Published:Updated:

கார்த்திக்கிடம் கற்றுக்கொள்வோம்!

நரம்புச் சிரமத்தைக் கடந்த நம்பிக்கைக் கதை

கார்த்திக்கிடம் கற்றுக்கொள்வோம்!

நரம்புச் சிரமத்தைக் கடந்த நம்பிக்கைக் கதை

Published:Updated:
##~##

ஷ்டம் என்றால் என்னவென்று தெரியுமா? ராஜலட்சுமி சந்திரசேகர் சொல்லும் இந்தக் கதையைப் படித்துவிட்டு இனி அந்த வார்த்தையைப் பயன்படுத்துங்கள். 

''என் முதல் குழந்தை கார்த்திக். எட்டு மாசக் குறைப்பிரசவத்துல பிறந்தான். குழந்தை வளர வளர, எப்ப எழுந்து நடக்கப்போறான்னு நாங்க ஆவலாப் பார்த்துட்டு இருந்தோம். நடக்கப் பயிற்சி கொடுத்தோம். தலையைத் தூக்கினபடி சிரிப்பானே தவிர, ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியலை. 'குறைப் பிரசவத்துல பிறந்ததால நார்மல் குழந்தையைவிட நடக்கிறது, பேசறது எல்லாமே கொஞ்சம் லேட்டாதான் ஆகும்’னு சொன்னாங்க. நாளாக ஆக, எந்த முன்னேற்றமும் இல்லை. திரும்பவும் செக் பண்ணப்ப, குழந்தைக்கு 'செரிபிரல் பால்சி’ங்கிற (Cerebral palsy) நோய் தாக்கி இருக்கு. இதுக்கு எந்தச் சிகிச்சையும் இல்லைனு கை விரிச்சிட்டாங்க. அப்ப இவனுக்கு வயசு மூணு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனா, நான் நம்பிக்கையோட கோட்டூர்புரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வித்யாசாகர் பள்ளியில் இவனைச் சேர்த்தேன். பத்தாம் வகுப்பு வரைக்கும் அங்கே படிச்சிட்டு, லேடி ஆண்டாள் பள்ளிக்கூடத்துல ப்ளஸ் டூ எழுதினான். எப்படிப் படிக்கப்போறானோனு நாங்க பயந்துட்டு இருந்தப்ப, பரிட்சையில 85 பெர்சன்ட் மார்க் வாங்கி எங்களுக்குப் பெருமை சேர்த்தான்'' என்கிற ராஜலட்சுமியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

கார்த்திக்கிடம் கற்றுக்கொள்வோம்!

புன்னகையும் திணறலுமாகப் பேச்சைத் தொடங்கினார் கார்த்திக்... ''ப்ளஸ் டூ வரைக்கும் போதும்னுதான் அம்மா, அப்பா நினைச்சாங்க. ஆனா, நான் வாங்கின மார்க்கைப் பார்த்ததும், உடனே, லயோலா காலேஜ்ல என்னைச் சேர்த்துவிட்டாங்க. அது வரை என்னை நினைச்சு வேதனைப்பட்டுட்டு

கார்த்திக்கிடம் கற்றுக்கொள்வோம்!

இருந்த அம்மா முகத்துல நான் சந்தோஷத்தைப் பார்த்தேன். இன்னும் நிறையப் படிச்சு, பெரிய வேலைக்குப் போய், அவங்களை நல்லாக் கவனிச்சுக்கணும்னு ஆசை. காலேஜ் வரைக்கும் ஆட்டோவுல போயிடுவேன். காலேஜ் போனதும் க்ளாஸ்மேட்ஸ் எல்லாரும் சேர்ந்து கிளாஸ் வரைக்கும் கூட்டிட்டுப் போய்டுவாங்க. மத்த பசங்களை மாதிரி என்னால் பரீட்சை எழுத முடியாது. அதனால, 'ஸ்க்ரைப்’ (Scribe)  கம்பெனியில் பெயரைப் பதிவு பண்ணி வெச்சிருந்தேன். பரீட்சை நேரத்துல அவங்க வந்து, நான் சொல்லச் சொல்ல எழுதுவாங்க. அவங்களோட உதவியால், பி.ஏ. முடிச்சு, சென்னை பல்கலைக்கழகத்துல முதுகலைப் பட்டமும் வாங்கினேன். அதே நேரத்துல லைப்ரரி கோர்ஸும் படிச்சு முடிச்சேன்'' என்று சொல்லும் கார்த்திக்கின் முக்கியமான பொழுதுபோக்கு... வாசிப்பு.

படிப்பதற்கு அவர் கொஞ்சம் சிரமப்படத்தான் வேண்டும். ஆனாலும், படித்தார். கல்லூரிப் படிப்பைத் தாண்டிப் பொது அறிவை வளர்த்துக்கொள்ளப் புத்தகங்களையே முழு நேர நண்பனாக்கிக்கொண்ட கார்த்திக்குக்குப் பின்னாளில் நூலகம் ஒன்றை நடத்த அந்தப் புத்தக வாசிப்பே வழிவகுத்தது.

''படிப்பை முடிச்ச கையோட, நிறைய இடத்துல வேலைக்கு விண்ணப்பிச்சான். ஆனா, எங்கேயுமே வேலை கிடைக்கலை. சரியாப் பேச வரலைங்கிறதும், மத்தவங்க பண்ற அஞ்சு நிமிஷ வேலையை இவன் செய்யறதுக்குக் கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகும்கிறதும்தான் காரணம். ஆனா, என் பிள்ளை அசரலை. தன்னோட புத்தக ஆர்வத்தையே தொழிலுக்கு முதலீடா மாத்திக்கிட்டான்.

சின்ன வயசுலேர்ந்தே எல்லாப் பத்திரிகைகளையும் தினமும் படிச்சிடுவான். அப்படிப் படிக்கிற பத்திரிகைகள்ல வர்ற புத்தக விமர்சனங்களில் இருந்து எது அவனை ஈர்க்குதோ, அந்தப் புத்தகங்களை வாங்கித் தரச் சொல்லிக் கேட்பான். இப்படி அவன் வாங்கிச் சேர்க்க ஆரம்பிச்ச அவனோட நூலகத்துல இப்ப 2,000 புத்தகங்களுக்கு மேல இருக்கு. வீட்டோட ஒரு பகுதியில இருக்கும் அந்த நூலகத்தை எல்லாருக்குமான 'ஸ்ரீ சக்ரா லெண்டிங் லைப்ரரி’யா மாத்தினான். தினசரிப் பத்திரிகைகள், வார, மாத இதழ்கள்னு மட்டும் இல்லாமல், சின்னக் குழந்தைங்க படிக்கிற புத்தகங்கள், நாவல்கள், இன்ஜினியரிங் புக்ஸ், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள்னு எல்லாத் தரப்பு விஷயங்களையும் தர்ற களஞ்சியமா மாத்தினான். இப்ப அவனோட நூலகத்துல 150 பேர் உறுப்பினர்களா இருக்காங்க. இதன் மூலமா மாசம் 1,000 ரூபாய் அவனுக்குக் கிடைக்கும். இது ஒரு தொகையானு நீங்க நினைக்கலாம். எங்களை மாதிரி கஷ்டப்படுற குடும்பங்களுக்கு அதுவும் ஒரு தொகைதான். எல்லாத்தையும்விட நாலு பேரைப் பார்க்க, பழக அவனுக்கு இது பெரிய வாய்ப்பா அமைஞ்சது.  

கம்ப்யூட்டர், செஸ், நீச்சல்லேயும் அவனுக்குப் பெரிய ஆர்வம் உண்டு. விஸ்வநாதன் ஆனந்த்கூட ப்ரெண்ட்லியா ஒரு மேட்ச் விளையாடியிருக்கான். ஒரு டின்னர்ல சச்சினைப் பார்த்தான். ஒரு பேட்டும் தொப்பியும் பரிசாக் கொடுத்தார். இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் தன்னோட ப்ளாக்ல அப்பப்ப பதிவுசெஞ்சுடுவான். அவன் நினைச்ச எல்லாமே நடந்துட்டு இருக்கு; ஒரு நல்ல வேலையைத் தவிர'' என்கிறார் ராஜலட்சுமி.

நரம்பியல் நிபுணரான முருகனிடம் 'செரிபிரல் பால்சி’ நோயால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிக் கேட்டோம்.

''குழந்தை கருவில் இருக்கும்போதே, மூளைக்கு சரியான அளவு ஆக்சிஜன் மற்றும் ரத்த ஓட்டத்தின் அளவில் மாற்றங்கள் இருந்தாலோ, மூளையில் நோய்த் தொற்று இருந்தாலோ, இந்த 'செரிபிரல் பால்சி’ பாதிப்பு ஏற்படும். குறைமாதப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இது வரலாம். காரணமே இல்லாமல், சில குழந்தைகளுக்குப் பிறக்கும்போதே கழுத்தில் தொப்புள்கொடி சுற்றிக்கொள்ளும். இதனால் அதன் மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ரத்த ஓட்டத்தில் தடங்கல் ஏற்படும். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், மூளையில் எந்த இடத்தில் பாதிப்பு ஏற்பட்டதோ, அந்த இடம் தழும்புபோல அப்படியேதான் இருக்கும். குழந்தை வளர வளர அந்தப் பாதிப்பின் தாக்கம் வெளியே தெரிய ஆரம்பிக்கும். தசைகளின் செயலிழப்பால், கை கால்கள் செயல்படுவது கஷ்டமாக இருக்கும். எழுவது, நடப்பது போன்ற சின்னச் சின்ன விஷயங்களைக்கூட அடுத்தவர் துணையின்றிச் செய்ய முடியாது. சில நேரங்களில், திடீரென கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் செயலிழந்துவிடும். இந்த மாதிரி நேரங்களில் எச்சிலைக்கூட விழுங்க முடியாத நிலை உருவாகும். சிலருக்குப் பார்வை மற்றும் கேட்புத் திறன் பாதிப்புகூட ஏற்படலாம்.

இதைச் சரிசெய்ய முடியாது. மேலும் மோசமடையாமல் தடுக்க வேண்டுமானால், பல்வேறு தெரபி சிகிச்¬சகள் அளிக்கலாம். ஆனால் அவையும் இதற்கு நிரந்தரத் தீர்வைத் தராது.

குழந்தைப் பிறப்புக்கு முன்னால் ஸ்கேன் மூலம் கண்டறியலாம். கர்ப்பமான பெண்களைத் தாக்கும் ஒரு வகையான தட்டம்மை நோய், தாய்க்கு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதைத் தடுக்கத் தடுப்பு ஊசி இருக்கிறது.

கார்த்திக்கிடம் கற்றுக்கொள்வோம்!

இது ஒரு நோய் அல்ல. இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களை பெற்றோர்களின் அக்கறையும் அணுகுமுறையுமே சராசரி மனிதனாக வாழவைக்கும்'' என்றார் டாக்டர் முருகன்.  

கார்த்திக்குக்கு முட நீக்கியல் சிகிச்சை அளிக்கும் தமிழ்நாடு பேராலிம்பிக்ஸ் ஸ்விம்மிங் அசோசியேஷன் டெக்னிகல் டைரக்டர் ஆனந்த ஜோதியிடம் பேசினோம். ''மூளையில் இருக்கும் பெரும் பகுதிக்கு செரிப்ரம் (Cerebrum) என்றும்,  பால்சி என்றால் பாரலிசிஸ் (paralysis) என்றும் பொருள். மூளையின் செரிப்ரம் பகுதி பாதித்து நரம்புகளைச் செயல் இழக்கும்போது இந்த நோய் தாக்குகிறது'' என்றவர் இவர்களுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை முறைகளை விளக்கினார். ''முதலில் பாதிக்கப்பட்டவர்களின் உடல் தோற்றம் (Posture) சரிசெய்யப்படும். கூன் விழுந்து காணப்படும் முதுகெலும்பைப் பல்வேறு தெரபிகள் மூலமாக நிமிர்த்த முடியும்.

அடிப்படை உடல் அசைவுகளைச் (Fundamental  movements) சரிசெய்யப் பயிற்சிகள் கொடுக்க வேண்டும். இதற்கு 'நியுரோ டெவலப்மென்ட் தெரபி’ (Neuro development therapy) என்று பெயர். இவற்றுடன் கூடவே மானிபுலேட்டிவ் தெரபியும் (Manipulative therapy) வழங்கப்படும். இந்த வகைச் சிகிச்சைகளினால்  பிறரைச் சார்ந்திருக்கும் தன்மையானது நிறையவே குறையும்.

அப்புறம், 'ஹைட்ரோ தெரபி’ (Hydrotherapy) சிகிச்சை.  தண்ணீருக்குள் இருக்கும்போது, நாம் உடல் எடை குறைந்து லேசாக இருப்பதுபோல் உணர்வோம் இல்லையா? அப்போது நிலத்தில் இருக்கும்போது, செய்ய முடியாத உடல் அசைவுகளை இந்தப் பாதிப்புக்கு உள்ளானவர்களால் தண்ணீருக்குள் மிக எளிதில் செய்ய முடியும். இதன் மூலம் அவர்களின் தசைகளுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும்.  

கடைசிக் கட்டமாக, 'ஹிப்போ தெரபி’ (Hippo therapy) எனப்படும் குதிரை ஏற்றப் பயிற்சிச் சிகிச்சை (Horse riding therapy) அளிப்போம். குதிரைக்குப் பின்னால் அமர வைத்துவிட்டால், குதிரையின் மீது செல்லும்போது ஏற்படும் அதிர்வுகளால் தொடை மற்றும் கால் தசைகள் நன்றாகத் தளர்வு பெறக்கூடும். இப்படிப் பல்வேறு வகையான சிகிச்சைகள் மூலம் உடலில் இருக்கும் அனைத்து சதைகளுக்கும் சரியான அளவில் பயிற்சி அளிப்போம். கார்த்திக்கு நீச்சல் பயிற்சி அளிக்கிறோம். அவரிடம் இருக்கும் அபாரமான தன்னம்பிக்கையும் திறமையும் அடுத்த பாராலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியில் இந்தியாவிற்குப் பதக்கம் வாங்கித் தருபவராக அவரை மாற்றும் பாருங்கள்'' என்கிறார்.

கஷ்டம் என்றால் என்ன, தன்னம்பிக்கை என்றால் என்ன என்று இப்போது புரிகிறதா?

கார்த்திக்கிடம் கற்றுக்கொள்வோம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism