Published:Updated:

இருபது ரூபாய் மருத்துவமனை

இருபது ரூபாய் மருத்துவமனை

இருபது ரூபாய் மருத்துவமனை

இருபது ரூபாய் மருத்துவமனை

Published:Updated:
இருபது ரூபாய் மருத்துவமனை
##~##

திருச்சி மலைக்கோட்டை அருகே ஒரு கட்டடத்தின் மாடியில் இயங்குகிறது அந்த மருத்துவமனை. சின்ன விளம்பரம்கூடக் கிடையாது. ஆனாலும், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் என்று எல்லைகளைத் தாண்டி வருகிறார்கள் நோயாளிகள். மருத்துவமனைக்குப் பெயர் இருக்கிறது. ஆனால், மக்கள் 'ஏழைகளின் மருத்துவமனை’ என்றே அழைக்கிறார்கள். அந்தத் தகுதி 'திருச்சிற்றம்பலம் பல் மருத்துவமனை’க்கு இருக்கிறது என்றே தோன்றுகிறது. பல் பிரச்னைகளோடு செல்பவர்களுக்கு இவர்கள் வாங்கும் அதிகபட்ச ஆலோசனைக் கட்டணமே  இருபது ரூபாய்தான் என்றால் நம்ப முடிகிறதா? 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அட, எங்க அப்பா இருந்தவரைக்கும் பல் எடுக்க  ரெண்டு ரூபாய்; கட்ட நாலு ரூபாய்தான்

இருபது ரூபாய் மருத்துவமனை

வாங்கிக்கிட்டு இருந்தோம். 'நாலு பேருக்கு சிகிச்சை கொடுத்துப் பத்தாயிரம் சம்பாதிக்கப் பார்க்காதே! அந்தப் பணத்தை 200 பேருக்கு சிகிச்சை கொடுத்து சம்பாதிக்க நினை. விலை மதிக்க முடியாத புண்ணியம் கிடைக்கும்!’னு சொல்வார் எங்கப்பா. 1936-ல் அவர் தொடங்கினது இந்த மருத்துவமனை. 76 வருஷமா அதே பாதையில்தான் போய்கிட்டு இருக்கோம்'' என்கிறார் மருத்துவமனை நிறுவனரான சிற்றம்பலத்தின் மகனும் மருத்துவருமான கருணாநிதி.

''மருத்துவமனையை ஆரம்பிச்சபோதே, ஒவ்வொரு சிகிச்சைக்கும் இவ்வளவு இவ்வளவுதான் கட்டணம்னு எழுதிவெச்சிட்டார் அப்பா. அதுக்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா? 'பல் வலியோட வந்து காத்துக்கிட்டு இருக்குறவங்கள்ல  வசதியானவங்களும் இருப்பாங்க. வசதி இல்லாதவங்களும் இருப்பாங்க. வசதி இல்லாதவங்களுக்கு, 'டாக்டர் எவ்வளவு கேட்பாரோ? சிகிச்சை எடுத்துக்கலாமா, வேண்டாமா?’னு குழப்பம் இருந்துக்கிட்டே இருக்கும்.

இருபது ரூபாய் மருத்துவமனை

பல் வலியைவிடப் பெரிய வேதனை இது. அதேபோல, வசதியானவங்களைப் பார்த்து, ஆளுக்கு ஏத்த மாதிரி சிகிச்சையைத் தீர்மானிக்குற தப்பும் நடக்கக் கூடாது. அதுக்காகத்தான் இந்த வெளிப்படையான ஏற்பாடு. எங்கே வெளிப்படைத்தன்மை இருக்கோ, அங்கே தப்புக்கு இடம் இருக்காது’னு சொல்வார். இன்னைக்கும் அதே நடைமுறையைத்தான் பின்பற்றுறோம். மத்தவங்கள் எவ்வளவு வாங்குறாங்க, என்ன சம்பாதிக்கிறாங்கங்கிற சிந்தனையே நமக்குக் கிடையாது. நாம மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நடந்துக்கணும். அவ்வளவுதான்.

எங்க மருத்துவமனையில மாற்றுத்திறனாளிகளுக்குப் பல் எடுக்குறது, பற்களை எடுத்துட்டு மீண்டும் பொருத்துறது போன்ற சிகிச்சைகளுக்கு எல்லாம் கட்டணம் வாங்குறது இல்லை. அதேபோல், ஒவ்வொரு மாதமும் மூணாவது ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்கு இலவச சிகிச்சை முகாம் நடக்கும். இதுவரைக்கும் 600 மருத்துவ முகாம்களை நடத்தி இருக்கோம்'' என்கிற கருணாநிதி சொல்லும் ஒரு கருத்து மருத்துவச் சமூகம் கொண்டாட வேண்டியது.

இருபது ரூபாய் மருத்துவமனை

''அப்பா அடிக்கடி ஒரு வாக்கியம் சொல்வார்: 'பணக்காரங்க எங்கே போய் வேணும்னாலும் சிகிச்சை எடுத்துக்கலாம். ஆனா, ஏழைங்க? அவங்களுக்கு நாமதான் சிகிச்சை கொடுக்கணும். மருத்துவம் வியாபாரம் இல்லை. இது காலத்துக்கும் ஞாபகம் வைச்சுக்க!’அப்படின்னு. கட்டணம் குறைவா வாங்குறதால், எங்க வாழ்க்கைத் தரம் ஒண்ணும் குறைஞ்சிடலைங்க. இதிலேயே எங்களுக்குப் போதுமான வருமானம் கிடைக்குது. எல்லாத்துக்கும் மேல வேலையை முடிச்சுட்டுப்போய் ராத்திரி படுக்கும்போது, களைப்பைத் தாண்டி, நேர்மையா வேலை செஞ்சோம்கிற பெருமிதம் வருது. ஏழைகளோட வாழ்த்து மனசை நிறைக்குது. இதைவிட வேறு என்ன வேணும்?''

கருணாநிதியின் கேள்வி எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. ஆமாம்... இதைவிட வேறு என்ன வேண்டும்?

- பி.விவேக் ஆனந்த்

படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism