Published:Updated:

'ஒல்லிக்குச்சி உடம்பு' நல்ல விஷயமா?

'ஒல்லிக்குச்சி உடம்பு' நல்ல விஷயமா?

'ஒல்லிக்குச்சி உடம்பு' நல்ல விஷயமா?
##~##

மிழ் சினிமா ரசிகர்களின் ரசனையே அலாதிதான். காலத்துக்கேற்ப, மக்களின் மனநிலையும் மாறிக்கொண்டே இருக்கிறது. அந்தக் காலத்தில், கதாநாயகி லேசாகப் பூசினாற்போன்ற உடல்வாகுடன் இருப்பதையே விரும்பினார்கள். அஞ்சலிதேவி, சாவித்திரி, சரோஜாதேவி, தேவிகா என்று இந்தப் பட்டியலின் நீளம் அதிகம். ஆனால், காலச் சுழற்சியில் சிம்ரன் போன்ற ஒரு சிலரின் வரவால் மெலிந்த தேகம் என்பது தமிழ் சினிமா கதாநாயகிகளின் அடையாளமானது. இப்போது இந்த ஒல்லி ஃபேஷன் கல்லூரி மாணவிகள் மற்றும் ஹைடெக் நிறுவனப் பெண்களையும் ஈர்த்து வருகிறது. விளைவு? நரம்பாக மெலிந்துவிட முயற்சிக்கின்றனர் பலரும்.   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இயற்கையிலேயே மிக ஒல்லியாக இருக்கும் பெண்களும் ஆண்களும் ஏராளம். குண்டாக இருப்பவர்கள் இளைக்க விரும்புவதைப் போலவே ஒல்லியாக இருப்பவர்களும் சதைப் பிடிப்போடு இருக்க மாட்டோமா என்று ஏங்குகிறார்கள்.

பெண் பார்க்கும் நிகழ்ச்சி ஒன்றில் எல்லா அம்சங்களும் பொருந்தி இருந்தாலும், 'கிள்ளிப் பார்க்கக்கூட

'ஒல்லிக்குச்சி உடம்பு' நல்ல விஷயமா?

துளி சதை இல்லையே!’ என்று காரணம் சொல்லி மாப்பிள்ளை வீட்டார் பெண்ணை நிராகரித்துவிடுவதும் உண்டு.

'ஜங்க் புட்ஸ் சாப்பிட்டால் எடை கூடுமா?  சீஸ் சாப்பிட்டால் 'சிக்’கென கன்னம் வருமா?’ என்று சிலர் ஆதங்கத்துடன் கேட்கின்றனர். உடல் எடைகூட வேண்டும் என்பதற்காக, கண்டதையும் தின்று சிலர் உடம்பைக் கெடுத்துக்கொள்கின்றனர். இன்னும் சிலர் மருந்து மாத்திரைகளால் தங்கள் பிரச்னை தீராதா என்று தவிக்கின்றனர்.

''ஒல்லியான தேகத்தை ஊதவைக்க முடியும்'' என்கிறார் சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையின் தலைமை உணவியல் வல்லுநரான முனைவர் து.சுஜாதா. உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கான அருமையான ஆலோசனைகளை அள்ளி வழங்குகிறார்.

''ஒவ்வொருவரின் உடல்வாகு என்பது பரம்பரைக் காரணிகளைப் பொறுத்தது. உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் இரண்டு விதம். ஒரு வகையினர் தங்கள் உயரத்துக்கு ஏற்பவும், காவல் துறை, வனத் துறை மற்றும் ராணுவம் போன்றவற்றில் சேர்வதற்கான உடல் தகுதிபெறவும் எடையை அதிகரிக்க விரும்புகிறார்கள். தற்போது பல ஐ.டி நிறுவனங்களும் தங்களுடைய பணியாளர்களுக்குக் குறைந்தபட்ச எடையையும் ஓர் அடிப்படைத் தகுதியாக வைத்திருக்கின்றன. இன்னொரு வகையினர் நோஞ்சான் தோற்றத்தில் இருந்து விடுபட்டு, உடலமைப்பை வைத்து யாரும் தங்களை ஏளனமாகப் பார்க்கக் கூடாது என்பதற்காக எடைகூட விரும்புபவர்கள்.

உங்களது பாடி மாஸ் இண்டெக்ஸ் 18.5 முதல் 24.9 வரை இருந்தால், உங்களின் உடல்வாகு நார்மலாக இருக்கிறது என்றுதான் அர்த்தம். நீங்கள் குண்டாகவோ இளைக்கவோ முயற்சிக்காமல் இருப்பதே நல்லது.

கட்டுடல் தேவை இல்லை. எடை கூடினால் போதும் என்கிறீர்களா? அப்படியானால் நன்கு சாப்பிட்டு நன்கு தூங்கினாலே போதும். ஆனால், தேவை இல்லாமல் கொழுப்பு சேரும் அபாயம் இருக்கிறது. கூடுதல் எடை எனப்படும் ஒபிசிட்டி, இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்பட நேரிடலாம். தலைவலி போய்த் திருகுவலி வந்த கதையாகிவிடும்!

ஆபத்து இல்லாமல் எடையைக் கூட்ட இதோ சில வழிகள்!

