Published:Updated:

அனைத்துப்பரிசோதனைகளும் ஒரே இடத்தில்...

நெஞ்சம் நெகிழ்ந்த வாசகர்கள்!

##~##

உங்கள் நலனில் அக்கறை கொண்ட டாக்டர் விகடன், காவேரி மருத்துவமனையுடன் இணைந்து, 10-வது மருத்துவ முகாமை கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி நடத்தியது. திருச்சி உறையூரில் நடந்த இந்த முகாமில், காவேரி மருத்துவமனையின் இதயம், சிறுநீரகம், குழந்தைகள் நலம், எலும்பு மூட்டு, பொது மருத்துவம், கண், மகளிர் மற்றும் மகப்பேறு, பல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பிரிவுகளைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட டாக்டர்கள், 25-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள், டெக்னீஷியன்கள் பங்கேற்று வந்து பொதுமக்களுக்கு இலவச சிகிச்சை அளித்தனர். 

முகாமுக்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும், ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தப் பரிசோதனைகள் செய்யப் பட்டன. இதைத் தொடர்ந்து அவர்களின் உடல் நலப் பிரச்னை குறித்தும் அக்கறையுடன் விசாரிக்கப்பட்டு, பொதுநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர், மக்களின் உடல் நலக் குறைகளைக் கேட்டு, தேவையெனில் அவர்களை ஈ.சி.ஜி., எக்கோ மற்றும் ஸ்கேன் பரிசோதனைக்கு அனுப்பினார். முகாம் நடந்த இடத்தில் இலவசமாக ஈ.சி.ஜி., எக்கோ மற்றும் ஸ்கேன் பரிசோதனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு பரிந்துரைக்கப்பட்ட ஒவ் வொருவருக்கும் அனைத்துப் பரிசோதனைகளும் இலவசமாகச் செய்யப்பட்டன.

அனைத்துப்பரிசோதனைகளும் ஒரே இடத்தில்...

முகாமுக்கு, திருச்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் மதுரை, தேனி, தஞ்சாவூர் என பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றுப் பயனடைந்தனர்.

இதயம், மூட்டு எனப் பல பிரச்னைகளுக்காக முகாமுக்கு வந்து பரிசோதனைகள் செய்து விட்டு, அதன் முடிவுக்காகக் காத்துக் கொண்டிருந்த 81 வயது மூதாட்டி சகுந்தலாவிடம் பேசினோம்.

நம் கைகளைப் பற்றிக்கொண்டு, மிகவும் உருக்கமாக விகடனுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்ட அவர், 'எனக்கு மூச்சுவிட முடியவில்லை, மயக்கம் வருது, விரல்களை மடக்குவதற்குச் சிரமமாக இருக்கு. ஒரு வருஷமா பல இடங்களுக்குப் போய் மருந்து மாத்திரை எடுத்துக்கிட்டாலும் எதுவும் சரியாகலை. அதனால், இப்போ ட்ரீட்மென்ட் எதுவும் எடுத்துக்கலை. எனக்கு கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்குப் போக இஷ்டம் இல்லாததால், வீட்லயே இருந்தேன். என் பேத்திதான் இந்த முகாம் பத்திச் சொன்னா. அதனால, என் மகனைக் கூட்டிக்கிட்டு வந்தேன். சும்மா என்கூட வந்தவன், இவ்வளவு வசதியையும் பார்த்துட்டு, அவனும் உடம்பைப் பரிசோதிச்சுகிட்டான். எனக்கு இதயத்துல பிரச்னை இருக்குன்னு சொல்லி 'எக்கோ’ எடுக்க அனுப்பிருக்காங்க. ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் மணிக்கணக்கில காத்திருக்கணும். ஆனா, விகடன் எங்களுக்கு பக்கத்திலேயே எல்லா டெஸ்ட்டும் இலவசமாக எடுக்கவும், பெரிய டாக்டர்களைப் பார்க்கிற வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கு. திருச்சி மட்டுமில்லாம, இதுபோல எல்லா ஊர்லயும் நடத்தி, அவங்களுக்கும் சேவை செய்யணும்'' என்றார்.

அனைத்துப்பரிசோதனைகளும் ஒரே இடத்தில்...

சென்னையில் இருந்து திருச்சிக்கு உறவினர்கள் வீட்டுக்கு வந்த பிரபல நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணிபுரியும் பாரூக், 'நான் 20 ஆண்டுகால விகடன் வாசகர். விகடனின் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு உடனே வந்துவிட்டேன். எனக்கு நெஞ்சில் ஏதோ கனமான கட்டி இருப்பது போன்ற உணர்வு அடிக்கடி ஏற்படும். இங்க ஈ.சி.ஜி., எக்கோ, அப்புறம் ஸ்கேன் பரிசோதனை செய்தாங்க. எல்லாம் நார்மல்னு சொல்லிட்டாங்க. என்னுடைய பயத்தை விகடனும், காவேரி மருத்துவமனையும் போக்கிடுச்சு. உங்களோட சர்வீஸ் தொடரணும்'' என்றார்.

அனைத்துப்பரிசோதனைகளும் ஒரே இடத்தில்...

மதுரையில் இருந்து வந்திருந்த கிருஷ்ணன் பேசுகையில், 'எனக்கு தலையில் நீர் கோர்த்திருக்கு. மூக்கடைப்பு, நெஞ்சுவலி, வயிற்றுப் புண் என நிறைய பிரச்னைகள் இருக்கு. இங்கு ஒரே இடத்தில தரமாக, அதேசமயம் இலவசமாக மருத்துவ முகாம் நடத்துகிறார்கள் எனத் தெரிந்தவுடனே வந்து விட்டேன். பிரச்னைகளுக்கான காரணங்களையும், அதற்கான எளிய சிகிச்சை பத்தியும் டாக்டருங்க ரொம்பவே பொறுமையாவும், தெளிவாவும் சொன்னாங்க. மனசு நிறைவா இருக்கு. நன்றி' என்று தழுதழுத்தார்.

வந்திருந்த அனைத்து வாசகர்களுக்கும் தேவையான பரிசோதனைகள், சிகிச்சைகள் செய்யப்பட்டன. மக்களின் ஆதரவோடு திருச்சியில் முகாமை நிறைவு செய்தது டாக்டர் விகடன். வாசகர்களின் விருப்பத்துக்கு இணங்க, அடுத்து வேறு ஒரு இடத்தில் மருத்துவ முகாம் நடத்துவதற்கான ஏற்பாடுகளிலும் தீவிரமாக இறங்கியிருக்கிறது நம் டாக்டர் விகடன் குழு!

- பி.விவேக் ஆனந்த்,

பி.கமலா, பா.சபரிநாதன்

படங்கள்: தே.தீட்ஷித்

ஜா.கிளாட்வின்