Published:Updated:

கருணைகொண்ட உள்ளங்களே... கவனிக்க!

கருணைகொண்ட உள்ளங்களே... கவனிக்க!

பிரீமியம் ஸ்டோரி
##~##

க்கமும் துயரமும் கண்களில் ஒருசேர வழிகிறது. வெறும் 30 கிலோ எடை. நிமிட நேரம்கூட நிற்க முடியாத பலவீனத்தோடு கட்டிலில் முடங்கிக்கிடக்கிறான் அண்ணாமலைநாத். காரணம், கல்லீரல் கோளாறு. சிறிய வாடகை வீட்டில் குடித்தனம் நடத்தும் அந்த ஏழைச் சிறுவனின் தாய் நிறைமதிச் செல்வம் கண்கலங்கிப் பேசுகிறார். 

'அண்ணாமலை எங்களுக்கு ஒரே பிள்ளை. எட்டாங்கிளாஸ் படிக்கிறப்ப, திடீர்னு கை கால் குடைச்சல், நிற்காமல் வாந்தி, அடிக்கடி வயித்து வலின்னு துடிச்சிட்டான். ஆஸ்பத்திரியில சேர்த்து சிகிச்சை பார்த்திட்டிருக்கும்போதே மஞ்சக் காமாலை வந்து முத்திப்போச்சு. வேலூர் சி.எம்.சி-யில் கல்லீரலை டெஸ்ட் பண்ணப்பதான், 'கல்லீரல் பித்தநீர்க் குழாயில் சுருக்கம்தான் பிரச்னைக்குக் காரணம்’னு சொன்னாங்க. கல்லீரல் 80 சதவீதம் சேதமாயிடுச்சு. மாற்று அறுவைசிகிச்சை செய்யறதைத் தவிர வேற

கருணைகொண்ட உள்ளங்களே... கவனிக்க!

வழியே இல்லை. உறவினர்கள் கல்லீரல் தானமாத் தரலாம்னு டாக்டர் சொன்னாங்க. என் கணவருக்கு சிகரெட் பழக்கம் இருக்கிறதால, அவரோட கல்லீரல் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. என்னைப் பரிசோதனை செய்து பார்த்துட்டு என்னுடைய கல்லீரலைப் பொருத்தலாம்னு சொன்னாங்க. 20 லட்சம் செலவாகுமாம். என் கணவரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி அவர் சாப்பாட்டுலகூட மிச்சம் பிடிச்சு அனுப்பிய பணம், அப்பா சொத்துல என்னோட பங்கை வித்த பணம் எல்லாமுமே ஒரு வாரத்து வைத்தியச் செலவுக்குக்கூடத் தாக்குப்பிடிக்காதுனு சொல்றாங்க. எப்படியாச்சும் எம்பிள்ளையைக் காப்பாத்திடணும்னு துடிச்சுக்கிட்டு இருக்கேன். ஆனா வழிதான் தெரியலை...' - இயலாமையில் துடிக்கிறார் தாய்.

அண்ணாமலைக்குச் சிகிச்சை அளித்துவரும் குளோபல் மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் ஜோய் வர்கீஸ், ''பித்தநீரைச் சுரப்பது, உயிர்ச் சத்துக்களைத் தேக்கிவைப்பது, நச்சுக்களை நீர்த்துப்போகச் செய்வது போன்ற 100-க்கும் மேற்பட்ட வேலைகளைக் கல்லீரல் செய்கிறது. குடிப்பழக்கம் இருப்பவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தொற்று மற்றும், கூடுதல் உடல் பருமன் உள்ளவர்களுக்குக் கல்லீரல் பாதிப்பு வரலாம். அண்ணாமலைநாத்துக்கு வந்திருக்கும் நோயின் பெயர் பிரைமரி ஸ்க்லெரொசிங் கொலான்ஜைட்டிஸ்(Primary sclerosing cholangitis)  இது அபூர்வமான நோய். உடலில் உள்ள நோய்எதிர்ப்புச் சக்தியே உடலுக்கு எதிராகச் செயல்பட ஆரம்பித்துவிடும்.

கருணைகொண்ட உள்ளங்களே... கவனிக்க!

பொதுவாக ஒரு மனிதனுக்குக் கல்லீரல் 1,500 கிராம் அளவு இருக்கும். உயிர் வாழ்வதற்கு 30 சதவீதம்

கருணைகொண்ட உள்ளங்களே... கவனிக்க!

கல்லீரல் நன்றாக இருந்தாலே போதும். அதனால்தான் 70 சதவீதக் கல்லீரல் பழுதான பிறகே உடலில் அறிகுறிகள் தென்படுகின்றன. மிக விரைவில் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்தாகவேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறான் அண்ணாமலை.

50 கிலோ எடை கொண்ட ஒருவருக்கு 450 கிராம் அளவு கல்லீரல் தேவை. கல்லீரல் தானம் கொடுத்த ஒருவருக்கு, மீதம் உள்ள கல்லீரல் 700 கிராம் இருந்தால், மூன்றே மாதங்களில் ஒரு கிலோவாக வளர்ந்திடும். அதேபோல் பெறப்பட்டவர்களுக்கும் கல்லீரல் வளர்ந்துவிடும்.'' என்கிறார் நம்பிக்கை வார்க்கும் விதமாக.

கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை எப்படி நடக்கும்?  

''கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்கு எட்டு மணி நேரம் பிடிக்கும். இரண்டு மாதங்கள் சென்னையில் தங்கவேண்டி இருக்கும். அதன் பிறகுதான் ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்துக்கொள்ளவேண்டி இருக்கும். அரசுப் பொது மருத்துவமனைகளில் மருந்துகள் இலவசமாகத் தருகிறார்கள்.  சிகிச்சைக்குப் பிறகு, முறையான கவனிப்பு இருந்தால், நன்றாகப் படிக்கலாம்; எந்த வேலை வேண்டுமானாலும் செய்யலாம்.

பிறவியிலேயே கல்லீரல் குறைபாடு உள்ள 4 மாதக் குழந்தைக்குக் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்திருக்கிறோம். கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை பற்றிய பயம் தேவை இல்லை. நவீன மருத்துவ யுகத்தில் சிகிச்சைக்குப் பயம் இல்லை. ஆனால், அதை நிறைவேற்றப் பணம் இல்லாததுதான் வேதனை!'' - வருத்தம் கலந்த குரலில் சொல்கிறார் டாக்டர் ஜோய் வர்கீஸ்.

மருத்துவ நவீனங்களைப் போலவே 'மனத்துவ’ நவீனங்களும் கைகொடுக்கும் எனக் காத்திருக்கிறான் அண்ணாமலை!

- ரேவதி, கே.கே.மகேஷ்

படங்கள்: பா.காளிமுத்து, ஜெ. வேங்கட்ராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு