Published:Updated:

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

சஃப் ஃபிளவர் (safflower) என்ற பூவில் இன்சுலின் மரபணுவைச் செலுத்தியுள்ளனர் கனடா நாட்டு விஞ்ஞானிகள். இந்தப் பூவில் இருந்த விதைகளை எடுத்து நட்டு செடியாக வளர்த்து, அதில் இருக்கும் தன்மையை ஆய்வு செய்து பார்த்த போது, அந்தச் செடியில், மனித உடலில் இருப்பது போன்றே இன்சுலின் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இத்தகைய செடிகளை 16,000 ஏக்கர் வளர்த்தால், உலக மக்கள் அனைவரின் இன்சுலின் தேவையும் பூர்த்திசெய்யப்பட்டு விடுமாம். மிகச் சாதாரண மக்களும் தங்களுக்கு தேவையான இன்சுலினை மிக எளிய விலையில் வாங்கிக்கொள்ளலாம்.

இன்சுலின் பற்றிய 'இனிப்பு’ச் செய்தி!

அக்கம் பக்கம்

அபிஷேக் பச்சனின் மகனாக அமிதாப் நடித்த 'பா’ திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்கு உள்ளம் கனத்தது. இளம் வயதிலேயே முதுமைத் தோற்றத்தை அளிக்கும் 'ப்ரோகேரியா’ என்ற நோய் தாக்கப்பட்ட சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அமிதாப். அதைப் பார்த்து உள்ளம் உருகியவர்கள் பலர். அப்படிப்பட்ட மிகக் கொடிய நோயுள்ள சிறுவன் ஒருவன் பீகாரில் உள்ளான். அலி உசேன்கான் என்ற 14 வயது சிறுவன், 110 வயது முதுமையான தோற்றத்தில் காணப்படுகிறான். இந்த நோய் உள்ளவர்கள், மற்றவர்களைக் காட்டிலும் எட்டு மடங்கு அதிக வேகத்தில் முதுமை அடைவார்களாம். அலி உசேனுக்கு ஆறு சகோதர, சகோதரிகள். இவர்களில் இருவர் மட்டுமே மற்ற குழந்தைகளைப்போல உள்ளனர். மற்ற நான்கு பேருக்கும் 'ப்ரோகேரியா’ பிரச்னை உள்ளது. இவர்கள் அதிகபட்சம் சில ஆண்டுகள் மட்டுமே வாழ்வார்களாம். 'நான் நீண்ட நாள் வாழ மாட்டேன் என்பது எனக்குத் தெரியும். சாவைக் கண்டு நான் பயப்படவில்லை. வருங்காலத்தில் எனக்கு ஏற்பட்டுள்ள நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும். வேறு யாரும் இதுபோன்ற பிரச்னையுடன் மரணத்தைத் தழுவக்கூடாது' என்கிறான் அலி உசேன்கான்.

இளமையில் முதுமை கொடுமை!

அக்கம் பக்கம்

''ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறைவு என்ற பொதுவான கருத்து மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால், இதில் உண்மையில்லை. பெண்களுக்கு மெனோபாஸ் வரையில் இயற்கையாகவே மாரடைப்பைத் தடுப்பதற்கான பாதுகாப்பு உள்ளது. ஆனால், மெனோபாஸுக்குப் பிறகு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு, ஆண்களைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளது. பெண்களுக்கு புற்றுநோயைக் காட்டிலும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது' என்கிறார் அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி. 'இதைத் தவிர்க்க, பெண்கள் தொடர் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்’ என்றும் ஆலோசனை கூறுகிறார்.

நெஞ்சடைக்கும் நியூஸ்!

அக்கம் பக்கம்

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று டைஃபாய்டு காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த மருந்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போட்டுக்கொள்ளலாம். இது குறித்து அந்த நிறுவனம், 'பல்வேறு பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட உலகின் முதல் டைஃபாய்டு தடுப்பூசியை நாங்கள் அறிமுகம் செய்துள்ளோம்’ என்கிறது. உலக அளவில் ஆண்டுதோறும் 2 கோடி பேர் டைஃபாய்டு காய்ச்சலுக்கு ஆளாகிறார்கள். இவர்களில் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். இதில், பெரும்பாலானவர்கள் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள். உலக அளவில் டைஃபாய்டு காய்ச்சலால் உயிரிழப்பவர்களில் 90 சதவிகிதம் பேர் ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

டைஃபாய்டு நோய்க்கு விடை!

அக்கம் பக்கம்

நடைமுறையில் நாம் உண்ணும் உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறது என்று தெரியாததால்தான் இந்தியாவில் பல பேர் குண்டாக இருக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. இந்தக் கவலையைப் போக்கும் வகையில், கலிஃபோர்னியாவில் உள்ள மூன்று பேர் 'ஃபுட் கலோரி ஸ்கேல்'' என்ற கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதில் காய், பழம், பிரெட், முட்டை, பால் போன்ற எதை வைத்தாலும் உடனே அந்தக் கருவியில் இருக்கும் 'ப்ளூ டுத்’ மூலம் கைபேசிக்கு எத்தனை கலோரி இருக்கும் என்ற தகவல் வந்துவிடும். இதன் விலை 3,500 முதல் 5,000 வரை இருக்குமாம்.

கலோரி உணவானாலும் இனி கவலையே இல்லை!

அக்கம் பக்கம்

சமீப காலமாக நேபாளத்தில் பறவைக் காய்ச்சல் அதிகரித்துள்ளது. மக்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவி விடக்கூடாது என்பதற்காக, கோழி விற்பனையை தற்காலிகமாகத் தடை செய்துள்ளது நேபாள அரசு. இந்தத் தடையைச் சரிபார்க்க ஒரு தனிக் குழுவையே உருவாக்கியுள்ளது. பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக இதுவரை 22 லட்சம் கோழிகள், 40 லட்சம் முட்டைகளை அழித்துள்ளது அந்த அரசு. மேலும் 30 கோழிப் பண்ணைகளையும் இழுத்து மூடியுள்ளது. 2009-ம் ஆண்டில் நேபாளம் இதே போன்ற ஒரு பிரச்சனையைச் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வரும்முன் காப்போம்!

விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சூழ்நிலையில் இருந்த ஒருவர், உடல் உறுப்பு தானத்துக்காக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தது மிகப்பெரிய உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 19 வயதான மோபின் என்பவர் திருவனந்தபுரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவர் மீது கார் ஒன்று மோதியது. மோதிய வேகத்தில் மோபின் தூக்கி வீசப்பட்டார். கார் நிற்காமல் சென்றுவிட்டது. மோபினுக்கு ரத்தம் அதிகமாக வெளியேறிக்கொண்டிருந்தது. உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 'தான் உயிர் பிழைக்கமாட்டோம்’ என்பதை உணர்ந்த மோபின், தன்னுடைய உடல் உறுப்புக்களைத் தானம் செய்ய விரும்புவதாகவும், இதுவே தன் கடைசி ஆசை என்று கோரிக்கை விடுத்து உயிரை விட்டார். ஆனால், விதி... விபத்தில் அவருடைய அனைத்து உறுப்புக்களும் சேதம் அடைந்துவிட்டதால், அவற்றை எடுக்க முடியவில்லை. அவருடைய கண்களை மட்டும் டாக்டர்கள் தானமாகப் பெற்றுள்ளனர்.

இறந்தும் உயிர் வாழ்கிறார் மோபின்!