Published:Updated:

''வெளியே வந்தால் வெல்லலாம்!''

''வெளியே வந்தால் வெல்லலாம்!''

''வெளியே வந்தால் வெல்லலாம்!''
##~##

'ஒரு பாதை தடுக்கப்பட்டால் ஓராயிரம் பாதைகள்!’ என்பார்கள். இந்த வார்த்தைகளின் உதாரண வடிவமாக வாழ்கிறார் கருணாகரன். சாலை விபத்தில் சிக்கி முதுகுத்தண்டுப் பிரச்னையால் உடல் இயக்கம் பாதிக்கப்பட்டவர் கருணாகரன். ஆனால், பாதிப்பின் சுவடு மறந்து சாதித்த மனிதராகச் சிரிக்கிறார் இப்போது. 

''அந்தத் தேதிகூட இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு. 31 ஆகஸ்ட் 1985. அன்னைக்கு என்னோட பைக்ல போயிட்டிருந்தேன். திடீர்னு ஒரு டிரை சைக்கிள் குறுக்க வந்தது, அதைத் தவிர்க்க சட்டுனு பைக்கைத் திருப்பினேன். அப்ப, வண்டி பஸ் மேலே மோதிடுச்சு. ஒரு நொடி என்ன நடந்துச்சுன்னே புரிபடலை. கீழே விழுந்து கிடந்தேன். நினைவு தப்பலை, ஆனா, உடம்பை அசைக்கவே முடியலை. நல்ல வேளையா அந்தக் காலக்கட்டத்துலதான் ஹெல்மெட் போட்டுக்கணும்கிற சட்டம் அறிமுகமாச்சு.  இல்லைன்னா அப்பவே என் கதை முடிஞ்சிருக்கும். சுத்தி இருந்தவங்க என்னைப் பெரிய ஆஸ்பத்திரியில் கொண்டுபோய்ச் சேர்த்தாங்க. மூணு மாசம் செயலற்றுப் படுத்தே கிடந்தேன். இனி எழுந்து நடமாட முடியாதுங்கிற பயங்கரமான உண்மை கொஞ்சம் கொஞ்சமாத் தெரியவந்துச்சு. டாக்டர்களும் என்ன என்ன சிகிச்சைகள் உண்டோ... அத்தனையும் செஞ்சுபார்த்தாங்க. நான் அப்போ கிடந்த நிலைமையை 'பாராப்ளீஜிக்’ (Paraplegic) அப்படின்னு மருத்துவர்கள் சொன்னாங்க.  அதாவது முதுகுத்தண்டில் பலமாக அடிபட்டதால் மார்பு பகுதிக்கு கீழ் உள்ள அனைத்து வெளிப்புற உறுப்புகளும் செயல் இழந்து, உடம்பில் எவ்வித உணர்வும் இருக்காது. தீ பட்டால்கூட எரியாது, பூச்சிக்கடி தெரியாது.

''வெளியே வந்தால் வெல்லலாம்!''

ஒரு கட்டத்தில், எத்தனை நாள் ஆஸ்பத்திரியிலேயே இருக்கிறதுன்னு தோணுச்சு. அதனால, சிகிச்சை போதும்னு சொல்லி ஊருக்கு வந்துட்டேன். எப்பவும் படுத்தே இருந்தததால், படுக்கை வியாதி வந்து ரொம்பக் கஷ்டப்பட்டேன். 'இனிமேல் தேறுவதே கஷ்டம்’னு சுத்தி இருந்தவங்களே என் காதுபட சொன்னாங்க. என்னுடைய முதல் சவால் அங்கேதான் ஆரம்பிச்சது. 1986-ல் சேலம் டாக்டர் முருகேசனும் டாக்டர் ராஜகோபாலும் எனக்கு சிகிச்சை கொடுத்தாங்க. நோயில் இருந்து மீண்டு வர்றதுக்கான தன்னம்பிக்கை ஏற்பட அந்த சிகிச்சை ரொம்பவே உதவிச்சு. ஆறு மாசத்தில் பத்து ஆபரேஷன் பண்ணாங்க. கொஞ்சம் சரியானேன். படுக்கையில் இருந்து எழுந்தேன்.

என்னோட இரண்டாவது சவாலே, இனிமேல் படுக்கையிலேயே முடங்கிக்கிடக்கக் கூடாதுங்கிறதுதான். வீல் சேரில் உட்கார்ந்து வீட்டுக்குள்ளேயும் மெல்ல அக்கம் பக்கமும் போக ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா தேறிட்டு இருந்த நிலையில், 1993-ல் திடீர்னு திரும்ப பிரச்னைகள் தலைத்தூக்க ஆரம்பிச்சது. சிறுநீர்ப் பாதையில் (Urinary tract) அடைப்பு ஏற்பட்டுச்சு. சிறுநீரகக் கல் உருவாகிட்டதா சொன்னாங்க. மறுபடியும் ஆஸ்பத்திரியில் சேர வேண்டிய நிலைமை. சேலம் டாக்டர் சரோத்தமனிடம் சிகிச்சை எடுத்துக் குணமடைஞ்சேன். அதுக்கு அப்புறம் பெரிய பிரச்னைகள் ஏதும் இல்லை. இப்போ நார்மலா இருக்கேன். இப்போ என்னால், எல்லோரையும்போல நடமாட முடியாதே தவிர... எல்லோரையும் போல சிந்திக்க முடியுது, பேச முடியுது, சாப்பிட முடியுது. இதுவே போதும்னுதான் நினைச்சேன். ஆனா, எங்க வீட்டுல சொத்து பாகம் பிரிக்கிறப்ப, எனக்குன்னு பங்கு எதுவுமே தரலை. 'அவனுக்கென்ன தனி ஆளு... நாங்க பாத்துக்க மாட்டோமா’னு நினைச்சாங்க. அது மனரீதியா எனக்குக் கஷ்டமா இருந்துச்சு. நாம இருக்கிறோம்கிறதைப் புரியவைக்கணும்னா நாம ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. நண்பர்கள் துணையோட 2002-ல் ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணத் தொடங்கினேன். இப்ப நான் சொந்தமா வீடு கட்டி சுயமா சம்பாதிச்ச பணத்துல எல்லா வசதிகளோடும் தனியா வாழறேன். உடல்ரீதியா பல பிரச்னைகளை சமாளிக்கிறேன்.  சிறுநீர் கழிக்கணும்ங்கற உணர்வுகூட வராத இந்த உடம்புல 'டயாபர்’ போட்டு, 'கதீட்டர்’ வழியாத்தான் யூரின் போறேன். காலைக் கடன் கழிப்பதும் இதுபோன்ற செயற்கையான முறையில்தான். முதலில் அருவருப்பாக இருந்தாலும் அப்புறம் பழகிடுச்சு!'' என்கிற கருணாகரனிடத்தில், மிகப் பெரிய சுமைகளைக் கடக்கிறோம் என்கிற உணர்வு துளியளவும் இல்லை.

''வெளியே வந்தால் வெல்லலாம்!''

''ஒருநாள் நண்பர்களோட பேசிக்கிட்டிருந்தப்ப கார் ஓட்டணும்னு சொன்னேன். 'என்ன விளையாடுறியா எப்படி உன்னால் கார் ஓட்ட முடியும்?’னு எல்லாரும் கேலி பண்ணாங்க. ஆனா, என் நண்பன் ராஜேந்திரன் மட்டும், 'இவ்வளவு செஞ்சிட்டே... இதைச் செய்ய மாட்டியா? உனக்கு நான் ஹெல்ப் பண்றேன்!’னு உற்சாகம் கொடுத்தார். என்னை மாதிரி பிரச்னைகள் இருக்கிறவங்களுக்கு வாகனம் ஓட்ட லைசென்ஸ் கொடுக்க மாட்டாங்க. ஆனா, சட்டப்படி தைரியமா ரோட்டுல வண்டி ஓட்டணும்கிறதே என் கனவு. அப்போ பார்த்து,  மாற்றுத் திறனாளிகளும் வண்டி ஓட்ட லைசென்ஸ் கொடுக்கலாம்னு மத்திய அரசாங்கம் ஓர் அரசாணை வெளியிட்டது. 'இன்வேலிட் கேரேஜ் ட்ரைவிங் லைசென்ஸ்’னு அதுக்குப் பேர்.  அந்த லைசென்ஸை வாங்கின முதல் ஆள் நான்தான். போராடி வாங்கினேன். இப்ப என்னோட  'வெர்னா’ காரை நானே ஓட்டறேன். வீட்டு வாசலில் இருந்து காருக்குள் போக அதற்கான சாய்தளம் உள்ளது. இந்த காரில் ஆட்டோமேட்டிக் கியர். டூ வீலர் ஓட்டுற மாதிரிதான். பிரேக்ல ஆரம்பிச்சு எல்லாம் ஹேண்ட் கன்ட்ரோல். நினைச்சப்ப சென்னைக்கும் திருச்சிக்கும் போய்ட்டு வரேன்.  மத்தவங்களுக்கு இந்த காரோட விலை வரிகள் எல்லாம் சேர்த்து 12 லட்ச ரூபாய். ஆனா, எங்களை மாதிரிப் பாதிக்கப்பட்டவங்களுக்கு 8 லட்சம் ரூபாய்தான். என்னைப் போல பாதிக்கப்பட்டவங்களுக்கான 'ஸ்பைனல் கேர் இன்டியா’ அமைப்பில சேர்ந்தேன். என்னை மாதிரி நிறையப் பேருக்கு லைசென்ஸ் கிடைக்கவும் உதவ ஆரம்பிச்சேன். என்னால முடிஞ்சதை உதவுறேன். என் காரை ரீ டிசைன் செஞ்சுக்கிட்டதுபோல, விபத்தில் தலைகீழா மாறிப்போன என் வாழ்க்கையை நான் ரீ டிசைன் செஞ்சுக்கிட்டேன். இதுக்கு நான் பண்ணது என்னோட பழைய உடம்பை மறந்துட்டது. இந்த புதிய நிலையை ஏத்துக்கிட்டது. எந்த நிலையிலும் வாழ்தல் இனிதுங்கறதை நாம புரிஞ்சுக்கிட்டோம்னா மனசு லேசா இருக்கும்!'' - ஆத்மார்த்த நெகிழ்வில் பேசும் கருணாகரன் கடைசியாக இப்படிச் சொல்கிறார் வாழ்வியல் இலக்கணத்தை.  ''என்னைப்போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். விபத்திலோ அல்லது நோய் பாதிப்பினாலோ சிரமப்படுபவர்கள் முதலில் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும். உலகம் வெளியில்தான் இருக்கு!''

ஆயிரத்தில் ஒரு வார்த்தை!