Published:Updated:

செல்போன் கோபுரங்களின் மின்காந்த மிரட்டல்!

செல்போன் கோபுரங்களின் மின்காந்த மிரட்டல்!

செல்போன் கோபுரங்களின் மின்காந்த மிரட்டல்!
##~##

''செல்போன் டவரில் இருந்து வெளிப்பட்ட கதிர்வீச்சு காரணமாக என்னுடைய மகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டான். எனவே, எங்கள் வீட்டு மாடியில் வைக்கப்பட்டிருக்கும் செல்போன் டவர் உள்பட, குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் செல்போன் டவர்களையும் அப்புறப்படுத்த வேண்டும்'' - டெல்லியைச் சேர்ந்த ராம்நாத் கார்க் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருக்கும் வழக்கு இது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு, டெல்லி மாநில அரசு மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனத்துக்கும் உத்தரவு பிறப்பித்து உள்ளது. 

செல்போன் டவரில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் சிட்டுக்குருவிகள் மட்டும்தான் அழிகின்றன என்று எண்ணி இருந்த மக்களின் முன்பு, இப்போது பலவிதமான குழப்பங்களும் சந்தேகங்களும் எழுந்து நிற்கின்றன.

இந்த நிலையில், செல்போன் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு பிரச்னைகுறித்து ஆராய்ந்து, ஆலோசனை வழங்க பலதுறைகளைச் சேர்ந்த மத்திய அமைச்சரக அதிகாரிகள் கொண்ட குழுவுக்கு மத்திய அரசு உத்தரவு போட்டிருந்தது. 'செல்போன் டவர்களில் இருந்து வெளிப்படும் எலக்ட்ரோ மேக்னடிக் கதிர்வீச்சின் தற்போதைய அளவை 10 மடங்கில் இருந்து ஒரு மடங்காகக் குறைக்க வேண்டும்'' என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை இந்தக் குழு அறிவுறுத்தியது.

செல்போன் கோபுரங்களின் மின்காந்த மிரட்டல்!

அதிகாரிகள் குழு கொடுத்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, தொலைத்தொடர்புச் சேவை வழங்கும் நிறுவனங்கள் இதை வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல், கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறது.  உத்தரவுகள் ஒரு பக்கம் இருக்கட்டும்... செல்போன் டவர் மற்றும் செல்போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகள் உண்மையிலேயே எத்தகையன என்பதை அறிய வேண்டாமா? மூளை நரம்பியல் வல்லுனர் கே.வி.கார்த்திகேயன் விளக்கமாகப் பேசுகிறார்.

'செல்போன் டவர் 'ரேடியோ ஃப்ரீக்வன்சி ஆற்றலை’ வெளியிடுகிறது. இது உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத 'நான்-ஐயனைசிங் எலக்ட்ரோமேகனடிக்’ கதிர்வீச்சு. செல்போன் கதிர்வீச்சின் பாதிப்பு என்பது ஒருவர் பயன்படுத்தும் உபகரணம், எவ்வளவு நேரம் உபயோகப்படுத்துகிறார், எவ்வளவு தூரத்தில் வைத்துப் பயன்படுத்துகிறார், செல்போன் டவரில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்பனவற்றைப் பொருத்தது.

செல்போன் கோபுரங்களின் மின்காந்த மிரட்டல்!

இந்த ரேடியோ ஃப்ரீக்வன்சி ஆற்றல் மூலம் ஏற்படும் விளைவு உடலின் திசுக்கள் சூடாக்கப்படுவதுதான். இருப்பினும் செல்போனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் உடல் திசுக்கள் சூடாக்கப்படுவது இல்லை. சமீபத்தில் வெளியான ஆய்வுக் கட்டுரை ஒன்றில், 'செல்போனை 40-50 நிமிடங்களுக்கு ஒரே பக்கமாக வைத்துப் பேசும்போது, மூளையின் ஒரு பக்கத்தில் மட்டும் அதிக அளவில் குளுகோஸ் பயன்பாடு இருப்பதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னவாக இருக்கும் என்பதுபற்றி இன்னும் ஆராய்ச்சி நடந்துகொண்டுதான் இருக்கிறது. பொதுவாக மரபணுவில் (டி.என்.ஏ.) மாற்றம் ஏற்படும்போது அது புற்றுநோயாக மாறுகிறது. செல்போனில் இருந்து வெளிப்படும் ஆற்றலானது டி.என்.ஏ. அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான ஆதாரம் இல்லை. கிடைத்த குறைந்த ஆதாரங்களின் அடிப்படையில் புற்றுநோய்பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளும் உலக சுகாதார நிறுவனத்தின் துணை அமைப்பான பன்னாட்டுப் புற்றுநோய் ஆராய்ச்சி முனையம்         ( INTERNATIONAL AGENCY FOR RESEARCH ON CANCER), 'செல்போன் கதிர்வீச்சு மனிதனுக்குப் புற்றுநோயை ஏற்படுத்தலாம்’ என்று கூறியுள்ளது. புற்றுநோய் பாதிப்புக்கு அப்பால், சோர்வு, தூக்கப் பிரச்னை, கவனச் சிதறல், காதில் இரைச்சல், நினைவாற்றல் பாதிப்பு, தலைவலி, இதயத் துடிப்பு அதிகரித்தல் உள்ளிட்ட பிரச்னைகளும் ஏற்படலாம். இருப்பினும் செல்போன் பயன்பாட்டினை முடிந்தவரையிலும் குறைத்துக்கொள்வது நல்லது.

செல்போன் கோபுரங்களின் மின்காந்த மிரட்டல்!

ஏனென்றால், செல்போன் பயன்பாடு 2005-க்குப் பிறகுதான் அதிகரித்தது. இதற்குள்ளாக அதன் பாதிப்பை அறிந்துகொள்வது என்பது முடியாதது. முன்பு எல்லாம் செல்போன் மட்டுமே கதிர்வீச்சு வெளியிடும் கருவியாக இருந்தது. இன்று நவீன தொழில்நுட்ப வளர்ச்சியினால் லேப்டாப், டேப்லெட் என்று விதவிதமான கருவிகள் வந்துவிட்டன. அவற்றைக் கை அருகிலேயே வைத்திருக்கிறோம். இதனால்

செல்போன் கோபுரங்களின் மின்காந்த மிரட்டல்!

இப்போதைக்கு இல்லை என்றாலும் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படலாம். எனவே, தொலைபேசி இல்லாத நேரத்தில் மட்டும் செல்போனைப் பயன்படுத்துவது, அப்படிப் பயன்படுத்தும்போதும் ஹாண்ட் ஃப்ரீ கருவிகளைப் பயன்படுத்துவது போன்ற பழக்கங்களை ஏற்படுத்திக்கொண்டால் நல்லது என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான எஃப்டிஏ சொல்கிறது' என்கிறார் டாக்டர் கார்த்திகேயன்.

செல்போன் கதிர்வீச்சு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுவரும் ஐஐடி பம்பாய் எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் துறை பேராசிரியர் கிரிஷ் குமாரிடம் பேசினோம்.

'வாசற்கதவு, ஜன்னல் கதவுகளைச் சாத்துவதாலேயே செல்போன் கதிர்வீச்சினைத் தடுத்துவிடமுடியும் என்று நினைப்பது தவறு. செல்போன், செல்போன் டவர், வைஃபை, டி.வி. மற்றும் எப்.எம். டவர், மைக்ரோவேவ் அவன் போன்றவற்றில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சை எலக்ட்ரோமேக்னடிக் ரேடியேஷன் (ஈஎம்ஆர்) என்று சொல்கிறோம். மனிதன், விலங்கு, பறவை, தாவரம் மற்றும் சுற்றுச்சூழலில் குறிப்பிடத் தகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் ஆற்றல் இந்த கதிர்வீச்சுக்கு உண்டு. 4.2 கிலோவாட் (4200 வாட்) மைக்ரோவேவ் ஆற்றலானது ஒரு லிட்டர் நீரை ஒரு நொடியில் 1 டிகிரி செல்சியஸ்வரை வெப்பமடையச் செய்துவிடும். இதேபோல், 1 வாட் ஆற்றலை மட்டும் மைக்ரோவேவ் அடுப்பில் பயன்படுத்தும்போது (செல்போன் வெளிப்படுத்தும் கதிர்வீச்சின் அளவு) ஒரு லிட்டர் நீரை 1 டிகிரி செல்சியஸ் வரைச் சூடாக்க 500 விநாடிகள் தேவைப்படுகின்றன. காது மடல் பக்கத்தில் தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு செல்போனைப் பயன்படுத்திப் பேசும்போது ஒரு டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் அதிகரிக்கிறது. இதனால், 'அமெரிக்காவில் செல்போன் வெளியிடும் கதிர்வீச்சு அளவானது (எஸ்ஏஆர் வேல்யூ) 1.6 வாட்/கிலோகிராம் என்ற அளவில் இருக்கவேண்டும்’ என்று கட்டுப்பாடுகள் உள்ளன. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 18 முதல் 24 நிமிடங்கள் மட்டுமே செல்போனைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறான். ஆனால், இந்தத் தகவல் பெரும்பாலான இந்தியர்களுக்குத் தெரிவதில்லை. எனவே, 'உங்கள் மொபைலின் எஸ்ஏஆர் (Specific Absorption Rate) மதிப்பு என்ன?’ என்று தெரிந்துகொண்டு பயன்படுத்துவது அவசியம். அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ மாகாணத்தில் செல்போனின் எஸ்ஏஆர் மதிப்பு எவ்வளவு என்பதை வெளியிடுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது'' என்றவர், ''இந்தியாவிலும் செல்போன் கதிர்வீச்சைக் கட்டுப்படுத்தக் கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். கதிர்வீச்சின் பாதிப்பில் இருந்து தப்பிக்க மாற்றுவழிகள் பற்றி யோசிக்க வேண்டும்'' என்றார் உறுதியாக!

செல்போன் கோபுரங்களின் மின்காந்த மிரட்டல்!

 எப்படி செல் பேசுவது?

''செல்போன் பயன்படுத்தும்போது காது மடலில் வலி, காது சூடாதல் போன்ற பிரச்னைகள் ஏற்படக் கூடும். ஸ்வீடன் கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டின் ஆய்வின்படி 10 ஆண்டுகளுக்கும் மேலாக

செல்போன் கோபுரங்களின் மின்காந்த மிரட்டல்!

செல்போன் பயன்படுத்துவோரின் மூளைக்கும் உள்காதுக்கும் இடைப்பட்ட பகுதியில் 'வெஸ்டிபுலார் ஸ்வோனோமா’ என்ற கட்டி வருவதற்கு மூன்று மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதுவும் மிகமெதுவாக வளரக்கூடிய 'பினைன் டியூமர்’தான்' என்கிறார் காது-மூக்கு-தொண்டை மருத்துவர் திருநாவுக்கரசு. செல்போன் கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்க அவர் சொல்லும் டிப்ஸ் இது.

ஹேண்ட்ஸ் ஃப்ரீ பயன்படுத்துவதன் மூலம் ஓரளவு செல்போன் கதிர்வீச்சு பாதிப்புகளில் இருந்து தப்ப முடியும். ப்ளூடூத் ஹெட்போன்கள் கதிர்வீச்சை வெளியிட்டுக்கொண்டே இருப்பதோடு, காதில் இருந்து வாக்ஸ் வெளியேறுவதையும் தடுக்கும். எனவே, பேசாத நேரத்தில் ஹெட்போனைக் கழற்றி வைத்துவிடுங்கள்.

உங்கள் செல்போனின் சிக்னல் பாரில் சிக்னல் குறைவாகக் காட்டுகிறதா? செல்போனில் இருந்து சற்றுத் தள்ளியே இருங்கள். ஏனெனில், செல்போன் சிக்னலை முழுமையாகப் பெற அதிக அளவு கதிர்வீச்சை வெளிப்படுத்தும்.

குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை முடிந்த அளவு தடுத்திடுங்கள். செல்போனில் பேசும்போதுதான் அதிகக் கதிர்வீச்சு வெளிப்படுவதாகக் கூறுகின்றனர். எனவே, செல்லக் குழந்தைபோல் எந்த நேரமும் செல்போனைக் கொஞ்சாமல் முடிந்த மட்டும் பேச்சைக் குறையுங்கள்.

செல்போனில் பேசுவதைக் காட்டிலும் எஸ்.எம்.எஸ். அனுப்பும்போது குறைவான அளவு சக்தியையே செல்போன் பயன்படுத்துகிறது.

செல்போன் பேசும்போது மூளையின் செயல்பாடு சற்றே அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே ஒரே பகுதியில் போனை வைத்துப் பேசாமல் அவ்வப்போது மாற்றிமாற்றி வைத்துப் பேசுங்கள்.

தலையணைக்கு அடியில் செல்போனை வைத்துவிட்டுத் தூங்கும் பழக்கத்தைத் தவிர்த்துவிடுங்கள். உடலில் செயற்கைக் கருவிகள் ஏதேனும் பொருத்தியிருந்தால், குறிப்பிட்ட அந்தப் பகுதியில் இருந்து 30 செ.மீ. தூரத்துக்கு செல்போனைத் தள்ளியே வைத்திருங்கள்.

அடுத்த கட்டுரைக்கு