Published:Updated:

''என்னை மாற்றிய எஸ்.எம்.எஸ்!''

இயக்குநர் பத்மா மகனின் குடியை மறந்த கதை!

பிரீமியம் ஸ்டோரி
##~##

வித்தியாசமான கதைக் களத்தில், வில்லங்கமான படத்தை எடுத்து, வெற்றி வாகை சூடியவர் 'அம்முவாகிய நான்’ பட இயக்குநர் பத்மா மகன். தற்போது விமல் நடிப்பில் 'நேற்று இன்று’ படத்தை இயக்கி முடித்திருக்கும் இவர், ஒரு காலத்தில் 'மொடாக் குடிகாரர்’ என்றால் நம்ப  முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. அப்படிப்பட்டவர், குடிப் பழக்கத்தில் இருந்து முற்றிலுமாக மீண்டு வந்திருக்கிறார். எப்படியாம்? 

''குடிக்கு எப்படி அடிமை ஆனீர்கள்?''

''என் அப்பா ஒரு முன்னாள் ராணுவ வீரர். அவர் தினமும் மது அருந்தக்கூடியவர். எனக்கு ஆறு வயசும், என் தம்பிக்கு நாலு வயசும் இருக்கும்போது,  உடம்புக்கு நல்லதுன்னு சொல்லி முதல்முறையா ஒரு சின்ன மூடியில் ஊற்றி மதுவை குடிக்கக் கொடுத்தார் அப்பா. அதுமுதல் அப்பப்போ, டானிக் மாதிரி குடிக்கக் கொடுப்பார். ஒரு கட்டத்துல எனக்கு விவரம் தெரிய ஆரம்பிச்சதும்

''என்னை மாற்றிய எஸ்.எம்.எஸ்!''

நிறுத்திட்டாங்க. பத்து வயசு இருக்கும்போது, எங்க அப்பா, குடிக்கிறதுக்காக வாங்கி வெச்சிருந்த மது பாட்டிலை எடுத்து, கொஞ்சமா நான் குடிச்சுட்டு, பச்சத்தண்ணிய ஊத்தி வெச்சுட்டு, கலர் மாறினது தெரியாமல் இருக்க, பாட்டில்ல குங்குமப்பூவைக் கொட்டி கலந்து வெச்சிடுவேன். இதேபோல் அடிக்கடி செய்ய, 16 வயசிலிருந்து தினமும் சாயந்தரம் தண்ணி அடிக்க ஆரம்பிச்சுட்டேன். 18 வயசுல சினிமாவுக்கு வந்தேன். குடி இன்னும் அதிகமாச்சு! 25 வயசுல பகல் நேரக் குடிகாரன் ஆகிட்டேன்''

''நீங்க எவ்வளவு மோசமான குடிகாரர்?''

''தினம் ஒரு நாளைக்கு ஒன்றரை ஃபுல் அடிப்பேன். 2007-ல் 'அம்முவாகிய நான்’ படத்தை ஃபுல் போதையிலதான் டைரக்ட் பண்ணினேன். தண்ணி அடிச்சுட்டுத்தான் ஷூட்டிங் நடத்தினேன். 10 மணிக்குத்தான் டாஸ்மாக் திறக்கும்கிறதால, தினமும் காலையில் 9 மணிக்குத்தான் எந்திருப்பேன். எந்திரிச்ச உடனே, முதல் வேலையா ஒரு ரவுண்ட் போட்டுடுவேன். அப்புறம் கொஞ்சம் இடைவெளி விட்டு இன்னொரு ரவுண்ட். இப்படி நாள் முழுக்க குடிச்சுக்கிட்டே இருப்பேன். அந்தப் படம் வந்த நேரத்துல நிறைய சினிமாகாரர்கள் என் வீடு தேடி வாய்ப்புத் தர வருவாங்க. அவங்க காலையில் வர்றாங்கன்னா, 'இல்லைங்க நான் தண்ணி அடிச்சிருக்கேன்... சாயந்திரம் 4 மணிக்கு வாங்க’னு சொல்வேன், அவங்க 'வேணும்னா 7

''என்னை மாற்றிய எஸ்.எம்.எஸ்!''

மணிக்கு வரட்டுமா’னு கேட்பாங்க, அதுக்கு நான் 'அய்யயோ! 7 மணிக்குல்லாம் ஃபுல் மப்புல இருப்பேங்க வேணாம்’னு சொல்லிடுவேன். இப்படியே எனக்கு வந்த நிறைய வாய்ப்புகளை இழந்தேன். அந்த காலகட்டத்துல அந்த அளவுக்கு நான் குடிக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்துக்கிட்டு இருந்தேன்.''

''குடியால் நீங்க கற்றதும் பெற்றதும்?''

''பணம், நேரம் விரயம் ஆச்சு. அவமானம், கேவலம், எதிர்ப்பு இதெல்லாம் நிறைய சம்பாதிச்சேன். என்னோட பலமே, ஞாபக சக்திதான்னு என் நண்பர்கள் அடிக்கடிச் சொல்லுவாங்க. அப்படிப்பட்ட ஞாபக சக்தியே குறைய ஆரம்பிச்சது. பல வருடங்களாகத் தினமும் உலக சினிமாக்களைப் பார்த்து, கற்றுக்கொண்ட நுட்பமான விஷயங்கள் எல்லாம் ஒரு கட்டத்துல சுத்தமா மறந்துபோச்சு. சம்பாதிச்சதும் சேர்த்துவச்சதும் சுத்தமா கரைஞ்சு, மனைவியோட நகைகள் எல்லாம் வரிசையா மார்வாடி கடைக்குப் போக ஆரம்பிச்சது. ரொம்பக் கூச்சப்பட்டு நண்பர்கள்கிட்ட பணம் வாங்கி குடிக்க ஆரம்பிச்சேன். இது எனக்கு ஒரு பெரிய அவமானமா இருந்தாலும் என்னால குடியை மட்டும் நிறுத்தவே முடியலை.''

’அப்புறம், எப்போ நீங்க குடிக்கிறதை நிறுத்தினீங்க?''

''2009 டிசம்பர் 31 ராத்திரி, மறுநாள் புது வருஷம். அந்த சந்தோஷத்துல வழக்கத்தைவிட அதிகமா குடிச்சுக்கிட்டு இருந்தேன். அப்போ வந்த வழக்கமான மெசேஜ்களுக்கு இடையில்,  'பிறப்பும் இறப்பும் மட்டுமே இயற்கையாக நிகழும், மற்ற எதை நீ விரும்பினாலும் நீதான் அதை தேடிப்போக வேண்டும்’ என்ற என் நண்பர் கிருஷ் அனுப்பிய ஒரு மெசேஜும் வந்தது. அந்த மெசேஜைப் படிச்சதும், அந்த போதையிலும், என் தலையில் ஆணி அடிச்ச மாதிரி இருந்தது. கொஞ்ச நேரம் என் நிலைமையைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சேன். 'இந்தப் பழக்கம் உனக்குக் கண்டிப்பாத் தேவையா?’னு  பலமுறை என்னை நானே கேட்டுப்பார்த்தேன். ஆனா, அந்தக் கேள்விக்குப் பதிலே இல்லை. அப்பத்தான் இனி இந்த எமனை ஜென்மத்துக்கும் தொட்டுடக்கூடாதுன்னு முடிவு பண்ணினேன். அன்னைக்கு ராத்திரி

''என்னை மாற்றிய எஸ்.எம்.எஸ்!''

நிம்மதியா படுத்துத் தூங்கினேன். மறுநாள் காலையில் சந்தோஷமா மனைவியோட கோயிலுக்குப் போயிட்டு வந்தேன். அதுக்கு அப்புறம் அந்த நொடி முதல் இப்போ உங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்குற இந்த நொடி வரை ஒரு சொட்டுகூட நான் மது குடிக்கலை. குடியை நிறுத்த ஆரம்பிச்ச ஒரே மாசத்துலயே, ஒரு நாளைக்கு அஞ்சு பாக்கெட் சிகரெட் அடிச்சுக்கிட்டு இருந்த நான், சிகரெட் பழக்கத்தையும் அப்படியே நிறுத்திட்டேன். சிகரெட் அடிக்கிறப்பல்லாம், ஒரு டீ குடிப்பேன். இப்படி ஒரு நாளைக்கு குறைஞ்சது 25 டீ குடிப்பேன். அந்தக் கெட்ட பழக்கமும் குறைஞ்சது. நான்வெஜ் அதிகமா சாப்பிடுவேன். இப்போ நான் சுத்த சைவம். இப்படி மது என்னும் ஒரு கெட்டப் பழக்கத்தை நிறுத்தியதால் அது தொடர்பான மத்த கெட்ட பழக்கங்களையும் வரிசையா நிறுத்திட்டேன்''

''குடிப் பழக்கத்தை நிறுத்திய அந்த ஆரம்ப கால நாட்கள் எப்படி இருந்தது?''

