Published:Updated:

'நம்பிக்கையை நண்பனாக்குங்கள்!'

வலிகளுக்கு விடை தரும் ஞானபாரதி

##~##

'வலிகள் தரும் வேதனை மட்டும் வாழ்க்கையல்ல, அந்த வலிகளை மறப்பதற்கான வழிகளைத் தேடி, அந்த வேதனைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சாதனையை எட்டுவதுதான் வாழ்க்கை'- முதுகுத் தண்டுவடத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 'ஸ்பைனல் கேர் இந்தியா’ என்ற அமைப்பை நடத்திவரும், 43 வயதான ஞானபாரதியின் நம்பிக்கையூட்டும் வார்த்தை இது. 

சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஞானபாரதி, விழுந்து எழுந்த கதை, பலரது வாழ்க்கைக்கு வெளிச்சத்தைக் கூட்டும்.  

'என் வாழ்க்கைல தென்றலையும், புயலையும் ஒருசேர அனுபவிச்சிருக்கேன். டேராடூனில் ஆராய்ச்சியாளரா சந்தோஷமா இருந்தபோது, 2002-ல் உறவினர் வீட்டுக்குப் போறதுக்காக குரோம்பேட்டை ரயில்வே தண்டவாளத்தைக் கடக்கும்போது, விபத்தில் சிக்கிக்கிட்டேன். என்னை ஆட்டோவுல அள்ளிப் போட்டுட்டுப் போனது மட்டும்தான் ஞாபகத்துல இருந்தது. கண் முழிச்சுப் பார்த்தப்பதான், என் நிலைமையே புரிஞ்சது. ஓடியாடித் திரிஞ்சுக்கிட்டு இருந்த என் ரெண்டு கால்களும் நகர்த்த முடியாமல் செயலிழந்து போச்சு. மூளையில் இருந்து தொடங்கி, முதுகுத் தண்டுவடத்தினுள் செல்லும் நரம்புகள்தான் மூளை இடுகிற அத்தனை கட்டளைகளையும் நிறைவேற்றும். இந்த நிலையில் முதுகுத் தண்டுவடத்துல ஏற்பட்ட விபத்து, என் முதுகெலும்பை நொறுக்கிடுச்சு.  இதில், ஒரு சிறு பிசிறு என் தண்டுவடத்தை வெட்டி, மார்புக்குக் கீழே இருந்து கால் பாதம் வரைக்கும் போகும் நரம்பையும் துண்டிச்சிடுச்சு. இதனால், கடந்த 11 வருஷமாக மார்புக்குக் கீழே எந்த உணர்ச்சியும் இல்லாமல் வாழ்ந்துட்டிருக்கேன்.  ஆனால், நம்பிக்கையை மட்டும் தளரவிடவில்லை.

'நம்பிக்கையை நண்பனாக்குங்கள்!'

அடிபட்ட நாளிலிருந்து எனக்குத் தெரிஞ்ச அத்தனை மருத்துவர்களையும் பார்த்துட்டேன். ஆனா, தண்டுவடம் பாதிக்கப்பட்டவங்களுக்குன்னு ஒரு சரியான சிகிச்சை இல்லைங்கிறதுதான் நான் தேடி அலைஞ்சதுக்குக் கிடைச்ச விடை.  

ஆனால், இந்தப் பிரச்னையில் பாதிக்கப்பட்டவங்களுக்குன்னு இந்தியாவுல மொத்தம் மூணு மறுவாழ்வு மையங்கள் இருக்கு. அதுல, வேலூர் சி.எம்.சி மருத்துவமனையும் ஒண்ணு. இந்தப் பிரச்னையில் இருந்து எப்படி மீண்டு வர்றதுனு சிறப்புப் பயிற்சி தர்றாங்க. பண வசதி இல்லாதவங்களுக்குக்கூட, மிக குறைந்த பணத்தை வாங்கிட்டு கத்துக் கொடுக்கிறாங்க. நானும், அந்த மறுவாழ்வு மையத்துல சேர்ந்து, ஒரு குழந்தையைப் போல நடப்பது, படுப்பது, கை கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது என அத்தனையும் கத்துக்கிட்டேன். அந்தப் பயிற்சினால, உடலும், மனசும் உற்சாகமாச்சு.'' - நொறுங்கிய நிலையிலிருந்து மீண்டு வந்த கதையைச் சொல்லி முடித்த ஞானபாரதி, கார், பைக் போன்ற வண்டிகளை அநாயாசமாக ஓட்டுவதில் வல்லவர். பைக்கையும் தன் வசதிக்கு ஏற்ப மாற்றி வடிவமைத்திருக்கிறார். 'இதுபோன்ற ஐடியா எப்படித் தோன்றியது?’ என்று கேட்டால், 'தேவை தான் என்னை இப்படி சிந்திக்க வைத்தது’ என்று சொல்லி ஆழமான சிரிப்பை உதிர்த்தவர், மறுவாழ்வில் இவருக்குத் தந்த பயிற்சிகளை விவரித்தார்.  

 சாதாரண மனுஷங்களைவிட, எங்களை மாதிரி பாதிக்கப்பட்டவர்களோட, நுரையீரல் மிகவும் லேசாகத்தான் சுருங்கி விரியும். ஒரே இடத்துல உட்கார்ந்திருக்கிறதுதான் இதுக்குக் காரணம். இதற்காக ஸ்பெஷல் மூச்சுப் பயிற்சி சொல்லித் தருவாங்க.  

'நம்பிக்கையை நண்பனாக்குங்கள்!'

கால்களுக்கு இயக்கமே இல்லாததால், ஸ்பாஞ்ச் பந்தை நல்லா அழுத்தி கைகளையே கால்களாகச் செயல்படறதுக்கு உடற்பயிற்சி செய்ய வைப்பாங்க.  

  எழுந்து நிற்க முடியல்லைன்னாலும், குடும்பத்தாரோட உதவியில், தினமும் கொஞ்ச நேரம் நிக்கணும். அதோடு, வாக்கர் உதவியில் நடைப்பயிற்சி செய்யணும்.

 எழுந்து நிற்கப் பயிற்சி தருவார்கள்.  இதனால், கால்சியம் கரைவது நின்று கால்கள் மட்டுமில்லாமல், முழு உடம்பும் நன்றாக வலுவடையும்.

நான் எடுத்துக்கிட்ட பயிற்சிகளை, என்னை மாதிரியே பாதிக்கப்பட்டவர்களுக்கும் மனதுக்கு மருந்திடுவதுதான் எங்கள் அமைப்பின் முக்கியப் பணி.

என் வாழ்க்கையில் எனக்கு வந்ததைப் போல, எதிர்பாராத விபத்தோ அல்லது எப்பேர்பட்டப் பிரச்னையாக இருந்தாலும் மனசை மட்டும் தளரவிடாம, இறுக்கமா பிடிச்சுக்குங்க.  ஏன்னா, தன்னம்பிக்கையைவிட சிறந்த மருந்தோ, டாக்டரோ இந்த உலகத்துல இல்லை'' என்றார் முத்தாய்ப்பாக.

க. பிரபாகரன்

படங்கள்: தி.குமரகுருபரன்

 தளராத மனம் வேண்டும்!

 தனிமையாக இருக்கும்போது உண்டாகும் தாழ்வு மனப்பான்மையே, நம் ஆயுளை குறைத்துவிடும்.

 மருந்தைதான் நம்புகிறோமே தவிர, மனதைக் கரைத்து விடுகிறோம். அதனால் தான், மனம் நொந்து சிலர் தற்கொலைக்கும் தயாராகின்றனர்.  

 தனிமையைச் சந்திக்கும்போது, 'நாம் இப்படி இருப்பதால்தான் யாரும் நம்மை கண்டுகொள்ள மாட்றாங்க’ என்று குடும்பத்தார் எவ்வளவுதான் உதவி செய்தாலும், இது போன்ற எதிர்மறையான எண்ணங்கள் கோபத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் அதிகரித்துவிடுவதுடன்,  குடும்பத்தாருக்கும் மன கஷ்டத்தை ஏற்படுத்திவிடும். இதையெல்லாம் அடியோடு ஒழிக்கும் அருமருந்துதான் நம்முடைய திடமான மனசு.

 ஸ்பைன் கேர் அமைப்பின் செயல்பாடுகள்!

 வருடத்துக்கு ஒருமுறை சிறப்புக் கூட்டங்கள் போட்டு, பாதிப்படைந்தவர்களின் அனுபவங்கள், எதிர்கொண்ட சவால்கள், சாதனைகளைப் பகிர்ந்து கொள்ளுதல்...

 மறுவாழ்வு மையத்தின் மருத்துவரின் மூலம், ஒரே நேரத்தில் பலரை தொலைபேசி வாயிலாக இணைத்து, அவர்களின் உடல் ரீதியாக ஏற்படும் சந்தேகங்களைக் களைவது.

 இது போன்று யாரேனும் பாதிக்கப்பட்டு இருப்பதைக் கேள்விப்பட்டால், அவரை தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு மனதைப் பக்குவப்படுத்துவது.  

  சிகிச்சையும் உண்டு!

வேலூர், சி.எம்.சி. மறுவாழ்வு மையத்தில்  சமூகப் பணியாளராக இருக்கும் கண்ணதாசன் முதுகெலும்பு பாதிக்கப்பட்டவர்களுக்கான அரசு சலுகைகளைச் சொன்னார்.

 இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நமது அரசுக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பாதிப்பைப் பொறுத்து சர்ஜரி செய்யப்படும்.  

 கழுத்துக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் நியூரோ சர்ஜரியும், கழுத்துக்குக் கீழே பாதிக்கப்பட்டு இருந்தால் ஆர்த்தோ சர்ஜரியும் செய்வார்கள்.

 மற்ற மனிதர்களோடு சகஜமாகப் பழகுவது எப்படி என்பதை சமூக ஆர்வலர்கள் சொல்லித் தருவார்கள்.