Published:Updated:

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

ஈராக் டு இந்தியா!  

##~##

ஈராக் நாட்டைச் சேர்ந்தவர் ராஃபா இப்ராஹிம் ஹாயல். 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர் ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்தபோது, இவருக்கு முற்றிய நிலையில், மார்பக புற்றுநோய் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பிரசவத்துக்குப் பிறகு சிகிச்சை அளிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. குழந்தை நல்லபடியாகப் பிறந்தது. புற்றுநோயோடு சேர்ந்து அவருக்கு கார்டியோ மயோபதி என்கிற இதய செயல் இழப்பும் கண்டறியப்பட்டதால், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள,  சென்னைக்குச் செல்லும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர். உடனடியாக, சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை டாக்டர்கள் குழு, அவருக்கு புற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். சிகிச்சைக்கு வந்து 150 நாட்கள் ஆன நிலையில் அவருக்கு இதயம் தானமாகக் கிடைத்தது. வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது இந்தியர் ஒருவரின் இதயத்துடன் சொந்த நாட்டுக்குத்திரும்பத் தயாராகிவருகிறார் ராஃபா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பிள்ளைகளின் 'வலை’யில் பெற்றோர்கள்!

அக்கம் பக்கம்

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சோஷியல் மீடியாக்களில், பெரும்பாலான டீன் ஏஜ் பிள்ளைகள் தங்களின் பெற்றோர்களுடன் நட்பு இணைப்பில் இருப்பதை விரும்புகின்றனராம். இதனால் பெற்றோர் - பிள்ளைகளுக்கான நெருக்கமான உறவு இன்னும் வளர்கிறது என்கிறது ஆய்வு ஒன்று. 'தங்களின் பிள்ளைகள் அளவுக்கு கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் புலியாக இல்லாவிட்டாலும், சோஷியல் மீடியாவில் இயங்கக் கூச்சப்பட்டு விலகி இருக்க வேண்டாம்’ என்கிறது இந்த ஆய்வு. இதன் மூலம் தங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள், எது அவர்களுக்குச் சந்தோஷத்தை தருகிறது, யாருடன் பேசுகிறார்கள் என்பதை பெற்றோர் தெரிந்துகொள்ள முடியும். பெற்றோர்களும் பிள்ளைகளும் எதிர் எதிர் திசையில் இல்லாமல், ஒரே திசைக்கு அழைத்துச் செல்கிறதாம் இந்த சோஷியல் நெட்வொர்க்குகள்!

தண்ணீரைச் சுத்தமாக்கும் தோல்!

அக்கம் பக்கம்

''பொதுவாக ஆப்பிள் தோல், தக்காளித் தோலை தூக்கி எரிந்துவிடுவோம். சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர் ராமகிருஷ்ண மல்லம்பாடி என்றவர் தக்காளி மற்றும் ஆப்பிள் தோலை வைத்து தண்ணீரைச் சுத்தப்படுத்தும் ஆராய்ச்சியில் வெற்றி அடைந்திருக்கிறார்.  சுகாதாரமற்ற குடிநீரில் ஆப்பிள் அல்லது தக்காளியின் தோல் அந்தத் தண்ணீரில் கலங்கல், மாசு, செயற்கை நிறம், கெமிக்கல், பூச்சிக்கொல்லி போன்றவற்றை கரைக்கும் தன்மை உடையது என்கிறார் ராமகிருஷ்ணன். தண்ணீரைச் சுத்திகரிக்க விலை குறைவான வழி இது. மின்சாரம் குறைவாகக் கிடைக்கும் பகுதிகளில் பயன்படுத்தலாம்'' என்கிறார் இந்த இளைய ஆராய்ச்சியாளர்.

தன்னிகரில்லா 'தலை’வா!

அக்கம் பக்கம்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ். 1990-களில் குவைத் மீது ஈராக் போர் தொடுத்தபோது ஈராக் மீது தாக்குதல் நடத்தியவர். 89 வயதான புஷ் தற்போது முழு ஓய்வில் இருந்துவருகிறார். புஷ்ஷின் பாதுகாப்பு அதிகாரியின் இரண்டு வயது மகன் பேட்ரிக்குக்கு  லுக்கேமியா என்ற ரத்தப் புற்றுநோய். மருத்துவச் சிகிச்சையின் வலி மற்றும் முடி கொட்டிவிட்ட சோகத்தால் மன வேதனையில் இருந்த சிறுவனுக்காக புஷ்ஷ§ம் மொட்டை அடித்துக்கொண்டார். புஷ் மட்டுமல்ல, அவருடைய பாதுகாப்பு அதிகாரிகள் அனைவரும் மொட்டை அடித்துக்கொண்டு, தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். 1953-ம் ஆண்டு புஷ் தன் நான்கு வயது பெண் குழந்தையை புற்றுநோய்க்குப் பறிகொடுத்ததுதான் சிறுவன் பேட்ரிக் மீது புஷ்ஷ§க்கு இந்த அளவுக்கு கரிசனம் ஏற்படக் காரணமாம்.

 நோய் நாடி... தேடி...

'தொழுநோயை முற்றிலும் ஒழிக்க இன்னும் நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது உலக சுகாதார நிறுவனம். உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் இரண்டு லட்சம் பேர் தொழுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில், பெரும்பாலானவர்கள் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்கிறது. 'தொழுநோயை ஒழிக்க போதிய மருத்துவ வசதிகள் உள்ளன. இந்தியாவில் 10 ஆயிரம் பேருக்கு ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார். இவர்கள், எளிதில் சிகிச்சை சென்றடைய முடியாத இடங்களில் உள்ளனர். இவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டியது அரசின் கடமை' என்கிறார், முன்னாள் தொழுநோயாளியும், தொழுநோய் ஒழிப்பு அமைப்பு ஒன்றின் தலைவருமான வி.நரசப்பா.

 மதுரைக்கு முன்னுரிமை!

அக்கம் பக்கம்

செப்டம்பர் 28-ம் தேதி உலக ரேபிஸ் தினம்.  இதையட்டி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கோவா, ஒடிசா, அஸாம், மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் உள்ள 50 ஆயிரம் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பு மருந்து அளிக்கும் திட்டத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் இந்தத்திட்டத்துக்காக மதுரை மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 'மதுரை மாவட்டத்தில் அதிக அளவில் நாய்க் கடி உள்ளது என்பதால், இந்தச் சோதனை கட்ட ரேபிஸ் மருந்து அளிக்கும் திட்டத்துக்கு மதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் ரேபிஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களில் பாதிப்பேர் இந்தியர்கள். அதனால்தான் இந்தியாவில் இந்த மிகப் பிரம்மாண்ட ரேபிஸ் தடுப்பூசி மருந்து அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளோம். மதுரையில் தோராயமாக 10 ஆயிரம் நாய்களுக்கு மருந்து அளிக்க உள்ளோம்'' என்கிறார் அந்த அமைப்பான 'மிஷன் ரேபிஸ்’ திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அப்புபிள்ளை முருகன்!

 மருத்துவச் சேவை!

அக்கம் பக்கம்

ஃபிரன்ட்என்டர்ஸ் ஹெல்த்கேர் சர்வீஸஸ் என்ற நிறுவனம், வெளிநாட்டு நோயாளிகளுக்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்கும் மருத்துவச் சுற்றுலாவுக்கு ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. இது இந்திய நோயாளிகளுக்கு கட்டணமில்லாத மருத்துவ வழிகாட்டும் 'ஹெல்த்ஒபீனியன்’ என்கிற சேவையை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவர்களைத் தொடர்புகொண்டால் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு என்ன மருத்துவர், எந்த மருத்துவமனை, சிகிச்சைக்கான கட்டணம்,  நீண்ட நாட்கள் தங்கி சிகிச்சை பெற தேவையான உதவிகளை யார் செய்கிறார்கள் போன்ற அனைத்து தகவல்களும் இலவசமாகக் கிடக்கும்.  'இந்திய அளவில் நாற்பதுக்கும் மேற்பட்ட பெரிய மருத்துவமனைகளுடன் கூட்டுறவு வைத்துள்ளோம். இதனால், நோயாளிகளுக்கு டாக்டர்கள் சந்திப்புக்கு நேரம் வாங்கித் தருவது முதல் பல்வேறு சேவைகளை எங்களால் அளிக்க முடிகிறது. இதற்காக, பணம் எதுவும் வசூலிப்பது இல்லை'' என்கிறார் இந்த நிறுவனத்தைச் சேர்ந்த காவியா.