Published:Updated:

மழைக்கால நோய்கள்.. மல்லுக்கட்டுவது எப்படி?

மழைக்கால நோய்கள்.. மல்லுக்கட்டுவது எப்படி?
##~##

ருவ மழையை எதிர்கொள்ள குடை, ரெயின்கோட் மட்டுமே நம் பாதுகாப்புக் கவசங்களாக நினைக்கிறோம். ஆனால், மழை கொண்டுவரப்போகும் எண்ணிலடங்கா வியாதிகளிடமிருந்து நம்மை எப்படிக் காப்பது? 

பொதுநல சிறப்பு மருத்துவரும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியருமான ஜி.சதீஷ்குமார், மழைக் கால நோய்களில் இருந்து மீள்வதற்கான வழிகளை விவரிக்கிறார்...

'பருவ காலங்கள் எதுவானாலும் வியாதிகளைப் பரப்புவதில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, பாரசைட் போன்றவைதான் பிரதானம். அதிலும் மழைக் காலத்தில், சாதாரண சளியில் தொடங்கி, மூக்கடைப்பு, இருமல், காய்ச்சல் எனப் பல்வேறு நோய்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது பேதமின்றித் தாக்கலாம். இந்த உபாதைகளைத் தவிர்க்க, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியில் கவனம் வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு குறையும்போதுதான், தொற்றுக் கிருமிகளுக்கு நம் உடல் வரவேற்பு சொல்லும்.

மழைக்கால நோய்கள்.. மல்லுக்கட்டுவது எப்படி?

 மழைக் காலத்தில் உரிய வடிகால்கள் அமையாவிட்டாலோ அல்லது அவை அடைத்துக்கொண்டாலோ, உருவாகும் குட்டி நீர்த்தேக்கங்கள்தான் கொசுப் பட்டாளத்துக்கு கெஸ்ட் ஹவுஸ். அசுத்த நீர் மட்டுமா... குடிநீர், மழைநீர் போன்ற தூய்மையான நீர்ப்பரப்பும்கூட மலேரியா, டெங்கு காய்ச்சலுக்குக் காரணமான கொசுக்களுக்கு அடைக்கலம் தந்துவிடும். எனவே, வீட்டுக்குள்ளும், வெளியேயும் நீர் தேங்காதவண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள்.  

  வாட்டர் டேங்கிலும்கூட கொசு ஊடுருவும் இடைவெளிகளைப் பார்த்து அடைத்துவிடுவது நல்லது. கூடுதல் உபயோகத்துக்கு அதிகப்படியாக குடிநீர் பிடித்துவைத்திருக்கும் பாத்திரங்களையும்கூட, தூய்மையான துணியால் வேடு கட்டி, அதன் மேல் வழக்கமான மூடிகளைக்கொண்டு மூடலாம்.

    மழை நீர் பெருக்கத்தில், குடிநீர் குழாய்களில் கழிவு நீர் கலந்துவிடுவது சாதாரணமாக நடக்கும். அதை உத்தேசித்து, வீட்டைச் சுற்றி அசுத்தம் அதிகமாகும் நாட்களில் ப்ளீச்சிங் பவுடரை உபயோகிக்கலாம்.

    மழை சீஸனில் மிகவும் சாதாரணமானது, ஃப்ளூ காய்ச்சல். மூன்று முதல் ஐந்து தினங்கள் மட்டுமே அதன் பாதிப்பு இருக்கும். ஆனால், வந்திருப்பது சாதாரண காய்ச்சலா அல்லது மலேரியா, டைபாய்டு, டெங்கு போன்ற விபரீதக் காய்ச்சலா என்று உணர முடியாதபட்சத்தில், காய்ச்சல் வந்ததும் அவசரத்துக்கு கைவசமிருக்கும் 'பாராசிட்டமால்’ மாத்திரைகளைப் பயன்படுத்திக்கொள்தல் தவறில்லை. இரண்டாவது நாளும் அதன் வீரியம் குறையாதுபோனால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

    வீட்டுக்குள்ளே துணி மூட்டைகள் மற்றும் சுத்தமில்லாத இடங்களில், கொசுக்கள் அதிகம் அடைக்கலமாகும். திரைச்சீலைகள் அலங்கார விரிப்புகளையும்கூட மழைக் காலத்துக்கான கூடுதல் கவனிப்பில் சேர்த்துக்கொள்ளலாம்.

  குழந்தை முதல் பெரியவர் வரை கொசுத் தொந்தரவு இல்லாத உறக்கத்துக்கு கொசுவலைதான் பெஸ்ட். பிற்காலத்திய மூச்சு தொடர்பான பக்கவிளைவுகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கும். ஆஸ்துமா மற்றும் அலர்ஜி பாதிப்பு உள்ளவர்கள் புகை, லிக்யூட், மேட் என ரகம் ரகமான கொசு விரட்டிகள் பயன்படுத்தும் விஷயத்தில் கூடுதல் கவனம் வேண்டும்'' என்று பாதுகாப்பு டிப்ஸ்களை வழங்கிய டாக்டர் சதீஷ்குமார், வைரஸ் கிருமிகளைப் பற்றி விரிவாகச் சொன்னார்.

மழைக்கால நோய்கள்.. மல்லுக்கட்டுவது எப்படி?

''பொதுவாக, வைரஸ் காய்ச்சல்களில் சாதாரண ஃப்ளூவில் தொடங்கி பன்றிக்காய்ச்சல் வரை சுமார் 21 ரகங்கள் அடையாளம் காணப்படுகின்றன. இதில், உடலின் உள் அவயங்களில் ரத்தப்போக்கை உண்டாக்கும் டெங்கு மற்றும் ஆப்பிரிக்க இறக்குமதியான யெல்லோ ஃபீவர் போன்ற விபரீதக் காய்ச்சல்களும் அடக்கம்.

சென்ற வருட அனுபவத்தின் அடிப்படையில், இந்த மழை சீஸனில் நாம் அதிகம் எதிர்த்துப் போரிட வேண்டியது டெங்கு கொசுவாகத்தான் இருக்கும்.

டெங்குவை வரவழைக்கும் 'ஏடிஸ் எஜிப்டி’ பெண் கொசுக்கள் கடிப்பதால், நமது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். ஐந்து வருடங்களுக்கு முன்பு தமிழகம், கேரள மாநிலங்களை அதிகம் பாதித்த சிக்குன்குன்யாவும் வைரஸ் காய்ச்சல்தான். வைரஸ் போலவே பாரசைட் தொற்று உண்ணிகள் பரப்பும் காய்ச்சலான மலேரியா, எல்லா சீஸனிலும் வரும். ஆனால், இவை மழைக் காலத்தில் அதிக வாய்ப்புகளை ஏற்படுத்திவிடும். இந்த பாரசைட்டின் மற்றொரு முகம் யானைக்கால் வியாதி. இவை தவிர, பாக்டீரியா காய்ச்சலான டைபாய்டு மழை சீஸனில் சூடு பிடிக்கும். ஐந்து நாட்களைத் தாண்டியும் காய்ச்சல் தொடர்ந்தால், ரத்தப் பரிசோதனை மூலம் டைபாய்டை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.'' என்ற டாக்டர் சதீஷ், கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களை அலசினார்.

மழைக்கால நோய்கள்.. மல்லுக்கட்டுவது எப்படி?

   மழைக் காலத்தில் இயல்பாகவே உடலின் ஜீரண சக்தி குறைந்துவிடுவதால், அதிகம் காரம், எண்ணெய், மசாலா கலந்த உணவுகளை ஒதுக்கிவிடலாம்.

   வெளியில் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடலாம். சுகாதாரமற்ற சூழலால் ஏற்படும் வாந்தி பேதியை இது தவிர்க்கும்.

   உடல்நலக் குறைவானவர்களுக்கு இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேகவைத்த எளிமையான உணவுகளே உகந்தது.

  குளிர் காலத்தில் நாம் வழக்கமாக அருந்தும் காபி, டீக்கு மாற்றாக, காய்கறி சூப் அருந்தலாம். சமையலுக்கு, கொதித்து ஆறியதை வடிகட்டி உபயோகிப்பதே உசிதமானது.

    மழையில், பலரும் தலைக்குக் குளிப்பதைத் தவிர்த்துவிடுவது உண்டு. இதனால், தலையில் தொற்றுகள் அதிகமாகும். தலைக்குக் குளித்ததும், கேசத்தை நன்றாக உலர்த்த வேண்டும். சைனஸ், தலைப்பாரம், ஒற்றைத் தலைவலிப் பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.