''ஆரம்பத்துல பின் தலையில் லேசா வலி இருந்தது. டாக்டர்கிட்ட போனால் 'இவ்வளவு நாளா நீ குடிச்சதால் உன் உடம்புல இந்த பிரச்னைகள் எல்லாம் இருக்கு’ அப்படின்னு ஏதாவது சொல்லி அது என்னை மனரீதியா பாதிச்சிடுமோன்னு நினைச்சு, டாக்டர்கிட்ட போகாமல் இருந்துட்டேன். தூக்கமே வராது. விடிய விடிய முழுச்சிக்கிட்டு படம் பார்ப்பேன். இப்படி ஆறு நாட்கள் ஆச்சு. ஆறு நாட்களும் கண்ணுல பொட்டுத் தூக்கம் இல்லை. அந்த நேரத்துல என் மனைவிகூட, 'நீங்க திடீர்னு குடிக்கிறதை நிறுத்திட்டதாலதான் உங்களுக்கு இப்படில்லாம் பண்ணுதுப்பா, நீங்க கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டு விடுங்க, சரியாகிடும்’னு சொன்னாங்க. ஆனாலும் நான் 'வேணாம். இப்ப நான் லைட்டா குடிக்கிறேன்னு ஆரம்பிச்சேன்னா, அப்புறம் பழையபடி ஆகிடும்’னு சொல்லி மறுத்துட்டேன். இரண்டு நாள்ல, தலைவலி லேசா குறைஞ்சது, தூக்கமும் பழையபடி வர ஆரம்பிச்சது. பத்தே நாள்ல என் அன்றாட வேலைகளை ரொம்ப நார்மலா செய்ய ஆரம்பிச்சேன். கடந்த மூன்றரை வருஷமா ரொம்பவே சந்தோஷமா இருக்கேன். உடம்பு ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கு. வெட்டிப்பேச்சு இல்லை. நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் நல்ல மரியாதை இருக்கு. நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடமுடியுது. வருமானத்தைச் சேமிக்க முடியுது. இப்போ 'நேற்று இன்று’ படத்தை நல்லபடியா ரிலீஸ் பண்ணப்போறேன். அடுத்தடுத்து நல்ல படங்கள் வரிசையாப் பண்ணப்போறேன்.

'' குடிப் பழக்கத்தைவிட நினைக்கிறவங்களுக்கு நீங்க சொல்ல நினைக்கிறீங்க?''

''நான் என்ன செய்தேனோ, அதையேதான் மத்தவங்களுக்கும் சொல்ல ஆசைப்படறேன். கொஞ்சம் கொஞ்சமா குடியை நிறுத்தணும்னு இல்லை. நிறுத்திடணும்னு முடிவு பண்ணிட்டா, அந்த நொடியே நிறுத்திடுங்க. 'அப்பாடா! குடிக்காம இன்னையோட முழுசா மூணு நாள் ஆச்சு’ என்ற நினைப்பே கூடாது. இப்படி நாட்களை எண்ணுவதே தவறு. 'இன்னைக்குக் குடிக்காமல் இருப்போம்’னு மட்டும் முதல் நாள் நினைச்சுக்கங்க. மறுநாள், 'நேத்து இருந்த மாதிரியே இன்னைக்கும் இருப்போமே’னு முடிவுபண்ணி கட்டுப்பாடா இருங்க. இப்படி ஒரு வாரம், ஒரு மாசம் ஆச்சுன்னா, அதுக்கு அப்புறம் உங்க மனசுல இருந்து குடிக்கனும்கிற எண்ணமே ஓடிப் போயிடும். தைரியத்துடனும், நம்பிக்கையுடனும், கட்டுப்பாடுடனும் இருக்கணும். அந்த அளவுக்கு மனசு கட்டுபாடா இருந்தால் உங்க எதிரே நூறு பேர் உட்கார்ந்து குடிச்சாலும் உங்களுக்கு திரும்பக் குடிக்கனும்னுங்கிற நினைப்பு மட்டும் வராது. என்னை மாதிரி!''

- உ. அருண்குமார்

படங்கள் : பொன்.காசிராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு