Published:Updated:

முதுமையில் இளமை!

முதுமையில் இளமை!

முதுமையில் இளமை!
##~##

மழலை, இளமை, முதுமை என்ற வாழ்வின் மூன்று நிலைகளில், மழலை மற்றும் முதுமைப் பருவம் மட்டுமே மற்றவர்களைச் சார்ந்து இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. பிள்ளைப் பருவத்தில், ஓடி ஆடி விளையாடும் கவலையற்ற நிலையைக் கடந்து, படிப்பு முடிந்து கை நிறைய சம்பாதிக்கும் எண்ணத்துடன், சுறுசுறுப்பும் துடிதுடிப்புமாக இளமைக் காலம் சுவாரஸ்யமாக ஓடிவிடும்.   

இளமைப் பருவம் ஆனந்தத்தையும், திருமண வாழ்க்கை கடமைகளையும், கடைசிப் பருவமான முதுமை கடமைகள் முடிந்து பேரன், பேத்திகளைக் கொஞ்சி மகிழும் காலக் கட்டத்தையும் உணர்த்துகிறது. உடல் தளர்ந்து போனாலும் ஆரோக்கியமாக வாழக்கூடிய சூழல், வசதிப்படைத்தவர்களுக்குத்தான் இருக்கும். அதனால், அவர்களுக்குத் தன்ன‌ம்பிக்கையும் தைரியமும் எப்போதும் இருக்கும். ஆனால், வசதியற்ற முதியவர்கள், உடலும் உள்ளமும் தளர்ந்துபோய், பிரச்னைகள் தலைதூக்கும். 'தான் ஒன்றுக்குமே லாயக்கில்லையோ’ என்ற மனச்சோர்வு, பயம், எல்லாவற்றுக்கும் கோபம், தாழ்வு மனப்பான்மை உருவாகும். பல்வேறு உணர்ச்சிக் கொந்தளிப்பில் தவிக்க நேரிடும்.

முதுமையில் இளமை!

முதுமைக் காலத்துக்கு மட்டுமல்ல, வாழ்க்கையின் கடைசிப் பயணத்துக்கும் நம்மைத் தயார் செய்துகொள்ளாததே...  இந்த உணர்வுக்குக் காரணம்.

முதுமையைச் சுமையாக நினைக்காமல், நம் வாழ்க்கையில் நடந்த எத்தனையோ நல்ல விஷயங்களை  அசைபோட்டு, மகிழ்ச்சிகரமான நினைவுகளில் ஆழ்ந்திருக்கலாம். இன்று நடப்பதை மன நிறைவுடன் ஏற்றுக்கொள்வதும், நாளையைப் பற்றிய கவலையோ, பயமோ இன்றி நம்பிக்கையுடன் எதிர்கொள்வதுமே, மனரீதியான விஷயங்களில் இருந்து நம்மை மகிழ்ச்சியான பாதைக்கு அழைத்துச் செல்லும்.  

முதுமையில் வரும் நோய்கள், பரிசோதனைகள், மனநலம், உணவியல் முறைகள் என இந்த இணைப்பில், அந்தந்தத் துறை நிபுணர்கள் தந்துள்ள முத்தான விஷயங்கள் அனைத்தும் முதுமையை விரட்டி, இளமையோடு திகழச்செய்யும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.  

முதியோர் சிறப்பு மருத்துவர் டாக்டர் வி.எஸ்.நடராஜன்

''தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஒரு மனிதனின் சராசரி வயது 70-க்கு மேல். இதில், 30 வயது வரை இளமைப் பருவமாகவும், 30 முதல் 60 வயது வரை வாழ்க்கைப் பருவமாகவும், 60-க்கு மேல் முதுமைப் பருவமாகவும் கொள்ளப்படுகிறது. ஒருவரின் வெளித்தோற்றத்தை வைத்தோ அல்லது உடல் உறுப்புகளின் செயல்திறனை வைத்தோ வயதை சரியாகக் கணிக்க முடியாது. பொதுவாக, உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெறும் வயதாக நம் நாட்டில் கணிப்பதால், 60 வயதுக்கு மேற்பட்டவர்களையே முதியவர்களாகக் கருதுகிறோம்."  

முதுமையில் இளமை!

வாழ்க்கை முறை

வேலை வேலை என்று ஓடி ஆடித் திரிந்து வேலையில் இருந்து ஓய்வு பெற்று வீட்டிலேயே முடங்கும்போது, பல நோய்கள் தலைத்தூக்க ஆரம்பிக்கின்றன. உடலுக்குப் போதிய உழைப்பு இன்மை உரிய நேரத்தில் சாப்பிடாமை, அதிக உணவு உண்பது போன்றவை நோய்கள் வரக் காரணங்களாகும். உதாரணமாக உடல் பருமன், மூட்டு வலி, சர்க்கரை நோய், மன அழுத்தம் போன்றவை ஓடிக் கொண்டு இருக்கும்போது தெரியாமல் இருக்கும். ஓய்வுப் பெற்ற பின், முதுமையின் வெளிப்பாடு ஆரம்பமாகும்.  

முதுமையின்போது உடலில் ஏற்படும் மாற்றங்கள்:

முதுமையில் இளமை!

 நாக்கின் சுவை அரும்புகளின் எண்ணிக்கை குறைந்து, சுவையைக் கட்டுப்படுத்தும் நரம்பு மையமும் தளர்ந்து போகும். இதனால், சுவை உணர்ச்சி குறைந்து சுவையே தெரியாமல் போகும்.  

 வாயில் உமிழ் நீர் சுரப்பு குறையும். இதனால், நா வறண்டு போகும்.

 இரைப்பையில் அமிலம் குறைந்து, இரும்புச் சத்தினைக் கிரகிக்கும் தன்மை குறையும்.

 ரத்த ஓட்டம் 40 சதவிகிதம் குறைவதால், சிறுகுடல் உணவினைக் கிரகிக்கும் திறன் 30 சதவிகிதம் குறையும்.  இதனால் உணவு, மருந்துகளைக் கிரகிக்கும் தன்மை குறைந்துபோகும்.

 பெருங்குடல் சுருங்கி விரியும் தன்மைக் குறைந்து மலச்சிக்கல் ஏற்படும்.

 கல்லீரலில் சுமார் 1/3 பங்கு எடை குறைந்து போகும்போது, செயல்திறன் குறையும்.

 மூளையில் 30 சதவிகித ரத்த ஓட்டம் குறைந்து, மூளையின் எடையும் குறைய ஆரம்பிக்கும். இதனால், மறதி அதிகம் ஏற்படும். பக்கவாதம் வர வாய்ப்புகள் அதிகம்.  

  சிறுநீரகத்தில் உள்ள நெப்ரான்களின் எண்ணிக்கை குறையும். இதனால், ரத்த ஓட்டம் 53 சதவிகிதமாகவும், கழிவுப் பொருட்களை வெளியேற்றும் திறன் 46 சதவிகிதமாகக் குறையும். சிறுநீரகம் செயல் இழக்கலாம்.

 ஆண்களுக்கு, சிறுநீர்ப் பாதையில் உள்ள ப்ராஸ்டேட் எனும் சுரப்பி பெரிதாகிக் கொண்டே வரும்.

முதுமையில் இளமை!

இதனால், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் செல்லும் பாதை அடைப்பது போன்றவை ஏற்படும்.

 ஆண்களுக்கு, சுமார் 50 வயதில் டெஸ்ட்ரோஸ்டீரோன் ஹார்மோன் அளவு குறைகிறது. இதனால் உடல் சோர்வு, மனச் சோர்வு, பாலுணர்வு குறைந்துபோதல் போன்றவை ஏற்படும்.

 பெண்களுக்கு, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு குறையும். இதனால், உடல் எடை அதிகரித்தல், எலும்புகளின் வலிமை குறைந்து எளிதில் எலும்பு முறிவு ஏற்படுதல் போன்றவை ஏற்படும்.

 இதயத்தில் இருந்து வெளிவரும் ரத்தத்தின் அளவு குறையும். இதனால், நாடி துடிப்பின் வேகம் குறைந்து உடல் சோர்வு, மூச்சுத் திணறல் ஏற்படும்.

இப்படி முதுமையில் ஒவ்வொருவரது உடலிலும் பல மாற்றங்கள் நிகழத்தான் செய்யும். சில நோய்கள் வரத்தான் செய்யும். அவற்றைத் தவிர்க்க முடியாது. வயது ஆக ஆக உடல் உறுப்புகளில் நிகழும் மாற்றங்களாலும், அவற்றின் செயல் திறன்களின் விளைவுகளாலும் உருவாவதே முதுமை. உடலின் இயக்கம் பற்றிய விழிப்பு உணர்வு, கவனம் இருந்தால், முதுமையை நம்மால் எளிதில் சமாளிக்க முடியும்.

நல்ல உடல்கட்டுடனும் வளத்துடனும் இருப்பவர்களின் சந்ததியினரும் அவ்வாறே இருப்பர்.  இவர்களது உடல் அமைப்பினை முதுமை மிகுதியாகப் பாதிப்பதில்லை. இயற்கையோடு இணைந்து சத்தான உணவு உண்ணுவது, தீயப் பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருப்பது, தேவையான உடற்பயிற்சி என வாழ்க்கையைச் சரியான பாதையில் வைத்திருந்தால், முதுமையிலும் கட்டுடலோடும், வளத்தோடும் இருக்கலாம்.  

 முதுமையில் வரும் நோய்கள்:

முதுமையில், கிராமங்களில் உள்ளவர்களுக்கு தொற்றுநோய்கள் சார்ந்த தொல்லைகளும், நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கு தொற்று நோய் சாரா தொல்லைகளும் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  

 50 வயதுக்கு மேல் பலருக்கு, உடல் பல நோய்களின் மேய்ச்சல் காடாக இருக்கிறது. சர்க்கரை நோய், புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், எலும்பு பலவீனம், எலும்பு தேய்மானம், காசநோய், ரத்த சோகை, தைராய்டு சுரப்பில் குறைபாடு, பித்தப்பையில் கற்கள், சிறுநீரகப் பிரச்னைகள், கைவிரல்களில் நடுக்கம் என பல பிரச்னைகள் வெளியே தெரியாமல் மறைந்திருக்கும். நாளாக நாளாக இவை வெளிப்படும்.

முதுமையில் இளமை!

 முதுமைக் காலத்துக்கென்றே சில நோய்கள் உள்ளன. எலும்பின் பலவீனம், அறிவுத்திறன் வீழ்ச்சி, பார்க்கின்சன்ஸ் என்ற உதறுவாதம், சில வகை புற்றுநோய்கள், நிலைத் தடுமாறி கீழே விழுதல், சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாத நிலை போன்றவை ஏற்படும்.

 முதுமையின் விளைவினால் கண் புரை, காது கேளாமை, பல் விழுதல், தோலில் வறட்சி, தோலின் நிறம் மாறுதல், கை கால் நடுக்கம், முடி நரைத்தல், மலச்சிக்கல்  ஏற்படலாம். ஆனால், இந்த மாற்றங்கள் ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை அதிகமாகப் பாதிக்காது.

 நடுத்தர வயதில் தோன்றும் சில நோய்கள், முதுமைப் பருவத்திலும் தொடரலாம். உதாரணத்துக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மூட்டு வலி, மாரடைப்பு, குடல்புண், ஆஸ்துமா.

 வயது ஏற ஏற மூளையின் அளவு சுருங்குவதால், நினைவுத் திறன் படிப்படியாகக் குறையத் தொடங்கும்.  

முதுமையில் இளமை!

 நெஞ்சு வலி ஏற்பட்டால், அது வாயுத் தொல்லை என்று அலட்சியப்படுத்திவிடக் கூடாது. இதயம் வலுவிழந்து, இதய ஓட்ட மாறுபாடு என பலத் தொல்லைகளைத் தரும். ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போவதால் பக்கவாதம், சிறுநீரகக் கோளாறு போன்றத் தொல்லைகள் ஏற்படலாம்.  

 நிம்மதியான தூக்கம் என்பது தடைபடும். தூக்கத்தின் தரம் குறைந்துவிடும். தூக்கத்தின் மொத்த நேரத்தைவிட, ஆழ்ந்த தொடர் தூக்கம்தான் மிகவும் அவசியம்.

 60 வயதைக் கடந்தாலே, தெரிந்தவர்களின் பெயர், தொலைபேசி எண் ஞாபகத்தில் இருக்காது. இது, முதுமையின் விளைவுதான். இந்த ஞாபக மறதியை மட்டும் வைத்துக் கொண்டு அவருக்கு டிமென்ஷியா நோய் என்று எண்ணிவிடக் கூடாது. மறதியுடன், சரியாகப் பேச முடியாமை, தினமும் செய்யக்கூடிய வேலையைச் செய்யத் தெரியாமல் தவிப்பது, தெரிந்த பொருள்களையோ அல்லது நபர்களின் பெயர்களையோ நினைவில் கொண்டுவர முடியாமை - இந்த மூன்று பாதிப்புகளில் ஏதேனும் ஒன்றில் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர் டிமென்ஷியா நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  

 70 வயதைக் கடந்தவர்களுக்குத்தான் டிமென்ஷியா வருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம்.

முதியோர் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள்:

காலமுறைப்படி, முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதன்மூலம், நமது உடல் உறுப்புகளின் செயல்திறன்களைக் கண்டுகொள்ள முடியும்.  

 ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் மறைந்திருக்கும் பல நோய்களைக் கண்டுகொள்ளலாம். ஆரம்ப நிலையிலேயே அதற்குரிய சிகிச்சையைப் பெறும்போது, மிகப்பெரிய தொந்தரவுகள் தவிர்க்கப்படும்.

முதுமையில் இளமை!

 70 வயது வரை ஆண்டுக்கு ஒருமுறையும், அதற்குப் பின்பு 6 மாதங்களுக்கு ஒருமுறையும் மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்வது நல்லது.

 பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குப் பிறந்தநாள் பரிசாக, முழு உடல் பரிசோதனைக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

பிரச்னையைத் தவிர்க்க வழி

 உடல் எடையைச் சரியாக வைத்திருக்க வேண்டும்.  

முதுமையில் இளமை!

 உணவில் கவனம் தேவை.  

 உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.  

 பிராணாயாமம், தியானம் போன்ற பயிற்சிகள் மூலம் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவற்றைத் தடுக்கலாம்.

 மறதி நோயைப் போக்க நினைவாற்றலை அதிகரிக்கும் உணவுகள், மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய செயல்களைச் செய்யலாம்.  

முதுமையில் இளமை!

 உடற்பயிற்சி உடற்பயிற்சியாளர் ராஜேஷ்

'' 'நடந்தால் நாடும் உறவாகும்

படுத்தால் பாயும் பகையாகும்’

முதுமைக் காலத்தில் உடற்பயிற்சி செய்வதன் மூலமே பல்வேறு நோய்களை அருகே நெருங்கவிடாமல் செய்யலாம்.  

உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கும், நல்ல நிலையில் வைத்துக் கொள்வதற்கும் உதவுகிற ஒரே தீர்வு, உடற்பயிற்சி. உடற்பயிற்சி செய்வதன் மூலம் தசைகள் நன்றாக விரிவடையும். உடலில் சோர்வு நீங்கும், மனதில் உற்சாகம் பிறக்கும். நிம்மதியான தூக்கம் வரும். எந்த பக்கவிளைவும் இல்லாதது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்குப் புற்றுநோய் வரும் வாய்ப்புகள்கூட குறையும் என்கிறது ஆராய்ச்சி. எனவே, உடற்பயிற்சியின் மூலம் உற்சாக வாழ்வை வாழலாம்.''

 வாரத்துக்கு மூன்று மணி நேரம் நடந்தால், மாரடைப்பைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் 40 சதவிகிதமும்,  ஐந்து மணி நேரம் நடைப்பயிற்சி செய்யும்போது, 50 சதவிகிதமும் ஏற்படுகிறது என்கிறது ஓர் ஆராய்ச்சி. மாரடைப்பு மட்டுமல்ல, பல்வேறு நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் வெகுவாகக் குறையும். ரத்த ஓட்டம் சீராகும். உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்.  மற்றவர்களுடன் உரையாடியபடியே நடக்கும்போது, மனதிலும், உடலிலும் உற்சாகம் பிறக்கும்.

முதுமையில் இளமை!

 உடல் ரீதியான பிரச்னைகள், நோய்கள், சுற்றுச்சூழலை மனதில் கொண்டு பயிற்சிகளைத்

முதுமையில் இளமை!

தேர்ந்தெடுக்கலாம். நல்ல ஆரோக்கியம் உள்ளவர்கள், நடப்பது, ஓடுவது, சைக்கிளிங், நீச்சல், டென்னிஸ் விளையாடுவது போன்ற உடற்பயிற்சிகளை 30 முதல் 45 நிமிடங்கள் வரை செய்யலாம்.

 வசதிப் படைத்தவர்கள், டிரெட் மில்-ல் 15 நிமிடங்கள் பயிற்சி எடுக்கலாம். டிரெட்மில் இல்லாதவர்கள், மேடு பள்ளம் இல்லாத சமமான பாதையில் வீட்டைச் சுற்றியே தினமும் ஐந்து கிலோ மீட்டர் வரை நடக்கலாம். நடக்க முடியாதவர்கள், கையில் ஒரு வாக்கிங் ஸ்டிக், வாக்கர் எடுத்துக்கொண்டு நடக்கலாம். இதனால், உடல் பருமன் குறையும். மாரடைப்பு வராமல் தடுக்கும். எலும்பு வலுபெறும். நல்லத் தூக்கம் வரும். ரத்த அழுத்தம் குறையும். நடை சீராகும். தசைகள் உறுதிபடும். தள்ளாடும் நடைகூட சீராகும்.

 உடற்பயிற்சியை ஒரேநேரத்தில் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.  இடைவெளி எடுத்துக்கொண்டு 2, 3 முறையாகச் செய்யலாம்.  காலை, மாலை என்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயிற்சி செய்யலாம். பொதுவாக, காலையில் சூரிய ஒளிக்கதிர்

முதுமையில் இளமை!

படும்போது உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. எலும்புகள் நன்கு வலுபெறும்.  

 பக்கவாதம், மூட்டு வலி, முடக்குவாதம், கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், சேரில் அமர்ந்தபடியே உடலின் மேற்பகுதிக்கு மட்டும் பயிற்சி செய்யலாம். உட்கார்ந்த நிலையில் தியானம் செய்வதும் ஒருவித உடற்பயிற்சிதான். மனசும் லேசாகும்.  

 மிகவும் மெதுவாக உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். ஆர்வக் கோளாறில், வேகமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டால், வலியுடன் சதைப் பிடிப்பு, சுளுக்கு, எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்பு உண்டு.

 சாப்பிடாமல் உடற்பயிற்சியில் ஈடுபடக் கூடாது.  இதனால், தலைச்சுற்றல், மயக்கம், பலவீனம் ஏற்படும். உணவு உட்கொண்ட அரை மணி நேரம் கழித்து பயிற்சியில் ஈடுபடலாம். காலையில் உடற்பயிற்சி செய்பவர்கள், கஞ்சி குடித்துவிட்டு செய்வது நல்லது.  

 துணிகளை உலர்த்துவது, மடித்துவைப்பது, தட்டுகளைக் கழுவுவது, மெதுவாகப் பெருக்குவது என வீட்டிலேயே சில எளிய வேலைகளைச் செய்வதும்கூட நல்ல பயிற்சிகள்தான்.

 கால்கள் அடிக்கடி மறத்துப் போகலாம். உட்கார்ந்த நிலையில் கால்களை அசைத்தும், அடிக்கடி எழுந்து சற்று நடப்பதும் நல்லது.  அரைமணி நேரத்துக்கு மேல் ஒரே இடத்தில் தொடர்ந்து உட்காருவதைத் தவிர்க்க வேண்டும்.

முதுமையில் இளமை!

 இதய பலவீனம் உள்ளவர்கள், மற்றவர்களின் உதவியோடு இணைந்து உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. முதன்முதலில் உடற்பயிற்சியில் ஈடுபடுகிறவர்கள்,  மருத்துவரின் ஆலோசனைப் பெற்று அதன் பிறகு உடற்பயிற்சியைத் தொடங்குவது நல்லது.

முதுமையில் இளமை!

மனநலம் டாக்டர் அசோகன், மனநல மருத்துவர்

''மனநலமும் உடல்நலமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.  மனதில் உறுதியும் தன்னம்பிக்கையும் இருந்தால், உடல் ரீதியான பாதிப்பிலிருந்து பெருமளவு மீண்டுவிட முடியும். ஆனால், மனநலம் பாதிக்கப்பட்டால், உடல் ஏராளமான நோய்களின் வாசஸ்தலமாக மாறிவிடும்.''        

முதுமையில் மனநலம் பாதிப்படைய காரணங்கள்:

1. உடல்ரீதியானநோய்களால்...

கேட்கும் திறன், பார்க்கும் திறன், பேசும் திறன் மற்றும் உயர் ரத்த அழுத்தம், எலும்பு தொடர்பான பிரச்னைகள், படுத்தப் படுக்கை என உடல்ரீதியான நோய்கள் இருக்கும்போது, மற்றவர்களைச் சார்ந்து இருக்கும் நிலை ஏற்படும். இதனால், மனரீதியான பாதிப்புக்கு உள்ளாகலாம்.  

2. குடும்பத்தினரால்...

நிறுவனத்தில் இருந்து ஓய்வுப் பெற்று, சேமிப்பை பிள்ளைகளின் திருமணம், குடும்பத்துக்காகச் செலவழித்துவிட்டு, பிள்ளைகளைச் சார்ந்து இருக்கும் நிலை ஏற்படலாம். அப்படி மனைவியோ அல்லது கணவனோ ஒருவரை இழந்து மற்றொருவர் வாழும்போது, மகளையோ, மருமகனையோ எதிர்பார்த்து, அவர்களைச் சார்ந்து இருக்கும் நிலையில் மனநலம் பாதிக்கப்படலாம்.

3. சூழல்

தனிமையில் இருக்கும் முதியவர்களுக்கு, தன் தேவைகளை தானே செய்து கொள்ள முடியாத இயலாமை ஏற்படும். அடுத்தவர்களை எதிர்பார்க்கவேண்டிய சூழல்... எல்லாம் இருந்தும், யாரும் இல்லாமை போன்றவை சேர்ந்து மனநலனைப் பாதிக்கும்.

மன நோய்கள் வருவதற்கான காரணங்கள்:

1. மன அழுத்தம்:

தம்பதிகளுள் ஒருவரின் இழப்பு, சேமிப்பு இன்மை, கடந்த காலத்தை நினைத்து அசை போடுவது, நிஜ வாழ்க்கையின் நிலையை நினைக்காமல், பழங்கதையைப் பேசுவது மற்றும் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை மன அழுத்தத்துக்கு முக்கியக் காரணங்கள்.

முதுமையில் இளமை!

2. டிமென்ஷியா:

மறதி நோய். மூளையில் மடிப்புகள் குறைய ஆரம்பிக்கும். சின்னச் சின்ன விஷயங்களில் மறதி ஏற்படும். பழைய விஷயங்கள் ஞாபகம் இருக்கும். ஆனால், 15 நிமிடங்களுக்கு முன்பு நடந்தது மறந்துவிடும். முதலும், மூன்றாவதும் ஞாபகத்தில் இருக்கும். நடுவில் இரண்டாவது விஷயம் மறந்து போகலாம். சிலருக்கு சற்று முன்பு நடந்தது நினைவில் இருக்காது. வீட்டு இலக்க எண் மறந்து வழித் தடம் மாற வாய்ப்பு அதிகம்.

3. டெலிரியம்:

மெட்டபாலிசம் ரேட் குறைவதால், உடல்ரீதியாக மாற்றம் ஏற்பட்டு, மயக்கமான நிலையில் இருப்பது.

முதுமையில் இளமை!

படுத்தப் படுக்கையாக இருப்பது, குழப்பமான சூழல்.

4. டிஃபன்டென்சி:

வறுமை, இயலாமை, கையில் பணம் இன்மை சுயமாகச் சிந்திக்கவோ, வாழவோ முடியாத நிலை. இதனால், தற்கொலை எண்ணமும் தலைத் தூக்க வாய்ப்பு அதிகம்.

5. டெலுஷன் டிஸ்ஆர்டர்:

யாரோ பேசுவதுபோல எண்ணம் தோன்றும். யாரோ எதைப் பற்றியோ பேசிக் கொண்டிருந்தாலும், தன்னைப் பற்றி பேசுவதாகச் சந்தேக எண்ணம் துளிர்க்கும்.

தீர்வு: பணமே பிரதானம்:

சுயநலமாக வாழும் காலம் இது. வயதானகாலத்தில் உடல்ரீதியான விஷயங்களுக்கு மருத்துவச் செலவை சமாளிக்கவே பணம் அதிகம் தேவையாக இருக்கிறது. பணக்காரர்களால் இந்த எல்லா விஷயத்தையும் சமாளித்துவிட முடியும். ஆனால், நடுத்தர, ஏழை மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவதற்குக் காரணம், பணம்.  பெற்றப் பிள்ளைகளும்கூட மனைவி, பிள்ளைகளுக்குச் செலவழிப்பதில் ஆர்வம் காட்டுவார்களே தவிர, பெற்றோர்களை அந்த அளவுக்குப் பராமரிக்க நினைப்பதில்லை. இந்த நிலையைத் தவிர்க்க, வாழும்போதே சொத்துக்களைப் பிரித்து பிள்ளைகள் கையில் கொடுத்துவிடக் கூடாது. நமக்குப் பிறகு, நம் பிள்ளைகளுக்குத்தானே செல்லப்போகிறது. அதுவரை நம்முடைய பொறுப்பிலேயே சொத்துக்கள் இருக்கட்டும். பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டு, வாழும்போதே அநாதைகளாகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.  

முதுமையில் இளமை!

தனிமை:

எல்லா வயதினரும் இன்று தனிமையைப் பழகிக்கொள்ளவேண்டியது அவசியம். இலக்கியம், செய்தித் தாள்கள் புத்தகங்கள் படிப்பது... என எது பிடித்திருக்கிறதோ அதைச் செய்யலாம். தினம் தினம் நடக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்வது, பாட்டு கேட்பது, சுகுடோ, குறுக்கெழுத்து போட்டிகளைப் பூர்த்தி செய்வது, டி.வி. பார்ப்பதும், நல்ல நட்புகளை வளர்த்துக்கொள்வது என சுய சார்பு நிலை மிகவும் முக்கியம். சார்பு நிலையில் இல்லாமல் தனிமைக்குத் தயாராக வேண்டும். யாருமே இல்லையென்றாலும்கூட, தனி உலகத்தில் சஞ்சரிக்கக்கூடிய நிலை வந்தால், மனரீதியான பிரச்னைகள் இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்.

உணவுகள்:

முதுமையில் இளமை!

கிருஷ்ணமூர்த்தி, உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்

வயது ஏற ஏற, உடலில் வளர்ச்சிதை மாற்ற அளவு (பேசல் மெட்டபாலிசம் ரேட்) குறைந்து கொண்டே போகும். உடலில் எனர்ஜி குறைவதால், முதுமை வரும். ஜீரணசக்தியும் குறையும். சிலர், முதுமையிலும் இளமையாக இருப்பார்கள். நல்ல பழக்க வழக்கங்கள், உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி, சத்தான ஆகாரம், நிம்மதியான தூக்கம், நல்ல மனநிலை என தன் வாழ்நாளை நிம்மதியாக கழிப்பதுதான் இளமையாக இருப்பதற்குக் காரணம்.    

நேரத்துக்கு, அளவோடு, சத்தாக சாப்பிடுவது நல்லது.  விருந்தும் வேண்டாம்  விரதமும் வேண்டாம் என்று இருக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி என்று வாழ்வை வரைமுறைப்படுத்தினால் எப்போதும் இளமையோடு இருக்கலாம். தனிமையில் வாழும் முதியோர்களுக்கு உணவுதான் பிரச்னை. வெளியில் வாங்கி சாப்பிடுவதைத் தவிர்ப்பதுதான், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முதல் வழி.  

முதுமையில் இளமை!

அவசியம் தேவை:

அரை வயிறு உணவு, கால் வயிறு நீர், கால் வயிறு காற்று என்று இருந்தால், உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.

கலோரி: அதிக பருமன் இல்லாத, நல்ல சுறுசுறுப்புடன் இருக்கும் ஒருவருக்கு, 1,800 முதல் 2,000 கிலோ கலோரி தேவை.

புரதம்: புரதச்சத்து சற்று அதிகம் தேவை. உடலில் புரதச்சத்து குறைந்தால், உடலில் சதை பலவீனம் அடைந்து, உடல் இளைத்தது போல் ஆகிவிடும். உடல் எடையின் அளவைப் பொறுத்து, அதே அளவை கிராமில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, ஒருவர் 55 கிலோ எடை இருந்தால், தினசரி அவர் உணவில் 55 கிராம் புரதச்சத்து தேவை.

முதுமையில் இளமை!

மாவுச்சத்து: மிதமான அளவு போதும். அதாவது, சாப்பிடும் சாப்பாட்டில் பாதி அளவு அரிசி சேர்த்துக் கொள்ளலாம்.

எண்ணெய்: ஒருநாளைக்கு 20 முதல் 30 கிராம்.

தாது உப்புகள்/வைட்டமின்கள்: காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களில் அதிக அளவில் இருக்கிறது. அந்தந்த பருவத்தில் கிடைக்கும், அந்தந்த ஊரில் விளையும் காய்கறி, பழங்களை எடுத்துக்கொண்டால், போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். பழங்களை, உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

முதுமையில் இளமை!

எப்படி சாப்பிட வேண்டும்?

 காலை ஆறு மணிக்கு எழுந்து உடற்பயிற்சியை முடித்துவிடுங்கள். சுகமான காற்று முகத்தில்படும்போது, புத்துணர்ச்சி கிடைக்கும். பிறகு, அரை மணி நேரம் கழித்து பால், காபி, டீ என ஏதாவது ஒன்றைக் குடிக்கலாம். எட்டு மணிக்கு 3 இட்லி, தோசை, இடியாப்பம் என எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளைத் தேர்ந்தெடுங்கள்.

 புரதச்சத்து அவசியம் தேவை என்பதால் தினமும் பருப்புப் போட்ட உணவு வகைகளை அவசியம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

 காலை 11 மணி அளவில், இரண்டு விதமான பழங்களைச் சாப்பிடுங்கள்.  

 மதியம் 1 மணிக்கு, இரண்டு விதமான நார்ச்சத்துள்ள காய்கறிகளுடன் உணவு சாப்பிடலாம்.  சுரைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய், பீன்ஸ் என நீர்ச்சத்து, நார்ச்சத்துள்ள காய்கறிகள் தினமும் உணவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். நல்ல எனர்ஜி கிடைப்பதுடன் மலச்சிக்கல் பிரச்னையும் இருக்காது.

 வாரத்துக்கு இரண்டு, மூன்று நாட்கள் கீரை அவசியம் தேவை. சுண்ணாம்புச் சத்துள்ள அகத்திக் கீரை, வெந்தயக் கீரை, பால், கறிவேப்பிலை இவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.  இதனால், எலும்புகள் வலுவடையும்.

 மாலை 4 மணிக்கு, தானியங்களில் செய்த சுண்டல், இட்லி, கஞ்சி போன்றவற்றைச் சாப்பிடலாம்.

 பாலில் சர்க்கரைக்குப் பதிலாக பேரீச்சம்பழம், வெல்லம், தேன் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்வதன் மூலம், ரத்த சோகை வராமல் தடுக்கலாம்.

 ஆன்டி ஆக்ஸிடன்ஸ் அதிகம் உள்ள பூசணி, நெல்லிக்காய், கேரட் போன்ற பச்சை காய்கறிகள், பப்பாளி, மாம்பழம் முதலிய பழங்களைச் சாப்பிடுவது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். நோய் வராமல் உடலைப் பாதுகாக்கும்.

முதுமையில் இளமை!

செய்ய வேண்டியவை:

 பசிக்கும்போது சாப்பிடுங்கள்.

 குடும்பத்தில் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும்போது, உணவின் சுவை இன்னும் அதிகரிக்கும்.  

 சாப்பிடும்போது பேச்சை தவிர்ப்பது நல்லது.

 வயிறு சங்கடமாக இருந்தாலோ, சாப்பிட்ட உணவு ஜீரணமாகாமல் இருந்தாலோ, மேற்கொண்டு எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.  

 முடிந்தவரை உணவை நன்றாக வேகவைத்து, மசித்து சாப்பிடுவது நல்லது. அரிசி போல் இருக்கும் வெரைட்டி ரைஸ் உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள்.

 உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள்.  

சேர்க்க வேண்டியவை:

 தினமும் குறைந்த கொழுப்புள்ள பால் இரண்டு கப் கட்டாயம் குடிக்க வேண்டும். இது, கால்சியம் குறைபாட்டை நீக்கும்.

 வாரத்துக்கு 2 முதல் 3 முட்டை சாப்பிடலாம்.  கொலஸ்ட்ரால் இருப்பவர்கள், முட்டையின் வெள்ளைப் பகுதியை மட்டும் சாப்பிட வேண்டும்.

 அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப, டாக்டர் பரிந்துரைக்கும் அளவு நீர் அருந்த வேண்டும்.

 அரிசியைக் குறைத்துக்கொண்டு, கேழ்வரகு, கோதுமையைச் சற்று அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

தவிர்க்க வேண்டியவை:

 எண்ணெயில் பொரித்ததைத் தவிர்க்க வேண்டும். காய்கறிகளைக்கூட அதிகம் எண்ணெய் சேர்க்காமல், லேசாக வேகவைத்து சாப்பிடலாம்.  

 தேங்காய் அளவோடு சேர்த்துக்கொள்ளலாம்.

 கிழங்கு வகைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். கொழுப்புச்சத்து அதிகம் உள்ள எண்ணெய், நெய், வெண்ணெய் போன்றவற்றைக் குறைத்துவிடுங்கள்.  

மனமும் உடலும் மகிழ்ச்சியுடன் இருக்க...

முதுமையில் இளமை!

டாக்டர் லட்சுமிபதி ரமேஷ், முதியோர் நல சிறப்பு மருத்துவர், காவேரி மருத்துவமனை

 எந்த ஒரு விஷயத்தையும் பாசிடிவ்வாக எடுத்துக்கொள்ளுங்கள்.  'இந்த மட்டிலாவது என்னை ஆண்டவன் வைத்திருக்கானே’ என்று சந்தோஷப்படுங்கள்.  அதுவே, மனரீதியான பிரச்னையை உங்கள் மனதில் விதைக்காது.

 எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொள்வது நல்லது. தேவையில்லாத பொருட்களின் மீது ஆசைப்பட்டு, வாங்கி வீட்டில் குவிப்பதும் தவறு.  வீட்டில் இரண்டே நபர்கள்தான் இருப்பார்கள். ஆனால், நடக்கக்கூட இடமில்லாத அளவுக்குச் சுற்றிலும் பொருட்கள் கிடக்கும்.  

 இளைஞர்களுக்கு சரிசமமாக மல்லுக்கட்டுவதும் தவறு. நம்ம பையன்தானே விட்டுக்கொடுங்கள்.  

 பாராட்டுங்கள்.  சின்ன வயதினருக்கு ஒரு சிறிய பாராட்டுக்கூட சந்தோஷத்தை ஏற்படுத்தும்.  உங்களின் ஐந்து சதவிகித பாராட்டு வார்த்தைகள், 60 சதவிகிதமாக வெளிப்படும்.   'அந்தக் காலத்துல, உங்க பாட்டி, தாத்தா என்னைப் படுத்தினபாடு இருக்கே...’ என்று நீட்டி முழக்கினால், அங்கு தேவையில்லாத மனக்கசப்புதான் ஏற்படும். பழங்கதை பேசுவதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.    

 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50 நபர்கள், 6, 7-ம் வகுப்பு படிக்கும் பிள்ளைகள் என இரு பிரிவினருக்கும் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.  அதில், பிள்ளைகளை முதியவர்களிடம் பேசச் சொன்னதில், பெரும்பாலான வயதானவர்கள் பேரன், பேத்தி, குடும்பம் என எதையுமே பகிர்ந்து கொள்ளாமல், 'உடம்பு சரியில்லை, மூட்டு வலி.. பென்ஷன் வரலை, பணம் கையில் இல்லை’ என சுய பிரச்னைகளைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். இப்படி, எப்போதும் சின்ன வட்டத்துக்குள் சிந்திக்காதீர்கள்.  குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் செயல்பாடுகள், சந்தோஷ நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.  வாழ்வின் மீதான வெறுப்பு, பாரம் குறையும். பிள்ளைகளின் கஷ்டமும் புரியும்.

 உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இருமல், சளி போன்ற சின்ன பிரச்னைகள் உடனடியாக சரியாகிவிடும்.  எந்தவித உடல் அசைவும் இல்லாமல் இருப்பவர்களுக்கு, இருமலும், சளியும் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.

 வயதானவர்களுக்கு, தூக்கத்தின் தரம், அளவு இரண்டுமே குறைய தொடங்கும். மெட்டபாலிசம்,

முதுமையில் இளமை!

ஹார்மோன் குறைபாடு ஆகியவையே தூக்கம் தடைப்படக் காரணம். எப்போதும் கட்டிலிலேயே இருந்தால், இரவில் தூக்கம் தடைபடும். மதியம் அரை மணி நேரம் (அ) ஒரு மணி நேரம் ஓய்வு எடுக்கலாம். மற்ற நேரங்களில் வெளியில் ஈசி சேரில் உட்கார்ந்தபடியே, அக்கம்பக்கத்தினருடன் அன்பாகப் பேசுவது, செஸ், கேரம் போன்ற விளையாட்டுகளை விளையாடுவது, பேப்பர் படிப்பது, பாடல்களைக் கேட்பது என்று நேரத்தை நிம்மதியாகச் செலவழியுங்கள்.  இரவில் தூக்கம் தன்னால் வரும்.  

 இரவு தூங்கும்போது, தண்ணீர் குறைவாகக் குடியுங்கள்.  அடிக்கடி எழுந்திருக்கவேண்டிய அவசியம் இருக்காது.  

 மெல்லிய இசையைக் கேட்டபடி தூங்குங்கள்.  இது மனச் சோர்வையும், நிம்மதியையும், நல்ல உறக்கத்தையும் தரும்.  

 பெட்ரூமுக்கும் பாத்ரூமுக்கும் இடையில் டேபிள், நாற்காலி, ஸ்டூல் போன்ற எந்த பொருட்களையும் வைக்காதீர்கள்.  தடுக்கிவிழ வாய்ப்புகள் அதிகம்.

'காலனே என் காலடியில் வாடா!

உன்னை என் காலால் எட்டி உதைக்கிறேன்.’

என்ற பாரதியின் பாடல் வரிகளை அடிக்கடி நினைவில் வைத்துக் கொண்டால், மரண பயம்கூட மனதை வருத்தாது!

- ரேவதி,

படங்கள்: சு.குமரேசன், எம்.உசேன், ஜெ.வேங்கடராஜ், ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்,

வி.சதீஸ்குமார்