Published:Updated:

அழவைத்த விபத்து... துள்ளி எழவைத்த சமத்து!

'அடடே' ஆல்ரவுண்டர் நிவேதா

அழவைத்த விபத்து... துள்ளி எழவைத்த சமத்து!

'அடடே' ஆல்ரவுண்டர் நிவேதா

Published:Updated:
##~##

''தண்ணியைக் கண்டாலே தலை தெறிக்க ஓடுகிற ஆளா நீங்க? மீன்போல தண்ணிக்குள் நீந்துபவர்களை ஏக்கத்தோட பார்க்கிறீர்களா? நல்ல ஆழமான நீச்சல் குளத்துக்குப் போய் தொபுக்கடீர்னு குதிங்க. நீச்சலை சில நிமிஷங்கள்ல கத்துக்கலாம். பிழைச்சுத்தான் ஆகணும்கிற தவிப்பே உங்களுக்கு நீச்சலைக் கத்துக் கொடுத்திடும்!'' - பேச்சிலேயே துணிச்சலை வார்க்கிறார் 21 வயது மாணவி நிவேதா.

 பி.ஏ. சமூகவியல் படிப்புடன் வாலிபால், த்ரோ பால், ஸ்விம்மிங், ஸ்கேட்டிங், டென்னிஸ், டேக்வாண்டோ, கீ போர்டு, பரத நாட்டியம், மேடைப் பேச்சு, நிகழ்ச்சித் தொகுப்பு எனச் சகல வித்தைகளையும் கற்று, 'ஆல் ரவுண்டர்’ முத்திரை பதித்தவர். சாதனைகளை நோக்கிப் பயணிக்கையில் விபத்து ரூபத்தில் விதி விளையாடினால்? நொறுக்கிப்போட்ட விதியையும் வென்று காட்டிச் சிரிக்கிறார் நிவேதா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அழவைத்த விபத்து... துள்ளி எழவைத்த சமத்து!

பள்ளி நாட்களில், டேக்வாண்டோ தற்காப்புக் கலையில் மாவட்ட அளவில் 28 பதக்கங்கள், மாநில அளவில் எட்டு, தேசிய அளவில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை அள்ளியவர். அடுத்து, டேக்வாண்டோ போட்டிகளில் உலக அளவில் சாதனை படைக்க தீவிரமாக இருந்தபோதுதான் அந்தச் சம்பவம்! அதைச் சொல்லும்போதே படபடப்பு தெரிகிறது நிவேதாவிடம்.

''ப்ளஸ் ஒன் படிக்கிறப்ப, ஃப்ரெண்டைப் பார்க்கறதுக்காக, வண்டியில போயிட்டிருந்தேன். ஒரு திருப்பத்தில் குறுக்கே ஒரு டூ வீலர் வந்து என் மேல பலமா மோதிடுச்சு. ரோட்டோரம் இருந்தவங்க என்னைக் கைத்தாங்கலாக் கூட்டிட்டுப் போனப்ப, கொஞ்சம் நினைவு தெரிஞ்சுது. அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னே தெரியலை. ஹெல்மெட் பறந்து போய் விழுந்துட்டதால தலையில அடிபட்டு வீங்கி இருந்தது. ரொம்பக் கஷ்டப்பட்டு இடது கையைத் தூக்கி வலது தோளைத் தொட்டுப் பார்த்தா, பஞ்சு மாதிரி அமுங்கிச்சு. அப்போதைக்கு வலி எதுவும் பெரிசா தெரியலை. ஆனா, போக போக தாங்க முடியாத அளவுக்கு வலி. எக்ஸ்ரே எடுத்து பார்த்தா, தோள்பட்டை எலும்பு ரெண்டு துண்டா உடைஞ்சு போயிருந்தது.  அதில் ஒரு துண்டு எலும்பு தோள் சதைக்கு மேலே துருத்தலாத் தெரிஞ்சுது. 'இந்த எலும்பு மட்டும், தோள் சதையைக் கிழிச்சுக்கிட்டு வெளியே வந்திருந்தா நிறைய ரத்தம் வெளியேறி உயிருக்கே ஆபத்தா போயிருக்கும்’னு டாக்டர் சொன்னது, எல்லாரையும் அதிர்ச்சியில் உறைய வெச்சிடுச்சு. வலியைவிட, 'இனிமே ஸ்கூல் போக முடியாதோ... இன்னும் எவ்வளவு நாள் ஆஸ்பத்திரி படுத்திருக்கணுமோ’ங்கிற கவலைதான் என்னை வருத்திச்சு.

'தோள்பட்டையில மாவுக்கட்டு போட்டு, மருந்து மாத்திரைகளாலேயே எலும்பை ஒட்ட வெச்சிடலாம். ஆபரேஷன் எல்லாம் வேண்டாம்’னு டாக்டர்கள் முதல்ல சொன்னாங்க. ஆனால், அதில் எதிர்பார்த்த ரிசல்ட் வரலை. வேற ஒரு ஆஸ்பத்திரி போய், உடைஞ்சுபோன இரண்டு எலும்புகளிலும் துளை போட்டு ஆறு மெட்டல் ராடுகளைப் பொருத்தி, எலும்புகளை  ஒட்டவைக்க ஆபரேஷன் செஞ்சாங்க. சரியா ஒன்றரை மாசம் ஆஸ்பத்திரில இருந்தேன். ஸ்கூல், டியூஷன், ஸ்பெஷல் க்ளாஸ், கேம்ஸ் எல்லாம் போச்சு. கால்ல சக்கரம் கட்டிகிட்டு ஓடிட்டிருந்த என்னை, படுத்த படுக்கையா ஆக்கிடுச்சு இந்த விபத்து.

