Published:Updated:

நோஞ்சான் இந்தியா!

நோஞ்சான் இந்தியா!

நோஞ்சான் இந்தியா!

நோஞ்சான் இந்தியா!

Published:Updated:
##~##

ந்தியா தன்னுடைய 66-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய வேளையில் வெளியான மோசமான செய்தி இது. நாட்டின் சுகாதாரத் துறையில், கிட்டத்தட்ட 75 சதவிகிதம் அளவுக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. அதுவும் அரசு மருத்துவத் துறையில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டு இருக்கிறது. 

மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் 2011-ம் ஆண்டுக்கான கிராமப்புறச் சுகாதாரப் புள்ளிவிவரத்தின்படி, மருத்துவர்கள் பற்றாக்குறை 76 சதவிகிதம். 1,09,484 பேர் தேவைப்படும் இடத்தில், 26,329 பேர்தான் இருக்கிறார்கள். சிறப்பு நிபுணர்கள் பற்றாக்குறை 88 சதவிகிதம். 58,352 பேர்  தேவைப்படும் இடத்தில், 6,935 பேர்தான் இருக்கிறார்கள். செவிலியர்கள் பற்றாக்குறை 53 சதவிகிதம். 1,38,623 பேர் தேவைப்படும் இடத்தில் வெறும் 65,344 பேர்தான் இருக்கின்றனர். பரிசோதனைக்கூடத் தொழில்நுட்ப வல்லுநர்கள் நிலையோ படுமோசம். தேவை 94,896; இருப்பது 18,429 பேர்தான். 81 சதவிகிதம் பற்றாக்குறை. ஏழைகளின் ஆபத்பாந்தவனான ஆரம்ப சுகாதார நிலையங்கள் பற்றாக்குறை 18 சதவிகிதம்; அரசு மருத்துவமனைகள் பற்றாக்குறை 34 சதவிகிதம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நோஞ்சான் இந்தியா!

ஒரு நாட்டின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதில், அங்கு நிலவும் வாழ்வதற்கான அடிப்படைச் சூழல் முக்கியமானது. வறுமை ஒரு பக்கமும் சுற்றுச்சூழல் கேடுகள் மறு பக்கமுமாகச் சேர்ந்து இந்தியாவில் வாழ்வதற்கான சூழலை மோசமாக்கி நீண்ட காலம் ஆகிவிட்டது. சுவாசிக்கப் புகையும் தூசியும் கலந்த காற்று, குடிக்க நச்சுத் தண்ணீர், சாப்பிட பூச்சிக்கொல்லியும் ரசாயனமும் கலந்த உணவு என்று விதிக்கப்பட்ட இந்தியர்களின் மருத்துவத் தேவைகள் அதிகம். ஆனால், மோசமான மருத்துவக் கட்டமைப்பையே நாம் பெற்று இருக்கிறோம்.

  ஒரு நாட்டில் வலுவான மருத்துவத் துறை இருக்க 10,000 பேருக்கு குறைந்தது 20 மருத்துவர்கள் இருக்க வேண்டும் என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். வளர்ந்த நாடுகளில் இந்த எண்ணிக்கை: பிரான்ஸ் 34; அமெரிக்கா 25; இங்கிலாந்து 23; கனடா 21. இந்திய அரசு 10,000 பேருக்கு ஐந்து மருத்துவர்கள் போதும் என்று நினைக்கிறது. மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் புள்ளிவிவரம் அந்த எண்ணிக்கைக்கும் ஆபத்து வந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

  இந்தியாவில் 345 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. ஆண்டுக்கு 40,525 மருத்துவர்களை நாம் உருவாக்குகிறோம். ஒரு மருத்துவருக்கு இரு செவிலியர் என்கிற விகிதாச்சாரம்கூட செவிலியர்களை உருவாக்குவதில் இல்லை. மருத்துவம் சார் துணைப் படிப்புகளை முடித்து வெளியேறுவோர் எண்ணிக்கையோ இன்னும் படுமோசம். நம்முடைய எதிர்காலத் தேவையோடு ஒப்பிடுகையில், இதெல்லாம் யானைப் பசிக்குச் சோளப்பொரி!

  அடுத்த 20 ஆண்டுகளில் நமக்கு 30 லட்சம் மருத்துவர்கள் தேவை. இப்போதுள்ள கட்டமைப்பைக்கொண்டு கணக்கிட்டால் இதில் மூன்றில் ஒரு பங்கு மருத்துவர்கள் அப்போது இருப்பதே சிரமம். உள்ளபடியே நமக்குத் தேவையான மருத்துவர்களையும் செவிலியர்களையும் உருவாக்க மேலும் 1,000 கல்லூரிகள் தேவை. ஆனால், ஏற்கெனவே உள்ள மருத்துவக் கல்லூரிகளிலேயே பெரும்பாலான கல்லூரிகள் மோசமான உள்கட்டமைப்பில், போதிய பேராசிரியர்கள்கூட இல்லாமல் திண்டாடும் சூழலில் அரசே நினைத்தாலும் இத்தனை மருத்துவக் கல்லூரிகளை உடனடியாக உருவாக்கிவிட முடியாது.

  இத்தகைய சூழலில், இந்தியா தன்னுடைய சுகாதாரக் கொள்கையை மாற்றி அமைப்பது அவசியம். முதல் கட்டமாக, ஊருக்கு ஊர் ஊட்டச் சத்து மையங்களைத் தொடங்குவதுகுறித்தும் துணை மருத்துவர்களை உருவாக்குவதுகுறித்தும் அரசு யோசிக்க வேண்டும். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள - ஊட்டச் சத்துக் குறைவினால் பாதிக்கப்பட்டோருக்கு ஊட்டச் சத்து மாவு, சத்துமிக்க தானியங்கள், மாத்திரைகள் போன்றவற்றை இந்த மையங்கள் மூலம் வழங்கலாம். இதேபோல, கிராமப்புறம், நகர்ப்புறம் என்று வேறுபாடு இல்லாமல், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பட்டயப் படிப்பாக துணை மருத்துவர் படிப்பை அரசு உருவாக்க வேண்டும். சாதாரணக் காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி போன்ற தொடக்க நிலை உடல் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் அடுத்த கட்ட நோயாளிகளை மருத்துவர்களுக்குப் பரிந்துரைக்கவும் இவர்களை அனுமதிக்கலாம். மூச்சுத் திணறும் தேசத்துக்கு கொடுக்க வேண்டிய சுவாச வாயு நடவடிக்கைகள் இவை!

 மருத்துவர் வி.புகழேந்தி

''மிகப் பெரிய எச்சரிக்கை மணி அரசின் இந்த அறிக்கை. அரசு சுகாதாரத்துக்கு ஒதுக்கும் நிதியை அதிகரிப்பதுடன், வறுமை ஒழிப்பு... அதாவது, ஊட்டச் சத்துக் குறைபாட்டைத் தீர்க்கவும் நிதி ஒதுக்க வேண்டும். அதேபோல், சுற்றுச்சூழல் மோசமாகிக்கொண்டேபோனால், வியாதிகளைத் தடுக்கவே முடியாது. எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குப் பிரதான கவனம் அளிக்கப்பட வேண்டும். ஊருக்கு ஊர் ஊட்டச் சத்து மையம், துணை மருத்துவர் திட்டங்கள் அரசு கவனிக்க வேண்டிய திட்டங்கள்.!''

- சமஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism