Published:Updated:

மனம் இருந்தால் சிகரெட்டை மறக்கலாம்!

புற்றுநோயை வென்ற இயக்குனர் ரமணா!

##~##

'பிரச்னை இல்லாத மனுஷனும் இல்லை, பிரச்னை இல்லாதவன் மனுஷனே இல்லை...' என்று நடிகர் விஜய்யை, 'ஆதி’ படத்தில் பேச வைத்தவர் இயக்குனர் ரமணா. அவர் தொண்டைப் புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு எழுந்துள்ள கதை இந்த நோயால் போராடிக்கொண்டிருக்கும் அனைவரையும் எழுந்து நிற்கவைக்கும் தூண்டு கோல். 'திருமலை’, 'ஆதி’, 'சுள்ளான்’ போன்ற ஆக்ஷன் படங்களின் மூலம் கோலிவுட்டில் கவனத்தை ஈர்த்த ரமணா, சுறுசுறுப்புக்கும், குறுகிய காலத்தில் படங்களை எடுப்பதற்கும் பெயர் பெற்றவர். தொண்டைப் புற்றுநோயைத் தூர எறிந்து விட்டு, சளைக்காமல் மறுபடியும் சினிமாவில் கால் பதிக்க தன்னைப் பட்டைத் தீட்டிக் கொண்டிருக்கும் நம்பிக்கை இயக்குனர் ரமணாவுடன் பேசினோம்... 

'குதிரை’ படத்துக்கு டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது, சவுண்ட் இன்ஜினியர், 'சார், உங்க வாய்ஸ்ல ஏதோ மாற்றம் தெரியுது, வாய்ஸ்ல முன்ன இருந்த குவாலிட்டி இப்ப இல்லை’னு சொன்னார். அதேமாதிரி, என் தங்கையும், 'அண்ணா, இது உன்னோட வாய்ஸே இல்லை’னு சொன்னதும்தான் தொண்டையில ஏதோ பிரச்னை இருக்குங்கிறதையே உணர்ந்து, டாக்டரைப் போய்ப் பார்த்தேன். 'ஏற்றம் - இறக்கமில்லாம, வாய்ஸுக்கு ரெஸ்ட் கொடுத்து நார்மலா பேசுங்க’ என்றார் டாக்டர். ஏற்ற-இறக்கத்தோடு பேசியே பழக்கப்பட்ட என்னால சாதாரணமாப் பேசவே முடியலை. ஆரம்பக்கட்டமா, பயாப்சி டெஸ்ட் எடுத்தாங்க. பல கட்டச் சோதனைகளுக்குப் பிறகுதான்,  எனக்கு தொண்டையில் புற்றுநோய் இருக்குங்கிறது நிரூபணமாச்சு. நம்மால இனிமே வழக்கம்போல பேச முடியாதேங்கறதுதான் எனக்கு வருத்தத்தைத் தந்ததே தவிர, புற்றுநோயைப் பற்றி நான் பெரிசாக் கவலைபடலை. ஆனால், இந்தப் புற்றுநோய்தான் என் வாழ்க்கையை மாத்தப்போகுது என்ற விஷயம், பயம் விலகினதுக்கு அப்புறம்தான் தெரியவந்துச்சு'' என்று தொண்டையில் கை வைத்தபடியே பேசிய ரமணா, சிறிது இடைவெளிக்குப் பின் தொடர்ந்தார்.

மனம் இருந்தால் சிகரெட்டை மறக்கலாம்!

'என் வாய்ஸ்தான் எனக்குக் கிடைச்ச வரம். என்னோட இயக்குனர் தொழிலின் மூலதனமும் அதுதான். ஆனால், குரலுக்கே பிரச்னைன்னு தெரிஞ்சதும், என் அத்தனை பழக்க வழக்கங்களையும் அடியோட

மனம் இருந்தால் சிகரெட்டை மறக்கலாம்!

மாத்திக்கிட்டேன். இந்தப் பிரச்னை வருவதற்கு முன்னால், சிகரெட் பிடிப்பது தப்புன்னு தெரிஞ்சும் நிறுத்த மனசே வராது. டென்ஷன் வந்தால், கை தானாகவே பாக்கெட்டுக்குள்ள போயிடும். ஆனால், என் தொண்டைக்கு எமனா வந்த சிகரெட்டோட கோரத் தன்மை புரிஞ்சதும், ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் பிடிச்சிட்டிருந்த நான் ஒரே நாள்லேயே நிறுத்திட்டேன். எந்த ஒரு கெட்டப் பழக்கத்தையும் விடறதுக்கு, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் முடியுங்கிறது ரொம்பத் தப்பு.  மனசு வெச்சா போதும்.  எந்த நொடியிலேயும் எதையும் நம்மகிட்டேருந்து  விரட்டிடமுடியும். மனசுதான் மாமருந்து.

'கேன்சர்னா  மிகக் கொடியது, அது ஒர் உயிர் கொள்ளி நோய்’னு  ஒரு தப்பான எண்ணத்தை மக்களோட மனசுல ஆழமா விதைச்சது சினிமாதான். கேன்சரை மிகைப்படுத்திக் காட்டியதும் சினிமா தான். புற்றுநோய் வந்ததுக்குப் பிறகு, நான் ஓய்வு எடுக்கறதுக்கான நேரம் அதிகமாக் கிடைச்சது. இத்தனை நாள் எனக்குள் ஒளிஞ்சுட்டிருந்த இன்னொரு ரமணாவை அறிமுகப்படுத்தினது இந்தக் காலங்கள்தான். என் கோபம், ஆணவம் எல்லாமே குறைஞ்சு போச்சு. எனக்குள்ள இருந்த சகிப்புத் தன்மையும், அன்பும்தான் உண்மையான ரமணாவை உலகுக்குக் காட்டின. 'இதே குரலை வெச்சுட்டு, நான் மீண்டும் வருவேன். படங்களை இயக்குவதோடு, நடிக்கவும் செய்வேன். சீக்கிரமே குணமாகிடுவேன்’ என்று நம்பிக்கையை மனசுல ஆழமாப் பதிச்சேன்.  நாம தெம்பா, நம்பிக்கையா இருந்தால்தான், நம்மைச் சுற்றி இருக்கிறவங்களுக்கும் நம்பிக்கையை ஊட்டமுடியும். நம்மை வளர்த்துக் கொள்வதும், தாழ்த்திக் கொள்வதும் நம் கையில் மட்டும்தான் இருக்கு!' என்கிறார் உற்சாகக் குரலில்.

ரமணாவுக்குச் சிகிச்சை அளித்த காது மூக்கு தொண்டை மற்றும் புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் ராயப்பாவிடம் பேசினோம்.

'புற்றுநோயால பாதிக்கப்பட்டு மீண்டுவந்தவங்களை நேரிடையாகச் சந்தித்துப் பேசினதால்தான், ரமணாவுக்குப் புற்றுநோய் பயம் விலகி, தன்னம்பிக்கை அதிகமாச்சு. பல கட்டச் சோதனைகளுக்குப் பிறகு, ரமணாவோட தொண்டைப் பகுதியின் 'லாரிங்சில்’ உள்ள பிரச்னையை ஆபரேஷன் மூலம் சரிசெஞ்சோம். இதனால், இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவங்க ஏற்கனவே இருந்ததைப் போல நார்மலாக இருக்க முடியும். குளிக்கும்போது மட்டும் கழுத்துப் பகுதியில், தண்ணீர் படாதவாறு பார்த்துக்கணும். வேகமாக படபடனுபேசக்கூடாது. இதையெல்லாம் விட, எப்பவும் நம்பிக்கையோட இருக்கணும்' என்கிறார் அழுத்தமாக.

'எதிர்ல வர எமனையே எதிர்க்க துணிஞ்சிட்ட நீ, ஏன் உன்னுடைய பிரச்னைகளை பார்த்து நடுங்கறே...’ என்று 'ஆதி’ பட வசனத்தையே வாழ்க்கையாகக் கொண்டு வாழும் ரமணா தன்னம்பிக்கையின் மறுபிறப்புதான்!

- க.பிரபாகரன்

படங்கள் : த.ரூபேந்தர்

 நம்பிக்கை டானிக்

'வாழ்க்கை ஓர் அன்பளிப்பாக இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள், சவாலாக இருந்தால் போராடி வெல்லுங்கள் இதில் என்ன கஷ்டம் இருக்கு. நமக்கு வரப்போகும் மரணம் எப்படிப்பட்டது என்பதே தெரியாதபோது, ஏன் மரணத்தைப் பார்த்து வீணாகப் பயப்பட வேண்டும்.

மனம் இருந்தால் சிகரெட்டை மறக்கலாம்!

இந்த உலகில் நாம் இருப்பதற்கும், வாழ்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. எல்லோரும் வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள்.

'பிரச்னையை நினைத்து கவலைப்படாமல், அதைத் தள்ளிவைத்துவிட்டு மீண்டுவர வேண்டும்’ என்பதை மனதில் நினைத்தால், கஷ்டம் என்ற பேச்சுக்கு இடமே இருக்காது.

அடுத்த கட்டுரைக்கு