தயக்கமும் பயமும் தர்ற விஷயங்களை தைரியமா எதிர்கொள்ளணும்கிறது எனக்கு நானே போட்டுக்கிட்ட சபதம். சின்ன வயசுலேர்ந்து தண்ணியைக் கண்டாலே பயம்! சபதம் போட்டுக்கிட்டு நீச்சல் கத்துக்கிட்டேன். மேடைப் பேச்சு, ஸ்போர்ட்ஸ், டான்ஸ், வண்டி ஓட்டறதுன்னு அதுவரைக்கும் எனக்குத் தெரியாத விஷயங்கள்ல கவனம் செலுத்தினேன். ஒரு விபத்தால் எல்லாத்தையும் இழந்திட்டு படுத்துக் கிடந்ததை இப்போ நினைச்சாலும் பயமா இருக்கு.

அழவைத்த விபத்து... துள்ளி எழவைத்த சமத்து!

'மாற்றங்களுக்கு ஏத்த மாதிரி வாழப் பழகிக்கறதுதான்மா வெற்றியோட சூட்சமம். உன்னோட உடம்புக்குத்தானே இந்தச் சோதனை? உன்னோட மூளையைப் பயன்படுத்தி நீ நிறைய சாதிக்கலாம்மா’னு அப்பா சொன்ன தன்னம்பிக்கை வார்த்தைகள்தான் என்னைத் தெம்பா எழ வெச்சது. ஆபரேஷன் முடிஞ்சு அஞ்சு மாசங்கள் படுக்கையிலேயே இருந்தேன். வாக்கிங் ஸ்டிக் வெச்சு நடக்கப் பழகினேன். நிறையப் புத்தகங்கள் படிச்சேன்!'' -கோரத்தின் பிடியில் இருந்து மீண்ட அனுபவங்களை நிவேதா சொல்லச்சொல்ல நமக்கே மூச்சடைக்கிறது.  

''கிட்டத்தட்ட ஆறு மாசங்கள் தவியா தவிச்சேன். யார் தயவும் இல்லாமல் நடக்கிற அளவுக்கு உடல் தேறியது. உடனே, பன்னிரெண்டாவுதுல சேர்ந்தேன். பள்ளிக்கூட ஆண்டு மலரில் எனக்கு நடந்த விபத்து அனுபவத்தை விழிப்பு உணர்வுக் கட்டுரையா எழுதினேன். நல்ல வரவேற்பு கிடைச்சுது. படிச்ச அனுபவம் என்னையும் ஒரு எழுத்தாளரா ஆக்கிச்சு. நல்ல மார்க் எடுத்து பள்ளிக்கூடத்துலேர்ந்து வெளியே வந்த நான் இன்ஜினீயரிங் சேர்ந்தேன். ஆனா, வெறும் வேலைவாய்ப்புக்கானப் படிப்பா தெரிஞ்ச அந்தப் படிப்பு எனக்குப் பிடிக்கலை. சமூகத்துக்கு நம்மளால முடிஞ்ச பங்களிப்பைச் செய்யணும்னு நினைச்சு, பி.ஏ. சோஷியாலஜி படிச்சேன்!'' என்கிற நிவேதா விபத்துக்குப் பிறகும், பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு மாநில, தேசிய அளவில் பதக்கங்களை வாங்கி இருக்கிறார்.

''இப்போ தினமும் யோகா பண்றேன். பார்ட் டைம் வேலையா 'வெப் டிசைனிங்’ பண்றேன். டி.வி. காம்பியரிங், ஈவன்ட் மேனேஜ்மென்ட், எக்ஸ்னோரா சேவைன்னு இப்ப நான் ரொம்ப பிசி. என்ன ஒண்ணு, உடலளவில் செய்யக்கூடிய டேக்வாண்டோ, ஸ்போர்ட்ஸ்னு கடினமான பயிற்சிகள்ல ஈடுபட முடியலை. ஆனால், அதுக்கு சற்றும் குறையாத எழுத்து, படிப்பு, பேச்சுன்னு மூளையை மூலதனமாக்கி வளரக் கத்துக்கிட்டேன். எதையுமே சிரமமா எடுத்துக்காமல், 'இதுவும் ஓர் அனுபவம்’னு எடுத்துக்கிட்டா எப்பவுமே வெற்றிதான்!'' பளிச் சிரிப்போடு சொல்கிறார் நிவேதா.

வயதையும் மிஞ்சிய அனுபவங்கள் அவரது வார்த்தைகளில் வைரமாய் மின்னின!

அழவைத்த விபத்து... துள்ளி எழவைத்த சமத்து!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism