Published:Updated:

மருத்துவப் பரிட்சையில் நீங்கள் எத்தனை மதிப்பெண்கள்?

மருத்துவப் பரிட்சையில் நீங்கள் எத்தனை மதிப்பெண்கள்?

##~##

''வாங்க மணி சார்... சளி, இருமலுக்காக போன மாசம் வந்த ஆளு. அதுக்கப்புறம் இப்பதான் எங்க ஞாபகம் வருதா?'' - இப்படி நலம் விசாரிக்கும் குடும்ப மருத்துவர்களை இப்போது பார்க்க முடிகிறதா? குடும்ப மருத்துவர் என்ற நல்ல அமைப்பு சிதைந்துவருவதற்கு முக்கியக் காரணம், மக்களுடைய மனநிலைதான். இன்றைய அவசர யுகத்தில் எல்லாவற்றிலும் காட்டும் வேகம், மருத்துவத்துக்குள்ளும் நுழைந்துவிட்டது. ''மரத்தின் அடியில் இருந்து ஏறுவதற்குப் பதிலாக, ஒரே ஜம்ப்பில் உச்சிக்குப் போக நினைப்பதுபோல்தான் ஒரு சிறிய உடல் நலக் கோளாறுக்கும், நேரடியாக சிறப்பு மருத்துவ நிபுணர்களை அணுகுவது'' என்கிறார் அறுவைசிகிச்சை நிபுணர் எஸ். அசோகன். 

''ஒரு தலைவலி வந்தால்கூட மூளை நரம்பியல் மருத்துவர் அல்லது அறுவைசிகிச்சை நிபுணரைப் பார்ப்பது என்பது தேவையற்றது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, க்யூபா போன்ற நாடுகளில், உடல் நலக்குறைவு ஏற்பட்டால், யாரும் நேரடியாக சிறப்பு மருத்துவர்களைப் போய் பார்க்க முடியாது. முதலில் தங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று, அவர் பரிந்துரையின் பேரிலேயே சிறப்பு மருத்துவர்களைச் சந்திக்க முடியும். எல்லாவற்றுக்கும் வெளிநாட்டை உதாரணம்கொள்ளும் நாம், மருத்துவக் கொள்கையில் மட்டும் பின்பற்றாதது ஏன்?

மருத்துவப் பரிட்சையில் நீங்கள் எத்தனை மதிப்பெண்கள்?

சமீபத்தில் ஒரு நபர்... மூச்சுத் திணறல் ஏற்பட்டு, உடனே இருதய சிகிச்சை நிபுணரைப் பார்த்தார். ரத்தப் பரிசோதனை, ஈசிஜி, எக்கோகார்டியாக் ஸ்கேன் என அனைத்துப் பரிசோதனைகளும் எடுக்கப்பட்டன. ஆனால், அவருக்கு சிறுநீரகக்கோளாறுதான் பிரச்னை என்பது தெரிந்தது. அந்த ஹார்ட்

மருத்துவப் பரிட்சையில் நீங்கள் எத்தனை மதிப்பெண்கள்?

ஸ்பெஷலிஸ்ட்டே சிறுநீரக மருத்துவரிடம் அனுப்பிவைத்தார். அவர் முதலிலேயே அருகில் உள்ள ஒரு பொது மருத்துவரைப் போய் பார்த்திருந்தால், நோயாளியின் பாதிப்பை அறிந்து, அதற்கேற்ற நிபுணரை நேரடியாகப் பரிந்துரைத்திருப்பார். ஒருவரின் குடும்பப் பின்னணியைத் தெரிந்துகொண்ட டாக்டரால் மட்டுமே அவர்களின் உடல், மனரீதியான பிரச்னைகளைப் புரிந்துகொள்ள முடியும். பாதிக்கப்பட்ட அந்த நபருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தேவை இல்லாத மன உளைச்சல், செலவு ஏற்பட்டதுடன், நிபுணர்களின் நேரத்தையும் வீணடித்திருக்க வேண்டியது இல்லை. குடும்ப டாக்டர்கள் மூலம் வரும் நோயாளிகளை, சிறப்பு மருத்துவர்கள் உடல் நலன் குறித்த பாதிப்புகளை விரிவாய் குடும்ப மருத்துவரிடமே சொல்லி, அவர் மூலமாகவே நமக்குப் புரியவைப்பார். குடும்ப வக்கீல் போன்று, நமக்கு வந்துள்ள நோய்க்கும் தெளிவான விளக்கம் கிடைக்கும்.

உடலில் நலக்குறைவுக்கு மாத்திரைகள், மருந்துகள், டெஸ்ட்டுகள் எடுக்காமலேயே, பொது மருத்துவரால் சிகிச்சை அளிக்க முடியும். பெரும்பாலான வியாதிகளை நாமே கைவைத்தியங்களால் எதிர்கொள்ள முடியும். மீதம் உள்ள வியாதிகளில் 80 சதவிகித நோய்களை எம்.பி.பி.எஸ், படித்தவர்களே பார்க்கலாம். 20 சதவிகித நோய்க்குத்தான் நிபுணர்களின் உதவியை நாட வேண்டியிருக்கும். இதைப் புரிந்துகொண்டால், வீண் பயமும், செலவும், அலைச்சலும் மிச்சம்'' என்றவர், ''ஸ்கிரீனிங் டெஸ்ட் மூலம், குடும்ப ஆரோக்கியத்தின் மீதான உங்களின் அக்கறையை அறிந்துகொள்ளலாம்.'' என்றார் விளக்கமாக.  

- ரேவதி,  படம்: எம்.உசேன்

 கீழ்க்கண்ட ஐந்து கேள்விகளுக்கும், மூன்று விதமான பதில்கள். இதில் ஏதேனும் ஒன்றை டிக் செய்யுங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்களைக் கூட்டிப் பாருங்கள்.

1. உங்களுக்கென ஒரு குடும்ப டாக்டர் இருக்கிறாரா?

அ. ஆம்... எந்தப் பிரச்னை என்றாலும், அவரிடம்தான் சொல்வோம்

ஆ. இருக்கிறார். ஆனால், அதிகத் தொடர்பு இல்லை

இ. இல்லை

2. தலைவலி/ காய்ச்சல்/ வயிற்றுவலி என அவ்வப்போது வரும் உடல் உபாதைக்கு...

அ. குடும்ப டாக்டரிடம் ஆலோசிப்பேன்

ஆ. உடனடியாக அருகில் உள்ள சிறப்பு மருத்துவரிடம் செல்வேன்

இ. மெடிக்கல் ஷாப் சென்று மாத்திரை வாங்குவேன்    

3. மாத்திரை/ மருந்துகளை வாங்கும்போது அதன் கம்பெனி, காலாவதி தேதியைக் கவனிப்பதுண்டா?  

அ. அனைத்தையும் கவனிக்கத் தவறுவது இல்லை

ஆ. காலாவதியாகும் தேதியைப் பார்ப்பேன்

இ. கொடுத்ததை வாங்கிக்கொண்டு வருவேன்

4. நோய்க்கு மட்டுமே நாடாமல், இல்ல விசேஷங்களுக்கு டாக்டரை அழைக்கும் பழக்கம் உண்டா?

அ. குடும்ப டாக்டர் இல்லாத விசேஷமே இல்லை

ஆ. மருத்துவத்துக்கு மட்டும்தான்

இ. கூப்பிடும் பழக்கம் இல்லை

5. மருத்துவரிடம் செல்லும்போது பழைய மெடிக்கல் ரிப்போர்ட் எடுத்துச் செல்வீர்களா?

அ. எடுத்துச் செல்வேன்

ஆ. தேவை எனில் எடுத்துச்செல்வேன்

இ. மெடிக்கல் ரிப்போர்ட்

   பராமரிப்பதே இல்லை.

(அ-வுக்கு 3, ஆ-வுக்கு 2, இ-க்கு 1 மதிப்பெண்கள்)

12-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்கள்: உங்கள் ஆரோக்கிய விஷயத்தில், மிகச் சரியாக இருக்கிறீர்கள். நோய்கள் உங்கள் அருகில் நெருங்காது.

5 முதல் 11 மதிப்பெண்கள் பெற்றவர்கள்: உங்கள் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

5-க்கு கீழ் மதிப்பெண் பெற்றவர்கள்: தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தைப் பற்றியும் எந்த அக்கறையும் இல்லாமல் இருப்பது நோயின் வீரியத்தை அதிகரித்துவிடும். ஜாக்கிரதை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு