Published:Updated:

அச்சுறுத்தும் ஃப்ளுரோஸிஸ்!

சிரிப்பு முதல் சிசு வரை...

அச்சுறுத்தும் ஃப்ளுரோஸிஸ்!

சிரிப்பு முதல் சிசு வரை...

Published:Updated:
##~##

ஃப்ளுரோஸிஸ்... சுகாதாரமற்ற குடிநீரைப் பருகுவதன் மூலம் உண்டாகும் இந்த நோய் முற்றிய நிலையை எட்டிவிட்டால், பாதிப்படைந்தவருக்கு ஒவ்வொரு நாளும் வாழ்க்கை நரகம்தான். தமிழகத்தின் பல பகுதிகளில் இந்தப் பிரச்னை இருக்கிறது. குறிப்பாக...  தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மக்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

எப்படி உருவாகிறது ஃப்ளுரோஸிஸ்? அதன் அறிகுறிகள், சிகிச்சை முறை என்னென்ன? மருத்துவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களிடம் விவரங்கள் சேகரித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் மற்றும் ஃப்ளுரோஸிஸ் நோய் கட்டுப்படுத்தும் திட்டம் தொடர்பான சில பணிகளை ஒப்பந்த அடிப்படையில் பெங்களூருவைச் சேர்ந்த 'ஸ்டெம்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் செய்துவருகிறது. இந்த நிறுவனத்தின் ஓர் அங்கமான 'டெக்னிக்கல் சப்போர்ட் ஆர்கனைசேஷன்’ அமைப்பின் எடிட்டரான சாமிநாதன் இதுபற்றிப் பேசும்போது, ''ஆரோக்கியமான குடிநீர் என்றால், ஒரு லிட்டர் நீரில் 1 முதல் 1.5 மில்லி கிராம்வரைதான் ஃப்ளுரைடு தாக்கம் இருக்க வேண்டும். இதற்குக் கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால், பற்சொத்தை போன்ற பாதிப்பு ஏற்படலாம்.

அச்சுறுத்தும் ஃப்ளுரோஸிஸ்!

தமிழ்நாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கோயமுத்தூர், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் நிலத்தடி நீரில் ஃப்ளுரைடு கலந்துள்ளது. ஆனாலும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்தான் இதன் அளவு அதிகம். பொதுவாகப் பாறைகள் அதிகம் உள்ள நிலவியல் பகுதிகளில் இந்த வேதிப் பொருள் அதிகமாக இருக்கும். குறிப்பாக, ஷேல் (ஷிலீணீறீமீ), கிரானைட் வகைப் பாறைகள் உள்ள பகுதிகளில் இதன் தாக்கம் அதிகம். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கிரானைட் வகைப் பாறைகள் அதிகம் என்பதால், நிலத்தடி நீரில் ஃப்ளுரைடு அளவுக்கு அதிகமாக கலந்துவிடுகிறது.

இந்த இரு மாவட்டங்களிலும் நிலத்தடி நீரில் சுமார் 66 சதவிகிதம் அளவுக்கு ஃப்ளுரைடு பாதிப்பு

அச்சுறுத்தும் ஃப்ளுரோஸிஸ்!

இருக்கிறது. இந்த வேதிப் பொருள் உடலில் உள்ள வலிமை மிக்க எலும்பு, பல் போன்ற பகுதிகளை மிருதுவாக்கிவிடும். இதனால் பற்களில் பெருமளவு பாதிப்பும் தொடை மற்றும் முட்டிக்குக் கீழ் உள்ள கால் எலும்புகளில் பலமின்மையும் ஏற்படும். வேதியியல் தனிம வரிசை அட்டவணைப்படி இந்த ஃப்ளுரைடு ஒரு 'ஹேலோஜன்’ வகைத் தனிமம். இது குடிநீர் அல்லது உணவுப் பொருட்கள் வழியாக உடலில் நுழையும்போது கால்சியம் பொருட்கள் உள்ள பகுதிகளில் குடியேறத் துடிக்கும். அதாவது உடலில் பல், எலும்பு போன்ற கால்சியத்தால் உருவான பகுதிகளில் போய் ஒட்டிக்கொள்ளும். அப்படி ஒட்டிக்கொண்ட பிறகு அது ஏற்படுத்தும்  பாதிப்புக்குப் பெயர்தான் 'ஃப்ளுரோஸிஸ்’. பற்களில் ஏற்படுவதை 'டென்டல் ஃப்ளுரோஸிஸ்’ என்றும் எலும்புப் பகுதிகளில் ஏற்படுவதை 'ஸ்கெலிட்டன் ஃப்ளுரோஸிஸ்’ என்றும் பல் மற்றும் எலும்பு அல்லாத உடலின் பிற பகுதிகளில் ஏற்படுவதை 'நான்-ஸ்கெலிட்டன் ஃப்ளுரோஸிஸ்’ எனவும் மூன்று வகைகளாகப் பிரிக்கிறது மருத்துவத் துறை.

ஃப்ளுரைடு, உடலின் வளைந்து கொடுக்கும் அனைத்து மூட்டுகளிலும் உள்ள வழுவழுப்பான சவ்வுப் பகுதிகளைக் கடினமாக்கும். இதனால் பாதிப்பு அடைந்தவர்கள் எளிதாகக் குனிந்து நிமிர முடியாது. இரு கைகளையும் கழுத்தின் பின்புறம் கோத்தபடி நிமிர்ந்து நிற்க முடியாது. அதிகத் தாகம், பசியின்மை, அஜீரணம், மலத்தில் ரத்தம், மலச் சிக்கல், அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல், ரத்த சோகை, கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறத்தல், மலட்டுத்தன்மை, சர்க்கரை நோய், தைராய்டு, மூளைப் பகுதிப் பாதிப்பு எனப் படிப்படியாக பல்வேறு தொல்லைகளை இந்த நோய் கொண்டுவந்து சேர்க்கும். இந்தப் பாதிப்புக்கு ஆளானவர்களின் ஆரோக்கியத்தை நவீன சிகிச்சை மற்றும் உணவு முறையால் ஓரளவு மேம்படுத்தலாம். ஆனால், பெரிய அளவில் பாதிப்பு இருந்தால், சிகிச்சைகள் கை கொடுப்பது இல்லை'' என்கிறார்.

அச்சுறுத்தும் ஃப்ளுரோஸிஸ்!

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் எலும்பியல் துறை உதவிப் பேராசிரியர் மருத்துவர்

அச்சுறுத்தும் ஃப்ளுரோஸிஸ்!

எம்.பிரசன்ன வெங்கடேசன், ''ஃப்ளுரைடு கலந்த நிலத்தடி நீரை அப்படியே பருகுவதுதான் இந்தப் பாதிப்புக்குக் காரணம். மேலும், ஃப்ளுரைடு கலந்த தூசு மற்றும் புகையைத் தொடர்ந்து சுவாசிப்பதன் மூலமும் இந்தப் பாதிப்பு வர வாய்ப்பு உண்டு. உதாரணமாக நிலக்கரி அல்லது எரிபொருள் தொடர்பான பணியில் இருப்பவர்கள் பாதுகாப்புச் சாதனங்கள் இன்றி அங்கே தொடர்ந்து வேலை செய்யும்போது, ஃப்ளுரைடு வேதிப்பொருள் சுவாசத்தின் மூலம் உள்ளே சென்றுவிடும். நீர், உணவு மூலமாகவும் நுகரப்படும் ஃப்ளுரைடு உடலில் நுழைந்து கல்லீரலுக்குச் சென்று, அங்கிருந்து ரத்தம், திசு ஆகியவற்றில் பரவிவிடும். குழந்தைகளாக இருப்பின், எலும்பு உருவாக்கத்தின்போதே பாதிப்பு தொடங்கிவிடும். வளர்ந்தவர்களாக இருப்பின், அவர்களுடைய எலும்பின் உறுதித்தன்மை பாதிக்க ஆரம்பிக்கும். தைராய்டு சுரப்பியைப் பாதித்து முன் கழுத்துக் கழலை என்ற பாதிப்பையும் ஏற்படுத்தும். இதைக் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், எலும்பின் வலிமை சிதைந்து கால் முட்டிக்குக் கீழே எலும்பு வளையத் தொடங்கிவிடும். உடலின் மொத்த எடையைத் தாங்குவது கால்கள்தான் என்பதால் பலம் சிதைக்கப்பட்ட எலும்பால் தாங்கி நிற்க முடியாது. அதனால், கால்களின் தோற்றமே வளையத் தொடங்கிவிடும். சிலர் வெளிப்புறம் வளைந்த கால்களோடும் சிலர் உட்புறம் வளைந்த கால்களோடும் இருப்பது இந்தப் பாதிப்பால்தான். மேலும், தொடைப் பகுதியிலும் கடும் வலி தோன்றும்.

அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ஃப்ளுரோஸிஸ் பாதிப்பு உள்ளவர்களின் எலும்பில் சிறிய முறிவு ஏற்பட்டாலும் குணப்படுத்துவது சிரமம். வழக்கமான சிகிச்சையையே நீண்ட நாட்கள் கடைப்பிடிக்கும் நிலை ஏற்படும். எனவே, இந்தப் பாதிப்பில் இருந்து தப்ப ஒரே வழி ஃப்ளுரைடு அதிகம் கலந்த நீர் பருகுவதை நிறுத்துவதுதான். அதோடு ஏற்கெனவே உடலில் சேர்ந்திருக்கும் ஃப்ளுரைடின் வீரியத்தைக் குறைக்க, சிகிச்சை மற்றும் உணவு முறைகளை மேற்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம், ஏற்கெனவே உடலில் சேர்ந்திருக்கும் ஃப்ளுரைடு வேதிப் பொருளானது கழிவுகள் வழியாக வெளியேறி உடல் ஆரோக்கியம் மேம்படும். பால் பொருட்கள், கீரைகள், கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகள், வைட்டமின் சி மற்றும் இ அதிகம் உள்ள உணவுகளைச் சரிவிகிதமாகச் சாப்பிடும்போது இந்தப் பாதிப்பின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியும். பால் கலக்காத டீ, கொட்டைப் பாக்கு, வெற்றிலை, புகையிலை, ஏலக்காய், பாறை உப்பு, குளிர்பானங்கள் ஆகியவற்றிலும் ஃப்ளுரைடு அதிகமாக இருக்கிறது. எனவே, இதுபோன்ற உணவுகளை இந்த பகுதியில் வாழும் மக்கள் தவிர்ப்பது மிகவும் நல்லது!''

 பாதுகாக்கப்பட்ட குடிநீரே தீர்வு!

டாக்டர்.எம்.நடராஜன், பல் மருத்துவப் பிரிவு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை:

அச்சுறுத்தும் ஃப்ளுரோஸிஸ்!

'' 'டென்டல் ஃப்ளுரோஸிஸ்’. இது நோய் அல்ல; ஒரு பாதிப்புதான். மற்ற சில உடல் பாதிப்புகளை சிகிச்சைகள் மூலம் குணப்படுத்தலாம். ஆனால், 'டென்டல் ஃப்ளுரோஸிஸ்’ பாதிப்பு ஒரு முறை வந்துவிட்டால் வந்ததுதான். நிரந்தரத் தீர்வுக்கு வழி இல்லை. இருப்பினும் அதன் வீரியம், பாதிப்புகளை முறையான சிகிச்சைகள் மூலம் குறைக்க முடியும். பொதுவாக, ஓடும் நீரில் ஃப்ளுரைடு தாக்கம் அதிகம் இருக்காது. நிலத்தடி நீரை நேரடியாகப் பயன்படுத்தும்போது பாதிப்பு அதிகம். கர்ப்பிணிப் பெண்கள் இந்த நீரைப் பயன்படுத்தும்போது அவர்களது உடலுக்குள் செல்லும் ஃப்ளுரைடு, தாயின் ரத்தம் வழியே கருவில் உள்ள குழந்தைக்குச் செல்கிறது. நான்கு மாதக் கருவாக இருக்கும்போதே குழந்தைகளின் பால் பற்களுக்கான அடிப்படை ஆதாரம் உருவாகத் தொடங்கிவிடும். அந்த நேரத்தில் தாயிடம் இருந்து கிடைக்கும் சக்தியில் ஃப்ளுரைடு கலந்திருந்தால், அங்கேயே சிக்கல் உருவாகத் தொடங்கிவிடும். அதே

அச்சுறுத்தும் ஃப்ளுரோஸிஸ்!

சமயம் கர்ப்பிணிகள் அனைவரின் குழந்தைகளையும் இது பாதிப்பது இல்லை. தாயின் முதல் குழந்தை பாதிக்கப்பட்டும், அடுத்த குழந்தை பாதிப்பு இன்றியும் பிறக்கலாம். கருவில் இருக்கும்போது ஃப்ளுரைடு கலந்த பொருட்களைத் தாய் மூலம் பெறும் குழந்தைக்கு மட்டுமே பால் பற்கள் பாதிப்புக்கு ஆளாகின்றன. குழந்தை பிறந்ததும் அந்தத் தாய் இடம்பெயர்வதால் அல்லது ஃப்ளுரைடு கலக்காத நீர் மற்றும் உணவினை எடுத்துக்கொள்வதால், மேற்கொண்டு ஃப்ளுரோஸிஸ் பாதிப்பில் இருந்து தப்ப முடியும். அதாவது இரண்டாவதாக முளைக்கும் நிரந்தரப் பற்களுக்கான அடிப்படை ஆதாரம் உருவாகும் காலத்தில் ஃப்ளுரைடு பயன்பாடு இல்லாமல் போனால், அந்தப் பற்கள் ஆரோக்கியமானவையாக முளைக்கும். 6 முதல் 16 வயது வரை நிரந்தரப் பற்கள் முளைக்கும் காலத்தைக் கடந்துவிட்டால், டென்டல் ஃப்ளுரோஸிஸ் வர வாய்ப்பு இல்லை.

டென்டல் ஃப்ளுரோஸிஸ் வருவதற்கான அறிகுறிகள் என்னவென்றால், முதலில் பற்களின் பால் வெண்மை குறையத் தொடங்கும். பிறகு மஞ்சள் நிறப் புள்ளிகள் அல்லது கோடுகள் வரும். அதன் பின்னர் பழுப்பு நிறத்துக்குப் பற்கள் மாறும். இறுதியில் கரும் புள்ளிகளாக மாறுவதோடு பற்களில் குழியும், மேடுமான சிதைவுகள் உண்டாகும். நாளடைவில் இது பற்களுக்கான இயல்புத் தோற்றத்தை மாற்றி அந்த நபரின் புன்சிரிப்புக்கு வேட்டு வைக்கும். 'டென்டல் ஃப்ளுரோஸிஸ்’ பாதிப்பு ஆரம்ப நிலையில் இருக்கும்போது பற்களில் கோட்டிங் செய்தல், உறை மாட்டுதல் போன்ற சிகிச்சை மற்றும் தொடர் பராமரிப்பு மூலம் பற்களின் ஆயுளை மேம்படுத்த முடியும். மேலும், பல் பாதிப்பின்போதே கண்டறிந்துவிட்டால், ஃப்ளுரைடால் எலும்புகள் பாதிக்கும் ஆபத்தில் இருந்தும் நம்மைக் காத்துக்கொள்ளலாம்.

பாதுகாக்கப்பட்ட குடிநீர்தான் இந்தப் பாதிப்புக்குத் தீர்வைக் கொடுக்கும். 'போலியோ ஃப்ரீ’ தமிழகமாக மாற்ற அரசு எடுத்த முயற்சிகளைப் போல இதிலும் செயல்பட்டால், இந்த இரு மாவட்டங்களையும் 'ஃப்ளுரோஸிஸ் ஃப்ரீ’ மாவட்டங்களாக எளிதில் மாற்றலாம். இவை அனைத்துக்கும் பொதுமக்களின் உறுதுணை மிக முக்கியம்'' என்கிறார் டாக்டர் நடராஜன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism