Published:Updated:

வாசகர்களைத் தேடி மருத்துவர்கள்!

இலவச மருத்துவ முகாமில்... நெகிழ்ந்து உருகிய நெஞ்சங்கள்

வாசகர்களைத் தேடி மருத்துவர்கள்!

இலவச மருத்துவ முகாமில்... நெகிழ்ந்து உருகிய நெஞ்சங்கள்

Published:Updated:
##~##

உங்கள் நலனில் அதீத அக்கறைக்கொண்ட டாக்டர் விகடன், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையுடன் இணைந்து, மதுரை மக்களுக்காக மாபெரும் பொது மருத்துவம் மற்றும் இதய மருத்துவ முகாமை செப்டம்பர் 22-ம் தேதி நடத்தியது. மதுரை காமராஜர் சாலை, ராஜாமணி சங்கரலிங்கம் அரங்கில் நடந்த இந்த முகாமில், இதயம், காது- மூக்கு- தொண்டை, கண், மகளிர் நலம் மற்றும் மகப்பேறு, குழந்தைகள் நலம், ப்ளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட பல துறை டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்கள், டெக்னீஷியன்கள் பங்கேற்றனர். 510-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு, இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. 

முகாமுக்கு வந்த அனைவருக்கும், ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், உடல் எடை பரிசோதிக்கப்பட்டன. ரத்த குரூப் அறியும் பரிசோதனையும் செய்யப்பட்டு, அவர்களின் ரத்த வகை என்ன என்பதையும் உடனே அறிந்து கொண்டனர். 40 வயதைக் கடந்தவர்களுக்கு ஈ.சி.ஜி. இலவசமாக எடுக்கப்பட்டது. இதற்கென இரண்டு ஈ.சி.ஜி. கருவிகளை மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஏற்பாடு செய்திருந்தது. இதயப் பிரச்னை இருப்பது தெரிந்தால், அவர்களுக்கு எக்கோ பரிசோதனையும் இலவசமாக செய்யப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாசகர்களைத் தேடி மருத்துவர்கள்!

முகாமுக்கு வந்தவர்களில், 220-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஈ.சி.ஜி.-யும், 80-க்கும் மேற்பட்டவர்களுக்கு எக்கோ பரிசோதனையும் எடுக்கப்பட்டது. இதில் 28 பேருக்கு இதயப் பிரச்னை இருப்பதும், 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதும் கண்டறியப்பட்டது. இவர்களுக்கு, மேல் சிகிச்சைக்கு டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.

ஜவுளிக் கடை ஒன்றில் வேலை பார்க்கும் சாந்தாராம், 'வெளிய போய் செலவு செஞ்சு மருத்துவம் பாக்க எனக்கு வசதி இல்லீங்க. என்ன வியாதி வந்தாலும் வைத்தியர்கிட்டப் போகாம,  வீட்டுலேயே கஷாயம் வெச்சு குடிச்சிட்டு வேலைக்கு போயிடுவேன். இங்க முகாம் நடக்குதுன்னு பேப்பரைப் பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன். எல்லா டெஸ்டும் பண்ணிட்டு உங்களுக்கு ஒண்ணும் இல்லைன்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. எங்க ஏரியாப் பக்கத்திலேயே எல்லா டெஸ்ட்டும் இலவசமாக எடுக்கவும், பெரிய டாக்டர்களைப் பார்க்கிற வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்த டாக்டர் விகடனுக்கு ரொம்ப நன்றிங்க' என்றார் நெகிழ்ச்சியுடன்.

வாசகர்களைத் தேடி மருத்துவர்கள்!

முகாமுக்கு கணவருடன் வந்திருந்த சுபா, 'டாக்டர் விகடன் புத்தகம் பார்த்துதான் மெடிக்கல் கேம்புக்கு வந்தோம். எனக்கு பிரஷர் இருக்கு. அவர் ஹார்ட் பேஷன்ட். முதல்ல அவருக்கு ஈ.சி.ஜி. எடுத்தாங்க. அப்புறம் எக்கோ எடுத்துப் பார்த்து 'ஆஞ்ஜியோ’ செய்யணும்னு சொல்லியிருக்காங்க. இதுக்கு முன்னாடி வெளியில பார்த்தப்போ, ஒண்ணுமில்ல எழுதிக்கொடுக்கிற மாத்திரை மருந்து சாப்பிட்டா போதும்னு சொன்னாங்க. ஆனா, இங்கே நல்லா புரிஞ்சிக்கிற மாதிரி தெளிவா எல்லாத்தையும் சொன்னாதால, இப்பதான் எங்க மனசுக்கு நிம்மதியா இருக்கு' என்றார்.

முகாமில் கலந்துகொண்ட டாக்டர் சண்முகப்பிரியா கூறுகையில், 'மதுரையில் தற்போது டெங்கு காய்ச்சல் பீதி அதிகமாக இருக்கிறது.  இதுபற்றி முகாமுக்கு வந்திருந்தவர்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தினோம். வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினோம். முகாமுக்கு நிறைய பெற்றோர் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். அவர்களைப் பரிசோதனை செய்து பார்த்தபோது, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதை கண்டறிந்தோம். குழந்தைகளுக்கு சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவை அளிப்பது எப்படி என்று ஆலோசனை வழங்கினோம்' என்றார்.

வந்திருந்த அனைத்து வாசகர்களுக்கும் தேவையான பரிசோதனைகள், சிகிச்சைகள் செய்யப்பட்டன. மக்களின் ஆதரவோடு மதுரையில் முகாமை நிறைவு செய்தது டாக்டர் விகடன்.

தங்கள் பகுதியில் இதுபோன்று முகாம் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வாசகர்கள் கோரிக்கை விடுத்தவண்ணம் இருக்கிறார்கள்.  உங்களின் கோரிக்கையை ஏற்று அடுத்து தஞ்சாவூரில் மருத்துவ முகாம் நடத்துவதற்கான ஏற்பாடுகளிலும் தீவிரமாக இறங்கியிருக்கிறது நம் டாக்டர் விகடன் குழு!

- லோ.இந்து, ந.ஆஷிகா,

ஹா.தௌஜிதா பானு, சாமுவேல் டேவிட் டில்டன்

படங்கள்: வி.சதீஷ் குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism