Published:Updated:

அழகோ அழகு!

அழகோ அழகு!

அழகோ அழகு!

அழகோ அழகு!

Published:Updated:
அழகோ அழகு!
அழகோ அழகு!

ழகும் ஆரோக்கியமும்தான் எல்லோருடைய பிரார்த்தனையும். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? ''புற அழகைக் காட்டிலும், உடல் ஆரோக்கியத்தின் மீது நாம் காட்டும் அக்கறையே முக்கியமானது. அழகு என்பது உண்ணும் உணவிலும் பராமரிக்கும் விதத்திலும்தான் இருக்கிறது!'' என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''மன வளமும் உடல் அழகுக்கு முக்கியம்'' என்கிறார்கள் மன நல நிபுணர்கள். ''உணவோடு, கூடுதலாக ஒப்பனையும் சேர்ந்தால், மேலும் பிரகாசமாக ஜொலிக்கலாம்'' என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்கள். ஆனால், உண்மை எல்லாவற்றிலுமே இருக்கிறது. இந்தக் கையேடு அந்த உண்மைகளைத் தொகுத்துத் தருகிறது. ஆம்... உங்களின் அழகுக்கு இது அணி சேர்க்கும்!

அழகோ அழகு!

தலைமுடி: முடி உதிர்தல், பேன், பொடுகுத் தொல்லை, நரை, வழுக்கை போன்ற பெரும்பாலான பிரச்னைகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையன.  

உணவு, தண்ணீர், சத்துக் குறைபாடு, வைட்டமின் பற்றாக்குறை, மன அழுத்தம், சுற்றுச்சூழல் போன்ற பல காரணங்களால் தலைமுடி உதிர்கிறது. முக்கியமாக, மன அழுத்தம் மற்றும் உடல் சூடு தரும் சூழலில் இருப்பவர்களுக்கு முடி பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது.  அதேபோல, நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டவர்கள், தைராய்டு பிரச்னை, ரத்த சோகை இருப்பவர்களுக்கும் முடி கொட்டுதல் இருக்கும். ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் ஓர் உபபொருள் கூடுதலாக இருந்தால், நிரந்தர முடி உதிர்தலுக்கு வழிவகுத்துவிடும். ஆண்களுக்கு அதிகமாக வழுக்கை விழுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

பொடுகைப் போக்க:

தினமும் தலைக்குக் குளிப்பதன் மூலம் பொடுகு, பேன், முடி உதிர்வதைத் தடுக்கலாம். எலுமிச்சைச் சாறைத் தலையில் தேய்த்துக் குளிப்பதன் மூலம் பொடுகை நீக்கலாம். தடவும்போது லேசாக எரிச்சல் ஏற்படும். மிளகை அரைத்து, தயிரில் கலந்து தடவுவதும் நல்ல பலனைத் தரும். கற்பூரத்தைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவிவந்தால் பொடுகு நீங்கும்.

அழகோ அழகு!

சீப்பு, பெட்ஷீட், போர்வை, துண்டு, தலையணை உறை எல்லாவற்றையும் நன்றாகத் துவைத்துப் பயன்படுத்துவது நல்லது. சிகிச்சைக்குப் பிறகு சீப்பு, தலையணை மூலமாகவோ மீண்டும் பரவ வாய்ப்பு அதிகம். எனவே, கவனம் தேவை.

கருகரு கூந்தல் வளர்ச்சி:

சீயக்காய் 1 கிலோ, செம்பருத்திப்பூ 50, பூலாங்கிழங்கு (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் - ஷாம்பூ தேய்ப்பதன் பலன் கிடைக்கும்) 100 கிராம், காயவைத்த எலுமிச்சைத் தோல் (பொடுகை நீக்கும்) 25, காயவைத்த நெல்லிக்காய் - 50, பாசிப்பருப்பு (முடியைப் பளபளப்பாக்க) கால் கிலோ, மரிக்கொழுந்து (வாசனைக்கு) குச்சிகள் 20, கரிசலாங்கண்ணி இலை (முடியைக் கருப்பாக்க) 3 கப்.

இவற்றை வெயிலில் காயவைத்து மில்லில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்து, அரைத்த சீயக்காய்த்தூளை வெறும் தண்ணீரில் மட்டும் கலந்து தலைக்குத் தேய்த்து அலசுங்கள். சாதக் கஞ்சியே தேவை இல்லை. கூந்தல் கருகருவெனச் செழிப்பாக வளரும். வாசனையாகவும் இருக்கும்.

நல்லெண்ணெய் உடல் சூட்டைக் குறைப்பதுடன் முடியின் பொலிவுக்கும் உதவும்.

இயற்கையான சாயத்திற்கும் குளிர்ச்சிக்கும் மருதாணி மிகவும் நல்லது. தலைக்குக் குளிக்கும்போது, உப்புத் தண்ணீர், சூடான தண்ணீர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.  

கரிசலாங்கண்ணி இலை, நெல்லிக்காய், கறிவேப்பிலை மூன்றையும் அரைத்து வடைகளாகத் தட்டி நிழலில் காயவைத்து, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, அந்த எண்ணெயைத் தினமும் தலையில் தடவிவந்தால் முடி உதிர்வது குறையும். கருமையாக வளரத் தொடங்கும்.  

மசாஜ்

தேங்காய் எண்ணெயை மிதமாகச் சூடுபடுத்தி, அதில் பஞ்சை நனைத்து, தலையில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். பிறகு வெந்நீரில் துண்டை நனைத்து, பிழிந்து, தலையில் இறுக்கமாகக் கட்டிக்கொள்ளுங்கள். இதனால், தலைமுடியின் வேர்க்காலில் எண்ணெய் நன்றாக ஊறிவிடும்.  பிறகு சீயக்காய் போட்டு அலசுங்கள். தலைக்கு நன்றாக ரத்த ஓட்டம் பாயும். தவிர, யோகா, தியானம் போன்ற மனதை ஒருநிலைப்படுத்தக்கூடிய பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலமும் முடி உதிர்வதைக் குறைக்க முடியும்.  

உணவு:

பேரீச்சை, கறிவேப்பிலை, கீரை போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் மற்றும் காய்கறிகள் முடி வளர்ச்சிக்கு நல்லது. வைட்டமின் இ அடங்கிய சோயாபீன்ஸ், சீஸ், பழங்கள் ஆகியவற்றைச் சாப்பாட்டில் சேர்த்துக்கொள்வது முடி உதிர்வதைத் தடுக்கும்.  

புரதச் சத்துள்ள பால், முட்டை, மீன் போன்ற உணவுகள் வைட்டமின் பி நிறைந்த தேங்காய், பால், தக்காளி, ஆரஞ்சு, முளைக்கட்டிய கோதுமை, ஓட்ஸ், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றைச் சாப்பிடுவதன் மூலமும் கூந்தலை மிளிரச் செய்யலாம். நிறையத் தண்ணீர் குடிப்பதும் அவசியம்.

அழகோ அழகு!

கண்கள்

சோகம், துக்கம், சந்தோஷம் போன்ற பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கண்ணாடி கண்கள்தான். கண்ணில் நீர் வடிதல், சிவந்துபோதல், கோடுகள், கண் இமை உதிர்தல், சுருக்கங்கள் எனப் பலருக்கும் கண்களே வயோதிகத்தின் வாசலாய் அமைந்துவிடுகின்றன. திடீரென உடல் எடை குறைதல், தூக்கமின்மை, வேளாவேளைக்குச் சரியாகச் சாப்பிடாமல் இருப்பது, சத்துக் குறைபாடு, தரமில்லாத மேக்கப், வெயிலில் அதிகம் அலைவது போன்ற காரணங்களால் கண்கள் பாதிக்கப்படுகிறன.

கருவளையம் / சுருக்கம்

கண்களைச் சுற்றி இருக்கும் தோல் மிகவும் மென்மையானது. நீர் வடிதல், சிவந்து போதல், வீக்கம், தூக்கமின்மை இவைதான் கண்ணில் வரும் கருவளையத்திற்கு மிக முக்கியக் காரணங்கள். பகல் தூக்கத்தைக் காட்டிலும் இரவு 8 மணி நேரத் தூக்கம் அவசியம் தேவை. பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை எடுத்துக் கண்களுக்குக் கீழே தடவலாம். வெள்ளரிக்காயை நறுக்கி, மூடிய கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஓய்வு எடுப்பதன் மூலம் கண்களின் சோர்வு நீங்கி, குளிர்ச்சி அடைந்து கருவளையங்கள் மறையும். பன்னீரைப் பஞ்சில் தோய்த்து இரவு தூங்கும்போது கண் இமை மீது வைத்துக்கொள்வதால் கருமை நீங்கி, கண்கள் பளிச்சென்று இருக்கும். கண்ணின் கீழே அதிகச் சுருக்கம் இருப்பதாக நினைப்பவர்கள் ஐலைனரோடு கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்தால் சுருக்கங்கள் தெரியாமல் இருக்கும்.

இமை

விளக்கெண்ணெய் மற்றும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் அகில் எண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு கலந்து கண்களின் மேல் போட்டு வர, வறட்சி நீங்கி, இமை மற்றும் புருவத்திலும் முடி நன்றாக வளரும்.

புருவம்

கண்களின் அழகை அம்சமாகக் காட்டுவது புருவங்கள்தான்.  சிலருக்குப் புருவத்தில் முடியே இருக்காது. நிறமும் குறைவாக இருக்கும்.  தினமும் கரிசலாங்கண்ணி, விளக்கெண்ணெயைத் தலா ஐந்து சொட்டுகள் எடுத்து, சூடு செய்து, நெல் உமித் தூளை ஒரு சிட்டிகை கலந்து, புருவத்தில் மசாஜ் செய்யலாம். அரை மணி நேரத்திற்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் துடைத்துவிட வேண்டும்.  வாரம் மூன்று முறை இப்படிச் செய்வதன் மூலம் புருவத்தில் முடி கருகருவென வளரும்.  

அழகோ அழகு!

மசாஜ்

கண்களுக்குக் கீழும் புருவங்களுக்கு மேலும் வட்ட வடிவில் மசாஜ் செய்தால், அந்த இடங்களில் ரத்த ஓட்டம் அதிகரித்து, கண்களின் கீழ் உள்ள கோடுகள் மற்றும் சுருக்கங்கள் மறைவதுடன், சோர்வு,

அழகோ அழகு!

நீங்கிப் புத்துணர்வு கிடைக்கும்.  

கண்களுக்கு முன் கட்டை விரலை வைத்து, அருகிலும் தொலைவிலும் விரலை நகர்த்தி மாற்றி மாற்றிப் பார்க்க வேண்டும். இதுபோல் தினமும் 15 முறை செய்ய வேண்டும். முகத்திற்கு முன்பு இரண்டு கைகளில் ஒன்றை மேல் நோக்கியும் மற்றொன்றைக் கீழ் நோக்கியும் வைத்து, இரண்டு கைகளையும் திரும்பத் திரும்பப் பார்க்க வேண்டும்.  தொடர்ந்து இந்தப் பயிற்சியில் ஈடுபடும்போது, கண்களில் புத்துணர்வு கிடைப்பதை உணரலாம். 20 முறை கண்களை மூடி இருட்டை உணர்வதன் மூலம் கண்களுக்கு நல்ல பயிற்சி அளிக்க முடியும்.  

உணவு  

கண்ணில் உள்ள விழி வெண் படலம் (கார்னியா), விழித்திரை நன்றாகச் செயல்படுவதற்கு வைட்டமின் ஏ அவசியம்.  வைட்டமின் ஏ நிறைந்த கேரட், முருங்கைக் கீரை போன்ற கீரை வகைகள், மீன், மீன் எண்ணெய், ஈரல், முட்டை, பால் ஆகியன கண்ணுக்கு மிகவும் நல்லது.                  

காது

சிலர் பார்க்க மிகவும் அழகாக இருப்பார்கள். ஆனால், காது மட்டும் தனியாகக் கருத்துப்போய் இருக்கும். முகத்துக்குக் காட்டும் அக்கறையைக் காதுக்கு காட்டாமல் இருப்பதுதான் இதற்குக் காரணம். இதனால் காதுப் பகுதி தடித்து, நிறமும் கருத்துவிடுகிறது.

அழகோ அழகு!

அதிக எடையுள்ள தோடுகள், பெரிய பெரிய மாட்டல்களை அணிவதால், காதுத் துளை பெரிதாகி, காது தொங்க ஆரம்பித்துவிடும். சிலருக்குக் காது அறுந்துக்கூடப் போக நேரிடும். இதனை எளிதாகச் சரி செய்துகொள்ள முடியும். மரத்துப்போக மருந்து கொடுத்து, பெரிதாக உள்ள துளைகளில் லேசாகக் கீறிவிட்டுத் தைத்துவிடுவார்கள். சில நாட்களில் துளைகள் மூடிவிடும்.

ஒரு சிலருக்கு சில உலோகங்களினால் ஒவ்வாமை ஏற்படக் கூடும். புண்கள் ஏற்படலாம். அவற்றைத் தவிர்க்க வேண்டும். வாரம் ஒரு முறை தலைக்குக் குளிக்கும்போதாவது தோடுகளைக் கழற்றி சோப்பு நீரில் பிரெஷ் கொண்டு சுத்தம் செய்து அணியலாம். தரமான பட்ஸை ஏதேனும் ஓர் எண்ணெயில் தோய்த்துக்கொண்டு, காது ஓரங்களைச் சுத்தம் செய்யலாம்.

மூக்கு

பொதுவாக 40 வயதைத் தாண்டியவர்களுக்கு மூக்கின் மேல் முக்கியப் பிரச்னையாக இருப்பவை 'பிளாக் ஹெட்ஸ்’ என்கிற கரும்புள்ளிகள்.  சிலருக்கு வெள்ளைப் புள்ளிகளும் தோன்றும்.  தோலில் உள்ள துவாரங்கள் அடைபடும்போது இந்தப் புள்ளிகள் வருகின்றன.  

அழகோ அழகு!

கரும்புள்ளி / வெள்ளைப் புள்ளி

வாரம் ஒரு முறை மிதமான வெந்நீரில் சுத்தமான துணியை நனைத்து, புள்ளிகள் இருக்கும் இடத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். அந்தப் பகுதி மிருதுவாகும்.  நாள்பட்ட கரும்புள்ளிகள் மிகவும் அழுத்தமாக இருக்கும். கடைகளில் விறகும் 'பிளாக் ஹெட்ஸ் ரீமூவல் ஸ்ட்ரிப்ஸ்’ பயன்படுத்தினாலும் முழுவதுமாக நீங்காது.

நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஜாதிக்காய், மாசிக்காய் இரண்டையும் தலா 2 எண்ணிக்கை எடுத்து, ரவைபோல் அரைத்து, சிறிது சந்தனம், சர்க்கரை சேர்த்துக் கலந்துகொள்ள வேண்டும். அதில் ஒரு சிட்டிகை பளிங்கு சாம்பிராணியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  முகத்தை வெந்நீரால் நன்றாகச் சுத்தம் செய்து, இந்த பவுடரை மூக்கின் மேல் வைத்துப் புள்ளிகள் உள்ள இடத்தில் நன்றாக அழுத்தித் தேய்க்க வேண்டும் அல்லது துளசி, புதினா, வேப்பிலை, எலுமிச்சைச் சாறு இவற்றை மாற்றி மாற்றி வெந்நீரில் போட்டு ஆவியும் பிடிக்கலாம். பிறகு ஒரு துணியில் ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். மாதம் ஒரு முறை தொடர்ந்து ஆவி பிடிப்பதன் மூலம் மூக்கின் மேல் உள்ள புள்ளிகள் நிரந்தரமாக மறைய வாய்ப்புகள் அதிகம் உண்டு.

மசாஜ்

ஈரப்பசை உள்ள க்ரீமைக் கொண்டு மூக்கில் புள்ளிகள் உள்ள இடத்தில் விரல்களால் பக்கவாட்டிலும் நுனியிலும்  மசாஜ் செய்ய வேண்டும். வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை அரைவைக் கலவையை மூக்கின் மீது தடவி மேலிருந்து கீழாக மூக்கை ஒட்டி மசாஜ் செய்தால் சொரசொரப்பு இல்லாமல் பளிச்சென இருக்கும்.  தொடர்ந்து வாரம் ஒரு முறை மசாஜ் செய்தால் புள்ளிகள் வராது.

கன்னம்

அழகான கன்னமாக இருந்தாலும் சிலருக்கு எண்ணெய்ச் சருமமாக இருந்தால் பருக்கள் வரலாம். கன்னங்கள் ஒட்டி இருப்பதும் புஷ்டியாய் இருப்பதும் அவரவர் தாடை எலும்பு, முக அமைப்பு, பரம்பரை வாகைப் பொறுத்தது.  கன்னத்துக்கு ஈரப்பதத்தைத் தருவது, மசாஜ் செய்வது, சத்தான ஊட்டச்சத்து உணவை உட்கொள்வது போன்றவற்றின் மூலம் கன்னத்தில் பளபளப்பைக் கூட்டி மெருகூட்டலாம்.  

அழகோ அழகு!

உப்பலான கன்னத்திற்கு...

தினமும் குளிப்பதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் வெண்ணெயுடன் சிறிது சர்க்கரை கலந்து கன்னத்தில் தேய்க்க வேண்டும். ஆப்பிளை நறுக்கி அரைத்து, கன்னப் பகுதியிலிருந்து காது வரை பூசி, தினமும் கீழிருந்து மேலாக 'ஃபேஷியல் ஸ்ட்ரோக்’ கொடுத்துவந்தால், ஒரே வாரத்தில் அழகான கன்னம் வந்துவிடும்.

அழகோ அழகு!

அரைத்த பப்பாளி விழுது மற்றும் தேன் ஆகியவற்றைத் தலா ஒரு டீஸ்பூன் எடுத்துக் கலந்து முகத்தில் பூசி பத்து நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும்.  தேன், சருமத்தின் சுருக்கங்களைப் போக்கி, கன்னத்தைப் பளபளப்பாக்கும்.

உணவு

தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா, சாரை பருப்பு, முந்திரிப்பருப்பு இவற்றைத் தலா ஒன்று எடுத்து வெந்நீரில் ஊறவைத்து, அதில் ஒரு பருப்பை மட்டும் அரைத்து முகத்தில் பூசிவிட்டு, மீதி மூன்று பருப்பையும் சாப்பிடலாம். தோலில் எண்ணெய்ப் பசை சுரப்பதற்கு இந்தப் பருப்பு வகைகள் உதவும். இதனால் முகச் சுருக்கங்கள் மறைவதுடன், கன்னம் சதைப் பற்றுடன் மின்னும்.

ஆப்பிள், கேரட் துண்டுகளைத் துருவி ஜூஸ் எடுத்து, எலுமிச்சைச் சாறு கலந்து தினமும் காலை குடித்துவந்தால், கன்னத்தில் சதை போடுவதுடன் நிறம், பளபளப்பு கூடும்.

ஓட்ஸ் ஒரு டேபிள்ஸ்பூன், பால் ஒரு கப், வெண்ணெய், தேன் தலா ஒரு டீஸ்பூன், 2 துண்டு சீஸ் இவற்றைக் கலந்து தினமும் காலை சாப்பிட வேண்டும். கூடவே, ஒரு கப் ஆரஞ்சு (அ) ஆப்பிள் ஜூஸ் குடித்து வந்தால் ஒட்டிய கன்னம் ஆப்பிள்போல மாறும்.  

உதடு

உடலில் வியர்க்காத பகுதி எது என்றால் அது உதடுதான்.  முகத்தை அழகாய்க் காட்டி, வனப்பைக் கூட்டுவதில் உதட்டுக்கு முக்கியப் பங்கு உண்டு.  உதடுகளில் வறட்சி, கருத்துப் போதல், ஈரப்பசை இன்மை போன்ற காரணங்களால் உதட்டின் அழகு கெடும்.  

அழகோ அழகு!

தரமற்ற லிப்ஸ்டிக் பயன்படுத்தும்போது தோல் கருப்பாக வாய்ப்பு அதிகம். வேதிப்பொருட்கள் கலந்த பழச்சாறு குடிப்பதாலும் சில வகைப் பழங்கள், கொட்டைகளின் சாறு உதட்டில் படுவதாலும் வைட்டமின் பி குறைபாட்டினாலும் உதடு புண்ணாகி, அந்த இடம் கருத்துப் போகலாம். புண் இருந்தால், தினமும் தேங்காய் எண்ணெய் அல்லது பாரஃபின் தடவினால் புண்கள் விரைவாக ஆறும்.  

பல் துலக்கும்போதும், முகத்துக்கு ஸ்க்ரப்பிங் செய்யும்போதும், உதடுகளை லேசாகத் தடவிவிட்டால், உதட்டில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி வழவழப்பாக இருக்கும்.

செக்கச் சிவந்த உதடு

பன்னீர் ரோஜாவின் சாறு அல்லது பன்னீரும்கூட உதட்டுக்கு நல்ல நிறம் கொடுக்கும். தயிர், பாலாடையையும் உபயோகிக்கலாம். உதட்டில் தேன் தடவுவதன் மூலம், வறட்சி நீங்கி, பளிச்சிட வைக்கும். உலர் திராட்சையின் தோலை உரித்து, உதட்டின் மேல் தடவிவர, உதட்டில் பளபளப்புக் கூடும்.  

மசாஜ்

ஆங்கில உயிரெழுத்துகளான கிணிமிளிஹி ஆகியவற்றை 10 நிமிடங்கள் தொடர்ந்து மெதுவாகச் சொல்லிக்கொண்டிருப்பது உதட்டுக்கு நல்ல பயிற்சி.  லிப்ஸ்டிக் இடுவதுபோல், விரலால் மேல் உதட்டின் ஓரங்களிலிருந்து மசாஜ் செய்தபடி நடுவிலும் கீழ் உதட்டில் நடுவிலிருந்து மசாஜ் செய்து ஓரங்களிலும் கொண்டுவர வேண்டும். இதனால் உதடுகள் புத்துணர்வு அடையும்.  

நகம்

அகத்தின் அழகைப் பிரதிபலிப்பதில் நகத்துக்கும் பெரும் பங்கு உண்டு. வைட்டமின் சி குறைபாடு இருந்தால் நகங்கள் பாதிப்படையும். சிலருக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். இது உடலுக்குக் கேடு விளைவிக்கக் கூடியது. நகக்கண்களில் நோய்க் கிருமிகள் அதிகம் தாக்கும். நகம் கடிக்கும்போது இந்தக் கிருமிகள் உடலுக்குள் சென்று எளிதில் நோய்களுக்கு ஆளாக்கும்.

அழகோ அழகு!

உணவு சாப்பிடுவதற்கு முன், பாத்திரம் தேய்த்த பிறகு, கழிப்பறைக்குச் சென்று வந்த பிறகு கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும். பெரும்பாலான நோய்த்தொற்றுக்கு நகமே முக்கியக் காரணம். எனவே, நகங்களை முறையாகப் பராமரிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தைக் காக்கலாம்.

நகங்களில் அடிபட்டாலோ, சொத்தை, நகச்சுற்று போன்ற பாதிப்புகள் இருந்தாலோ மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெறுவதே பாதுகாப்பானது. மருத்துவக் குணம் கொண்ட மருதாணி இலைகளை அரைத்துக் கைகளில் இடுவது நகங்களைப் பாதுகாப்பதோடு, உடலுக்கும் குளிர்ச்சி தரும். அடிக்கடி நகக்கண்களில் மிருதுவான பிரஷ் அல்லது துணிகளைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். நகம் வெட்டும்போது சதைப்பகுதி பாதிக்கப்படாமல் கவனமாக வெட்ட வேண்டும். நகங்கள் சிலருக்கு உடைந்து போகும். இதற்கு கால்சியம் குறைபாடுதான் காரணம். நகம் கருப்பாக சொத்தையுடன் இருந்தால் துத்தி இலையை, சாம்பிராணியுடன் சேர்த்து அரைத்துப் பற்றுப் போட்டால் மறையும். தினமும் படுக்கச் செல்லும் முன்பு இளம் சூடான நீரில் கை, கால் விரல்களை நன்றாகத் தேய்த்து நகங்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் அதிகரிக்கலாம்.

உணவு

உணவில் அதிகம் கால்சியம் சேர்த்துக்கொள்வது பலன் தரும். எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, பைனாப்பிள், கொய்யா, நெல்லிக்காய் போன்ற வைட்டமின் சி அதிகம் உள்ள பழங்களும் அவசியம். தானியங்களில் முளை கட்டிய பயிறு வகைகளை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிடலாம். கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, அகத்திக்கீரை மற்றும் முருங்கைக்கீரை போன்றவற்றை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது.

மசாஜ்

நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெயை லேசாகச் சூடாக்கி நகங்களில் தடவி, நெயில் பாலிஷ் போடுவதுபோல் மசாஜ் செய்யலாம். இளஞ்சூடான நீரில் துளசி, புதினா இலை போட்டு 10 நிமிடம் நகங்கள் மூழ்குமாறு வைத்தால் கிருமிகள் அழிந்து நகம் சுத்தமாகும்.

புதினா இலை எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தால் நகத்தைச் சுற்றி ஏற்படும் வீக்கம், வலி ஆகியன குணமாகும்.

கால்கள்

கால்களுக்குப் பலத்தைத் தருவதற்கும் எலும்புகளை வலுவாக்கவும் தினமும் உடற்பயிற்சியும் நடைப் பயிற்சியும் அவசியம். எலும்புக்குள் இருக்கும் திசுக்கள் நன்றாக வளர்வதற்கு வைட்டமின் டி தேவை. உடலுக்குச் சூரிய ஒளி படாமல் இருத்தல், ஊட்டச்சத்துக் குறைபாடு, உடலுக்குப் போதிய அசைவுகள் இல்லாமல் போவது போன்றவற்றால் எலும்பு, மூட்டு தேய்மானம் ஏற்படும்.  

அழகோ அழகு!

வெடிப்பு

அதிக எடை உள்ளவர்கள், வறண்ட சருமத்தினர், அதிக அழுக்கான இடங்களில் நடப்பவர்கள், தோட்ட வேலை செய்பவர்கள், காலணி அணியாமல் நடப்பவர்கள் போன்றவர்களுக்குக் காலில் வெடிப்பு வரும் வாய்ப்புகள் அதிகம்.  வெடிப்புகள் வராமல் பஞ்சுபோல் பாதம் மிருதுவாக இருக்க, பீர்க்கை நாறிலிருந்து

அழகோ அழகு!

ப்யூமிக் கற்கள் வரை பயன்படுத்தப்படுகின்றன. தினமும் கால்களைத் தண்ணீரில் ஊறவைத்து ஸ்க்ரப்பிங், மாய்ச்சுரைசிங் செய்வதன் மூலம் கடினமான தோலை எளிதில் மிருதுவாக்க முடியும். பித்த வெடிப்புகளையும் குணமாக்கிக்கொள்ளலாம்.

கால்களை நெடுநேரம் சுடுதண்ணீரில் ஊறவைத்துப் பிறகு தேய்க்கலாம்.  கால்களை நன்றாகத் துடைத்துவிட்டு, மாய்ச்சுரைசிங் க்ரீமை கால், விரல் இடுக்கு என்று எல்லா இடங்களிலும் மசாஜ் செய்வதுபோல் தடவ வேண்டும்.  

உள்ளங்காலில் வெடிப்பு வந்திருந்தால், சோரியாசிஸ்தானா என்று உறுதி செய்து அதற்குரிய சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்.

ஒரு சின்ன பாட்டில் கிளிசரினில் நான்கு துளி எலுமிச்சைச் சாறைவிட்டு, நன்றாகக் கலக்கி மூடி வைத்துவிட வேண்டும்.  இதைத் தினமும் இரவில் தூங்கப்போகும் முன் பாத வெடிப்புப் பகுதியில் தேய்த்து வர வெடிப்பு மறைந்து பாதம் மிருதுவாகும்.  

கால்களில் அதிக வெடிப்பு இருந்தால், இரவு தூங்குவதற்கு முன்னர் வாசலின் (அ) பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவி, சாக்ஸ் அணிந்துகொண்டு உறங்கச் சென்றால் வெடிப்பு நீங்கிப் பாதம் மிருதுவாகும்.

முட்டி கருமை

கால் முட்டி போட்டுத் தொழுவது, கைகளை மேஜை மீது வைத்துக்கொண்டு நெடுநேரம் கம்ப்யூட்டர் முன்பு இருப்பது போன்ற காரணங்களால் அந்த இடங்களின் இயல்பான நிறம் மாறி கருத்துவிடும். கால் முட்டி தரையில் படாமல் துணியினை விரித்து உட்காரலாம். ஆலிவ் எண்ணெயை தினமும் தடவினால், கருமை மாறும். பயத்த மாவைப் பாலுடன் கலந்து பூசி 5 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும்.

அழகோ அழகு!

குதிகால் வலி

டீன் ஏஜ் பெண்கள் பென்சில் ஹீல்ஸ் போடுவதால் கால் எலும்பு, தசைப் பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். குதிகால் வலியால் சாதாரணமாகக்கூட நடக்க முடியாமல் போகும். ஒரே மாதிரியான உயரம் இருக்கக் கூடிய ஹீல்ஸ் அணியலாம். அதுவும், குறைந்த நேரம் மட்டுமே குதி உயர்ந்த காலணிகளை அணிய வேண்டும். எப்போதும் காலணி அணிந்து நடப்பது நல்லது. காலில் உண்டாகும் வியர்வையைக் காலணி உள் வாங்கிக் கொள்ளும். ஜாகிங், வாக்கிங் செய்ய நல்ல தரமான ஷூக்களையே பயன்படுத்த வேண்டும். இதனால், உடல் புத்துணர்வுடன் இருக்கும். காற்றோட்டம் உள்ள ஷூக்கள் அணிவது கால் தொற்றுநோய்களைத் தடுக்கும். ஜிம்முக்குப் போகும் பழக்கமுள்ளவர்கள் அங்கே குளிக்கும்போது குளியல் அறை செருப்பு அணியாமல் குளிக்கக் கூடாது. இதனால், தொற்று நோய் பரவும் ஆபத்து உண்டு.  

உணவு / பயிற்சி

பால், கீரை, எள், சீஸ், பனீர் சிறிய வகை மீன்களில் கால்சியம் அதிகம் உள்ளது.  பாலக்கீரையில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருக்கிறது.  உணவுப்பழக்கம், நடைப் பயிற்சி, மூட்டு மற்றும் தசைகளை அசைப்பதற்கான உடற்பயிற்சி போன்றவற்றால் மட்டுமே எலும்பை உறுதியாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள முடியும்.  

கை

பாத்திரம் கழுவப் பயன்படுத்தும் பவுடர், துணி சோப்பு போன்றவற்றின் அமில, காரத்தன்மையாலும் தக்காளி, எலுமிச்சம்பழம் போன்றவற்றாலும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும்.  பூஞ்சைக் காளான் தொற்றும் ஏற்படக் கூடும். பாத்திரங்களைக் கழுவும்போது கிளவுஸ்களைப் பயன்படுத்துவது நல்லது. இரவு உறங்கப் போகும் முன் உப்பை இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து, இரு கைகளிலும் படுமாறு நன்றாக ஸ்க்ரப்பிங் செய்து கழுவி, துடைத்து விட்டு ஈரப்பசை உள்ள லோஷன் தடவலாம்.  குளிக்கும் முன்பு கைகளுக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்து ஊறவைத்துக் குளிக்கலாம். தோல் வறட்சியாகும் சமயத்தில் வாசலின் தடவுவதன் மூலம் கைக்கு ஈரப்பதம் கிடைக்கும்.

அழகோ அழகு!

கைகளை தேய்த்து நன்றாக மசாஜ் செய்து ஈரம் போகத் துடைக்க வேண்டும். ஒரு கப் தண்ணீரில் திரவ சோப் சிறிது விட்டு நன்றாகக் கலந்து, அந்த நீரில் விரல் நுனிகள், நகங்கள் முழுவதுமாக மூழ்கும் அளவு ஐந்து நிமிடம் ஊறவிடுங்கள். இப்படிச் செய்வதால் கைகளின் ஓரங்கள், நக இடுக்குகளில் உள்ள அழுக்கினை முற்றிலும் நீக்க முடியும். பிறகு பிரஷ் கொண்டு நன்றாக நக இடுக்குகள், ஓரங்கள், கை முழுவதையும் தேய்த்துக் கழுவுங்கள். இதன் மூலம் இறந்த செல்கள் நீங்கி, புத்துணர்வோடு இருக்கும்.  

மசாஜ்

கைகளுக்கான பயிற்சி மிகவும் முக்கியம்.  விரல்களில் வலி, வீக்கம் ஏற்படலாம்.  கை விரல்களில் தேன் தடவி, பத்து நிமிடம் மசாஜ் செய்யலாம். கை விரல்கள் மிருதுவாகும்.  கைகளுக்குள் அடங்கும் சிலிகான் பந்தை வாங்கி, மாவு பிசைவது போல் பத்து நிமிடம் செய்வதன் மூலம் கை விரல்கள் நன்கு வலுவடையும்.  இரண்டு கைகளையும் ஒன்றாக இணைத்து, சூரிய நமஸ்காரம் செய்வது போல் மேல் நோக்கி நிறுத்தி, திரும்பவும் இறக்கவும்.  இதுபோல் பத்து முறை செய்ய வேண்டும்.  கைகள், தோள்பட்டை வலி நீங்குவதுடன் தசைகள் விரிவடைந்து, ரத்த ஓட்டமும் சீராகும்.  

சருமம்

வியர்வை, வேர்க்குரு, தோல் கருத்துப் போவது, முகப்பரு, கொப்புளங்கள் எனக் கோடைக் காலத்தில் சருமம் பாதிப்புகளுக்கு உள்ளாகும். அதேபோல், குளிர்காலத்திலும், எண்ணெய்ப் பசை இல்லாமல் தோல் வறண்டு, சுருக்கங்கள் தோன்றி வயோதிகத் தோற்றத்தை ஏற்படுத்திவிடும். உடலைப் போர்வைபோல் போர்த்தி, உடலுக்குப் பாதுகாப்புக் கவசமாகவும் செயல்படும் சருமத்தைப் பொலிவோடு வைத்திருக்க வேண்டியது அவசியம்.

அழகோ அழகு!

சுருக்கம்

நம் உடலில் வியர்வை வெளியே வரும்போது தோல் வறண்டு விடுகிறது.  தோலை ஈரப்படுத்திவிட்டு (அ) குளித்தவுடன் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் சிறிது எடுத்துத் தண்ணீருடன் கலந்து உடலில் தேய்த்துக் குளிக்கலாம். இது சருமத்தின் ஈரப்பசையை அதிக நேரம் தக்கவைக்கும்.  

மது, சிகரெட் பழக்கம் சீக்கிரமே வயோதிகத் தோற்றம் வந்துவிடுகிறது.  சருமத்தின் ரத்தநாளங்கள் வலுவிழந்துவிடும். சருமத்திற்கு சிறந்த எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடிய வைட்டமின் 'ஏ’ சத்தைத் தோலில் இருந்து உறிஞ்சிவிடும். இதனாலும் தோலில் சுருக்கங்கள் உண்டாகும்.

உடல் மெலிய வேண்டும் என்பதற்காக, கொழுப்புச் சத்தே இல்லாத உணவுப் பொருட்களைச் சாப்பிடுவதும் நல்லது அல்ல.  இது சருமம் வெளிறிப்போவதற்குக் காரணமாகிவிடும். போதுமான அளவுக்கு கொழுப்புச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது நல்லது. அப்போதுதான் தோல் சுருக்கம் இல்லாமல் ஈரப்பதமாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

வியர்வை

பொதுவாக, இரண்டு சதவீத நபர்கள் அதிக வியர்வையால் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.  கூடுதலாக வியர்க்கும்போது நீர்ச்சத்து, உப்புச்சத்து வீணாகி, சில சமயம் மயக்கம்கூட வரலாம். மனரீதியான பிரச்னைக்கும் ஆளாக நேரிடும். தேர்வு எழுத சிரமப்படுவார்கள். கை குலுக்கத் தயங்குவார்கள்.  

அழகோ அழகு!

கோடை காலங்களில் வியர்வை அதிகம் வெளியேறும். வியர்வை வரும் பாதையில் அடைப்பு ஏற்பட்டால் உண்டாவதே வியர்க்குரு.

இதனால் அரிப்பு ஏற்பட்டு எரிச்சல் உண்டாகும். எங்கு அதிகமாக வியர்வை வருகின்றதோ, அந்த இடத்தைத்தான் வியர்க்குரு தாக்கும். இதைச் சரியான நேரத்தில் கவனித்து பெரிய கட்டிகளாக மாறுவதற்கு முன்னர் தடுக்க வேண்டும்.

தினமும் இரண்டு அல்லது மூன்று முறை குளிக்க வேண்டும். வியர்க்குரு வந்த இடத்தில் அரைத்த சந்தனத்தைத் தடவிக் கொள்ளலாம். நல்ல காற்றோட்டம் இருக்கும் அறையில் இருந்தால் தோலின் அடைப்பு சரியாகிவிடும். பருத்தியிலான உடைகளைப் பயன்படுத்த வேண்டும்.  

கழுத்தில் கருமை

பெரும்பாலானவர்கள் கழுத்தின் அழகில் கவனம் செலுத்துவது இல்லை. அதனால், கழுத்தின் பின் பகுதியில் அதிகப்படியான அழுக்கு தேங்கி விடுகிறது. கழுத்தை அழகாக்க, முகத்திற்குப் போடும் பயத்தமாவு, கடலை மாவு இவற்றைச் சிறிது எடுத்து அதனுடன் தயிர், எலுமிச்சைச் சாறை விட்டுக் கழுத்துப் பகுதியில் பூசி, பத்து நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். கழுத்தில் கருமை மறைவதுடன், கழுத்தில் தொங்கும் அதிகபடியான சதை, சுருக்கங்கள் மறைந்து சங்குபோல் கழுத்து மிளிரும். 'ஆன்டிஆக்ஸிடன்ட் சீரம்’ உள்ள கிரீம்களையும் பயன்படுத்தலாம். இது சூரிய ஒளிபடும்போது தோல் கருப்பு நிறமாக மாறிவிடாமல் பாதுகாக்கிறது.

தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும். கட்டாயமாக 8 மணி நேரம் தூங்க வேண்டும்.

அலர்ஜி

எந்த க்ரீமைப் போட்டாலும், அலர்ஜி ஆகிறது என்று அலறுபவர்கள், இயற்கையான முறையில் க்ரீம்களைத் தயாரித்து வைத்துக்கொள்வது நல்லது.

முல்தானி மட்டி, சந்தனத்தூள் இரண்டையும் சம அளவு எடுத்து அதில் சில சொட்டுகள் ரோஸ் தண்ணீரை விட்டு, காற்றுப் புகாத பாட்டிலில் இறுக மூடிவிட வேண்டும். இந்தக் கலவை ஒரு மணி நேரத்தில் கேக்போல் ஆகிவிடும்.  முகத்தை நன்றாகக் கழுவி இந்தக் கேக்கை தினமும் ஒரு பஞ்சினால் முகத்தில் க்ரீம் போலத் தடவினால் பளிச்சென இருக்கும்.      

எண்ணெய்ப் பசை சருமத்தினர், முல்தானிமட்டிக்குப் பதிலாக வெட்டிவேரை நைசாக அரைத்து, பவுடர் போல் செய்து, முகத்தில் பூசலாம். அதிகபடியான எண்ணெய் ஈர்க்கப்பட்டு முகம் பிரகாசமாகும்.    

அழுக்கைப் போக்க

மேல்புறத் தோலில் உள்ள நுண்ணிய துவாரங்களில் அழுக்குப் படிந்துவிடும். வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது. இதனால் தோலின் நுண்ணிய துவாரங்களில் படிந்துள்ள அழுக்குகள் நீங்கிவிடும்.

குளிக்கும்போது அழுக்கை நீக்கும் தரமான, வீரியம் குறைந்த சோப்பை உபயோகிக்கலாம். தரமான சோப்பு கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாவைச் சிதைத்து சருமத்திற்குக் கூடுதல் ஆரோக்கியத்தைத் தருகிறது.

உணவு

நொறுக்குத் தீனிகளைத் தவிர்க்க வேண்டும். இரும்புச் சத்து நிறைந்த பால், முட்டை, மாமிசம், கீரை , பேரீச்சை. புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகள், தானியவகைகள், கால்சியம் நிரம்பிய உணவுகள், வைட்டமின் அதிகம் இருக்கும் பழங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டாலே தோலில் பளபளப்புக் கூடும்.

மனதுக்கு மகிழ்ச்சி அழகு!

எல்லாவற்றையும்விட முக்கியம் அக அழகு. அதுதானே முகத்தில் தெரியும்?

அழகோ அழகு!

மன அழகுக்கு முக்கியம் மனச் சுமை இல்லாமல் பார்த்துக்கொள்வது. வேலைக்கு எப்படி நேரம் ஒதுக்குகிறீர்களோ, அதேபோல, வாழ்க்கையை வாழவும் நேரம் ஒதுக்குங்கள்.

அழகோ அழகு!

 எல்லாமும் என்னால்தான் முடியும் என்கிற எண்ணத்தை விட்டொழியுங்கள். நீங்கள் இல்லாவிட்டாலும் உலகம் இயங்கும் என்கிற எளிய உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள்.

அழகோ அழகு!
அழகோ அழகு!

வாய்விட்டுச் சிரியுங்கள். குழந்தைகளுடன், குடும்பத்துடன் ஒரு மணி நேரமாவது செலவிடுங்கள்.

அழகோ அழகு!

உங்களுக்கே உங்களுக்கு என ஒரு நாளில் ஒரு மணி நேரத்தையாவது ஒதுக்குங்கள். அந்த நேரத்தில் நல்ல இசை கேளுங்கள் அல்லது புத்தகம்  வாசியுங்கள் அல்லது வேடிக்கை பாருங்கள்.

அழகோ அழகு!

 எட்டு மணி நேரத் தூக்கத்தை உறுதிசெய்துகொள்ளுங்கள்.  

அழகோ அழகு!

 மாதத்துக்கு ஒரு முறை - ஒரு நாளேனும் வெளியூர்களுக்குச் சுற்றுலா சென்று வாருங்கள். அதேபோல, மாதத்துக்கு ஒரு முறையேனும் மௌன விரதம் இருந்து பழகுங்கள். மௌனம் ஒரு மாபெரும் தவம்!  

தகவல்கள்: மனநல மருத்துவர் அசோகன்,

காது மூக்கு தொண்டை மருத்துவர் கார்த்திகேயன்,

உணவியல் நிபுணர் சோஃபியா,

தோல் மருத்துவர் ரத்னவேல்.

தொகுப்பு: ரேவதி

படங்கள்: பொன்.காசிராஜன், நவசந்தகுமார்,

          ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism