Published:Updated:

தானாக எரிந்த குழந்தை

முடிவுக்கு வந்த மருத்துவ விந்தை!

##~##

கடந்த மாதம் பிஞ்சுக் குழந்தையின் உடலில் பற்றி எரிந்த தீ, தமிழகம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்ததுதான் 'ஹாட்’ நியூஸ்!   

தானாகத் தீப்பிடித்து எரியும் குழந்தையைப் பற்றிய தகவல் வெளியானதும், அமானுஷ்ய சக்தி, தெய்வக் குழந்தை என்றெல்லாம் வதந்திகள் பரவின. குழந்தையின் உடலில் இருந்து பாஸ்பரஸ், மீத்தேன் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள் வெளியேறுவதால் தீப்பற்றுகிறது என்றெல்லாம் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த விஷயம், தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 'குழந்தையின் உடலில் எளிதில் தீப்பற்றக்கூடிய ரசாயனம் ஏதும் இல்லை; மற்ற குழந்தைகளைப்போலத்தான். குழந்தைக்கு யாரேனும் தீ வைத்திருக்கலாம்' என்று பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் மருத்துவர்கள்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கர்ணன் - ராஜேஸ்வரி தம்பதிக்கு இரண்டாவதாகப் பிறந்த ஆண் குழந்தை ராகுல். திடீரென்று குழந்தையின் உடலில் தீப்பற்றி எரிய, இதனால் வீடு எரிந்துபோனது.  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த 'தீக்காயம், தோல், குழந்தைகள் நலம், பிளாஸ்டிக் சர்ஜரி’ என பலதுறை மருத்துவர்களும் தீவிரமாகக் கண்காணித்தனர். பல்வேறு

தானாக எரிந்த குழந்தை

பரிசோதனைகள் செய்யப்பட்டன. அப்படியும் உடலில் தீப்பிடிப்பதற்கான காரணம் என்னவென்று அறியப்படாமல் இருந்தது.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஜெயச்சந்திரனிடம் பேசினோம்.

இது 'ஸ்பான்ட்டேனியஸ் ஹியூமன் கம்பஸன்’ எனும் அரிய வகை நோயாக இருக்கலாம் என்று ஆரம்பத்தில் சந்தேகப்பட்டோம்.  கடந்த 300 ஆண்டுகளில், 200 பேருக்கு மட்டுமே இந்த நோய் வந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்த நோய் உள்ளவர்களுக்கு, வியர்வையுடன் சேர்த்து பாஸ்பரஸ், மீதேன் வாயு போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய வாயுக்கள் வெளியேறும். அவை காற்றில் கலந்தவுடனோ, அல்லது நெருப்பை உண்டாக்கும் வேறு ஏதாவது பொருட்கள் அருகில் இருந்தாலோ தீப்பிடித்து, உடலையே எரித்து விடுமாம். அப்படிப்பட்ட அரிய வகை நோய்தான் இந்தக் குழந்தைக்கும் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு குழந்தையின் ரத்தம், சிறுநீர், தோல், வியர்வை, குரோமோசோம் மாதிரிகளைச் சேகரித்து, கிட்டத்தட்ட 40 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.  

குழந்தைக்கு மீண்டும் தீப்பிடிக்கிறதா என மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்தனர்.  அனைத்துப் பரிசோதனை முடிவுகளும் மருத்துவர்கள் சந்தேகத்துக்கு எதிராகவே வந்துள்ளன. ராகுலின் உடம்பில் எளிதில் தீப்பிடிக்கும் வாயுக்கள் எதுவும் வெளியாகவில்லை என முடிவுகள் கூறுகின்றன. எனவே, ராகுலுக்கு 'ஸ்பாண்டேனியஸ் ஹியூமன் கம்பஷன்’ இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தானாக எரிந்த குழந்தை

இது குறித்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் குழந்தைகள் நல தீவிர சிகிச்சைப் பிரிவின் தலைவர் டாக்டர் நாராயண பாபு, 'குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் அனைத்தும் 'நார்மல்’ என வந்தது. குழந்தையின் உடலில் இருந்து எந்த வகையான 'தீப்பிடிக்கும் வாயுக்களும்’ வெளியேறவில்லை. இதுவரை குழந்தை தீப்பிடித்து எரிவதை குழந்தையின் அம்மா, அப்பா மற்றும் பாட்டி மட்டுமே பார்த்துள்ளனர். மேலும், மருத்துவமனையில் எங்கள் கண்காணிப்பில் இருக்கும்போது குழந்தைக்குத்

தானாக எரிந்த குழந்தை

தீப் பிடிக்கவில்லை. குழந்தைக்கு தீக்காயத்துக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு, புண் ஆறி வருகிறது.  குழந்தையின் பெற்றோருக்கும் கவுன்சலிங் அளித்துவருகிறோம்' என்றார்.

ராஜேஸ்வரியைத் தவிர, வெளியாட்கள் யாரும் குழந்தை எரிவதைப் பார்த்ததாகவும் தெரியவில்லை. இந்தச் சம்பவங்களுக்கு ஒரே நேரடிச் சாட்சியான தாயின் மனநிலையை நிபுணர்கள் ஆராய வேண்டும். 'நிஜமாகவே நடந்தது என்ன?’ என்று அவருக்கு மட்டுமே தெரிந்திருக்க முடியும். அல்லது உற்றார் உறவினர் வேறு யாராவதும்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் உளவியல் ஆலோசனைகள் வழங்கினால், வருங்காலத்தில் குழந்தையின் வாழ்க்கைத் தரமும் மேம்படும்.

இதற்கு நடுவில், குழந்தையின் பாட்டி வீடு, ராஜேஸ்வரியின் பெரியப்பா வீடு எரிந்ததெல்லாம் சாதாரண நிகழ்வுகளாகவோ, அல்லது எவரோ ஒருவர் வேண்டுமென்றே செய்த சதியாகவோதான் இருக்க வேண்டும். அதை விடுத்து, அந்தப் பிஞ்சுக் குழந்தையை, பிசாசுக் குழந்தையைப்போல முத்திரை குத்தி, மேலும் பல புரளிகளைக் கிளப்பி விட்டிருப்பது அந்தக் குழந்தையின் வருங்காலத்தையே பாதிக்கக் கூடும். சந்தேகத்தைக் களைய வேண்டியது காவல்துறையின் கையில்தான் இருக்கிறது.  

ஒருவேளை இது மருத்துவப் பிரச்னையாக இருக்குமாயின், நிச்சயம் அதற்கான மருந்துகளையும் தீர்வுகளையும் கண்டுபிடிக்க உலக மருத்துவர்கள் அனைவரும் கைகொடுக்க வேண்டும். அரசாங்கமும் மற்ற தொண்டு நிறுவனங்களும் அது வரையில் குழந்தையின் பாதுகாப்பிற்காகவும் வைத்தியத்துக்காகவும் நிச்சயம் ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும்.

- சீ.து.அரவிந்த் குமார், க.சுபராமன்

படங்கள்: ப.சரவணகுமார்

 மனிதன், தானாக தீப்பற்ற வாய்ப்பு உண்டா?

'ஸ்பான்ட்டேனியஸ் ஹியூமன் கம்பஸன்’ - சில நூறு வருடங்களாகவே உலக மருத்துவத்தை மண்டையைப் பிய்த்துக் கொள்ள வைக்கும் ஒரு நோய். இதற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவே இல்லை.

19-ம் நூற்றாண்டிலேயே ஹெர்மன் மெல்வில், கேப்டன் மாரியாட், நிகோலாய் கோகோல் போன்ற படைப்பாளிகள், தங்கள் படைப்புகளில் வரும் ஒரு கதாபாத்திரம் இந்த நோயால் இறந்து போவதாகக் கதை அமைத்திருந்தனர்.

  உலகப் புகழ் பெற்ற சார்லஸ் டிக்கன்ஸ் என்ற எழுத்தாளரும், தனது 'ப்ளீக் ஹவுஸ்’ எனும் பதிப்பில் இப்படி ஒரு கதாபாத்திரத்தைக் கையாண்டு உள்ளார். இவர்கள் எல்லாருமே, இந்த நோய்க்குக் காரணமாகச் சொல்லியது குடிப்பழக்கத்தைத் தான்.

1951-ல் மேரி ஹார்டி ரீஸர் என்னும் மூதாட்டி ஃப்ளோரிடாவில் தனது வீட்டில் எரிந்த நிலையில் கிடந்தார். ஆனால், சுற்றி இருந்த பொருட்கள் எதுவுமே தீயில் சேதமடையவில்லை. அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், உடல் மட்டும் எரிந்த நிலையில் இருந்ததாகவும், மண்டை ஓடு சுருங்கிக் காணப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

  இர்வின் பென்ட்லி, ஜீன் சஃப்பின், ஹென்றி தாமஸ் என வெவ்வேறு காலங்களில் பல்வேறு நாடுகளில் பலர் இப்படி இறந்து போயுள்ளனர்.

2010-ம் ஆண்டு இங்கிலாந்தில் மைக்கல் ஃபஹர்டி என்னும் முதியவருக்கு இப்படியரு நிகழ்வு ஏற்பட்டு, அவரும் பிழைக்கவில்லை.

தற்போது, குழந்தை ராகுல் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்பட்டது. மேலே கூறிய அனைத்துச் சம்பவங்களிலும் சில விஷயங்கள் பொதுவாக உள்ளன. அவை,

  இந்த நோய் வந்து இறந்த அனைவருமே 50 வயதைத் தாண்டியவர்கள்.  எல்லோருமே உடல் பற்ற ஆரம்பித்தபோது, தூக்கத்திலோ அல்லது உடனே எழுந்து தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்ள முடியாத நிலையிலோ இருந்துள்ளனர்.

  பல்வேறு நிகழ்வுகளில் அணைக்கப்படாத சிகரெட், எரியும் நிலையிலிருந்த கொள்ளிக்கட்டைகள் போன்றவை எரிந்தவர் உடல் பக்கத்தில் இருந்ததாகவும் கருதப்படுகின்றது. எனவே அவையும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

சிலருக்கு மரணச் சம்பவத்துக்கு முன் உடலில் இருந்து புகைச்சல் ஏற்பட்டதாகவும் பதிவாகி உள்ளது.

  பல்வேறு சம்பவங்களிலும், தலை மற்றும் உடல் மட்டும் முழுவதுமாக எரிந்து, கால்கள் எரியாமல் இருந்துள்ளன.

இந்த விநோத நோய் பற்றி பல்வேறு ஆராய்ச்சியாளர்களும், மருத்துவர்களும் வெவ்வேறு கருத்துகளை முன்வைத்த வண்ணம் இருந்தனர். அவை...

  உயிரியலாளர் டேவிட் பெர்காத் 'உடலில் ஏற்படும் வாயுக்கள்தான் இந்த நோய்க்குக் காரணம். அதே நேரத்தில், அவை உடலினுள்ளேயே பற்றிக்கொள்வதில்லை. வியர்வையுடன் சேர்ந்து இந்த வாயுக்கள் வெளியே வரும்போது, காற்றில் கலந்து தீப்பிடிப்பதாகக் கூறி இருக்கிறார்.

இங்கிலாந்து உயிரியலாளர் பிரையன் ஜே. ஃபோர்டு, ''வாயுக்கள் மட்டுமே இதற்குக் காரணமில்லை. மது அருந்துவதாலும், சர்க்கரை நோய் போன்றவற்றாலும், உடலில் 'கீடோசிஸ்’ என்னும் ஒருவகை ரசாயன மாற்றம் ஏற்படும். அப்பொழுது 'அசிடோன்’ எனப்படும் ஒரு ரசாயனம் உடலில் உற்பத்தியாகும். இது வெகுவிரைவாக தீப்பற்றக் கூடியதாகும். இது வெளியேறும்போதும் கூட தீப்பிடிக்கலாம்'' என்று சொல்லி இருக்கிறார்.

2000-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடந்த தடயவியல் கருத்தரங்கில், அமெரிக்க விஞ்ஞானி ஜான் டி ஹான், 'உள்ளிருந்து எரிவதற்கான கூறுகளே இல்லை. நிச்சயமாக வெளியிலிருந்து பற்றினால்தான் உண்டு. அதனால், இது கொலை நடக்கும் சமயங்களில் உண்மையை மறைப்பதற்காகக் கூறப்படும் நம்பத்தகுந்த பொய்யாகவும் இருக்கக் கூடிய அபாயம் உள்ளது' என்றார்.

  மார்க் பெனக்கே என்னும் தடயவியல் நிபுணர், 'வேதியியல், இயற்பியல், உயிரியல் நிபுணர்களோ அல்லது மருத்துவர்களோ நம்பத்தகுந்த எந்தவொரு கோட்பாட்டையும் இந்த நோய் சம்பந்தமாக முன்வைக்கவில்லை. அறிவியல்பூர்வமான சான்றுகளும் நம்மிடம் இல்லை. எனவே, இப்படி ஒரு விஷயம் இருப்பதாக ஏற்றுக் கொள்வது சரியாகாது' எனக் கூறுகிறார்.

  இதனை நம்புபவர்களோ, 3000 டிகிரி வெப்பத்தால் மட்டுமே மனித உடலைச் சாம்பலாக்க முடியும். அப்படி நடக்கும்போது, சுற்றியிருக்கும் பொருட்கள் எரியாமல் இருப்பதன் காரணத்தைக் கூற இயலாத வரையில், 'ஸ்பான்ட்டேனியஸ் ஹியூமன் கம்பஸன்’ என்னும் நோயானது ஏற்கத்தக்க ஒரு விஷயமே என்கின்றனர்.