சத்தான உணவு:

கிழங்கு மற்றும் எண்ணெய் வித்துக்கள் (roots and tubers), அதிக கலோரிகள் கொண்ட கொட்டை வகைகள்(nuts and oil seeds),

குறைந்த அளவு கொழுப்பு உள்ள பால் மற்றும் பால் பொருட்கள் (milk and milk products), கடலை மற்றும் முழுப் பயறு வகைகள் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.

'ஒல்லிக்குச்சி உடம்பு' நல்ல விஷயமா?

புரோட்டீன்கள், நல்ல கொழுப்பு, கார்போஹைட்ரேட்கள், நார்ச்சத்து நிரம்பியவை, வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் அடங்கிய காய்கறிகள் மற்றும் பழங்கள் எடையை அதிகரிக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும். தினசரி இரண்டு முட்டைகள் தாராளமாகச் சாப்பிடலாம். கொழுப்புச் சத்தை அதிகரிக்க இறைச்சி வகைகள், மற்றும் அசைவ உணவுகளைத் தினசரி எடுத்துக்கொள்ளலாம்.

நெய், உருளைக் கிழங்கு சிப்ஸ், பீட்ஸா போன்றவையும் எடையைக் கூட்ட உதவும். கார்போஹைட்ரேட்கள் 40%, புரோட்டீன் 30%, கொழுப்பு 30% என்ற விகிதத்தில் உங்கள் உணவு அமையட்டும்.

உடற்பயிற்சி:  

ஒல்லியானவர்களுக்கு எதற்கு உடற்பயிற்சி என்று ஆச்சரியமாக இருக்குமே... ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சிதான் முக்கியம். உடற்பயிற்சி ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். கெட்ட கொழுப்புக்களைக் கரைக்கும்; நன்றாகப் பசியெடுக்கச் செய்யும்; அதிக அளவில் சத்தான உணவுகளை உடல் ஏற்றுக்கொள்ள உதவும். ஆனால், 60 நிமிடங்களுக்கு மேல் உடற்பயிற்சி செய்தால், 'கார்டிசால்’ என்ற ஹார்மோனால் சதைத் திசுக்களின் எடை குறையும் அபாயம் உள்ளது. எனவே மிதமான உடற்பயிற்சியே போதுமானது.  

கலோரிகளைக் கணக்கிடுங்கள்:

உணவியல் நிபுணரின் மேற்பார்வையில் நீங்கள் தினசரி எடுத்துக்கொள்ளும் உணவில் உள்ள கலோரி அளவைக் கணக்கிடுங்கள். நாள் ஒன்றுக்கு உத்தேசமாக ஆணுக்கு சுமார் 2,200 கலோரிகளும் பெண்ணுக்கு 1,900 கலோரிகளும் தேவை. அத்துடன் 1,000 கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளைக் கூடுதலாக தினசரி எடுத்துக்கொள்ளுங்கள்.

இடையிடையே சாப்பிடுங்கள்:

காலை, மதியம், இரவு என்று மூன்று வேளை மட்டும் சாப்பிடுவதற்குப் பதிலாக சாப்பிடும் வேளைகளை அதிகரியுங்கள். இரவில் தூங்கும் நேரம் நீங்கலாக மற்ற சமயங்களில், இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை அளவாகச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

ஆரோக்கிய பானங்களை அருந்துங்கள்:

'ஒல்லிக்குச்சி உடம்பு' நல்ல விஷயமா?

பாக்கெட்டில் அடைத்த ஜூஸ்கள், கார்பன் டை ஆக்ஸைடு கலந்த சோடா மற்றும் குளிர் பானங்களைத் தவிருங்கள். பழச்சாறு பருகும்போது ஏற்கெனவே தயாரித்துவைக்கப்பட்டுள்ள பழச்சாறுக்குப் பதில், நீங்கள் கேட்டவுடன் அப்போது பிழியப்பட்ட பழச்சாறுகளைப் பருகுங்கள். பால், மற்றும் சத்து நிரம்பிய பானங்களை அருந்துங்கள்.

உணவுகளை மாற்றுங்கள்:

ரொட்டிக்குப் பதிலாக பால் பொருட்கள், மீன், மற்றும் இறைச்சிக்கு மாறுங்கள். ஜங்க் ஃபுட்களுக்குப் பதிலாக பாலாடைக் கட்டி, மில்க் ஷேக், உலர்ந்த பழங்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.

பொறுமை இழக்காதீர்கள்:

உடல் எடையைக் கூட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட ஓரிரு வாரத்திலேயே எடை கூடிவிடும் என்று எதிர்பார்க்காதீர்கள். பொறுமையுடன் காத்திருங்கள். தொடர்ந்து முயலுங்கள். ஓரிரு மாதங்களில் பலன் தெரியும்

செய்யும் பணி, உடல் உழைப்பு, வயது, அதிகரிக்கவேண்டிய எடை போன்ற பல காரணிளையும் கணக்கிட்டு உணவியல் நிபுணர் ஆலோசனை வழங்குவார். அவரது மேற்பார்வையில் எடை கூட்ட உதவும் ஃபுட் சப்ளிமென்ட்கள் என்று சொல்லப்படும் பவுடர்களையும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நீங்களாகவே கடைகளில் விற்கும் புரோட்டீன் பவுடர்களை வாங்கிச் சாப்பிடக் கூடாது. பக்க விளைவுகள் ஏற்படக்கூடும்.' என்றார் விளக்கமாக.

- லதானந்த்