   சுற்றுப்புறத்தில் எலி நடமாட்டம் இருந்தால், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்திவிடவேண்டும்.

    குழந்தைகளை தேங்கிக்கிடக்கும் நீரில் விளையாடவிடுவது தவறு.

மழைக்கால நோய்கள்.. மல்லுக்கட்டுவது எப்படி?

    உலராத உடைகளை அணிவது, நனைந்த உள்ளாடைகளை மாற்றாமல் இருப்பது போன்றவை பூஞ்சைத் தொற்றுக்கு வரவேற்பு சொல்லும்.

    வெளியே சென்றுவிட்டு வந்ததும், பாதங்களை தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும்.  

    குழந்தைகளுக்கு சாதாரண காய்ச்சல் என்றபோதிலும், ஓய்வுடன் கூடிய விடுமுறை அனைவருக்கும் நல்லது.

தூய்மை மற்றும் சுகாதாரம் பேணுவதை நம்மிடம் இருந்து துவக்கி, அந்த வட்டத்தை முடிந்தவரை விரிவுபடுத்துவதை மறக்க வேண்டாம்' என்று முத்தாய்ப்போடு முடித்தார் சதீஷ்குமார்.

- எஸ்.சுமன்

 நோய்க்கு மருந்து!

மழைக்கால நோய்கள்.. மல்லுக்கட்டுவது எப்படி?

க.அன்பரசு, அரசு சித்த மருத்துவர், திருச்சி

    கொதி நீரில், நொச்சி இலை, பச்சைக் கற்பூரம் சிறு துண்டைப் போட்டு ஆவி பிடிக்கலாம். இவற்றுடன் நீர்க்கோவை மாத்திரைகளை நெற்றியில் பற்றாகப் போடலாம். அரசு மருத்துமனைகளில் நீர்க்கோவை மாத்திரைகள் இலவசமாகக் கிடைக்கும். தும்மல், தலைபாரம் நீங்கும்.  

  குழந்தைகளுக்கு டான்சில் வீக்கம் ஏற்படும்.  இதற்கு மூன்று ஓமவல்லி இலையுடன்,  இரண்டு சின்ன வெங்காயம் சேர்த்து இடித்துப் பிழிந்து, புகட்டும் சங்கு அளவுக்கு குழந்தைக்குக் கொடுக்கலாம். சுவைக்கு தேன் சேர்த்துத் தரலாம்.

   இருமலைப் போக்க ஐந்து ஆடாதொடா இலைகளின் நடுநரம்பை நீக்கி, கழுவி 2 ஸ்பூன் தேன் விட்டு லேசாக வதக்கி, இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராகும் வரை சுண்டக்காய்ச்சி, வடிகட்டி அருந்தி வரலாம்.

   குடிநீர் பாத்திரத்தில் 10 துளசி இலைகளைப் போட்டு மழைக் காலம் முழுக்க அருந்தலாம்.

  சுக்கு கருப்பட்டி கலந்த சுக்கு காபி அருந்திவந்தால், செரிமான உறுப்புகள் தூண்டப்பட்டு உடலுக்கு நல்ல சுறுசுறுப்பு கிடைக்கும்.  

மழைக்கால நோய்கள்.. மல்லுக்கட்டுவது எப்படி?

    சுரை, பூசணி உள்ளிட்ட நீர் காய்களைத் தவிர்க்கலாம்.

   வாரம் இரு முறையேனும் கபத்தை நீக்கும் தூதுவளை இலை துவையல் குடும்ப மெனுவில் இருக்கட்டும்.

  டெங்கு என்றில்லை. எந்தக் காய்ச்சலானாலும் குணப்படுத்தும் நிலவேம்பு கஷாயம் அரசு மருத்துவ மனைகளில் இலவசமாகக் கிடைக்கிறது. கடைகளில் சூரணமாகவும் கிடைக்கிறது. அலோபதி மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கூட நிலவேம்பு சேர்த்துக்கொள்வது பலனளிக்கும். காய்ச்சல் மட்டுமல்ல, மழைக் காலம் வயதானவர்களுக்கு வழங்கும் மூட்டுவலி, உடல்வலி நிவாரணத்துக்கு நிலவேம்புக் குடிநீர் கைகொடுக்கும்.