிசோதனைகளைக் கட்டாயமாக்க வேண்டும்!

ஹலோ மாப்பிள்ளை... கல்யாணத்துக்கு ரெடியா?

எம்.ரவி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்

''திருமணத்துக்கு முன்பே மாப்பிள்ளையும் பெண்ணும் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம், உடல் குறைபாடுகள் ஏதாவது இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்வதுபற்றி முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கலாம். அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் திருமணத்தைத் தவிர்க்கவும் வாய்ப்பு கிடைக்கும். திருமணங்கள் அனைத்தையும் பதிவு செய்யவேண்டும் என்பது சமீபத்தில் கட்டாயமாக்கப்பட்ட பிறகு ஏறக்குறைய அனைத்துத் திருமணங்களும் பதிவுசெய்யப்படுகின்றன அல்லவா? அதேபோல, உடல் மற்றும் மன நலப் பரிசோதனைகளையும் சட்டப்படி கட்டாயமாக்க வேண்டும்.''

 என்னென்ன பரிசோதனைகள்?

வருங்கால மாப்பிள்ளை திருமணத்துக்கு முன்னர் அப்படி என்னதான் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும்?

வழக்கமான உடல் பரிசோதனை, ஹெச்.ஐ.வி. பரிசோதனை, 'ஹெபடைடிஸ்  பி’ வைரஸ் பாதிப்பைக் கண்டறியும் ஹெச்பிஎஸ் ஏஜி(HBsAg) பரிசோதனை, ஹீமோகுளோபின் பரிசோதனை, செமன் அனாலிஸிஸ் எனப்படும் விந்தணுப் பரிசோதனை மற்றும் பீனைல் டாப்ளர் என்னும் ஆண்மை தொடர்பான பரிசோதனைகளை செய்யவேண்டும்!

அடுத்த கட்டுரைக்கு