##~## |
அர்ஜூனா, பாரத் ரத்னா, கேல் ரத்னா, இந்தியன் ரியல் ஹீரோஸ்... கடைசியாக ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம். இதுதான் மேரி கோம் என்ற 29 வயது குத்துச் சண்டை வீராங்கனையின் கேரியர் கிராஃப்!
வறுமையும் தீவிரவாதமும் தாண்டவமாடும் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரைச் சேர்ந்தவர் மேரி கோம். திருமணம் ஆனவர். இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தவர். குடும்பத் தலைவியாகத் தன் வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தவர். குடும்பம், குழந்தைகள், வறுமை என எதையுமே தனக்கான தடைக்கற்களாக நினைக்காமல், வெற்றி மட்டுமே இலக்கு என எண்ணி வென்று காட்டி இருக்கிறார் மேரி கோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நாட்டில் இருக்கும் பெண்களிடையே நம்பிக்கையை விதைத்திருக்கும் மேரி கோமிற்கு, வெற்றி அத்தனை சுலபமாக வந்துவிடவில்லை. சிறுமியாக இருந்த சமயம் மேரி கோம் குத்துச் சண்டை விளையாடப்போகிறேன் என்று சொன்னபோது, வீட்டினர் முதலில் எதிர்த்தார்கள். ஆனால், மேரி கோம் உறுதியாக நின்றார். வறுமையின் கொடுமையால் அந்த வயதில் அவருக்குச் சத்தான உணவுகூடக் கிடைக்கவில்லை. ஆனாலும், 'உடலினை உறுதி செய்’ என்று தீவிரமாக இருந்தார். தன் பதின்வயதிலேயே பாங்காங்கில் நடந்த ஆசியப் போட்டிகளில் குத்துச் சண்டைப் பிரிவில் தங்கம் வென்றார்.

அதன் பின் பெண்களுக்கான குத்துச் சண்டைப் பயிற்சியை வருடக்கணக்கில் மேற்கொண்டு ஒலிம்பிக் போட்டியை எதிர்கொள்ளத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டார் மேரி கோம். இந்தச் செலவைச் சமாளிக்க வீட்டில் இருந்த கறவை மாடுகளை விற்றுத்தான் அவர் பணம் திரட்ட வேண்டி இருந்தது. ஆனால், அவரது விடாமுயற்சி, அவரைக் கைவிடவில்லை. தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றார் மேரி கோம். திருமணம் முடிந்து இரட்டைக் குழந்தைகள் பெற்ற பின், இனிமேல் அவரால் எந்தப் போட்டியிலும் பங்கு பெறவே முடியாது, பங்கேற்றாலும் ஜெயிக்க முடியாது என்று மறுபடியும் விமர்சனங்களும் கேலிப் பேச்சுகளும் எழுந்தன. எதற்கும் அசரவில்லை மேரி கோம். சீனாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வார் என அவரைத் தவிர, யாரும் நம்பவில்லை. விடாப்பிடியான பயிற்சிகளாலும் மன உறுதியாலும் அந்த வருடமும் தங்கப் பதக்கத்தை வென்று அதைத் தன் இரட்டைக் குழந்தைகளுக்குக் காணிக்கை ஆக்கினார் இந்தப் பாசமிகு தாய். இப்போது ஒலிம்பிக் போட்டியில் வெற்றிக் கொடி நாட்டியதன் மூலமாக ஒட்டுமொத்த இந்தியக் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறார் இந்தக் கம்பீரக் குடும்பத் தலைவி.
டாக்டர் விகடனுக்காக மேரி கோம் அவர்களிடம் பேசியபோது தன் உடல், மன நலன்பற்றி நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். வெற்றியின் மிதப்போ இலக்கை அடைந்துவிட்ட நிறைவோ இல்லாமல், 'நான் ஓட வேண்டிய தூரம் இன்னும் அதிகம்’ என்பதைச் சொல்லாமல் சொல்கிறது அவருடைய தாகமும் தவிப்பும்.
''உங்கள் உடல் வலிமையின் ரகசியம்?''
''என் உடல் பலத்துக்கு மிகவும் கடினமான பயிற்சிகளைச் செய்கிறேன். தினமும் 14 கிலோ மீட்டர் ஓட்டப் பயிற்சி. இது தவிர ஜிம் வொர்க். ஒலிம்பிக் போட்டிகளை எதிர்கொண்ட சமயம் தினமும் 7-ல் இருந்து 8 மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்தேன். கடுமையான உழைப்பு மட்டுமே உடல் வலிமைக்கான ஒரே வழி. அதேபோல உடலை நோய் நொடிகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உடம்பு ஓய்வு கேட்கும்போது, அதற்கு ஓய்வு கொடுத்துவிட வேண்டும். உடலை அளவுக்கு அதிகமாக வருத்தவும் கூடாது.''

''பெண்கள் பெரும்பாலும் மென்மையான உடல்வாகுகொண்டவர்கள். குத்துச் சண்டையில் பல வெற்றிகளை அடைந்த நீங்கள், உங்கள் மென்மையை இழந்ததாக உணர்கிறீர்களா?''
''குத்துச் சண்டையில் உடல் உறுதியைத் தவிர, மனதின் ஒருங்கிணைப்பும் அவசியம். இதற்கு யோகா மிகவும் உதவும். ஆனால், யோகாவை முறையாக கற்றுக்கொள்ள இதுவரை எனக்கு வாய்ப்பு இல்லை. இருந்தாலும், ஓரளவுக்கு யோகா பயிற்சிகளைத் தெரிந்துகொண்டேன். என்னுடைய ப்ளஸ் பாயின்டாக நான் கருதுவது என்னுடைய மன உறுதியைத்தான். நம்முடைய உடலும் மனமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. நம்மில் பலருக்கு உடல் வலி ஏற்பட்டால், உடனே மனதும் துவண்டுவிடும். நான் என் உடலை எப்போதும் ஃபிட்டாக வைத்துக்கொள்வேன். வாழ்க்கை தந்த பேரிடிகள் மற்றும் பெரும் வெற்றிகள் என்னை ஓரளவுக்குப் பக்குவப்படுத்தி இருக்கின்றன. குத்துச் சண்டையில் வாங்கும் குத்துகளைவிட, நிஜ வாழ்க்கையில் விமர்சனம், எதிர்ப்பு, வறுமை என என் முகத்தில் விழுந்த குத்துகள் அதிகம். அதனால், என்ன நடந்தாலும் தாங்கும் மன உறுதி உண்டு. உடலின் மென்மை என்பது உண்மையில் நம் எண்ணத்தில்தான் இருக்கிறது!''

''உங்களின் உணவுப் பழக்கம் எப்படி?''
''ஸ்பெஷல் உணவுகளை சாப்பிடும் அளவுக்கு அப்போது எங்கள் வீட்டில் வசதி இல்லை. இயற்கை உணவுகள்தான் பிடிக்கும். காய்கறி, பழங்கள், தானியங்கள்தான் எனக்கு உணவு. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், வாழைப்பழங்கள். மலிவு விலையில் கிடைக்கும் வாழைப்பழங்களே எனக்கான எனர்ஜி ஆதாரம். இயற்கையாகவே எனக்கு நல்ல உடல்வாகு இருந்தது. திருமணம் மற்றும் பிரசவத்துக்குப் பிறகும் இதே உடல்வாகு நிலைத்து இருக்கிறதே... இதுதான் நான் பெற்ற வரம்!''
''குடும்ப வாழ்க்கை?''
''என்னுடைய ஓய்வு நேரத்தை முழுக்க முழுக்கக் குடும்பத்துடன்தான் செலவிடுவேன். திருமணத்துக்குப் பிறகு விளையாட்டில் சாதித்தவர்கள் மிகவும் குறைவு. என் கணவரும் என் குடும்பத்தினரும் இன்று வரை எனக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். என் கணவர் ஆன்லெர் எனக்கு எல்லா வகையிலும் உற்ற துணைவர். நான் அடைந்திருக்கும் வெற்றிகள் அவரால்தான் சாத்தியமாகின. நான் இல்லாத சமயங்களில் வீட்டை நிர்வகிப்பதிலும் சரி, எங்கள் இரட்டைக் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வதிலும் சரி... அவருக்கு நிகர் அவர்தான்!''
''அடுத்த இலக்கு?''
''எதிர்காலத்தில் அதிக எடைப் பிரிவிலான போட்டிகளில் பங்கேற்க முடிவெடுத்து இருக்கிறேன். அடுத்து நடக்க உள்ள காமன் வெல்த் மற்றும் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தை நிச்சயம் வெல்வேன். நான் நேசிக்கின்ற விஷயங்களை என்னால் நிச்சயமாக அடைய முடியும் என்ற நம்பிக்கைதான் எனது ஆணிவேர். அந்த அடிப்படையில் சொல்கிறேன். நிச்சயம் அடுத்த முறை ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்!''
